குளிர்சாதனப்பெட்டிகள்தான் மும்பையின் 40 சதவிகித மின்சாரத்தைக் குடிக்கின்றன

புவி வெப்பமடைவதைத் தடுக்கும் இலக்கை நாம் என்றுமே அடைய முடியாதபடி குறுக்கே நிற்கப்போவது குளிர்சாதனப் பெட்டிகளும் (ஏ.சி.), குளிர்பதனப்பெட்டிகளும் தான் (ஃபிரிட்ஜ்) என்றால் நம்ப முடிகிறதா? நகரமயமாதலினாலும் உலக அளவில் வருமானம் பெருகுவதாலும் 2100-ல் இப்போதைக் காட்டிலும் 33 மடங்கு கூடுதல் மின்சாரம் குளிர்சாதனப்பெட்டிகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும்!

ஒட்டுமொத்த ஆப்பிரிக்கக் கண்டம் செலவழிக்கும் மின்சாரத்துக்கு இணையான மின்சாரத்தைத் தங்களுடைய கட்டிடங்களைக் குளுகுளுவென வைத்துக்கொள்ள மட்டுமே அமெரிக்கா தற்போது செலவழித்துவருகிறது. சீனாவும் இந்தியாவும் இந்தப் போட்டியில் உற்சாகத்தோடு ஓடுகின்றன. அநேகமாக இந்த நூற்றாண்டின் மத்தியில் வெப்பமேற்றுவதற்காகப் பயன்படுத்தப்படும் ஆற்றலைவிடவும் பல மடங்கு கூடுதலான ஆற்றல் குளிர் பதத்தை உருவாக்கச் செலவிடப்படும். அதிலும் குளிர்த் தன்மையைச் செயற்கையாக உற்பத்தி செய்ய நிலக்கரி, பெட்ரோல் போன்ற புதைமை எரிபொருட்கள்தான் அதிகம் எரிக்கப்படுகின்றன.

குளிர் உற்பத்தியில் பிரச்சினை

தற்சமயம் பல்வேறு அரசாங்கங்களும் விஞ்ஞானிகளும் பருவநிலை மாற்றத்தை எப்படி எதிர்கொள்வது எனச் செய்வதறியாமல் திகைத்து நிற்கிறார்கள். இதில் நகைமுரண் என்னவென்றால், குளிர் பதத்தை உற்பத்தி செய்யும்போதுதான் பூமி அதிகப்படியாக உஷ்ணமாகிறது.

“ஆற்றல் என்றாலே வெப்பம், வெளிச்சம், போக்குவரத்து என்றுதான் பலர் நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால், இனி வரும் காலங்களில் சூழலியல் பிரச்சினைகளுக்கு முக்கியக் காரணமாக இருக்கப்போவது குளிர்தான். குளிருக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேபோகிறது. கடந்த 100 ஆண்டுகளாகவே குளிரை உற்பத்தி செய்யும் வேலைகளில் ஈடுபட்டுவருகிறோம். நெடுங்காலமாக பழைய முறைதான் இதில் பின்பற்றப்படுகிறது. ஆனால், இனி வரும் காலங்களில் குளிர் உற்பத்தி முறையை மாற்றாவிட்டால், விளைவுகள் விபரீதமாக இருக்கும்” என எச்சரிக்கிறார் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் சக்தி மற்றும் குளிர் பொருளாதாரத் துறையின் வருகைதரு பேராசிரியரான டோபி பீட்டர்ஸ்.

முதல் குளிர்ப் பெட்டி

செயற்கையான குளிர் என்பது சமீபகால நிகழ்வுதான். குளிர்சாதனப்பெட்டியானது முதன்முதலில் வீட்டில் பொருத்தப்பட்டது 1914-ல்தான். குளிர்பதனப்பெட்டிகள் 1930-ல் வீடுகளுக்குள் நுழைந்தன. 1965 வாக்கில் பிரிட்டனில் மூன்றில் ஒரு வீட்டில் இவை இரண்டும் பயன்படுத்தப்படும் சூழல் உருவானது. ஆனால் 21-ம் நூற்றாண்டில் செயற்கைக் குளிர் உற்பத்தி என்பது பணம் படைத்தவர்களின் வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. வீடுகளில், அலுவலகங்களில், கார்களில் குளிர்சாதன வசதி பொருத்துவது என்பது அத்தியாவசியமாகிவிட்டது.
குளிருக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. வளர்ந்துவரும் நாடுகளில் நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போவதாலும் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் வெப்பநிலை கூடிக்கொண்டே போவதாலும் குளிர்சாதனப்பெட்டிகளுக்கான தேவையும் அதிகரித்துக் கொண்டே போகிறது.

பழங்காலத் தொழில்நுட்பம்

அமெரிக்காவில் குளிர்சாதனப்பெட்டிகளின் எண்ணிக்கை 6 கோடியே 40 லட்சத்திலிருந்து 10 கோடியாக அதிகரிக்க 15 ஆண்டுகள் ஆனது. ஆனால், 2010-ல் மட்டும் 50 கோடி குளிர்சாதனப்பெட்டிகள் சீன வீடுகளில் வாங்கப்பட்டன என ‘லூசிங் அவர் கூல்’ புத்தகத்தில் எழுத்தாளர் ஸ்டான் காக்ஸ் குறிப்பிட்டுள்ளார். அதேபோல 1995-ல் 7% சீன வீடுகளில் மட்டும்தான் குளிர்பதனப்பெட்டிகள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் 2007-ல் அது 95%ஆக மளமளவென அதிகரித்துவிட்டது.

இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த தொழில்நுட்பத்தில்தான் இன்றும் குளிர்பதனப்பெட்டிகள் இயங்குகின்றன. நீராவியை அமிழ்த்தும் முறையில் இயங்கும் இத்தகைய குளிர்பதனப்பெட்டிகளில் ஹைட்ரோஃப்ளூரோ கார்பன் பயன்படுத்தப்படுகிறது. இதனால் அதிகப்படியான வெப்பம் கிரகிக்கப்பட்டு மீண்டும் வெப்பம் வெளியேற்றப்படுகிறது. அது மட்டுமல்லாமல், அதிகப்படியான மின்சாரமும் செலவாகிறது.

இந்தியாவின் நிலை என்ன?

இந்தியா இன்றைக்கு எப்படி இருக்கிறது என்பதற்கு ஓர் உதாரணம் இதோ. தற்போது, குளிர்சாதனப்பெட்டிகள்தான் மும்பையின் 40% மின்சாரத்தைக் குடிக்கின்றன என்கிறது ஓர் ஆய்வு முடிவு. சவூதி அரேபியாவில் வெயில் தகிக்கும் மாதங்களில் குளிர்சாதனப்பெட்டிகளுக்காக மட்டும் ஓராண்டுக்கு 100 கோடி பீப்பாய் எண்ணெய் செலவாகிறது. பிரிட்டனில்கூடக் குளிர்சாதனப்பெட்டிகளுக்காகவும் குளிர்பதனப்பெட்டிகளுக்காகவும் 20% மின்சாரம் செலவழிக்கப்படுகிறது. அமெரிக்கக் கட்டிடங்களில் 87% குளிரூட்டப்பட்டவை. அதேபோல அனைத்து வளரும் நாடுகளிலும் குளிர்சாதனப்பெட்டிகளின் பயன்பாடு அதிகரித்துக்கொண்டே போகிறது. பருவநிலை மாற்றம் குறித்து நாடுகளுக்கு இடையிலான கூட்டமைப்பில் ஆண்டுதோறும் குளிர்சாதனப்பெட்டிகளை இயக்கும் மணி நேரங்கள் கணக்கிடப்படும். அதன்படி 2000-ல் 300 டெராவாட்ஸ் மணி நேரம் உலகம் முழுவதிலும் குளிர்சாதனப்பெட்டிகள் இயக்கப்பட்டன. இந்த ஆய்வின் அடிப்படையில் 2050-ல் 4,000 டெரா வாட்டாகவும் 2100-ல் 10 ஆயிரம் டெராவாட்டகவும் அது விஸ்வரூபம் எடுக்கும்.

ஆபத்தான குளிர்பதனப்பெட்டிகள்

“வெப்பத்தை எப்படித் திறம்படப் பயன்படுத்தல் என்பதை ஆராய்வதிலேயே பல வருடங்களை செலவழித்துவிட்டோம். குளிரை உற்பத்தி செய்யும் முறைகளை மறுபரிசீலனை செய்வதுகுறித்த போதுமான விழிப்புநிலை இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்” என ஹெரியட் வாட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரிச்சர்ட் வில்லியம்ஸ் சொல்கிறார். அதிலும், குளிர்சாதனப்பெட்டிகளும் குளிர்பதனப்பெட்டிகளும்தான் சுற்றுச்சூழலை இரண்டு மடங்கு அதிகமாக மாசுபடுத்துபவை. அவற்றில் பொருத்தப்பட்டுள்ள குளிர்நிலை ஊட்டிகள் கார்பன்டை ஆக்சைடைக் காட்டிலும் 4,000 மடங்கு அதிபயங்கரமான பசுமைக்குடில் வாயுக்களை வெளியிடுகின்றன.

அதிலும் சில குளிர்பதனப்பெட்டிகள் மிகவும் ஆபத்தானவை. ‘இ4 டெக்’ என்னும் ஆற்றல் ஆலோசனை நிறுவனத்தின் ஆய்வின்படி சில உணவகங்களில் டீசலால் இயங்கும் குளிர்பதனப்பெட்டிகள் பயன் படுத்தப்படுகின்றன. அவை சரக்கு லாரிகள் கக்கும் புகையைவிடவும் 30 மடங்கு கூடுதல் விஷம் வாய்ந்த நுண்பொருட்களையும் 6 மடங்கு கூடுதலான நைட்ரஜன் ஆக்ஸைடையும் வெளியேற்றுகின்றன.

மாற்று என்ன?

குளிர்பதத்தைச் சிறப்பான முறையில் தயாரிப்பது எப்படி எனக் கேட்டால், அதற்கு முதலில் அனல் மின்சாரத்தை நம்பியிருப்பதை நிறுத்த வேண்டும். காற்றாலைகள் மூலம் குறைந்த செலவில் மின்சாரமும் தயாரிக்கலாம். அதிலிருந்து குளிர்பதத்தையும் உண்டுபண்ணலாம். துளியும் மாசுபடுத்தாமல் குளிரை உற்பத்தி செய்யும் இன்ஜின் ஒன்றை பீட்டர்ஸ் பணிபுரியும் பிரிட்டன் பொறியியல் நிறுவனமான ‘டியர்மேன்’தற்போது வடிவமைத்துள்ளது. டீசல் குளிர்பதனப்பெட்டிகளுக்குப் பதிலாகத் திரவநிலை நைட்ரஜன் மூலமாக இயங்கும் பெட்டிகள் இவை. ஆனால், தற்போது இது ஒரு சோதனை முயற்சி மட்டுமே. இப்படியாகக் குளிர்பதத்தைத் தயாரிக்க மேலும் பல நூதன முறைகளை நாம் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள உடனடி தேவை புதிய குளிர் தயாரிப்பு முறைகளே!

தமிழில் சுருக்கமாக: ம.சுசித்ரா, © ‘கார்டியன்’