வீட்டுக்கு வண்ணமடிக்க வேண்டும் என்றால் உடனடியாக நமக்குத் தோன்றிய வண்ணத்தில் அடித்துவிடக் கூடாது. வெறுமனே சுவரை அழகாக்கும் விஷயம் மட்டுமல்ல வண்ணங்கள் வண்ணங்களுக்குப் பின்னே பல விஷயங்கள் இருக்கின்றன. நம் மன நிலையை மாற்றக்கூடிய ஆற்றல் வண்ணங்களுக்கு உண்டு.

மஞ்சள் வண்ணம்

சூரிய ஒளி, மலர்கள் மற்றும் மஞ்சள் நிறம் எந்த இடத்தையும் பிரகாசப்படுத்த வல்லவையாகும். நம்பிக்கை, ஞானம், செயல்முறை மற்றும் நரம்பு மண்டலத்தை ஊக்குவிக்கும் சக்தி மஞ்சள் நிறத்திற்கு உண்டு என்று அறியப்படுகிறது.
சமையலறை, சாப்பாட்டு அறை மற்றும் வரவேற்பு அறைகளுக்கு ஏற்றதாக மஞ்சள் நிறம் உள்ளதால், அதைப் பயன்படுத்தலாம். மேலும், படுக்கையறைக்கு வெளிர் மஞ்சள் வண்ணத்தைப் பயன்படுத்தலாம்.

ஆரஞ்சு

சிவப்பின் உறவினர் என்று அழைக்கப்படும் ஆரஞ்சு நிறம், அலங்காரமானது. ஆற்றல் மிக்க அரவணைப்பு இயல்பு கொண்ட இந்த நிறம், சமூக இணக்கத்தின் அம்சமாக அறியப்படுகிறது.

எனவே இந்த நிறத்தை சமையலறை, சாப்பாட்டு அறை மற்றும் வரவேற்பு அறைக்கு அடிக்கலாம். படுக்கையறைக்கு ஆரஞ்சு நிறம் வேண்டும் என்று விரும்பினால், பூமியின் நிறத்தை ஒத்த ஆரஞ்சு வண்ணத்தைப் பயன்படுத்தலாம்.

எலுமிச்சை

இந்த நிறம், பிரகாசம் மற்றும் சூரிய ஒளி தொடர்புடையதாக உள்ளது. சூடான இந்த நிறம், ஆறுதல் மற்றும் மனநிறைவு சக்தி கொண்டது. மனதில் தெளிவையும், ஊக்கத்தையும், ஒழுங்கான வாழ்க்கை தேவையையும் இந்த நிறம் குறிக்கும்.

தூய்மை மற்றும் இளைஞர்களின் சின்னமாக கருதப்படும் மஞ்சள் நிறம், எதிர்ப்பை வலுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. குடும்பத்தில் சுதந்திரம் மற்றும் உற்சாகத்தை இந்த நிறம் கொண்டு வரும். ஆனாலும், படுக்கை அறைக்கு எலுமிச்சை நிறத்தை பயன்படுத்தக் கூடாது.

பசுமை

கலாச்சாரம், மதம், அழகு மற்றும் புதிய வாழ்க்கை முறையோடு தொடர்புடைய இந்த நிறம் செழிப்பின் அம்சமாக கருதப்படுகிறது.

பச்சை நிறத்தை வீட்டின் அறிவு சார்ந்த இடங்கள், முதிய உறுப்பினர்கள் தங்கும் இடங்களுக்கு பயன்படுத்தலாம். குளியலறைக்கும் இந்த நிறம் ஏற்றதாகும்.