தமிழகமே தண்ணீரில் மிதக்கிறது. ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுகின்றன. அணைகள், ஏரிகள் நிரம்பி வழிகின்றன. வீடுகளுக்குள் ஊடுருவி நிற்கிறது தண்ணீர். நீர் எது, நிலம் எது, ஊர் எது, கரை எது என்றுத் தெரியவில்லை. சென்னையில் கூடுதலாக 300 மில்லியன் லிட் டர் குடிநீர் தருகிறார்கள். இனி குடிநீரிலேயே குளிக்கலாம்; துணி துவைக்கலாம் என்றெல் லாம் பேசிக்கொள்கிறார்கள். ஆனால், இந்த வெள்ளத்திலும் குடிக்க ஒரு சொட்டு நல்லத் தண்ணீர் இல்லாமல் மொத்தத் தமிழகத் தையும் ஏக்கமாகப் பார்க்கிறார்கள் தருமபுரி மாவட்டத்தில் இருக்கும் அரூர் மக்கள்.

அரூர் சுற்றுவட்டாரப் பகுதியின் குடிநீர் ஆதாரம் நிலத்தடி நீர் மட் டுமே. ஒகனேக்கல் கூட்டு குடிநீர் திட் டத்தில் மூலம் கிடைக்கும் தண்ணீர் மிகக் குறைவு. நிலத்தடி நீருக்கான ஆதாரம் அரூர், தொட்டம்பட்டியில் அமைந்திருக்கும் பெரிய ஏரி. இதன் கொள்ளளவு 23.6 மில்லியன் கன அடி. கரையின் நீளம் 1,100 மீட்டர். ஏரியின் நீர்ப் பிடிப்பு பகுதி 145.5 ஏக்கர். இந்த ஏரியில் தண்ணீர் இருந்தால் மட்டுமே அரூரில் நிலத்தடி நீர் ஓரளவு தெளிவாகக் கிடைக்கும். இல்லையென்றால் மஞ்சளாக ஊற் றெடுக்கும். அத்தனையும் ‘ஃபுளோரைடு’ கனிமம். (பார்க்க பெட்டிச் செய்தி)

ஆனால், இவ்வளவு மழையிலும் அரூர் பெரிய ஏரி காய்ந்துக்கிடக்கிறது. ஏரிக்குள் சாக்கடையை கலக்கிறார்கள், குப்பைகள் கொட்டுகிறார்கள், கிரா னைட் கழிவுகள் கொட்டுகிறார்கள். ஏரிக்கு தண்ணீர் வரும் கால்வாய் தூர்ந்துக்கிடக்கிறது. விவசாயத்துக்கு தண்ணீர் இல்லை. குடிநீருக்குத் தண் ணீர் இல்லை. ஆனால், இதன் பின்ன ணியில் மிகப் பெரிய வணிக அரசியல் இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? விரிவாகப் பார்ப்போம்.

சேர்வராயன் மலையில் இருந்து உற்பத்தியாகும் வாணியாறு, முக்கனூர் மலையில் இருந்து உற்பத்தியாகும் கல்லாறு, சித்தேரி மலையில் இருந்து உற்பத்தியாகும் வரட்டாறு ஆகிய வைதான் இந்தப் பகுதிகளின் நீர் ஆதாரங்கள். சேர்வராயன் மலையில் இருந்து வழிந்தோடும் வாணியாறு, முள்ளிக்காடு கிராமத்தில் இருக்கும் வாணியாறு அணையில் சேகரமாகிறது. அணையை நிரப்பிய வாணியாறு சங்கிலித் தொடர்களாக அமைந்த வெங் கடசமுத்திரம் ஏரி, ஆலாபுரம் ஏரி, ஒந்தி யம்பட்டி ஏரி, தென்கரைக்கோட்டை ஏரிகளை நிரப்பியப் பின்பு கல்லாற்று டன் இணைகிறது. அங்கிருந்து சின்னாங் குப்பம் கால்வாய் வழியாக அரூர் பெரிய ஏரிக்குச் செல்கிறது. அரூர் ஏரி நிரம்பிய பின்பு ராஜ வாய்க்கால் வழியாக தண்ணீர் மீண்டும் வாணியாற்றுக்குச் சென்று, அது தென்பெண்ணையுடன் இணைந்துவிடுகிறது.

ஆனால், இன்றைய கள நில வரம் என்ன? தொடர்ந்து பெய்த மழையில் வாணியாறு அணை தொடங்கி வெங்கடசமுத்திரம், ஆலா புரம், ஒந்தியம்பட்டி, தென்கரைக் கோட்டை ஏரிகள்வரை தண்ணீர் தளும்பு கின்றன. அதற்கு அடுத்துள்ள அரூர் பெரிய ஏரி மட்டும் காய்ந்துக் கிடக்கிறது. ஏரிக்கு தண்ணீர் வரும் சின்னாங்குப்பம் நீர் வரத்துக் கால் வாய் தூர்ந்துக்கிடக்கிறது. பல இடங் களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் திட்டமிட்டே அடைக்கப் பட்டுள்ளது.இதனால் இவ்வளவு வெள்ளத்திலும் தண்ணீர் ஏரிக்குச் செல்லாமல் தென் பெண்ணையாறு - சாத்தனூர் அணை வழியாக கடலுக்கு செல்கிறது.

பின்னணி இதுதான். வாணி யாறு அணை தொடங்கி தென்கரைக் கோட்டைப் பகுதி வரை அனைத்தும் கிராமங்கள். இதர மாவட்டங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகள் எதுவும் கிடையாது. வணிகம், வளர்ச்சித் திட்டங்கள் எதையும் யோசிக்க முடி யாது. எந்தப் பக்கம் ஓடினாலும் மலை யில்தான் முட்டிக்கொள்ள வேண்டும். ஆனால், வாடிவாசலாக அமைந் திருக்கிறது அரூர். ஊர் இப்போதுதான் பெரிய கிராமம் என்கிற நிலையில் இருந்து மாறி நகரமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக, பெரிய ஏரியை ஒட்டி செல்கிறது சேலம் - வாணியம்பாடி மாநில நெடுஞ்சாலை. அதைப் பிடித்துப்போனால் வேலூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையை தொட்டுவிடலாம்.

ஏரிக்கு அருகே மாநில நெடுஞ்சாலை யின் இருபுறமும் ஏராளமான நிலங்களை வளைத்துப்போட்டுவிட்டார்கள். ஏரியின் கீழ் பகுதியில்தான் அரூர் நகரத்தின் விரிவாக்கம் நடக்கிறது. அங்கு ஏரியினால் சுமார் 2000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்றுக்கொண்டிருந்தன. ஏரி பொய்த்தால் விவசாயிகள் வேறு வழியின்றி நிலங்களை விற்றுவரு கிறார்கள். பாதி நிலங்கள் விற்றுத் தீர்ந்துவிட்டன. பல நூறாக கூறு போடப் பட்ட வயல்கள் வணிக நிறுவனங்க ளாக மாறத் துடிக்கின்றன. பல ஆண்டுக ளாகவே ஏரியின் பெரும் பரப்பு காய்ந்துக் கிடப்பதால், அரூர் பேருந்து நிலையத்தை இங்கே கொண்டு வரவும் துடிக்கிறார்கள் ரியல் எஸ்டேட் வணிகர்கள். சுருக்கமாக சொல்ல வேண்டும் எனில் கால்வாயை தூர் வாரினால் ஏரிக்கு தண்ணீர் வந்துவிடும். ஏரியில் தண்ணீர் இருந்தால் விவசாயிகள் நிலத்தை விற்க மாட்டார்கள். நகரம் விரிவாக்கம் செய்ய முடியாது.

விவசாயிகள் போராடி சலித்து விட்டார்கள். முதல்வர் தனிப் பிரிவு வரைக்கும் முட்டி மோதியும் பலன் இல்லை. நிலங்களை வளைத்தது அத்தனைப் பேரும் அரசியல் பிரமுகர்கள். கிரானைட் தொழிலதிபர் கள். எளியவர்களின் போராட்டம் அவர்கள் முன் எடுபடவில்லை. ஏராள மான தண்ணீர் இருந்தும் குடிக்க வழியில்லாமல் தாகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்டிருக்கிறது ஏரி. அதனை மீண்டும் உயிர்ப்பிப்பது அரூர் மக்களின் கையிலிருக்கிறது!

தமிழகத்திலேயே ‘ஃபுளூரோஸிஸ்’ பாதிப்பில் முதலிடத்தில் இருக்கிறது தருமபுரி. இங்கு 1,520 கிராமங்கள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அரூர், பாப்பிரெட்டிபட்டிப் பகுதிகளில் இதன் பாதிப்புகள் மிக அதிகம். ஒரு லிட்டர் தண்ணீரில் 1.5 மில்லி கிராம் வரை மட்டுமே ஃபுளோரைடு இருக்க வேண்டும். ஆனால், இங்கு 3 மி.கிராம் முதல் 10 மி.கிராம் வரை ‘ஃபுளோரைடு’ கலந்திருக்கிறது.


பற்களில் ஒருமுறை ‘ஃபுளோரோஸிஸ்’ பாதிப்பு ஏற்பட்டால் நிரந்தர தீர்வுக்கு வழியில்லை. இதனால், அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினர்தான். குழந்தைகளுக்கு பால் பற்கள் விழுந்து நிலையான பற்கள் முளைக்கும்போது பற்களில் சிறு கட்டிகள் தோன்றும். சில ஆண்டுகளிலேயே பற்கள் பழுப்பும் சிகப்புமாக நிறம் மாறி, உருக்குலைந்துப்போகும். தவிர, எலும்பு தடித்தல், முள்ளெலும்பு வெளி வளர்ச்சி, கப்பைக்கால் போன்ற நோய்களாலும் மாற்றுத்திறனாளிகளாக தவிக்கிறார்கள் மக்கள். கால்நடைகள் இந்தத் தண்ணீரைக் குடிக்கும்போது அவை சுரக்கும் பாலில் இருந்தும் ‘ஃபுளோரோஸிஸ்’ பாதிப்பு ஏற்படலாம்.