மத்திய அரசு சமீபத்தில் அறிவித் துள்ள தங்க முதலீட்டு திட்டத்தால் தங்கம் இறக்குமதி குறையும், விலை உயர்வு கட்டுப்படுத்தப்படும் என தங்க நகை வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் சுமார் 20 ஆயிரம் டன் தங்கம் இருப்பதாக மத்திய அரசு மதிப்பிட்டுள்ளது. ஆண்டுதோறும் 900 டன் தங்கம் (ரூ.2.50 லட்சம் கோடி மதிப்பு) பல்வேறு நாடு களில் இருந்து இறக்குமதி செய் யப்படுகிறது. இதில் 40 சதவீதம் தங்கக் கட்டிகளாகவும், நாணயங் களாகவும்தான் இறக்குமதி செய் யப்படுகின்றன. மத்திய அரசின் தங்க இருப்பு 560 டன்னாக உள்ளது. அதிகமான தங்கம் இறக்குமதியால் நாட்டின் அன்னிய செலாவணி பாதிக்கப்படுகிறது.

எனவே, மக்களிடம் இருக்கும் தங்கத்தை முதலீடாக மாற்றவும், தங்கம் இறக்குமதி தேவையை குறைக்கவும் மத்திய அரசு 3 வகை யான தங்க முதலீட்டு திட்டங்களை கடந்த 5-ம் தேதி தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இந்திய குடிமக்கள் யார் வேண்டுமானாலும் வங்கியில் தங்கத்தை முதலீடு செய்யலாம். ஒரே நேரத்தில் குறைந்தபட்சம் 30 கிராம் தங்கத்தை முதலீடு செய்ய வேண்டும். இது கட்டியாகவோ, நாணயமாகவோ, நகையாகவோ இருக்கலாம். அதிகபட்ச முதலீட்டுக்கு உச்ச வரம்பு கிடையாது.

ஓர் ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வரையிலான குறுகிய கால டெபா சிட், 5 முதல் 7 ஆண்டுகள் வரை யிலான நடுத்தர கால டெபாசிட், 12 முதல் 15 ஆண்டுகள் வரை யிலான நீண்ட கால டெபாசிட் என 3 வகையான தங்க டெபாசிட் திட்டங் களை வங்கிகள் செயல்படுத்தும்.

இத்திட்டத்தின் கீழ் முதலீடு செய்யப்படும் தங்கத்துக்கு 2.5 சதவீதம் வரை வட்டி கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத் திட்டம் குறித்து முழுமையாக தகவல்களை தெரிந்துகொள்ள கடந்த 3 நாட்களில் மட்டுமே ஒரு கோடி பேர் இணையதளங்களில் தேடியுள்ளனர். மத்திய அரசின் இத்திட்டம் மூலம் தங்கம் இறக்கு மதி குறையும், மேலும், தங்கம் விலை உயர்வு கட்டுக்குள் இருக் கும் என தங்க நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் எஸ்.சாந்தகுமார் ‘தி இந்து’விடம் கூறிய தாவது:

மத்திய அரசு சமீபத்தில் அறிவித் துள்ள தங்கம் முதலீடு திட்டம் பொதுமக்களிடம் பெரும் ஆர் வத்தை ஏற்படுத்தியுள்ளது. திட்டம் தொடங்கிய சில நாட்களில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் இது தொடர்பாக முழுமையாக தெரிந்துகொள்ள ஆர்வமாக வுள்ளனர். முதல் முறையாக தங்கம் பாதுகாப்பாக இருக்கவும், அதன் மூலம் வருவாய் பெறவும் இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. தங்கம் இறக்குமதியில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. இதனால், நம் அன்னிய செலாவணி பாதிக்கப்படுகிறது. இத்திட்டம் மூலம் மக்களிடம் முடங்கியுள்ள தங்கம் முதலீடாக மாறும் சூழல் ஏற்படும்.

இதனால், இறக்குமதி தேவை கணிசமாக குறையும். தங்கம் மறுசுழற்சி மூலம் பணமாக மாறும். அடுத்த 10 ஆண்டுகளில் இத்திட்டம் மூலம் 10 ஆயிரம் டன் தங்கம் முதலீடாக மாற வாய்ப்புள்ளது. உள்ளூர் தேவைக்கு நம் நாட்டின் தங்கத்தை பயன்படுத்துவதால், இறக்குமதி குறைந்துவிடும். மேலும், சர்வதேச அளவில் தங்கம் விலை உயர்ந்தாலும், நம் நாட்டில் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. விலையும் கட்டுக்குள் இருக்கும்.

வழக்கமாக பண்டிகை நாட் களில் தங்கம் விலை அதிகரிக்கும். ஆனால், மத்திய அரசின் தங்க முதலீட்டு திட்டத்தின் தாக்கத்தால் விலை கட்டுக்குள் வர தொடங்கி யுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் தீபாவளி பண்டிகையின்போது பவுன் விலை ரூ.20 ஆயிரத்து 600 முதல் ரூ.21 ஆயிரமாக இருந்தது. ஆனால், தற்போது பவுன் விலை ரூ.19 ஆயிரத்து 600 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, மத்திய அரசே தங்க முதலீட்டு திட்டத்தை அறிவித்துள்ளது மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.