Nov 12, 2015

கார்ல ஊருக்குப் போறீங்களா?

                     குடும்பத்தோடு சொந்த ஊருக்கு, சொந்த காரில் டிரைவ் செய்து கொண்டே போவது ஜாலியான அனுபவம்தான். ஆனால், பல சமயங்களில் வழியில் கண்டதையும் சாப்பிட்டுவிட்டு, ஜாலியான பயணத்தைப் பலரும் சொதப்பல் பயணமாக மாற்றிவிடுவது வாடிக்கையாகி விட்டது. காரில் நீண்ட தூரம் பயணம் செய்யும்போது என்ன சாப்பிடலாம்? என்ன சாப்பிடக்கூடாது ?
நீண்ட தூரப் பயணம் என்றாலே சிப்ஸ் பாக்கெட், கோலா, சாக்லேட் என அள்ளிப் போட்டுக் கொண்டு காரில் கிளம்புவதை முதலில் நிறுத்துங்கள். சிப்ஸ், கோலா, சாக்லேட் ஆகியவற்றைச் சாப்பிடும்போது, முதலில் உற்சாகம் தொற்றிக்கொள்வது போல இருக்கும். ஆனால், இவை அஜீரணக் கோளாறை ஏற்படுத்தி உடம்பைச் சோர்வாக்கிவிடும்.
'கணவர்தானே கார் ஓட்டுகிறார், அப்பாதானே கார் ஓட்டுகிறார்’ என அருகில் உட்காருபவர்கள் கண்டதையும் சாப்பிட்டுவிட்டு தூங்கி விடக் கூடாது. கார் ஓட்டுபவருடன் ஒருவர் பேசிக்கொண்டே வருவது மிக மிக அவசியம். காருக்குள் இருக்கும் எல்லோரும் தூங்கும்போது காரை ஓட்டுபவருக்கு தூக்கம் எளிதில் தொற்றிக்கொள்ளும். இது பெரிய ஆபத்தில் கொண்டு போய் விட்டுவிடும்.
  காருக்குள் சின்ன ஃப்ரிஜ் அல்லது ஐஸ் கட்டிகள் நிரம்பிய கூலர் பாக்ஸை வைத்திருப்பது நல்லது. பழங்கள், ஜூஸ் ஆகியவற்றைக் கெட்டுப் போகாமல் நீண்ட நேரம் இதில் வைத்திருக்க முடியும்.
  காரில் பயணம் செய்யும்போது சாக்லேட் சாப்பிடுவதை முழுவதுமாகத் தவிர்த்து விடுங்கள். சாக்லேட்டில் அதிக சர்க்கரை மற்றும் கொழுப்பு இருப்பதால், உடலை விரைவில் மந்தமாக்கி தூக்கத்தை வரவழைக்கும். மேலும், சாக்லேட்டுகள் காரின் டேஷ் போர்டு மற்றும் இருக்கைகளில் பட்டு காரையும் அசுத்தப்படுத்திவிடும்.
சிப்ஸ் சாப்பிடுவதால் பசி குறையாது. கலோரிகள் இதில் அதிகம் என்றாலும், ஃபைபர் இல்லை என்பதால் சீக்கிரத்தில் பசி எடுக்கும். சிப்ஸ் சாப்பிடுவதால் கலோரிகளும், உப்பும்தான் சேர்ந்து கொண்டே போகுமே தவிர, பசி குறையாது.
கோதுமை கலந்த சர்க்கரை இல்லாத ஃபைபர் பிஸ்கெட்டுகளை பயணத்தின்போது அதிகம் சாப்பிடுவது நல்லது. எனவே, சிப்ஸ் பாக்கெட்டுகளுக்குப் பதில் நிறைய பிஸ்கெட் பாக்கெட்டுகளை எப்போதும் காருக்குள் வைத்திருங்கள்!
வறுத்த வேர்க்கடலை, பாதாம், முந்திரிப் பருப்பு உள்ளிட்ட உலர் பழங்களை பயணத்தின்போது எடுத்துக் கொள்ளலாம். இவற்றில் ஊட்டச்சத்து அதிகம்; பசியும் அதிகம் எடுக்காது. அதேசமயம், வயிற்றைக் கெடுக்காது என்பதோடு சீக்கிரத்தில் ஜீரணமாகிவிடும். ஆனால், 'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்பதை மறக்காதீர்கள்.
வாழைப்பழம், ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு பழங்களைப் பயணத்தின்போது அதிகம் எடுத்துக்கொள்ளலாம். இதில் வைட்டமின்கள் அதிகம் இருக்கிறது என்பதோடு, உடலுக்குத் தேவையான தண்ணீரையும் இது கொடுக்கும். கலோரிகள் மிகவும் குறைவு என்பதால், விரைவில் ஜீரணமாகி விடும். பைபர் சத்தும் இதில் அதிகம்.
கோதுமை ப்ரெட், ஃப்ரூட் சாலட், காய்கறிகள் கலந்த சான்ட்விச் போன்றவற்றை இரவு நேரத்தின்போது சாப்பிடலாம். சான்ட்விச், பயணத்துக்கான சிறந்த உணவு!
கோலா குளிர்பானங்களுக்குப் பதில் ஆரஞ்சு ஜூஸ், லெமன் ஜூஸ் குடிக்கலாம். பயணத்தின்போது நீண்ட நேரம் காரில் உட்கார்ந்துகொண்டே இருப்பதால், உடலில் வெப்பம் அதிகரிக்கும். வெப்பத்தைத் தணிக்க ஃப்ரெஷ் ஜூஸ்கள்தான் சரியான வழி. அதேபோல், இளநீர் அதிகமாகக் குடிக்கலாம். டீ, காபி குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் எனில், பயணத்தின்போது வெறும் பால் குடிப்பது நல்லது. டீ, காபி குடிப்பதைத் தவிர்க்கவே முடியாது என்பவர்கள், ஸ்ட்ராங்காக இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது! டீ, காபி அசிடிட்டியை ஏற்படுத்தும்.
பயணங்களின்போது காரமான உணவுகளை முழுக்கவே தவிர்த்துவிடுங்கள். சாலையோர ஃபாஸ்ட் ஃபுட், தாபாக்களில் கூடுமானவரை உணவு உண்ண வேண்டாம். இவை வயிற்றைக் கெடுப்பதோடு, ஜாலியான பயண அனுபவத்தையும் கெடுத்துவிடும். இரவு நேரங்களில் பரோட்டா, ஃப்ரைடு ரைஸ் போன்றவற்றுக்குப் பதில் இட்லி, இடியாப்பம் உள்ளிட்ட விரைவில் ஜீரணமாகும் உணவுகளைச் சாப்பிடுவது நல்லது.
பஜ்ஜி, போண்டா, பக்கோடா ஆகிய உணவுகளைப் பயணத்தின்போது சாப்பிட வேண்டாம். நீண்ட தூரப் பயணங்களின்போது, வழக்கமாக சாப்பிடும் அளவைவிட கொஞ்சம் சாப்பிட்டாலும் சீக்கிரம் செரிக்கக் கூடிய, ஊட்டச்சத்து மிக்க தரமான உணவுகளை உட்கொள்வதே நல்லது.
உங்கள் பயணம் இனிதாக அமைய வாழ்த்துகள்!

No comments:

Post a Comment