ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு

*
கோவை மாவட்டம் பேரூர் பட்டீஸ்வரர் கோயில் மகா மண்டபத்தின் வடக்கு சுவரில் கல்வெட்டு ஒன்று இருக்கிறது. கி.பி.1224-ம் ஆண்டு கொங்கு மண்டலத்தை ஆட்சிபுரிந்த வீர ராஜேந்திரனின் நீர் நிர்வாகம் பற்றிய கல்வெட்டு அது. சோழர்கள் நொய்யல் ஆற்றில் இருபுறமும் வரிசையாக சங்கிலித் தொடர் குளங்களை வெட்டினார்கள். கழுகுப் பார்வையில் பார்த்தால் ஆற்றுக்கு மாலை அணிவித்ததுபோல இருக்கும் குளங்களின் தோற்றம். அதில் தேவிசிறை என்கிற குளம் ஆற்றின் மேல் பகுதியிலும், கோளூர் அணை ஆற்றின் கீழ் பகுதியிலும் கட்டப்பட்டன. மேலே ஊர்க்காரர்கள் தங்கள் குளத்தில் முதலில் தண்ணீரை நிரப்பியதால் கீழே இருந்த குளத்துக்குத் தண்ணீர் வரத்துத் தடைபட்டது. கோளூர் மக்கள் மன்னனிடம் முறையிட்டார்கள்.

அப்போது மன்னன், “தங்களுரெல்லையில் தேவிசிறை என்கிற அணை யடைத்து வாய்க்காலும் வெட்டிக் கோளூரணைக்கு சேதம் வராதபடி அவ்வணைக்குப் பின்பாக நீர் விட்டுக்கொள்வாராகவும்” என்று உத்தர விட்டான். மன்னனின் உத்தரவு கல் வெட்டிலும் பொறிக்கப்பட்டது. அதாவது, கீழேயிருக்கும் கோளூர் அணை நிரம்பிய பின்பே மேலே இருக்கும் தேவிசிறை அணையில் நீரை தேக்க வேண்டும் என்கிறது அந்த உத்தரவு. நீர்ப் பங்கீட்டிலும் நீர் நிலைகள் பராம ரிப்பிலும் சிறந்து விளங்கினார்கள் கொங்கு சோழர்கள்.

ஆனால், இன்று அந்தக் குளங்கள் எல்லாம் குப்பை மேடுகளாகவும் சாக் கடைகளாகவும் அழிந்து கொண்டிருக்கின்றன. அரசே பல இடங்களில் குளங்களை ஆக்கிரமித்தது. இந்த நிலையில்தான் கோவையின் ‘சிறு துளி’அமைப்பு மூலம் குளங்களுக்கு விடியல் தொடங்கியது. இந்த அமைப் பினர் ஆரம்பத்தில் கிருஷ்ணம்பதி, உக்கடம் பெரியகுளம், செல்வம்பதி, முத்தண்ணன், செல்வ சிந்தாமணி, வாலாங்குளம் உள்ளிட்ட குளங்களில் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டனர். ஆனாலும், சீரழிவுகள் தொடர்ந்ததால் முழுமையான தீர்வு கிடைக்கவில்லை.

ஒருகட்டத்தில் உக்கடத்தில் 325 ஏக்கர் கொண்ட பெரிய குளம் முற்றிலு மாக வற்றியது. அது இருந்த தடமே தெரி யாமல் மண் மூடியது. சீமைக் கருவேலங் கள் மண்டின. அந்த சமயத்தில்தான் 2013 ஏப்ரல் மாதம் குளத்தைக் கையிலெடுத்தது ‘சிறு துளி’ அமைப்பு. முதலில் 20 பேர் களம் இறங்கினார்கள். தோண்டத் தோண்ட வந்தன கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகள். புதைகுழி போல சாக்கடை தேங்கியதால் உள் ளேயே செல்ல முடியவில்லை. ஆரம்பத் தில் அவர்களால் அரை ஏக்கரைக்கூட சீரமைக்க முடியவில்லை. 325 ஏக்கரை யும் வெட்டி முடிப்பது எப்படி என்று தெரியாமல் திகைத்து நின்றார்கள் அவர்கள்.

மக்கள் பங்களிப்பு இருந்தால் மட்டுமே இவ்வளவு பெரிய பணி சாத்தியாமாகும் என்று முடிவு செய்தார் ‘சிறுதுளி’ அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன். ‘ஒரு கைப்பிடி மண் எடுத்து போடுங்கள்’ என்று முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மக்களுக்கு அழைப்பு விடுத்தார்கள். ஞாயிறுகளில் மட்டுமே வேலை செய்யலாம் என்று முடிவானது. முதல் வாரம் சுமார் 200 பேர் வருவார்கள் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 2 ஆயிரம் பேர் வந்து குவிந்தார்கள். ஆனால், அத்தனைப் பேரும் வேலை பார்க்க மண்வெட்டி, மண் சட்டி இல்லை. தகவல் கேள்விப்பட்ட கோவை ‘சேம்பர் ஆஃப் காமர்ஸ்’ மண் சட்டிகளையும் மண் வெட்டிகளையும் கொண்டுவந்து குவித்தது முதல் நாளே மளமள வென நடந்தன வேலைகள்.

கோவை பேரூர் ஆதினம் மடத்தில் அடிக்கடி அனைத்து மதத்தினரும் கலந்துகொள்ளும் மத நல்லிணக்கக் கூட்டம் நடக்கும். அந்த வாரம் நடந்த கூட்டத்தில் ஆன்மிக அன்பர்கள் இதைப் பற்றி ஆலோசித்தார்கள். ‘நீர் நிலைகளை சீரமைப்பதும் ஆன்மிகத் தொண்டுதான்’ என்று வலியுறுத்தப்பட்டது. அடுத்த ஞாயிற்றுக்கிழமையில் ஏராளமான இஸ்லாமிய சகோதரர்கள் குடும்பத் தோடு குவிந்துவிட்டார்கள். இரண் டாவது வாரமே சுமார் 6 ஆயிரம் பேர் திரண்டார்கள். அந்தப் பகுதியைக் கடந்த வர்கள் எல்லாம் கூட்டத்தைப் பார்த்து திகைத்து, வண்டிகளை ஓரம்கட்டிவிட்டு பணியில் ஈடுபட்டார்கள். பலரிடம் இருந்து மோர், இளநீர், குளுகோஸ், பிஸ் கெட் பாக்கெட்டுகள் வந்து குவிந்தன. முகம் தெரியாத, பெயர் அறியாத ஆயிரக்கணக்கான மக்களை உணர்வால் இணைத்தது குளம். தன்னிச்சையாக உணர்வுப் பெற்றார்கள் மக்கள்.

மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை. மக்க ளின் உணர்வைக் கண்டு வியந்த காவல் துறையின் அன்றைய மாநகர ஆணை யர் ஏ.கே.விஸ்வாதன் ஆயிரம் காவலர் களைக் குளத்துக்கு அனுப்பினார். வெள்ளலூர் விரைவு அதிரடி படை முகாமில் இருந்து 300 வீரர்கள் களத்தில் இறங்கினார்கள். சீமை கருவேல மரங்கள், புதர்கள், மண் மேடுகள் மின்னல் வேகத்தில் மறைந்தன. அடுத்த வாரம் கோவை மாநகராட்சியும் மாவட்ட நிர்வாகமும் களத்தில் இறங்கின. நேரில் வந்து மண் அள்ளினார் மேயர். அரசுத் துறைகள் அதிகாரிகள், பணியாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பத்திரிகை யாளர்கள் பலரும் பணியில் ஈடுபட்டார்கள். கடைசி வாரம் மட்டும் சுமார் 15ஆயிரம் பேருடன் மனிதர்களால் நிரம்பியிருந்தது குளம்.

குளம் மொத்தம் மூன்றரை அடி ஆழப்படுத்தப்பட்டது. குளத்தில் தோண்டிய மண்ணைக் கொண்டே நடுவே தீவுகளை அமைத்தார்கள். கரைகள் பலப்படுத்தப்பட்டன. குளத் துக்குத் தண்ணீரைக் கொண்டுவரும் வாய்க்காலும் தூர்வாரப்பட்டது. மொத்தமாக சீரமைக்கப்பட்டது குளம். சில நாட்கள் முன்புதான் மேற்குத் தொடர்ச்சி மலையில் பருவ மழையும் தொடங்கியிருந்தது. நொய்யலும் பெருக்கெடுத்திருந்தது. பக்கத்து ஊரில் இருந்து தகவல் வந்தது, ‘ஆற்று வெள்ளம் சீறிப் பாய்கிறது; இன்னும் ஒரு மணி நேரத்தில் குளத்துக்குத் தண் ணீர் வந்துவிடும்’ என்றார்கள்.

அன்று அந்தி சாய்ந்தது. ஊரே திரண்டு அகல் விளக்குகளை ஏந்தி நின்றது. பெண்கள் ஆரத்தி கரைத்து வைத்திருந்தார்கள். தவழ்ந்து வரும் தண்ணீரை வரவேற்க மலர்களுடன் காத்திருந்தார்கள் குழந்தைகள். ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரமாகியது. மூன்று மணி நேரமானது. இரவு மணி 10 ஆகியும் தண்ணீர் வரவில்லை. மீண்டும் ஒரு தகவல் வந்தது. ‘தண்ணீர் வர வாய்ப்பே இல்லை’ என்றார்கள் கண் ணீருடன். என்ன ஆனது நொய்யலுக்கு? அங்கே ஒரு சதி அரங்கேறியிருந்தது.