பருவக் காற்றுகள் வீசுவதற்குப் பூமியின் சுழற்சி அச்சு சாய்வாக இருப்பதும் முக்கியக் காரணம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அக்டோபர் - நவம்பர் மாதங்கள் மழைக் காலமாகும். உலகின் மற்றெல்லா நாடுகளைக் காட்டிலும் இந்தியத் துணைக் கண்டம் மழை விஷயத்தில் அதிர்ஷ்டம் செய்திருக்கிறது.

மழைக் காலம் என்பது ஓரளவு வரையறுக்கப்பட் டிருப்பதால், விவசாயிகளும் மற்றவர்களும் தத்தமது செயல்பாடுகளை அதற்கேற்றபடி தகவமைத்துக்கொள்ள முடிகிறது. பருவ மழை பொய்ப்பது அரிதாக நடைபெறுகிறது. தென்மேற்கிலிருந்து வீசும் காற்று கொண்டுவரும் மழைக்குத் தென்மேற்குப் பருவ மழை என்றும் வடகிழக்கிலிருந்து வீசும் காற்றின் மூலம் வரும் மழை வடகிழக்குப் பருவ மழை என்றும் குறிப்பிடப்படுகிறது. தென்மேற்குப் பருவ மழை இந்தியத் துணைக் கண்டத்தின் மேற்குக் கரையோரங்களிலும் வட கிழக்குப் பருவ மழை கிழக்குக் கரைப் பகுதிகளிலும் பொழிகிறது. தென்மேற்குப் பருவம் வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை நீடிக்கும்.

பருவ மழையின் பலன்கள்

ஏறத்தாழ ஆறு முதல் எட்டு மில்லியன் ஆண்டுகளாகத்தான் இந்தியத் துணைக் கண்டத்தில் பருவ மழைகள் பெய்கின்றன. இமய மலைத் தொடர்களும் திபெத்தியப் பீடபூமியும் உருவான பிறகுதான் பருவ மழைகள் ஆண்டுதோறும் குறிப்பிட்ட கால அட்டவணையில் பெய்யத் தொடங்கின. இந்தியத் துணைக் கண்டம் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நகர்ந்து, யூரேசியக் கண்டத்துடன் மோதியபோது அவற்றின் விளிம்புகள் மேல்நோக்கி மடிந்து இமய மலைகளும் திபெத்தியப் பீடபூமியும் எழுந்தன. திபெத்தியப் பீடபூமி கோடையில் சூடாகி வறண்ட வளிமண்டலமுள்ளதாக மாறும். அதற்குத் தெற்கேயுள்ள இந்துமாக்கடல் அதைவிடக் குறைந்த வெப்ப நிலையில் இருக்கும். சூடான நிலப் பரப்புகளிலிருக்கும் காற்று சூடாகி வானை நோக்கி மேலே எழும்பும். அந்த இடத்தை இட்டு நிரப்புவதற்காக இந்துமாக் கடலிலிருந்து குளிர்ந்த காற்று நீராவியைச் சுமந்தபடி தென்மேற்குப் பருவக் காற்றாக வீசுகிறது.

குளிர் காலத்தில் வடகிழக்கிலுள்ள நிலப் பரப்புகளிலிருந்து குளிர்ச்சியுற்ற காற்று, ஒப்பீட்டளவில் உயர் வெப்ப நிலையில் உள்ள கடலை நோக்கி வீசத் தொடங்குகிறது. அக்டோபர் - நவம்பர் மாதங்களில் வங்கக் கடலைக் கடந்து வரும் இக்காற்று, இந்தியாவின் கிழக்குக் கடற்கரையோரப் பிரதேசங்களில் மழையைப் பெய்விக்கிறது.

தெற்காசியாவின் சிறப்பு

இமய மலைத் தொடர் இன்றிலிருந்து சுமார் 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் வளரத் தொடங்கியதாக நிலவியல் நிபுணர்கள் கருதுகின்றனர். அவை ஆறு முதல் எட்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இன்றிருக்கும் உயரங்களை எட்டின. இன்றளவும் அவை மெல்ல மெல்ல வளர்ந்துகொண்டேயிருக்கின்றன. அவை வளர்ந்த பிறகு, தென்மேற்கிலிருந்தும் வட கிழக்கிலிருந்தும் வீசிய ஈரமான காற்றை அவை இந்தியத் துணைக் கண்டத்துக்குள் திருப்பிவிடத் தொடங்கின. அந்தக் காற்று பருவ மழைகளைச் சுமந்து வந்து பொழிவித்தன. இத்தகைய தீவிரமான பருவ மழைக் காற்று உலகில் வேறு எங்கும் தென்படாதவை. இந்தியத் துணைக் கண்டம், இலங்கை மற்றும் தெற்காசியா ஆகிய இடங்களில் மட்டுமே வீசுகின்றன.

தென்மேற்குத் திசையிலும் வடகிழக்குத் திசையிலும் குறிப்பிட்ட காலகட்டங்களில் பருவக் காற்றுகள் வீசுவதற்குப் பூமியின் சுழற்சி அச்சு சாய்வாக இருப்பதும் ஒரு முக்கியக் காரணம். பூமி சூரியனைச் சுற்றி வரும்போது கடக ரேகைப் பகுதியும் மகர ரேகைப் பகுதியும் மாறி மாறி சூரியனுக்கு நேராக வருகின்றன. கடக ரேகைக்கும் மகர ரேகைக்கும் நடுவிலுள்ள பகுதியில் கோடையில் நிலப் பரப்பு கடலைவிட அதிக வெப்பத்தைப் பெற்றுச் சூடாகிறது. குளிர் காலத்தில் நிலப் பரப்பு கடலைவிட அதிகக் குளிர்ச்சியடைகிறது. வளிமண்டலத்தின் வெப்பச் சலனம் காரணமாக கோடையில் கடலிலிருந்து நிலத்துக்கும் குளிர் காலத்தில் நிலத்திலிருந்து கடலுக்கும் முறையே தென் மேற்குத் திசையிலிருந்தும் வட கிழக்குத் திசையிலிருந்தும் காற்று வீசுகிறது.

மெளசிம், மெளசம் - மான்சூன்!

தீவிரமான மழைப் பருவக் காற்றுகள் தெற்காசியப் பகுதியில் உள்ள நாடுகளுக்கிடையில் வர்த்தக மற்றும் கலாச்சாரப் பரிமாற்றத்துக்குப் பெரிதும் உதவின. பருவ மழைக் காலத்தைக் குறிக்க அரபியர்களும் இந்தியர்களும் பயன்படுத்திய மௌசிம், மௌசம் என்ற சொற்கள் ஆங்கிலத்தில் ‘மான்சூன்’ என உருமாறின. அரபிய வணிகர்கள் மிளகு, லவங்கம் வாங்க இந்தியாவுக்கு வரவும், தாயகம் திரும்பவும், தென்னகத்தின் வணிகர்கள் கீழ்த்திசை நாடுகளில் தமது வியாபாரத்தையும் கலாச்சாரத்தையும் பரப்பவும் பருவக் காற்றுகள் பாய்மரக் கப்பல்களை உந்தித்தள்ளி உதவியிருக்கின்றன. அதன் காரணமாக அவற்றை வணிகக் காற்றுகள் எனக் குறிப்பிடுவார்கள்.

பொய்த்தால் என்னாகும்?

பருவ மழை பொய்த்தால் எல்லாமே குலைந்துபோகும். 1970-ல் அவ்வாறு நிகழ்ந்து பெரும் வறட்சி ஏற்பட்டது. அடிக்கடி கனமழை கொட்டும் வடகிழக்கு மாநிலங்களில்கூட வறட்சி ஏற்பட்டது உண்டு. சில ஆண்டுகளில் ராஜஸ்தான் பாலைவனத்தில் பெருமழை பெய்து வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. மழைக் கால அட்டவணையை உறுதியாக நிர்ணயிக்க முடியாததால், பழங்காலத்திலிருந்தே மக்கள் ஏரிகளையும் குளங்களையும் தடுப்பணைகளையும் அமைத்து மழை நீரைச் சேமித்து வைத்தார்கள்.

தவறாத பருவம்

ஜூன் மாதம் ஆரம்பித்தவுடன் இந்திய விவசாயிகள் ஆவலுடன் வானத்தைப் பார்க்கத் தொடங்கிவி டுகிறார்கள். எது தவறினாலும் ஜூன் மாதம் 20-ம் தேதி மும்பை பகுதியில் மழை பொழிவது தவறாது என்று அங்கிருந்து வந்த நண்பர் ஆதாரபூர்வமாகச் சுட்டிக்காட்டுகிறார். அசாம், வங்காளம், ஒடிஷா, பிஹார் ஆகிய இடங்களில் ஏப்ரல், மே மாதங்களில் இடி மின்னல்கள் முழங்கப் பலத்த புயல்கள் வீசும். அதற்குக் ‘காலா பைசாகி’என்று பெயர். சில ஆண்டுகளில் அத்துடன் பெரும் மழையும் சேர்ந்துகொள்ளும். பருவ மழை தொடங்கிவிட்டதா இல்லையா என்று வானிலை ஆய்வர்கள் குழம்பிப்போவார்கள்.

பொதுவாக, அரபிக் கடல் வகை, வங்கக் கடல் வகை எனப் பருவ மழை பிரித்துப் பார்க்கப்படுகிறது. அரபிக் கடல் வகை சாதாரணமாக ஜூன் முதல் வாரத்தில் கேரளக் கரையை அடைந்து, இரண்டாவது வாரத்தில் மராட்டியக் கரையை எட்டும். வங்கக் கடல் வகை வடமேற்காக நகர்ந்து அசாம், வங்காளம் ஆகியவற்றை ஜூன் முதல் வாரத்தில் எட்டிய பிறகு, இமய மலை மதில்களால் மேற்கே திருப்பிவிடப்படும். ஜூன் மாத நடுவில் அரபிக் கடல் வகையும் வங்கக் கடல் வகையும் மத்திய நிலப் பகுதியில் சந்தித்து உத்தரப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் ஜூன் இறுதி அல்லது ஜூலை தொடக்கத்தில் மழையைப் பொழிவிக்கும். ஜூலை நடுவில் மழை காஷ்மீருக்கும் இமாசலப் பிரதேசத்துக்கும் பரவும். தென்னிந்தியாவில் ஒன்று முதல் இரண்டு கி.மீ. உயரமுள்ள முகடுக ளைக் கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலைகள் அரபிக் கடல் வகை மழையைப் பெருமளவில் கறந்துகொண்டு விடுகின்றன. நல்வினைப் பயனாக மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பாயும் ஆறுகள் மூலம் அம்மழை நீர் ஓரளவாவது தமிழகத்துக்கும் தக்காணத்துக்கும் கிடைக்கிறது!

- கே.என். ராமசந்திரன், அறிவியல் கட்டுரையாளர்