பொதுவாக இந்தியத் திரைப்படங்களில் முஸ்லிம்கள் சித்தரிக்கப்படும் விதம் நேர்மறையானதாக இருப்பதில்லை. மேலும், முஸ்லிம் சமூகத்தின் யதார்த்த வாழ்க்கைக்கும் நம் திரைப்படங்கள் காட்டும் முஸ்லிம் சமூகத்தின் வாழ்க்கைக்கும் சம்பந்தமே இருப்பதில்லை என்றும்கூடச் சொல்லிவிடலாம். தமிழிலும் இதுதான் நிலை; பொன்வண்ணன் இயக்கிய ‘ஜமீலா’ போன்ற அரிதான சில விதிவிலக்குகளைத் தவிர.

இப்படிப்பட்ட சூழலில்தான் தாமிரா இயக்கியிருக்கும் தொலைக்காட்சிப் படமான ‘மெஹர்’ கவனத்தை ஈர்க்கிறது. எழுத்தாளர்கள் சல்மா, பவா செல்லத்துரை, பிரகதீஸ்வரன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படம் எழுத்தாளர் பிரபஞ்சன் எழுதிய ‘பாயம்மா’ சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்டது. தமிழ் முஸ்லிம்களின் வாழ்வில் நடக்கும் விஷயங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட அந்தச் சிறுகதையை 2 மணி நேரப் படமாக உருவாக்கியிருக்கிறார் தாமிரா.
பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய முஸ்லிம் குடும்பம், ‘மஹர்’ எனப்படும் வரதட்சணையால் பாதிக்கப்படுவதை அடிப்படையாக வைத்து புனையப்பட்ட கதை இது. 

கதையின் நாயகியான மெஹர் கணவனை இழந்தவள். மகன் ரஷீத் நகைக்கடையில் வேலை பார்க்கிறான். 23 வயதான மகள் யாஸ்மின், திருமணமாகாமல் வீட்டில் இருக்கிறாள். வரும் வரன்கள் எதிர்பார்க்கும் வரதட்சணை கொடுக்க முடியாமல் திணறுகிறாள் மெஹர். நல்ல வரன் ஒன்று அமைகிறது. இதையாவது தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று அந்த ஏழைக் குடும்பம் விரும்புகிறது. திருமணம் கைகூடி வரவே, வரதட்சணைத் தொகையை ஏற்பாடுசெய்ய தன்னாலான அனைத்து முயற்சிகளையும் எடுக்கிறான் ரஷீத். முயற்சிகள் தோல்வியடைய, வேறு வழியின்றி முதலாளியின் கருப்புப் பணத்தில் கைவைக்கிறான். ஒரு லட்ச ரூபாயைத் திருடி, வீட்டுக்குள் ஒளித்து வைக்கிறான். அதன் பின் என்ன நடந்தது என்பதைப் படம் இயல்பாகச் சொல்கிறது.

ஒரு சிறுகதையைத் திரைக்கதை வடிவத்துக்கு மாற்றுவது என்பது பெரும் சவாலான பணி. தாமிரா அதைச் செய்ய முயன்றிருக்கிறார் என்றாலும் கடக்க வேண்டிய தொலைவு அதிகம். முஸ்லிம் மக்கள் பயன்படுத்தும் அசலான வார்த்தைகளைக் கொண்ட உரையாடல்களும், கதைக் களமும் படத்தைத் தாங்கி நிறுத்துகின்றன. தேர்ந்தெடுத்த சிறுகதைகளைப் படமாக எடுத்து வெளியிடும் நிகழ்ச்சியாக ‘சித்திரம்’ எனும் முயற்சியை விஜய் டிவி சமீபத்தில் தொடங்கியது. அதில் முதல் படம் ‘மெஹர்’. நல்ல முயற்சி, நல்ல தொடக்கம்!