சிலர் முதலீட்டுக்காக வீடுகளை வாங்கிப்போடுவார்கள். இன்னும் சிலரோ சொந்த வீட்டில் குடியிருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வீட்டை வாங்குவார்கள். எந்த வகையில் வீடு வாங்கினாலும் செய்ய வேண்டியது ஒன்றுதான். வாங்கும் வீடு எந்த வகையிலும் வில்லங்கம் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதுதான். அதன்படி வீட்டை வாங்கும்போது எந்தெந்த விஷயங்களை ஆராய வேண்டும் என்று பார்த்துவிடுவோம்.

>> முதலில் மனையின் உரிமையாளர் யார் என்று தீர விசாரித்துக்கொள்ள வேண்டும்.
>> சொத்தை விற்பவர் யார், அவருக்கும் சொத்துக்கும் உள்ள உரிமை என்ன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
>> நில உச்ச வரம்பு மற்றும் ஒழுங்குமுறை விதிப்படி சான்றிதழ் பெறப் பட்டுள்ளதா எனக் கவனிக்க வேண்டும்.
>> மனையானது விவசாயம் சாராத பணிகளுக்கு அனுமதி பெற்றதா எனப் பார்க்க வேண்டும்.
>> சொத்து மீதான உள்ளாட்சி அமைப்புகளின் அசல் அங்கீகார ஆணைகளைப் பார்க்க வேண்டும்.
>> சொத்து தொடர்பாக நகராட்சி நிர்வாகம் வழங்கிய சான்றிதழ்களைப் பாருங்கள்.
>> வீடு வசிக்க ஏற்றது என்று தொடர்புடைய அமைப்புகள் ( நகர ஊரமைப்பு, பெரு நகர வளர்ச்சிக் குழுமம், உள்ளாட்சி அமைப்புகள்) வழங்கிய சான்றிதழ்களைப் பாருங்கள்.
>> சொத்தில் எந்த வில்லங்கமும் இல்லை என்பது தொடர்பாக வழக்கறிஞர் வழங்கிய சட்ட ரீதியான விளக்கங்களைக் கவனிக்க வேண்டும்.
>> மனை அல்லது வீட்டை விற்க தடை இல்லாச் சான்றிதழ் விவரங்களைக் கவனியுங்கள்.
>> வீட்டை விற்பவர் சொத்து வரி உள்ளிட்ட மற்ற வரிகளை உள்ளாட்சி அமைப்புகளுக்குச் செலுத்தியுள்ளாரா என்பதைக் கவனியுங்கள். நீங்கள் சொத்து வாங்கும் தேதி வரை எல்லா வரிகளும் செலுத்தியிக்க வேண்டும். அதுதொடர்பான சான்றிதழ்கள் மற்றும் ரசீதுகளைச் சரி பாருங்கள்.
>> விற்பனைப் பத்திரத்தில் அடுக்குமாடி வீட்டின் எண் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதா எனப் பாருங்கள்.
>> அடுக்குமாடிக் குடியிருப்பில் கார்ப்பெட் பகுதி / பில்டப் பகுதிகள் தெளிவாக உள்ளதா எனப் பாருங்கள்.
>> தளத்தின் வரைபடம் கண்டிப்பாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
>> வீட்டில் உள்ள எல்லா வசதிகளையும் தெளிவாகக் குறிப்பிட்டிருக்க வேண்டும் (தரை, கதவு, ஜன்னல் போன்ற விவரங்கள்).
>> வீடு எந்தத் தொகைக்கு விற்பனை செய்யப்படுகிறது என்பதைத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
>> வீடு இரண்டாம் விற்பனையாக இருந்தால், விற்பவர் அசல் முத்திரை தீர்வை ரசீதுகள் மற்றும் முந்தைய விற்பனைப் பத்திரத்தை வழங்க வேண்டும்.
>> முத்திரைத் தீர்வையைச் சொத்தின் சந்தை மதிப்புக்கு ஏற்ப அல்லது எது அதிகமாக அதற்கேற்ப வாங்க வேண்டும்.
>> இந்தியா முழுவதும் ஒவ்வொரு விதமாக முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம் இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
>> ஒப்பந்தப்படி வீடு குறிப்பிட்ட நாளில் வழங்கப்பட வேண்டும்.
>> ஒரு வேளை குறிப்பிட்ட நாளில் வீடு ஒப்படைக்கப்படாவிட்டால் வீடு விற்பவர் அல்லது பில்டரிம் இருந்து தொகையைத் திரும்பப் பெறுவது தொடர்பாக ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்யுங்கள்.
>> மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு குறித்து ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதா என உறுதி செய்ய வேண்டும்.