ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு -- 011

*
இயற்கைச் சீற்றங்கள் உலகுக்குப் புதிது அல்ல. நம் முன்னோர்கள் வாழ்வின் ஒவ்வொரு நொடியை யும் போராடியே கடந்தார்கள். அந்த போராட் டங்களில் இயற்கையின் இயல்புகளை கண்டுகொண்டார்கள். அதற்கேற்ப தொழில் நுட்பங்களை கண்டுபிடித்தார்கள். இயற்கை யுடன் இசைந்து வாழ்ந்தார்கள். விலங்குகளும் கூட நுண்ணறிவின் மூலம் இயற்கை சீற்றங் களை முன்கூட்டியே உணர்ந்து கொள் கின்றன. ஆனால், செயற்கைக்கோள்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும் நாம்தான் சாலைகளில் படகு விடுகிறோம்.

ஆனால், 2500 ஆண்டுகளுக்கு முன்பே பிரம்மாண்டமாக ஓடிய நைல் நதியை மனிதர்கள் கையாண்ட விதம் ஆச்சர்யம் அளிக்கிறது. எகிப்து நாட்டின் ஒரே ஜீவாதாரம் நைல் நதி மட்டுமே. நைல் நதியில் ஜூலை முதல் செப்டம்பர் வரை வெள்ளம் பெருக்கெடுக்கும். அதற்கு முன்னதாகவே ஆற்றின் இரு கரைகளிலும் 3 மீட்டர் வரை ஆழம் கொண்ட பெரிய பாத்திகளை வெட்டி விடுவார்கள். இப்படி ஆயிரக்கணக்கான பாத்திகள் வெட்டப்பட்டு, கால்வாய்கள் மூலம் இணைக்கப்பட்டன. இவை வெள்ளம் ஊருக்குள் புகாமல் பாது காத்தன. இதில் சேகரமாகும் தண்ணீர் இரு மாதங்கள் வரை தேங்கி நின்றது. கூடவே பாத்திகளில் வளமான வண்டலும் சேர்ந்தது.

சோழர்களின் குளங்கள்

எகிப்தியர்களுடன் எந்தத் தொடர் பும் இல்லாத நிலையில் இதே தொழில்நுட்பத்தை மேலும் மேம்படுத் தினர் சோழர்கள். அவர்கள் தற்காலிக பாத்திகளாக அல்லாமல் நொய்யல் ஆற்றின் இரு கரைகளிலும் 30-க்கும் மேற் பட்ட குளங்களை வெட்டினர். அவை இன்றளவும் நிலைத்து நிற்பதே சோழர் களின் கட்டுமான திறமைக்கு சாட்சி. இந்தக் குளங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. நொய்யலின் தண்ணீர் ஒவ்வொரு குளமாக நிரப்பி விட்டு மீண்டும் ஆற்றுக்கே சென்றது.

கி.மு. 3000-ம் ஆண்டில் நைல் நதியில் அடிக்கடி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பேரழிவுகள் ஏற்பட்டன. ஊரெங் கும் வெள்ளம் ஓடியதால் பஞ்சங்கள் ஏற்பட்டன. இதனால், நைல் நதியின் கரையெங்கும் வரிசையாக நீர் மட்டத்தை அளக்கும் அளவுகோல்களை நட்டார்கள். தவிர, ஆறுகளின் சில இடங்களில் படித்துறைகளை கட்டி நீர்மட்டத்தை படிகள் மூலம் அளந்தார்கள். ஆற் றோரக் கரைகளில் கோயில்களை கட்டி கோயில் சுவர்களிலும் அளவு கோலை செதுக்கினார்கள். இந்த அளவுகோல்கள் ‘நைலோ மீட்டர்’ (Nilo meter) என்றழைக்கப்பட்டன. கி.பி. 715 ரோடா என்கிற இடத்தில் அமைக்கப் பட்ட நைலோ மீட்டரில் கி.பி.1890 வரை நைல் நதியின் நீர்மட்டங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இப்படி நைல் நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை அடிப்படையாக கொண்டு உருவானது தான் இப்போது நாம் பயன்படுத்தும் 365 நாட்கள் கொண்ட நாள்காட்டி.

‘நைலோ மீட்டர்’ போலவே 2000 ஆண்டுகளுக்கு முன்பு பழந்தமிழர்களும் ஆறு மற்றும் ஏரிகளின் கரைகளில் பல்வேறு அளவுகோல் களை அமைத்தார்கள். தாமிரபரணி யில் அமைக்கப்பட்ட பல்வேறு படித் துறைகள், கோயில் சுவர்கள் ஆற்றின் வெள்ள அபாயங்களை கணக்கிட உதவும் கருவிகளாகவும் பயன்பட்டன. இன்றும் தென்மாவட்டங்களில் இருக்கும் பல ஏரிகளின் மதகுகளில் ‘ஃ’ வடிவத்தில் இருக்கும் துளைகள் நீர்மட்டத்தை அளக்க உதவுகின்றன.

படித்துறைகள் மூலம் நீர்மட்டத்தை கணக்கிடும் நைலோ மீட்டர்.

தொன்மையான அணை

எகிப்து தலைநகர் கெய்ரோவில் ‘காராவி’ (Garawi) ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ‘சாத் எல் - காஃபாரா’ (Sadd El-Kafara) அணைதான் உலகிலேயே மிகத் தொன்மையான அணை. இதன் நீளம் 348 அடி. இதன் அடிப்பாகம் 265 அடி அகலம் கொண்டது. ஆற்றின் ஆழமான இடத்திலிருந்து அணையின் மேல்மட்டம் 37 அடி உயரம் கொண்டது. இது சுவர்கள் அமைத்து கட்டப்பட்ட அணை அல்ல. ஆற்றின் குறுக்கே 37 அடி உயரமும் அடிப்பகுதி 78 அடி பருமனும் கொண்ட பெரும் கற்கள் 120 அடி இடைவெளி விட்டு பெரும் கற்சுவர்களை போல எழுப்ப பட்டன. அந்த இடைவெளியின் அடிப் பாகம் 60 ஆயிரம் டன் எடை கொண்ட கூழாங்கற்களால் நிரப்பப் பட்டன. அணையைக் கட்ட எந்த காரைப் பொருட்களும் பயன்படுத்தப் படவில்லை. வெறும் கற்களை ஆற்றில் அடுக்கியே கட்டப்பட்ட இந்த அணையில் கலிங்குகள், வெள்ளப்போக்கிகள் எதுவும் கிடையாது. கரிமப் படிவ ஆய்வு (Carbon dating) மற்றும் தொல் லியல் ஆய்வுகள் இந்த அணையின் வயது சுமார் 4600 ஆண்டுகள் என்று தெரிவிக்கின்றன. ‘இயற்கையை வழிபடு வோரின் அணை’ என்று அழைக்கப் படும் இந்த அணை கி.மு.2650-களில் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப் படுகிறது. ஆனால், இந்த அணை இன்று இல்லை, அதன் எச்சங்கள் மட்டுமே பொக்கிஷங்களாக பாதுகாக்கப் படுகின்றன.

அழிந்துபோன தங்கள் அணையின் தொழில்நுட்பம் உலகில் வேறெங்கேனும் இருக்கிறதா என்று தெரிந்துகொள்ள பிற்காலத்தில் எகிப்தின் நீரியல் வல்லுநர்கள் உலகெங்கும் தேடி அலைந் தார்கள். எங்கு தேடியும் ‘சாத் எல் - காஃபாரா’வின் சாயலைகூட அவர் களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியாக இந்தியா வந்தார்கள். மிகுந்த சிரமங்களுக்குkf பிறகு ஓர் அணையை கண்டுபிடித்து ஆச்சர்யத் தில் உறைந்துபோனார்கள். அதுதான் கரிகாலச் சோழன் கட்டிய கல்லணை.

செயற்கையான காரை எதுவும் பூசாமல் கற்களை ஆற்றில் நிரப்பியே கட்டப்பட்ட அணை கல்லணை. ஓடும் நீரில் ஆற்றின் படுகையில் ஒவ்வொரு கல்லாக போட்டு நிரப்பினார்கள். அவை மணலின் அடியாழத்துக்குச் சென்று அகலமான அடிப்பாகமாக சென்று இயற்கையான அடிதளத்தை உருவாக்கின. அடுத்தடுத்த மேலே போடப்பட்ட கற்கள் இயற்கை சுவர் களாக அமைந்தன. இப்படியாக ஓடும் நீரில் அடியில் மணல்படுகையில் எழுப்பப் பட்ட உறுதியான கருங்கல் தளத்தின் மீது எழுந்து நின்றது கல்லணை. இந்த அணையின் தொழில்நுட்பத்தை பின்பற்றிதான் ஆர்தர் காட்டன் 1874-ல் ஆந்திராவின் கோதாவரியில் தெளலீஸ் வரம் அணையை கட்டினார்.

உலகின் தொன்மையான அணை ‘சாத் எல் - காஃபாரா’ இன்று இல்லை. ஆனால், கிட்டத்தட்ட அதே தொழில்நுட்பத்தில் சோழர்களால் 2000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கல்லணை இன்றும் கம்பீரமாக இருக்கிறது. வாருங்கள், நம் முன்னோர்களிடமிருந்து பாடம் கற்போம்.