ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு


துயரத்தின் பிடியில் சிக்கியிருக்கிறது தூத்துக்குடி. வெள்ளத்தின் பாதிப்பு களில் இருந்து இன்னும் மீளவில்லை நகரம். பல பகுதிகளில் வெள்ளம் வடியவில்லை. சேறும் சகதியும் அடைத்துக் கொண்டிருக்கின்றன. சாக்கடைக் கழிவுகள், இறந்த விலங்குகள், கால்நடைகள் உடல் அழுகி துர்நாற்றம் மூச்சடைக்க வைக்கிறது. வெள்ளத்தோடு கழிவு நீரும் வீடுகளுக்குள் புகுந்துவிட்டன.

சாலைகள் துண்டிக்கப் பட்டுள்ளன. மாவட்ட வேலைவாய்ப்பு அலு வலகம், ஆட்சியர் அலுவலகம், காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் எல்லாம் தண்ணீரில் மூழ்கிவிட்டன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்றால் சூழ்ந்துகொள்கிறார்கள் மக்கள். ‘மத்திய குழுவினருக்கு நாங்கள் எல்லாம் மக்களாகத் தெரியவில்லையா’ என்று ஆத்திரம் பொங்க கதறி அழுகிறார்கள் அவர்கள்.

கடந்த 1992-ம் ஆண்டின் பெரும் வெள்ளத்தில்கூட தூத்துகுடி நகரம் இவ்வளவு பாதிக்கப்படவில்லை. சரி, இப்போது ஏன் இவ்வளவு பாதிப்பு? வெள்ளத்துக்கு என்ன காரணம்? நாம் செய்த தவறுகள் என்ன?

விரிவாகப் பார்ப்போம்.
தூத்துகுடி வெள்ளத்துக்கு காரணமான புதுக்கோட்டை பெரிய பாலம் உப்பலோடையை இப்போது தூர்வாருகிறார்கள்.

தூத்துகுடி வெள்ளத்துக்கு காரணமான புதுக்கோட்டை பெரிய பாலம் உப்பலோடையை இப்போது தூர்வாருகிறார்கள்.
சீரழிவில் சிக்கிய குளங்கள்

தூத்துகுடி மாவட்டத்தில் தாமிரபரணி நதியின் நேரடி பாசனப் பரப்பு குறைவு. வெறும் 13,506 ஏக்கர் மட்டுமே. குளத்துப் பாசனம்தான் அதிகம். மொத்தம் 32,601 ஏக்கர். ஸ்ரீவைகுண்டம், மருதூர் அணைகள்தான் இந்தக் குளங்க ளுக்கான நீர் ஆதாரங்கள். மொத்தம் 53 குளங்கள். இந்தக் குளங்களின் மொத்த கொள்ளளவு 2,274.27 மில்லியன் கனஅடி. ஆனால், இன்று அனைத்திலும் ஆக்கிரமிப்பு.

குளங்களில் ஆகாயத் தாமரை, நெய்வேலி காட்டாமணக்கு, சீமைக் கருவேல மரங்கள் மண்டி யிருக்கின்றன. பெருங்குளம், தென் கரை குளங்கள் மட்டுமே ஓரளவுக்குப் பரவாயில்லை. கடம்பா குளம், சிவகளை குளம் இவற்றைக் கண்கொண்டு பார்க்க முடியவில்லை. 49 குளங்கள் 70 சதவீதத்துக்கு மேல் தங்களது கொள் ளவை இழந்துவிட்டன. இதனால் இந்தக் குளங்களில் சுமார் 1,000 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே தேக்க முடியும்.

மீதமுள்ள 1,274 மில்லியன் கனஅடி தண்ணீரும் கூடுதலாக பெய்த மழை நீரும் எங்கே போகும்? தண் ணீரைச் சொல்லித் தவறில்லை, அது வேறு வழியில்லாமல்தான் தூத்துக்குடி நகருக்குள் புகுந்துவிட்டது.

மண்ணில் புதைந்த ஓடைகள்!

தூத்துக்குடியில் தங்கள் நிலங் களைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கிறார்கள் விவசாயிகள். பெரும் நிறுவனங்கள் நிலங்களைக் கிட்டத்தட்ட அபகரிக்கின்றன. இதில் ஒரு நிறுவனம் ஆந்திரத்தின் முக்கிய அரசியல் கட்சி ஒன்றின் தலைவ ருடையது. இன்னொரு நிறுவனம் துபாயைத் தலைமையிடமாகக் கொண் டது. இவர்களிடம் இல்லை என்று சொல்ல முடியாது.

இந்த விவசாய நிலங்களில் ஏராளமான ஓடைகள் ஓடுகின்றன. வேலாயுதபுரம், சாமிநத்தம், எட்டயபுரம், அனந்தமாடன் பச்சேரி, தருவைக்குளம், மேல அரசடி, கீழ அரசடி, கல்மடை இங்கெல்லாம் ஏராள மான ஓடைகள் இருந்தன. இப்போது அங்கெல்லாம் நிலக்கரியைக் கொட்டிப் புதைத்து தெர்மல் மூலம் மின்சாரம் தயாரிக்கிறார்கள். இரு மாதங்களுக்கு முன்பு மலர்குளத்தின் ஓடை அழிக்கப் பட்டது தொடர்பாக மதுரை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுக்கப்பட்டது.மீண்டும் அந்த ஓடையை உயிர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது நீதிமன்றம். அதுவும் நடக்கவில்லை. இப்போது பெய்த மழையில் ஓடைகளில் ஓட வேண்டிய தண்ணீர் எல்லாம் எங்கே செல்லும்? தண்ணீரைத் சொல்லித் தவறில்லை, அது வேறுவழியில்லாமல்தான் தூத்துக்குடி நகருக்குள் புகுந்துவிட்டது.

கயத்தாறு, கழுகுமலை, ராஜபுதுகுடி, ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழைநீர் புதுக்கோட்டை பெரிய பாலத்துக்கு அடியில் இருக் கும் உப்பலோடையில் வந்துச் சேரும். ஓடையில் இருந்து தண்ணீர் கோரம்பள்ளம் குளம் வழியாகக் கடலை சென்று அடைந்துவிடும்.

சமீபத்தில் புதுக்கோட்டை பெரிய பாலத்தின் அடியில் உப்பலோடையை ஒட்டி ஸ்டெர் லைட் நிறுவனத்தின் ரசாயனக் கழிவு மண் மலைபோல கொட்டப்பட்டது. இது பாலத்துக்கு அடியே சென்று ஓடையை அடைத்துவிட்டது. தண்ணீரைச் சொல்லித் தவறில்லை, அது வேறு வழியில்லாமல்தான் தூத்துக்குடி நகருக்குள் புகுந்துவிட்டது.
சிவகளைக் குளத்தில் இருந்து வெளியேறும் உபரி நீர் பெருங்குளத்துக்குச் செல்கிறது.

சிவகளைக் குளத்தில் இருந்து வெளியேறும் உபரி நீர் பெருங்குளத்துக்குச் செல்கிறது.
தூத்துக்குடி - திருநெல்வேலி நான்கு வழிச்சாலை போடும்போதும் இந்தப் பகுதியில் சரியாக திட்டமிடவில்லை. புதுக்கோட்டை தொடங்கி கோரம்பள்ளம் ஆட்சியர் அலுவலகம் வரை சாய்வு கோணத்தில் சாலையை அமைத்துவிட் டார்கள். இதனால், நான்கு வழிச் சாலையை மூழ்கடித்து ஓடி, ஊருக்குள் புகுந்தது தண்ணீர். இப்போது நான்கு வழிச் சாலையில் இருந்து தண்ணீரை வெளியேற்ற சாலைத் தடுப்புகளை நிறைய இடங்களில் உடைத்திருக்கிறார்கள்.

சுமார் ஐந்தாண்டுகளுக்கு முன்பு தூத்துகுடி நகரில் இருக்கும் பங்கிள் கால்வாயைத் தூர்வாரி, கான்கிரீட் தளம் எழுப்பி கட்டினார்கள். ஆனால், ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை, கால்வாய் பாதியாக சுருங்கிவிட்டது. தண்ணீரைச் சொல்லித் தவறில்லை, அது வேறு வழியில்லாமல்தான் தூத்துக்குடி நகருக்குள் புகுந்துவிட்டது.
ஆகாயத் தாமரையின் ஆக்கிரமிப்பில் செவத்தியாபுரம் அருகேயுள்ள பேய்க் குளம்.

ஆகாயத் தாமரையின் ஆக்கிரமிப்பில் செவத்தியாபுரம் அருகேயுள்ள பேய்க் குளம்.
தண்ணீரில் கரைந்துபோனதா நிதி?

இந்தக் குளங்களை சீரமைக்க உலக வங்கியிடம் ரூ.145 கோடி கேட்டு பரிந்துரை செய்யப்பட்டது. இன்னொரு பக்கம் 29 குளங்களைத் தூர்வார ரூ. 25 கோடியே 14 லட்சம் மதிப்பீட்டில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தின் உதவியோடு ஆகாயத் தாமரை உள்ளிட்ட தாவரங்களை அப்புறப்படுத்த மதுரை பொதுப்பணித்துறை கோட்டம் ரூ.10 லட்சம் ஒதுக்கியது.

இவைத் தவிர, 2012-13 ஆண்டில் குளங்களை சீரமைக்க நாடாளுமன்ற உறுப்பினர் நிதியாக ரூ. 2.60 கோடி ஒதுக்கப்பட்டது. அதிலும் வேலை நடக்கவில்லை. மாறாக ஊழல் புகார் எழுந்து, லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. மேற்கண்ட திட்டங்கள் என்ன ஆனது? ஒதுக்கப்பட்ட நிதி எல்லாம் குளத்துத் தண்ணீரில் கரைந்து போனதா?

உண்மையிலேயே தண்ணீரின் மீது தவறு இல்லை. அது வேறு வழியில்லாமல்தான் தூத்துக்குடி நகருக்குள் புகுந்துவிட்டது. இப்போதும் முழுதாக ஒன்றும் மூழ்கிவிடவில்லை, வாருங்கள் தவறுகளைத் திருத்திக்கொள்வோம்.