ஆற்றில் நீங்கள் குளித்திருக்கிறீர்களா? குளம், ஏரிகள்? இந்தக் காலத்தில் ஆறுகள், நதிகளில் பலரும் குளிப்பதில்லை. ஆறுகளில் தண்ணீர் போவதைக்கூட அபூர்வமாகவே பார்க்கிறோம்.

ஆனால், நதிக்கரைகளில்தான் நாகரிகங்கள் வளர்ந்தன என்று பாடப் புத்தகங்களில் நாம் படித்திருக்கிறோம். நதிக்கரைக்கு அருகில்தான் வளமான நிலப்பகுதிகள் இருக்கும் என்பதால், பயிர்களும் காய்கறிகளும் செழித்து வளரும். பயிர்களுக்குத் தேவையான தண்ணீரும் பற்றாக்குறை இல்லாமல் கிடைக்கும். இதன் காரணமாகத்தான் நதிக்கரைகளில் மக்கள் அதிகமாகக் குடியேற ஆரம்பித்தார்கள். அந்தப் பகுதிகளைச் சுற்றி ஊர்களும் நகரங்களும் வளர ஆரம்பித்தன.
இன்றைக்கு உலகெங்கும் உள்ள முக்கியமான நகரங்களைப் பட்டியலிட்டால், அவற்றில் பலவும் நதிக்கரைகளிலேயே அமைந்திருக்கும். நதிகளை அடிப்படையாகக்கொண்டே அவை வளர்ந்திருக்கும். நம் மாநிலத் தலைமையகமான சென்னை (கூவம்-அடையாறு), மாநிலத்தின் மத்தியில் இருக்கும் திருச்சி-தஞ்சை (காவிரி), தென் மாவட்டங்களுக்குத் தலைநகரம் போலிருக்கும் மதுரை (வைகை), அதற்கும் கீழே இருக்கும் திருநெல்வேலி (தாமிரபரணி) என்று உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

எல்லாம் தந்தவை

நதிகள் நம் வாழ்க்கைக்குத் தேவையான நீரையும், உணவைத் தயாரிப்பதற்கான விவசாயத்தை மேற்கொள்ளவும், சத்தான உணவைத் தரும் மீனுக்கான அடிப்படையாகவும் இருக்கின்றன. அதன் காரணமாகத்தான் ‘தண்ணீர் அமிழ்தம்' என்றும், ‘நதிகள் உயிர் தருகின்றன' என்றும் கூறப்படுகின்றன. அன்றைக்கு விவசாயத்துக்கு உதவிய நதிகள், இன்றைக்கு அத்துடன் சேர்த்து நவீனத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்யவும் பயன்படுகின்றன.

பெரும்பாலான மக்கள் கிராமங்களில் வாழ்ந்தவரை, அவர்களுடைய வாழ்க்கையும் தொழிலும் நதிக்கரைகளை மையமிட்டே இருந்தன. ஒவ்வொரு நாள் காலையும் நதிக்கரையில் தொடங்கி, அடுத்தடுத்து நகர ஆரம்பித்தது. காலம்காலமாக நதிக்கரைகளில் பல திருவிழாக்கள், கண்காட்சிகள், கொண்டாட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. நதிக்கரைகளில் பழங்குடி மக்கள், மீனவர்கள், உயிரினங்கள், ஆற்று உயிரினங்கள், தாவரங்கள், கலை-கைவினைகள், சுற்றுலாத் தலங்கள், வரலாற்று மையங்கள் செழிப்பாக இருப்பதைப் பார்க்கலாம். இப்படியாக நம்முடைய பாரம்பரியம், வளர்ச்சி, முன்னேற்றம், வளம் அனைத்துக்கும் நதிகளே காரணமாக இருந்துள்ளன.

சுருக்கமாகச் சொல்வதென்றால் ‘இந்தியா' என்ற பெயருக்கே ஒரு நதிதான் காரணம், அது சிந்து. வடக்கிலுள்ள இமயமலையில் கங்கை, யமுனை, பிரம்மபுத்திரா நதிகள் உற்பத்தியாகிக் கிழக்காகப் பாய்கின்றன. அவற்றுடன் மிகப் பெரிய தென்னக நதிகளான காவிரி, கிருஷ்ணா, கோதாவரி, மகாநதி போன்றவையும் வங்களா விரிகுடா கடலில் கலக்கின்றன. கிழக்கிலிருந்து மேற்காகப் பாய்ந்து நர்மதையும் தபதியும் அரபிக் கடலில் கலக்கின்றன.

அலட்சியப் போக்கு

நம் நாட்டில் சின்ன ஆறுகள் முதல் பெரிய நதிகள்வரை பலவும் புனிதமாகக் கருதப்பட்டாலும், கொண்டாடப்பட்டாலும்கூட அவற்றில் சாக்கடை, கழிவுநீர் கலப்பதைப் பற்றியோ, அவை மாசுபடுவதைப் பற்றியோ நம்மில் பலரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. அதனால்தான் மிகப் பெரிய புனித நதியாகக் கருதப்படும் கங்கை முதல் திருப்பூர் நொய்யல் ஆறுவரை மாசுபட்டு சீரழிந்திருக்கின்றன.

நர்மதை நதி மீது கட்டப்பட்ட பிரம்மாண்டமான அணை காரணமாக அந்த நதியின் கரைப் பகுதிகளில் வாழ்ந்துவந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பழங்குடி, ஏழை, எளிய மக்கள் தங்கள் ஊரையும் வீடுகளையும் இழந்துள்ளனர். இன்றைக்கும் அவர்களுக்கு உரிய இருப்பிடமோ, முழுமையான வாழ்வாதாரமோ கிடைக்கவில்லை.

அதேபோல, காவிரி உட்பட பல்வேறு நதிகளின் நீரைப் பகிர்ந்துகொள்வதில் மாநிலங்களிடையே இணக்கமான சூழ்நிலை இல்லை. ஆனால், 1996-ல் வங்கதேசத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி கங்கையிலிருந்து குறிப்பிட்ட அளவு தண்ணீரை, கடந்த 20 ஆண்டுகளாக இந்தியா வழங்கிவருகிறது. கங்கையில் தண்ணீர்ப் பற்றாக்குறை இருந்தபோதும்கூட, ஒப்புக்கொண்ட அளவு தண்ணீரை இந்தியா வழங்கிவருகிறது.

நம் முன்னோரை ஊட்டி வளர்த்த, நம் ஊரையும் நாட்டையும் செழிப்பாக்கிய நதிகளை அனைவரும் மதித்து நடக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். நமக்கு உயிர் தந்த நதிகளை வாழ வைத்தால்தான், நதிகள் நம்மை வாழ வைக்கும்.

# காவிரி நதிக்கரையில்தான் கம்பர், ராமாயணத்தை எழுதினார். அதேபோல தமசா நதிக்கரையில்தான் வால்மீகி, ராமாயணத்தை எழுதினார்.
# மத்திய இந்தியாவில் பாம்புபோல வளைந்து நெளிந்து ஓடிக்கொண்டிருக்கும் நதிக்கு பேட்வா என்று பெயர். ‘பேட்வா' என்றால் பாம்பு என்று அர்த்தம்.
# மேற்கு வங்கத்தில் உள்ள பிரபல நதி, தாமோதர் நதி. இங்கு அடிக்கடி வெள்ளம் வருவதால், அது ‘வங்கத்தின் வேதனை' எனப்பட்டது.