சீரமைப்புப் பணிகளுக்குப் பின்பு நிரம்பிய உக்கடம் பெரிய குளம்.


ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு


தண்ணீரின் இயல்பு குளிர்ச்சி. மனிதனுக்கு உணர்வை தருகிறது தண்ணீர். நல்ல மனதை தருகிறது தண்ணீர். மனித மனங்களில் அன்பை ஊற்றெடுக்க வைக்கிறது தண்ணீர். ஒவ்வொரு நாளும் நம்மை புதிதாய் பிறக்க வைக்கிறது தண்ணீர். ஒரு சமூகத்தின் மனநிலையைக் கண்ணாடியாகப் பிரதிபலிக் கிறது தண்ணீர். வானமும், பூமியும், காற்றும், நீர் நிலைகளும், பசுஞ்சோலைகளும், புல் வெளிகளும்தான் நம்மை உயிர்ப்போடு வைத்திருக்கின்றன. தண்ணீர் இல்லை என்றால் எதுவும் இல்லை. தண்ணீர் இல்லாத சமூகம் வறண்டுபோகும். வறட்சி யின் வெம்மையில் பிறக்கிறது வெறுப்பு. அடங்காத தாகத்தில் பிறக்கிறது கோபம். இல்லாத வேதனையில் பிறக்கிறது பொறாமை. எல்லாமுமாகச் சேர்ந்து உருவெடுக்கிறது வன்முறை. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், இவ்வளவு அழகான இயற்கையை அழித்துவிட்டு நாம் புதிதாய் வேறு எதை உருவாக்கப்போகிறோம்?

நம்மால் இன்னொரு மனிதனைத் தவிர உயிர்ப்போடு எதையாவது உருவாக்க முடியுமா? ஒரு துளித் தண்ணீரை? ஒரு பிடி மண்ணை? ஒரு நொடி சுவா சத்துக்கான காற்றை? அழகாய் பூக் கும் மலரை? இதில் ஒன்றையாவது நம்மால் உருவாக்க முடியுமா? நவீன தொழில்நுட்பங்களில் நாம் உரு வாக்கியது எல்லாம் இயற்கையின் மாதிரிகளே. இயற்கைதான் எல்லாம் நமக்கு கற்றுக்கொடுக்கிறது. அந்த இயற் கையை அழித்துவிட்டு எதை சாதிக்கப் போகிறோம் நாம்? பேராசை வெறியில் நம் கழுத்தை, நாமே அறுத்து ரத்தம் குடித்துக் கொண்டிருக்கிறோம்!

அன்றைக்கு நொய்யல் ஆற்றிலும் அப்படிதான் நடந்தது. “இனி குளத்துக்குத் தண்ணீர் வருவது சிரமம். இங்கே ஒரு கும்பல் வந்து ஏராளமான இடங்களில் கால்வாய் கரைகளை உடைத்துவிட்டு போய்விட்டார்கள். வேக மாக வந்த தண்ணீர் உடைப்புகளில் வெளியேறிவிட்டது. ஆற்றில் நீர் வரத்து குறைந்ததால் இனி கோவை நகரம் வரை தண்ணீர் வர சாத்தியமே இல்லை” என்றார்கள். குளத்தைத் தூர் வாரும் தகவல் கிடைத்ததும் சிலருக் குத் தூக்கம் கெட்டது. அவர்கள் நொய் யல் ஆற்றையும், கரையோரங்களையும், குளத்துக்குத் தண்ணீர் வரும் கால் வாயையும் குளத்தையுமே ஆக்கிரமித் திருந்தனர். குளத்தில் மட்டும் சுமார் 1,000 குடியிருப்புகள் ஆக்கிரமித்திருந்தன. தண்ணீர் வந்தால் பாதிப்பு நமக்கு தான் என்று அஞ்சினார்கள் ஆக்கிரமிப் பாளர்கள். அதனாலேயே கரைகளை உடைத்துப்போட்டார்கள். இந்தத் தகவல் வந்தபோது நள்ளிரவு 12 மணி. மண்வெட்டிப் பிடித்து குழந்தைகளின் பிஞ்சு விரல்கள் வெடித்திருந்தன. தங்கள் வீடுகளில்கூட அவர்கள் அப்படி வேலை செய்திருக்க மாட்டார்கள். லட்சம் பேரின் உழைப்பு அது. ஒரு சமூகத் தின் கனவு அது. நள்ளிரவில் அத்தனை பேரும் கலங்கி அழுதார்கள். குளத்தின் வறண்ட மண்ணில் மழையாகப் பொழிந் தது மக்களின் கண்ணீர்.

நண்டங்கரை ஓடையில் சீரமைப்புக்குப் பின்பு கட்டப்பட்ட தடுப்பணையில் நிரம்பியிருக்கும் தண்ணீர்.
நண்டங்கரை ஓடையில் சீரமைப்புக்குப் பின்பு கட்டப்பட்ட தடுப்பணையில் நிரம்பியிருக்கும் தண்ணீர்.

ஆனால், அதுவே அவர்களை வைராக் கியம் கொள்ளச் செய்தது. நள்ளிரவு என்றும் பார்க்காமல் அப்போதே கிளம் பினார்கள். வாய்க்கால் வழியில் வீறு நடை போட்டது பெரும் படை. இன் னொரு பக்கம் மாநகராட்சி, பொதுப் பணித்துறை, காவல் துறைகள் கைகோத் தன. விடியற்காலை 3 மணிக்கு உடைப் பெடுத்த இடங்களை அடைந்தார்கள். பத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உடைக் கப்பட்டிருந்தன. இரவோடு இரவாக செங்கல், சிமெண்ட், மணல் மூட்டைகள் குவிந்தன. அந்த நிமிடமே தொடங்கியது கட்டுமானப் பணி. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை பார்த்தார்கள். புதிய கரையைத் தண்ணீர் கரைக்காமல் இருக்க நூற்றுக்கணக்கான மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டன. அதற்கு பின்னால் கரை கட்டப்பட்டது. வேலை முடித்து நிமிர்ந்தபோது சூரியன் உதிக்கத் தொடங்கியிருந்தது. ஆயிரக்கணக்கான மக்களின் உணர்வை உணர்ந்தது இயற்கை. பெரு மழை கொட்டத் தொடங் கியது. மெதுவாய் பாம்புபோல ஊர்ந்து வந்த தண்ணீர் பாதங்களுடன் மக்கள் இதயங்களையும் நனைத்தது. சிறிது நேரத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது. அன்றைய தினம் மதியம் 2 மணிக்கு நகரத்தின் குளத்துக் குள் வந்துச் சேர்ந்தது தண்ணீர். மக்கள் மலர்களைத் தூவி ஆரவாரித்தார்கள். உணர்ச்சிப் பெருக்கில் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்கள். பல ஆண்டுக ளுக்குப் பிறகு நிரம்பியது கோவை பெரிய குளம். இப்போது அந்தக் குளத்தில் இருப்பது தண்ணீர் மட்டுமல்ல; ஆயிரக்கணக்கான மக்களின் வியர் வையும் ஆனந்தக் கண்ணீரும்தான்!

தயவுசெய்து மீண்டும் அதில் சாக்கடையைக் கலக்காதீர்கள்.

கோவையில் இன்னொரு சாதனையும் நடந்திருக்கிறது. அதையும் பார்த்து விடுவோம். ஒருகாலத்தில் நொய்யலாறு 34 சிற்றாறுகளைத் தனது நாடி நரம்பு களாகக் கொண்டிருந்தது. பல்வேறு பகுதிகளில் குளிர்ச்சிப் பொங்க அவை ஓடின. காலப்போக்கில் அந்த நாடி நரம்புகள் வெட்டி எறியப்பட்டன. மண் ணுக்குள் புதைக்கப்பட்டன. இன்று எஞ்சியவை நண்டங்கரை, முண்டந் துறை, இருட்டுப்பள்ளம் இவை மூன்றும் தான். குற்றுயிரும் குலையுயிருமாக கிடக்கும் இந்த ஓடைகளை எட்டிப் பார்க்க அஞ்சுகிறது தண்ணீர். இதில் சிறுவாணி அடிவாரத்தில் இருக்கும் நண்டங்கரை ஓடையைதான் ‘சிறுதுளி’ உயிர்ப்பித்திருக்கிறது.

ஓர் ஆண்டுக்கு முன்பு அவர்கள் அந்த ஓடைக்குச் சென்றபோது அங்கே ஓடை ஓடியதற்கான தடயமே இல்லை. நிச்சயம் அந்த ஓடை இங்கு இல்லை என்றுதான் நினைத்தார்கள். அப்பகுதி விவசாயிகள்தான் ‘இல்லை, நண்டங்கரை ஓடை இங்கேதான் ஓடியது’ என்று படம் வரைந்து பாகம் குறித்துக் காட்டினார்கள். அதுமட்டுமல்ல; மீண்டும் ஓடையைத் தூர் வாரினாலும் தண்ணீர் வரவே வராது என்று சத்தியம் செய் தார்கள். ஆனது ஆகட்டும், முயற்சி செய்துதான் பார்ப்போமே என்று களமிறங்கியது ‘சிறுதுளி’. மக்களும் கைகோத்தார்கள். ஊரக வளர்ச்சித் துறையின் ‘நமக்கு நாமே’ திட்டம் கைகொடுத்தது. அரசாங்கம் 49 % மக் கள் 51 % அடிப்படையில் நிதி சேர்ந்தது.

சந்தேகமாகத்தான் ஓடையைத் தோண்டினார்கள். ஆனால், சில அடி கள் தோண்டும்போதே தண்ணீர் ஊற் றெடுத்துப் பொங்கியது. அடைத்து வைத்த கோபத்தில் பீய்ச்சியடித்தது தண்ணீர். ஓடையில் வரும் தண்ணீரைச் சேகரிக்க சிறிய தடுப்பணை ஒன்று கட்டப்பட்டது. எட்டு மாதங்கள் தீவிரமாக பணிகள் நடைபெற்றன. தடுப் பணை முழுவதும் நீர் நிரம்பியது. சுமார் ஐந்தாண்டுகள் அந்தப் பகுதியில் தண் ணீர் இல்லாமல் தவித்தார்கள் மக்கள். ஓடையும் தடுப்பணையும் வந்தபிறகு வீட்டுக் கிணறுகளின் தண்ணீரை மொண் டுக் குடிக்கிறார்கள் அவர்கள். சிறுவாணி ஊற்றல்லவா அது!