Sep 30, 2015

தொழில் வாழ்க்கைக்கான மத்திய அரசு மையம்

தமிழ்இந்து


இந்தியாவில் வேலை தேடி 2013 டிசம்பர் மாதம் வரையிலும் 4.68 கோடிப் பேர் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 1கோடியே 65 லட்சம்பேர் பெண்கள். ஆனால், 2013-ல் பணி ஒதுக்கப்பட்டவர்கள் 3.49 லட்சம் பேர்கள்தான். அதில் 2.90 லட்சம் ஆண்கள். 0.59 லட்சம் பெண்கள்.

நாடு முழுவதும் அரசின் வேலைவாய்ப்பகங்கள் 978 உள்ளன. அவற்றுக்கு நேரில் போக வேண்டும், பதிவு செய்ய வேண்டும், நடையாய் நடக்கவேண்டும், வேலை கிடைக்கும்வரை அதை விடாமல் செய்ய வேண்டும். தற்போது அந்த நிலை மாறத்தொடங்கியுள்ளது. தேசிய அளவில் இத்தகைய பணிகள் டிஜிட்டல் மயமாகத் தொடங்கியுள்ளன.

இனி, இணையதளத்தில் நேரடியாகப் பதிவு செய்துகொள்ளாம். வேலை தேடுவோருக்கும் தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட வேலை தருவோர்களுக்குமிடையே கண்காட்சிகள் நடத்தப்படும். தொழில் வாழ்க்கைக்கான ஆலோசனைகளும் வழங்கப்படும். பல மொழிகளிலும் இவை கிடைக்கும் என்று நிலைமை மேம்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு: www.ncs.gov.in

Sep 28, 2015

இஸ்ரோ செலுத்தும் விண்வெளி டெலஸ்கோப்

என். ராமதுரை

தமிழ் இந்து நாளிதழில் வாசித்த கட்டுரை


'ஆஸ்ட்ரோசாட்' என்ற விசேஷ செயற்கைக் கோளை ராக்கெட் மூலம் உயரே செலுத்துகிறது. இதைப் பறக்கும் டெலஸ்கோப் என்று வர்ணிக்கலாம். ஏனெனில், இது செயற்கைக்கோள் போல பூமியைச் சுற்றிச் சுற்றி வருகின்ற அதே நேரத்தில், விண்வெளியை நோக்கியபடி நட்சத்திரங்களை ஆராயும். பூமியில் அதாவது தரையில் அமைந்த டெலஸ்கோப்புகள் மூலம் கண்டறிய முடியாத விஷயங்களைக் கண்டறிவது அதன் நோக்கமாகும்.
இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் எண்ணற்ற டெலஸ்கோப்புகள் ஏற்கெனவே உள்ளன. இவை மூலம் கடந்த காலத்தில் எவ்வளவோ கண்டுபிடிப்புகள் செய்யப்பட்டுள்ளன. எனினும் இவற்றால் அறிய முடியாத விஷயங்கள் நிறையவே இருக்கின்றன.

மின்காந்த அலைகள்

பகல் நேரமாக இருந்தால் சூரியனிலிருந்து ஒளி வருகிறது. இரவு நேரமாக இருந்தால் நட்சத்திரங்களிலிருந்து ஒளி வருகிறது. அந்த ஒளியை நம்மால் காண முடிகிறது. ஆனால் சூரியனாகட்டும் நட்சத்திரங்களாகட்டும் அவற்றிலிருந்து ஒளி மட்டுமன்றி வேறு வகைக் கதிர்களும் வருகின்றன. பலரும் பள்ளிப் பாடப் புத்தகத்தில் மின்காந்த அலைகள் பற்றிப் படித்திருப்பார்கள். அலை நீளங்களைப் பொறுத்து மின்காந்த அலைகள் பல வகைப்பட்டவை. இந்த அலைகளில் ஒளியும் ஒன்று. எக்ஸ்ரே கதிர்கள், காமா கதிர்கள் எனப்படுபவையும் இந்த மின்காந்த அலைகள் குடும்பத்தைச் சேர்ந்தவையே. புற ஊதாக் கதிர்கள் (அல்ட்ரா வயலட்) அகச் சிவப்புக் கதிர்கள் (இன்பரா ரெட்) ஆகியவையும் இந்த வகையைச் சேர்ந்தவை. வானொலி ஒலிபரப்புக்குப் பயன்படுத்தப்படுகின்ற ரேடியோ அலைகளும் இந்தக் குடும்பத்தில் அடங்கும்.

இந்த விதவிதமான அலைகளில் ஒளி அலைகள் மட்டுமே நம் கண்ணுக்குத் தெரியும். மற்ற வகை அலைகளை நம் கண்ணால் பார்க்க முடியாது. இது ஒரு புறம் இருக்க, நட்சத்திரங்களிலிருந்தும் இதர வான் பொருட்களிலிருந்தும் எத்தனையோ வகையான கதிர்கள் (அலைகள் என்றும் கூறலாம்) வெளிப்படுகின்றன. அவற்றையும் ஆராய்ந்தாக வேண்டும். நம் கண்ணுக்குத் தெரியாவிட்டால் என்ன, விசேஷ வகைக் கருவிகளைக் கொண்டு அந்தக் கதிர்களை ஆராயலாமே என்று கேட்கலாம். அதில் ஒரு பெரிய பிரச்சினை உள்ளது.

பூமியைச் சுற்றி அமைந்த காற்று மண்டலமானது நட்சத்திரங்களிலிருந்து வருகின்ற காமா கதிர்களையும் எக்ஸ் கதிர்களையும் தடுத்து நிறுத்திவிடுகிறது. காற்று மண்டலமானது ஒளி அலைகளை அனுமதிக்கிறது. ரேடியோ அலைகளை அனுமதிக்கிறது. சிலவகை புற ஊதாக் கதிர்களையும், அகச் சிவப்புக் கதிர்களையும் ஓரளவுக்கு அனுமதிக்கிறது. அந்த அளவில் உலகின் பல நாடுகளிலும் உள்ள டெலஸ்கோப்புகள் ஒளி அலைகளையும் ரேடியோ அலைகளையும்தான் ஆராய்கின்றன. பலவும் இரவு நேரங்களில் நட்சத்திர ஒளியை ஆராய்கின்றன. வேறு வகை டெலஸ்கோப்புகள் நட்சத்திரங்களிலிருந்து வரும் ரேடியோ அலைகளை இரவு பகல் என எல்லா நேரங்களிலும் ஆராய்பவையாக உள்ளன. அவற்றுக்கு ரேடியோ டெலஸ்கோப் என்று பெயர். இவை மிக அகன்ற ஆன்டெனாக்களைக் கொண்டவை. இவற்றைத் தொலைநோக்கி என்று கூற முடியாது. இவை எதையும் காண்பதில்லை. நமது காதுகள் எவ்விதம் ஒலி அலைகளைச் சேகரிக்கின்றனவோ அவ்விதம் அவை ரேடியோ அலைகளைச் சேகரிப்பவை. வேண்டுமானால், இவற்றைத் தொலைக் கேட்பிகள் என்று வர்ணிக்கலாம்.

எக்ஸ் கதிர் வானவியல்

இந்நிலையில், நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் எக்ஸ் கதிர்களையும் இதர வகைக் கதிர்களையும் ஆராய வேண்டுமானால், காற்று மண்டலத்தைத் தாண்டி உயரே சென்றாக வேண்டும் என்பதை விஞ்ஞானிகள் உணர்ந்தனர். பல மில்லியன் டிகிரி வெப்பத்தைக் கொண்ட நட்சத்திரங்கள் எக்ஸ் கதிர்களை வெளிவிடுகின்றன. சூரியனும்தான். 1963-ம் ஆண்டில் அமெரிக்காவில் ஒரு ராக்கெட்டைச் செலுத்தி, அதிலிருந்த கருவிகள் மூலம் சூரியனின் எக்ஸ் கதிர்களை ஆராய்ந்தனர். பின்னர், 1978-ம் ஆண்டில் நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படுகிற எக்ஸ் கதிர்களை ஆராய ஒரு செயற்கைக்கோள் செலுத்தப்பட்டது.

இவ்விதமாக அஸ்ட்ரானமி எனப்படும் வானவியல் துறையில் எக்ஸ் கதிர் வானவியல் என தனிப்பிரிவு தொடங்கியது. பின்னர் வேறு பிரிவுகளும் தோன்றின. நாசா உயரே செலுத்தியுள்ள `சந்திரா' டெலஸ்கோப், நட்சத்திரங்களின் எக்ஸ் கதிர்களைக் கடந்த பல ஆண்டுகளாக ஆராய்ந்து, பல புதிய கண்டுபிடிப்புகளைச் செய்துள்ளது. இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிய நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி டாக்டர் எஸ்.சந்திரசேகரின் பெயரைத் தாங்கிய இந்தப் பறக்கும் டெலஸ்கோப், சுருக்கமாக ‘சந்திரா டெலஸ்கோப்’ என்று அழைக்கப்படுகிறது.

கடந்த பல ஆண்டுகளில் பல பறக்கும் டெலஸ்கோப்புகள் உயரே செலுத்தப்பட்டுள்ளன. இவற்றில் ஹப்புள் டெலஸ்கோப்பும் அடங்கும். இது சுமார் 560 கி.மீ. உயரத்தில் அமைந்தபடி பூமியைச் சுற்றிவருகிறது. 11 டன் எடை கொண்ட இந்த டெலஸ்கோப், 1990-ம் ஆண்டில் செலுத்தப்பட்டது. காற்று மண்டலத்தில் உள்ள நுண்ணிய தூசு, வானை ஆராய்வதற்குப் பெரிய தொல்லையாக உள்ளது. இதைக் கருத்தில்கொண்டுதான் ஹப்புள் செலுத்தப்பட்டது. ஹப்புள் கடந்த பல ஆண்டுகளில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.ஹப்புள் டெலஸ்கோப்பில் புற ஊதாக் கதிர்களையும் அகச் சிவப்புக் கதிர்களையும் வெளியிடுகின்ற வான் பொருட்களை ஆராயவும் வசதிகள் உள்ளன.கோடானு கோடிதொலைவில் உள்ள நட்சத்திரங்களில் பலவும் சூரியனைப் போலவே கிரகங்களைப் பெற்றிருக்கலாம். அவற்றைப் பூமியில் இருந்தபடி கண்டுபிடிப்பது இயலாத காரியம். எனவே, நாசா இதற்கென `ஸ்பிட்சர்' என்னும் டெலஸ்கோப்பைச் செலுத்தியது. இது 2003-ம் ஆண்டில் செலுத்தப்பட்டது. இந்த டெலஸ்கோப் எங்கோ உள்ள நட்சத்திரங்களைச் சுற்றுகின்ற பல கிரகங்களைக் கண்டுபிடித்துள்ளது. இது அகச் சிவப்புக் கதிர்களை வெளியிடும் வான் பொருட்களைக் கண்டறிவதற்கானது. இது முதல்கட்டப் பணியை முடித்துக்கொண்டு இரண்டாவது கட்டத்தை எட்டியுள்ளது.

ஆஸ்ட்ரோசாட் பறக்கும் டெலஸ்கோப், காமா கதிர்கள், எக்ஸ் கதிர்கள், அகச் சிவப்புக் கதிர்கள், புற ஊதாக் கதிர்கள் ஆகியவற்றை வெளியிடுகின்ற அனைத்தையும் கிரகித்து ஆராயும் திறன் கொண்ட டெலஸ்கோப், ஆகும். அதற்கான கருவிகள் இந்தப் பறக்கும் டெலஸ்கோப்பில் உள்ளன. இதையே வேறு விதமாகச் சொல்வதானால், இந்த டெலஸ்கோப் நியூட்ரான் நட்சத்திரங்கள், பல்சார்கள் எனப்படும் நட்சத்திரங்கள், வெள்ளைக் குள்ளன்கள் எனப்படும் நட்சத்திரங்கள், கருந்துளைகள், மிகுந்த ஆற்றலை வெளிப்படுத்துகின்ற அண்டங்களின் மையங்கள் முதலியவற்றை ஆராயும்.

தனித் தன்மை கொண்ட ஆஸ்ட்ரோசாட்

இந்த ஆராய்ச்சிகள் அல்லாமல் தரையில் அமைந்த டெலஸ்கோப்புகளுடனும் இணைந்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும். இந்தியா இவ்வித ஆராய்ச்சிகளில் ஈடுபடுவது இது முதல் தடவை அல்ல. நட்சத்திரங்கள் வெளிவிடும் எக்ஸ் கதிர்களை ஆராய ஆரம்ப காலத்தில் பல நாடுகளும் பலூன்களையும் ராக்கெட்களையும் பயன்படுத்தியதுபோல இந்தியாவும் செய்துள்ளது. தவிர, 1996-ம் ஆண்டில் இந்தியா செலுத்திய ஐ.ஆர்.எஸ். பி-3 என்னும் செயற்கைக்கோளில் எக்ஸ் கதிர் பதிவுக் கருவிகள் வைக்கப்பட்டிருந்தன.

இப்போது செலுத்தப்படும் ஆஸ்ட்ரோசாட் பறக்கும் டெலஸ்கோப்பில் கனடாவின் நிபுணர்களும், இங்கிலாந்தின் லெஸ்டர் பல்கலைக்கழக நிபுணர்களும் உருவாக்கிய கருவிகள் இடம்பெற்றுள்ளன. ஆஸ்ட்ரோசாட் பறக்கும் டெலஸ்கோப்பை நாசா ஏற்கெனவே செலுத்திய ஹப்புள், சந்திரா டெலஸ்கோப், ஸ்பிட்ஸ் டெலஸ்கோப் ஆகியவற்றுடன் ஒப்பிட முடியாது. நாசாவின் டெலஸ்கோப்புகள் ஒவ்வொன்றும் தனித்தனி பணிக்கானவை. அதிக எடை கொண்டவை. அதிக நுட்பம் கொண்டவை. மாறாக ஆஸ்ட்ரோசாட் பல பணிகளையும் உள்ளடக்கியது என்ற வகையில் தனித் தன்மை கொண்டது.

ஆஸ்ட்ரோசாட் பறக்கும் டெலஸ்கோப் 1,650 கிலோ எடை கொண்டது. இது 650 கி.மீ. உயரத்தில் அமைந்தபடி மேற்கிலிருந்து கிழக்காக பூமியைச் சுற்றிவரும். இது பல சாதனைகளைப் படைத்துள்ள பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் உயரே செலுத்தப்படும்.

Sep 23, 2015

உள்ளூர் பறவைகளைக் கொண்டாடுவோம்


நம்மூர் பறவைகள் நாள்: மே 9 - Endemic Bird Day

வேடந்தாங்கலுக்கும், கூந்தங்குளத்துக்கும் வரும் பறவைகள் எல்லாமே வெளிநாட்டு பறவைகள் என்றுதான் நம்மில் பெரும்பாலோர் நம்புகிறோம். ஆனால், அது பெருமளவு உண்மையில்லை. தமிழகப் பறவை சரணாலயங்களுக்கு வரும் பல பறவைகள் உள்நாட்டு பறவைகள்தான். நம்மூர் பறவைகளைப் பற்றிய அறியாமை காரணமாகவே, இந்தப் பிழை நேர்கிறது. இந்தப் பின்னணியில் மே 9-ம் தேதி (இன்று) நாடு முழுவதும் ஓரிடப் பறவைகள் நாளாக (Endemic Bird Day) கொண்டாடப்படுகிறது (கூடுதல் விவரங்களுக்கு: http://www.birdcount.in/).

பறவைகள்-உயிரினங்களில் ஓரிடவாழ்விகள் என்று குறிப்பிடப்படுபவை, உலகில் வேறெங்கும் இல்லாமல் குறிப்பிட்ட ஒரு பகுதியில் மட்டுமே காணப்படுபவை. அதனாலேயே இவை சிறப்பு வாய்ந்தவை என்பதில் சந்தேகமில்லை. நாம் நினைப்பதற்கு மாறாக நம்மூரில் மட்டுமே வாழும் பறவை வகைகள் மிக அதிகம்.

குளிர்காலத்தில் வெளிநாட்டிலிருந்து விருந்தாளிகளாக வலசை பறவைகள் நம் நாட்டுக்கு அதிகம் வருகின்றன. அந்த வலசை பறவைகள் தங்கள் நாட்டுக்குத் திரும்பிவிட்ட இந்தக் காலத்தில், தவிட்டுக்குருவிகள் முதல் தவளைவாயன் வரையிலான நம்மூர் பறவைகள், ஓரிடவாழ்விகள் மீது கவனம் செலுத்தலாம்.

தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் ஓரிடப் பறவைகள் அதிகம் இருக்கின்றன. அதற்காக மற்ற பகுதிகளில் நம்மூர் பறவைகள் இருக்காது என்று அர்த்தமில்லை. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சாதாரணமாகப் பார்க்கக்கூடிய பறவைகளும், நம்மூரில் மட்டுமே வாழ்பவைதான். அதனால், ஓரிடப் பறவைகள் நாளில் நம்மைச் சுற்றியுள்ள பறவைகளை உற்றுநோக்க முயற்சிக்கலாம். அதற்கு இந்தத் தொகுப்பு உதவும்.

மலை மைனா இந்தக் காட்டு மைனாவின் நிறமும் உடல் அமைப்பும் நாம் வழக்கமாகப் பார்க்கும் மைனாவில் இருந்து சற்றே வேறுபட்டது. மரப்பொந்து, பாறை இடுக்குகளில் கூடு கட்டக்கூடிய இவை பூச்சி, பழங்கள், பூந்தேன் போன்றவற்றை உண்ணக்கூடியவை.கவுதாரி தரையில் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் கவுதாரியின் உடல் தவிட்டு நிறத்திலும், வயிற்றுப் பகுதியில் அழகான கறுப்பு நிற வரிகளும் காணப்படும். சிறு கூட்டமாக மேய்ந்து கறையான், தானியத்தை மேயும். ஆட்கள் நடமாடும் சத்தம் கேட்டால் பறப்பதற்குப் பதிலாகக் குடுகுடுவென ஓடித் தப்பித்துவிடும்.

வெண் கன்னக் குக்குறுவான் காலை வேளையில் சீரான இடைவெளியில் சம்மட்டி அடிப்பது போல அழகாகக் கூவும் செம்மார்புக் குக்குறுவானின் உறவுப் பறவை இது. சிறிய பறவை என்பதால் நேரில் பார்ப்பது சற்றே கடினம். மரத்தில் தானே பொந்தைக் குடைந்து முட்டையிடும்.

சின்ன தேன்சிட்டு பூக்களின் உட்பகுதியில் இருக்கும் தேனைக் குடிக்க வசதியாக ஊசி போன்று நீண்டு வளைந்த அலகைக் கொண்ட குட்டியூண்டு பறவை. பூவின் அடிப்பகுதிவரை அலகை நீட்டித் தேனைக் குடிக்கிறது. வண்ணத்துப்பூச்சியைப் போலவே, மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகிறது.


கருந்தலைச் சில்லை சிட்டுக்குருவிகளைவிட சற்றே சிறிய இந்தப் பறவையின் உடலும் அலகும் சிட்டுக்குருவியை ஒத்திருக்கும். அழகு கொஞ்சும் நிறங்களுடன் கூடிய உடலைக் கொண்டது. தானியக் கதிரின் மீது உட்கார்ந்து கதிர் ஆடுவதற்கு ஏற்ப இதுவும் ஆடிக்கொண்டே உண்ணும் அழகை ரசிக்க நேரம் போதாது. தானியங்கள், விதைகளின் மேலுறையை நீக்கிவிட்டு உண்ணக்கூடியது.


செந்தலைக் கிளி இந்தியாவில் காணப்படும் கிளிகள் எல்லாமே பச்சை நிறம் கொண்டவை. ஆனால், எல்லாமே பச்சைக்கிளிகள் அல்ல. கிளிகளின் துணைவகைகளில் ஒன்று இது. கொட்டை, பழம், விதைகளை உண்ணும் இவை, பொந்துகளில் முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பவை.


காட்டுக்கோழி - பார்ப்பதற்கு நமது வீட்டுக் கோழி போலிருந்தாலும், இவை காட்டில் இயற்கையாக வசிக்கும் கோழிகள். கழுத்தில் மஞ்சள் புள்ளிகளுடன் அழகும் கம்பீரமும் பொருந்தியதாகச் சேவல்கள் இருக்கும். இதற்கும் வீட்டுக் கோழிக்கும் இடையே உள்ள முக்கியமான வித்தியாசம், காட்டுக் கோழியால் பறக்க முடியும் என்பதுதான்.


வெண்புருவ வாலாட்டி நீளமான வாலைக் கொண்ட இந்தப் பறவை நடக்கும்போது, ஓடும்போது எல்லாம் வாலை ஆட்டிக்கொண்டே இருக்கும். அதனால்தான், இந்தப் பெயர். நீர்நிலைகளின் விளிம்புகள், திறந்தவெளித் திடல் பகுதிகளில் புழு பூச்சிகளை வாலை ஆட்டிக்கொண்டே பிடித்து உண்ணும். இனிமையாகக் குரல் எழுப்பக்கூடியது.


சாம்பல் கதிர்க்குருவி அடர்ந்த மரத்துக்குள் இருந்து குரல் மட்டும் கேட்கும். ஆனால், அந்தப் பறவையைப் பார்ப்பது கஷ்டம். அப்படி வெளிப்படையான குரலும், மிகச் சிறிய உடலும் கொண்டவை கதிர்க்குருவிகள். கருஞ்சாம்பல் நிறம் கொண்ட இந்தக் கதிர்க்குருவியின் வால் நீளமானது. தையல்சிட்டைப் போலவே, இலைகள் அல்லது நார், புல், சிலந்தி வலையை இணைத்து நீளமான பை போன்ற கூட்டைக் கட்டுகிறது.


பொன் முதுகு மரங்கொத்தி உளி போன்ற உறுதியான அலகால் மரத்தில் 'டக் டக் டக்' என்று ஒரே தாள லயத்தில் வேகமாகத் தட்டுவதை வைத்து, ஓரிடத்தில் மரங்கொத்தி இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளலாம். மரத்தில் செங்குத்தாக ஏறக்கூடிய ஒரே பறவையான இது, பட்டு போன மரங்களில் இருந்து பூச்சிகளைப் பிடித்து உண்ணும். மரங்கொத்தி குடைந்த பொந்துகளில்தான் கிளி, மைனா கூடமைக்கும்.

Sep 21, 2015

மியூச்சுவல் பண்ட் முதலீடு: அச்சம் தவிர்

                                  வாசு கார்த்திசமீப காலமாக மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்பவர் களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இப்போது இந்தியாவில் இருக்கும் அனைத்து மியூச்சுவல் பண்ட்களும் ரூ.12 லட்சம் கோடி அளவுக்கு சொத்துகளைக் கையாளுகின்றன. வரும் 2018-ம் ஆண்டில் சுமார் ரூ.20 லட்சம் கோடி அளவுக்கு மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் கையாளும் சொத்து மதிப்பு உயரும் என்று இஒய் மற்றும் கேப் மியூச்சுவல் ஆகிய நிறுவனங்கள் இணைந்து கணித்திருக்கின்றன.

மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் கையாளும் சொத்து மதிப்பு ஆண்டுக்கு 16 சதவீதம் வரை உயர்ந்துகொண்டே இருக்கிறது. ஆனால் ஏற்கெனவே முதலீடு செய்தவர்களின் பங்கு அதிகமாக இருக்கிறதே தவிர புதிதாக வரு பவர்களின் எண்ணிக்கை சொல்லிக் கொள்ளும்படி இல்லை. தவிர இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 30.6 சதவீதம் சேமிப்பாக இருந்தாலும் மியூச்சுவல் பண்ட்களுக்கு வரும் முதலீடு என்பது வெறும் 7 சதவீதம்தான்.மியூச்சுவல் பண்ட்கள் நீண்ட நாளைக்கு நல்ல வருமானம் கொடுத்தாலும், அதன் மீது சிறு முதலீட்டாளர்களுக்கு உள்ள பயம் மற்றும் தேவையில்லாத நம்பிக்கை காரணமாக மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்வதை தவிர்க்கின்றனர்.

பயம் தேவையா?

மியூச்சுவல் பண்ட்கள் என்றாலே ஏதோ சூதாட்டம் என்கிற நினைப்பு பல சிறு முதலீட்டாளர்களிடம் உள்ளது. இங்கு முதலீடு செய்யப்படும் தொகை பங்குச்சந்தையில் முதலீடு செய்யப் படுகிறது. இதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.ஆனால் அவை அனைத்தும் தேர்ந்த நிதி மேலாளர்களால் நிர்வகிக் கப்படுகிறது. மேலும், உங்களிடம் பெறப்படும் தொகை பல துறைகளில் முதலீடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு துறையிலும் வெவ்வேறு பங்குகளில் முதலீடு செய்யப்படுகிறது என்பதால் நஷ்டமடைவதற்கு வாய்ப்புகள் குறைவு. அதே சமயத்தில் கிடைக்கும் வருமா னமும் நிரந்தர வருமான முதலீட்டு திட்டங்களை விட அதிகமாக கிடைக்க வாய்ப்புண்டு.

வாய்ப்புகள் என்ன?

பங்குச்சந்தை சார்ந்த திட்டங்கள் ரிஸ்க் என கருதினால் பேலன்ஸ்ட் திட்டங்கள் உள்ளன. அதாவது பங்குச் சந்தை மற்றும் கடன் சந்தை இரண்டும் கலந்த திட்டங்கள். இதிலும் இரண்டு வாய்ப்புகள் உள்ளன.பங்குச்சந்தையில் அதிக முதலீடும், கடன் சந்தையில் குறைவான முதலீடு இருப்பது போல உள்ள திட்டங்களை தேர்வு செய்யலாம். அல்லது பங்குச்சந்தையில் குறைவாகவும் கடன் சந்தையின் பங்கு அதிகமாக உள்ள திட்டங்களை தேர்வு செய்யலாம். பங்குச்சந்தையே வேண்டாம் என்று நினைப்பவர்களுக்குமான திட்டங்களும் இங்கு உண்டு.இந்த திட்டங்களுக்கும் சாதாரண நிரந்தர வருமானம் முதலீட்டு திட்டங் களில் கிடைப்பதை விட அதிகமாக கிடைக்க வாய்ப்பு உண்டு.

இதை தவிர அதிக ரிஸ்க் உள்ள, அதிக வருமான வாய்ப்புள்ள திட்டங் களும் உண்டு. வெளிநாட்டு பங்குகளில் மட்டுமே முதலீடு செய்யும் பண்ட்கள், வங்கித்துறையில் மட்டுமே முதலீடு செய்யும் பண்ட்கள் என குறிப்பிட்ட துறையில் மட்டுமே முதலீடு செய்யும் பண்ட்களும் உள்ளன. இதில் அதிக ரிஸ்குகளும் உள்ளன. அதிக வருமான வாய்ப்புகளும் உள்ளன. அதிக முதலீட்டு வாய்ப்புள்ள திட்டங்கள் இருப்பது மியூச்சுவல் பண்ட்களில்தான்.

எப்போது, எவ்வளவு முதலீடு

இப்போது முதலீடு செய்யலாமா, இல்லை பங்குச்சந்தை இன்னும் கொஞ்சம் சரிந்த பிறகு முதலீடு செய்யலாமா என்ற கேள்வி அவசிய மற்றது. பங்குச்சந்தை எப்போது சரியும், எவ்வளவு சரியும் என்பது கணிப்பது முடியாது விஷயம். பங்குச்சந்தையில் காலத்தை கணிக்க முயற்சிப்பது என்பது என்பது அலை ஓய்ந்த பிறகு கடற்கரைக்கு செல்வேன் என்று சொல்வது போலதான்.காலத்தை கணிக்க முயற்சிப் பதைவிட ஒவ்வொரு காலத்திலும் முதலீடு செய்வதுதான் மிகச்சரியான வழியாக இருக்க முடியும். ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்து (எஸ்.ஐ.பி முறையில்) வரும் பட்சத்தில் சந்தையின் அனைத்து ஏற்ற இறக்கங்களிலும் முதலீடு செய்திருப்பீர்கள். நீண்ட காலத்தில் முதலீடு செய்யும் பட்சத்தில் நல்ல வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

அதேபோல அதிக தொகை இருந்தால்தான் முதலீடு செய்ய முடியும் என்ற எண்ணமும் தவறானது. சில பண்ட்களில் 100 ரூபாய் கூட முதலீடு செய்ய முடியும். பெரும்பாலான திட்டங்களில் குறைந்தபட்ச முதலீடு 500 ரூபாயாக உள்ளது. மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்வதை தடுப்பது காலமோ தொகையோ அல்ல.

மீண்டும் எடுக்க முடியாதா?

பிக்சட் டெபாசிட் போடும்போது எப்போது வெளியே எடுப்போம் என்பது குறித்து யாரும் யோசிப்பதில்லை. முதலீட்டுக்கான தங்கம் வாங்குகிறோம் என்று சொல்லும் பலரும் தங்கத்தை அடகு வைப்பதோ விற்பதோ இல்லை. ஆனால் மியூச்சுவல் பண்ட் என்று வரும் போது மட்டும் எப்போது வெளியே எடுப்பது என்ற கேள்வி எழுகிறது. வரிவிலக்குக்கான போடப்படும் இ.எல்.எஸ்.எஸ் திட்டங்களில் செய்யப்பட்டிருக்கும் முதலீடு மூன்று வருடங்களுக்கு எடுக்க முடியாது. அதனை தவிர மற்ற திட்டங்களை எளிதாக எடுக்க முடியும். செய்த முதலீட்டை ஒரு வருட காலத்துக்குள் வெளியே எடுக்கும் போது வெளியேறும் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.

இலக்கு முக்கியம்!

ஒரு வருட காலத்துக்குள் முதலீட்டை திரும்ப எடுக்க முடியும் என்றாலும் இலக்கினை நிர்ணயம் செய்து, அதற்கேற்ப முதலீடு செய்வது நல்லது. இலக்கினை நிர்ணயம் செய்யும் பட்சத்தில் அதற்கேற்றவாறு திட்டங்களை தேர்ந்தெடுக்க முடியும். குறைந்த காலம் (ஒரு வருடத்துக்குள் என்றால்) பங்குச்சந்தை சார்ந்த திட்டங்களை தவிர்ப்பது நல்லது. நீண்ட காலத்துக்கு முதலீடு செய்ய முடிவெடுத்தால் பங்குச்சந்தை சார்ந்த திட்டங்களை தேர்ந்தெடுப்பது நல்லது. ஒரளவுக்கு மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்த பிறகு அதிக ரிஸ்க் இருக்கும் செக்டோரல் பண்ட்களில் முதலீடு செய்யலாம்.

கொஞ்சம் ஆராய்ச்சி!

முதலீடு செய்தால் மட்டும் போதாது. அவ்வப்போது (கவனிக்க - அடிக்கடி அல்ல) நீங்கள் முதலீடு செய்திருக்கும் பண்ட்களின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதை கண்காணிப்பது நல்லது. நண்பர்கள், அல்லது மியூச்சுவல் பண்ட் ஆலோசகர்களிடம் இது குறித்து விவாதிக்கலாம். செயல்பாடு நன்றாக இல்லை என்னும் பட்சத்தில், மியூச்சுவல் பண்ட் முதலீடே வேண்டாம் என்று சொல்லாமல், அதே மியூச்சுவல் பண்டில் உள்ள வேறு திட்டத்திலோ அல்லது வேறு பண்ட்களிலோ முதலீட்டை மாற்றிக்கொள்ளவும்.

காலங்கடந்து விட்டதோ என்று நினைக்க வேண்டாம். முதலீடு செய்யும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்துங்கள்.

Sep 15, 2015

புலப்படாத பறவையின் உடலைத் தேடி

    BNHS - Bombay Natural History Society 


பி.என்.எச்.எஸ். நிறுவப்பட்ட நாள் செப்டம்பர்-15, 1883 Link 

முகப்பில் இருவாச்சிப் பறவையின் சின்னத்துடன் உயர்ந்தெழுந்து நிற்கிறது மும்பை சாலிம் அலி சவுக்கில் உள்ள ‘பாம்பே இயற்கை வரலாற்றுக் கழகம் (பாம்பே நேச்சுரல் ஹிஸ்டரி சொசைட்டி). சுருக்கமாக, பி.என்.எச்.எஸ் (BNHS).
பி.என்.எச்.எஸ்-ஸுக்குச் செல்வதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள். 1, ஜெர்டான்ஸ் கோர்ஸர் என்னும் பறவை. 2, இந்தியாவின் பறவைத் தாத்தா என்று அறியப்படும் சாலிம் அலி (1896-1987) தன் வாழ்நாளின் கணிசமான பகுதியைக் கழித்த இடம் அது.

பி.என்.எச்.எஸ். ஒரு அறிமுகம்

முதலில் பி.என்.எச்.எஸ்-ஸைப் பற்றிய சுருக்கமான ஒரு அறிமுகம். இந்தியாவில் இயற்கை அறிவியல், இயற்கைப் பாதுகாப்பு போன்றவற்றில் ஈடுபட்டிருப்போருக்கு கிட்டத்தட்ட ஒரு புனிதத்தலம் போன்றது பி.என்.எச்.எஸ். பறவைகள், விலங்குகள் என்று இயற்கையின்மீது ஆர்வம் கொண்ட, தொழில் முறை சாராத ஆறு ஆங்கிலேயர்களும் இரண்டு இந்தியர்களும் 1883-ல் இதே நாளில் (செப்டம்பர்-15) விக்டோரியா மியூசியத்தில் சந்தித்து உருவாக்கியதுதான் பி.என்.எச்.எஸ். ஆரம்பத்தில் தொழில் முறை சாராதவர்கள் சேர்ந்து ஆரம்பித்திருந்தாலும் கூடிய விரைவில் நிபுணத்துவத்துடன் கூடிய செயல்பாட்டை மேற்கொள்ள ஆரம்பித்தார்கள். இந்தியாவில் காணப்படும் உயிரினங்களைப் பற்றிய வரலாற்றைச் சேகரித்தல், அந்த உயிரினங்களைப் பிடித்துவந்து அவற்றைப் பற்றி ஆராய்ந்து, அவற்றை அறிவியல்பூர்வமாக வகைப்படுத்துதல், உயிரினங்களைப் பாதுகாக்கும் செயல்பாடுகளை மேற்கொள்ளுதல், இந்தத் துறைகளில் கள ஆய்வு மேற்கொள்ளுதல் என்று முக்கியமான பல வேலைகளைக் கடந்த 132 ஆண்டுகளாக, இந்த அரசு சாராத நிறுவனம் செய்துவருகிறது. பி.என்.எச்.எஸ் 1886-ல் ஆரம்பித்த ‘ஜர்னல் ஆஃப் பாம்பே நேச்சுரல் ஹிஸ்டரி சொசைட்டி’ என்ற இதழ் இன்றும் தொடர்ந்து வருடம் மும்முறை இதழாக வந்துகொண்டிருக்கிறது. கூடுதலாக, ‘ஹார்ன்பில்’ என்ற காலாண்டிதழும் பி.என்.எச்.எஸ்ஸால் வெளியிடப்படுகிறது. பி.என்.எச்.எஸ்-ஸின் செயல்பாடுகள் தொடர்பான புத்தகங்களும் வெளியிடப்படுகின்றன. உலகப் புகழ்பெற்ற பறவையியல் அறிஞர் சாலிம் அலி, எஸ்.எச். பிரேட்டர், ஜே.சி. டேனியல் (மலையாளத் திரைப்படப் பிதாமகன் ஜே.சி. டேனியலும் இவரும் வேறு) போன்றோர் இங்கே பணியாற்றியிருக்கிறார்கள்.

சாலிம் அலியை ஏமாற்றிய கலுவிக் கோடி

இப்போது ஜெர்டான்ஸ் கோர்ஸர் என்ற பறவைக்கு வருவோம். ஆந்திரத்தின் கடப்பா பகுதியை மட்டும் வாழிடமாகக் கொண்டிருக்கும் இந்தப் பறவை, உலகின் மிகவும் அரிதான பறவைகளுள் ஒன்று. 1848-ல் டி.சி. ஜெர்டான் என்ற ஆங்கிலேயப் பல் மருத்துவர் மற்றும் இயற்கை ஆர்வலரால் தான் இந்தப் பறவை முதன்முதலில் விவரிக்கப்பட்டிருந்தது (அவர் நினைவாகப் பறவைக்கும் இந்தப் பெயர்). ஜெர்டான்ஸ் கோர்ஸருக்கு உள்ளூர் மக்களின் மொழியில் ‘கலுவிக் கோடி’ என்ற பெயர் உண்டு (இனி, இதே பெயர் கட்டுரையில் தொடரும்). 1900-ல்தான் அந்தப் பறவை கடைசியாகப் பார்க்கப்பட்டிருந்தது. அதற்குப் பிறகு, பல்வேறு தேடல்களுக்குப் பிறகு 1986-ல் கடப்பா மாவட்டத்தில் அந்தப் பறவை மறுபடியும் கண்டுபிடிக்கப்பட்டது. அய்த்தண்ணா என்ற உள்ளூர்க்காரர் அந்தப் பறவையைப் பிடித்துவைத்து, பி.என்.எச்.எஸ்-ஸைச் சேர்ந்த பரத்பூஷண் என்பவருக்குத் தகவல் தெரிவித்தார். சாலிம் அலிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் தொடர்பு என்பது இன்றளவுக்கு வளராத காலம் என்பதால், பறவை பிடிபட்ட மூன்றாம் நாளில்தான் சாலிம் அலியால் வந்து பார்க்க முடிந்தது. ஆனால், அதற்குள் அந்தப் பறவை இறந்துவிட்டிருந்தது. ஒருங்கிணைந்திருந்த இந்தியத் துணைக் கண்டத்தில் பர்மாவில் ஆரம்பித்து, பாகிஸ்தான், கேரளம், அந்தமான் என்று எல்லாத் திசைகளிலும் எல்லாப் பறவைகளும் அவர் பார்வைக்குத் தப்பியதே இல்லை. அநேகமாக இந்திய வரலாற்றில் அதிகமான பறவை இனங்களைப் பார்த்தவர் அவராகத்தான் இருப்பார். அவரையே ஏமாற்றிவிட்டது கலுவிக் கோடி. (செந்தலை வாத்தும் இமாலயக் காடையும்கூட அவருக்குக் கடுக்காய் கொடுத்திருக்கின்றன.)

இமாலய மொனால் பறவையுடன் பதப்படுத்துநர்.

தொலைந்த பொக்கிஷம்

அது கண்டுபிடிக்கப்பட்ட பகுதி உடனடியாக சரணாலயமாக அறிவிக்கப்பட்டது (ஸ்ரீலங்கமல்லேஸ்வர காட்டுயிர் சரணாலயம்). அங்கே சரணாலயம் அமைந்திருப்பது குறித்த பிரக்ஞையின்றி ஆந்திரப் பாசனத் துறை அந்த இடத்தின் வழியாக தெலுங்கு-கங்கைத் திட்டத்தின் கீழ் கால்வாய் தோண்டியதால் அந்தப் பறவையின் இருப்பு குறித்து மறுபடியும் அச்சம் ஏற்பட்டுவிட்டது. 2008-க்குப் பிறகு, கலுவிக் கோடி பறவை மறுபடியும் பார்க்கப்படவில்லை. 86 ஆண்டு காலத் தேடலுக்குப் பிறகு கண்டறியப்பட்ட இந்த உலகின் அரிய பொக்கிஷம் ஒன்று நமது பொறுப்பற்ற தன்மை காரணமாக மறுபடியும் தொலைந்துபோயிருக்குமோ என்று இயற்கை ஆர்வலர்கள் கவலை கொண்டிருக்கிறார்கள். உலகின் பல்வேறு இயற்கை ஆர்வலர்களும் பறவைக் காதலர்களும் கலுவிக் கோடியைப் பார்ப்பதற்காகத் தங்கள் சொத்து முழுவதையும் எழுதிவைக்கக் கூடத் தயாராக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட அரிய பறவையின் நூற் றாண்டுக்கு முந்தைய மிகச் சிலஸ்பெஸிமன்கள் (பாடம் செய்யப்பட்ட பறவைகள்) உலகின் மிகச் சில உயிரியல் அருங்காட்சியகங்களில் மட்டுமே இருக்கின்றன. பி.என்.எச்.எஸ்-ஸிலும் ஒரு ஸ்பெஸிமன் இருக்கிறது என்று கேள்விப்பட்டதே அங்கே சென்றதற்குப் பிரதான காரணம்.


பி.என்.எச்.எஸ்-ஸின் உயிரியல் அருங்காட்சியகத்தில் பாடம் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டிருக்கும் உயிரினங் களின் எண்ணிக்கை 1 லட்சத்து 20 ஆயிரத்தைத் தாண்டும். ஆசியாவிலேயே மிகப் பெரிய தொகுப்பு இது. பாலூட்டிகள்-20,000, பறவைகள்-29,000, பறவை முட்டை கள்-5,400, நீர்-நிலம் வாழ்வனவும் ஊர்வனவும்-8,500, பூச்சிகள்-50,000 என்று பிரமிக்க வைக்கிறது அவர்களின் தொகுப்பு. உலகிலேயே வேறெங்கும் இல்லாத உயிரினங்களின் மாதிரிகள் இவர்களிடம் உண்டு. அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட ‘செந்தலை வாத்து’ இவர்களின் அரிய பொக்கிஷங்களுள் ஒன்று. இப்படி உயிரினங்களைப் பிடித்துவைத்துப் பாடம் செய்வதால் அவை அழிந்துவிடாதா என்ற கேள்வி எழலாம். புகைப்படங்கள் முதலான தொழில்நுட்பம் வளராத காலத்தில் ஒரு உயிரினத்தைப் பற்றிய தெளிவான அறிவு வேண்டுமென்றால், அதைப் பிடித்து ஆராய்ச்சி செய்துதான் தெரிந்துகொள்ள முடியும். ஒரு உயிரினத்தைப் பற்றிய தெளிவான அறிவு இருந்தால்தான் அதைக் காக்க முடியும். அதனால்தான் இந்த வழிமுறை. ஒரு இனத்தின் ஒரு ஜோடி உயிர்களை அறிவியல் நோக்கில் பிடிப்பதால் அது அழிந்துவிடாது என்பதும் நினைவில் கொள்ள வேண்டியது.

இப்படி அரிய பொக்கிஷங்கள் இருப்பதால் அவற்றை எல்லோருக்கும் திறந்துகாட்டிவிட மாட்டார்கள். உரிய அனுமதி பெற்று வந்திருந்ததால் நம்மை அனுமதித்தார்கள். அங்குள்ள ஆராய்ச்சியாளர்களும் பாலூட்டியியலாளரும் பதப்படுத்துநரும் மிகவும் பொறுமையுடன் எல்லாவற்றையும் பற்றி விளக்கிச் சொன்னார்கள். ஸ்பெஸிமன்களையெல்லாம் குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருக்கும் அறைகளில் மிகவும் கவனமாக அவர்கள் பராமரித்துவருவதை அறிய முடிந்தது. நம் மனத்துக்குள் ‘கலுவிக் கோடியை எப்போது காட்டப் போகிறீர்கள்?’ என்ற கேள்வி அரித்துக்கொண்டிருந்தது. அழிந்துவரும் விலங்கினமான அலங்கு (அலங்கு நாய்) போன்றவற்றைக் காட்டிவிட்டு, பறவைகள் பிரிவுக்கு வந்தார்கள்.

வானம் அளந்த பறவை

இமயமலைப் பகுதியில் மட்டும் காணப்படுவதும், அழிவின் விளிம்பில் இருப்பதுமான டிராகோபான் ஃபெசண்ட் (காட்டுக்கோழி இனம்) என்ற பறவையின் ‘ஸ்பெஸிம’னைக் கையில் கொடுத்தார்கள். வடக்கு சிக்கிமில் 1914-ல் பிடிக்கப்பட்ட இந்தப் பறவை இப்போது நம் கையில் சலனமின்றி. இமாலய மொனால் என்ற அழகு சிங்காரனையும் காட்டினார்கள் அடுத்துக் காட்டப்பட்ட பறவை தேன்சிட்டு. எங்கும் காணும் பறவைதான். அந்த ஸ்பெஸிமனை முக்கியத்துவப்படுத்துவது ‘Salim Ali’ என்ற கையெழுத்துதான். ஆம், அந்த ஸ்பெஸிமனைக் கொண்டுவந்தவர் சாலிம் அலி. சாலிம் அலி ஏந்திய தேன்சிட்டு இப்போது நம் கையில். இடையில் 70 ஆண்டுகள்! பக்கத்திலேயே மிகவும் குட்டியாக ஒரு பறவை, செம்மார்பு மலர்க்கொத்தி (ஃபயர் பிரெஸ்ட்டட் ஃப்ளவர்பெக்கர்). இந்தியாவிலேயே மிகச் சிறிய பறவை என்றார்கள். வடகிழக்கிந்தியாவில் மட்டுமே காணப்படும் பறவை இது. இவ்வளவு சிறியதாக இருந்துகொண்டு வானத்தையே அளந்த பறவை வெறும் 9 கிராம் எடை, 7 செ.மீ நீளம்தான் என்றால் நம்ப முடிகிறதா!

அழிந்துவிட்டதாகக் கருதப்படும் ‘செந்தலை வாத்து’ ஒன்றை நம் கையில் கொடுத்தார்கள். 1903-ல் பிடிக்கப்பட்ட பறவை. கடைசியாக 60-களில் பார்க்கப்பட்ட பறவை. இப்போது முற்றிலும் அழிந்துவிட்டதாகக் கருதப்படும் பறவை! வானம் மிகவும் விஸ்தீரணமானது, இது போன்ற பறவைகளுக்கு இடமில்லாமல் பூமிதான் மிகவும் குறுகிவிட்டதோ என்று தோன்றியது.

தவிட்டு நிறப் பறவையொன்றைக் கொடுத்து, “இதோ உங்கள் கனவுப் பறவை கலுவிக் கோடி” என்றார்கள். காலம் மெதுவாகவும் இதயத் துடிப்பு வேகமாகவும் ஓட ஆரம்பித்தது. உலகத்து அளவுகோல்களின்படி அவ்வளவு அழகு என்று சொல்லிவிட முடியாத பறவைதான். ஆனால், அவ்வளவு அரிதாக இருப்பதால் அவ்வளவு அழகாக ஆகியிருக்கிறது அந்தப் பறவை. கையில் எடுத்துப் பார்த்தபோது, அதில் இணைக்கப்பட்டிருந்த பட்டியில் 17.01.1986 என்று எழுதப்பட்டிருந்தது. முகத்தில் கேள்வியுடன் பார்த்தபோது, அங்கிருந்த பதப்படுத்தல் நிபுணர் புன்னகையுடன் சொன்னார், “நீங்கள் கையில் வைத்திருப்பது 86 ஆண்டுகள் கழித்துக் கண்டுபிடிக்கப்பட்டு, சாலிம் அலி வந்து பார்ப்பதற்குள் இறந்துபோன அதே பறவைதான்.”

- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in

Sep 8, 2015

தஞ்சை ப்ரகாஷ் 5 - சாரு

தினமணி இதழில் வெளிவரும் பழுப்பு நிறப் பக்கங்கள்


தஞ்சை ப்ரகாஷின் 35 சிறுகதைகளை இந்த இணைப்பின் மூலம் வாசிக்கலாம்

இதே ஜானுப் பாட்டியின் கண்ணீரை எதிரொலிக்கும் இன்னொரு உக்கிரமான கதை ‘பற்றி எரிந்த தென்னை மரம்.’ இந்தக் கதையிலிருந்து மேற்கோள் காட்ட வேண்டுமெனில் மொத்த கதையையே தட்டச்சு செய்ய வேண்டும். ஆகாது. நீங்களே படித்துப் பாருங்கள். இருந்தாலும் சுருக்கமாக. லோச்சனா ஒரு மகாராணியைப் போல் வாழ்ந்தவள். அவளைப் பார்த்து பெண்கள் பெருமூச்சு விட்டார்கள். அவளுக்கே புரியாது, ஏன் இப்படி எல்லோரும் தன் காலில் விழுந்து விழாத குறையாக வணங்குகிறார்கள் என்று. வெள்ளைத் தோலும் சிவப்பு சருமமும் மஞ்சள் கூடிக் கிடந்த பால் போன்ற நிறமும், உடலின் மேடு பள்ளங்கள் துல்லியமாய்த் தெரியும் பட்டுப் புடவையின் சலசலப்பும் மெல்லிய மிருதுவான மணம் வீசும் பூக்களும், மிதமான சுடர் வீசும் வைர நகைகளும், கடல் போன்ற அவளது விழிகளும் யாரையும் அசர அடித்து விடும்.
இப்பேர்ப்பட்ட பேரழகிக்குக் குழந்தை பிறந்ததும் குஷ்டம் வந்து விடுகிறது. வீட்டிலிருந்து ஒதுக்கி வைத்து விடுகிறார்கள். அவளோ தன் சொந்த கிராமமான அஞ்சினிக்குப் போய் தானே தன் கையாலேயே ஒரு வீட்டைக் கட்டிக் கொண்டு வாழ்கிறாள். மீண்டும் கூறுகிறேன். பெண்கள் அத்தனை பேரும் படிக்க வேண்டிய பிரதிகளை உருவாக்கியிருக்கிறார் ப்ரகாஷ். அவருடைய அத்தனை கதைகளும் பெண்களைப் பற்றித்தான் பேசுகின்றன. அதுவும் வெளியிலிருந்து, ஒரு ஆணின் பார்வையிலிருந்து அல்ல; ஒவ்வொரு கதையின் உள்ளேயிருந்து கேட்பதெல்லாம் பெண்ணின் குரல்கள்தாம்.
‘பால் முத்தி மாரெல்லாம் கனத்து பாலையெல்லாம் கொல்லைப் புறத்து மாட்டுக் கொட்டகையில் இடிந்த சுவர் செங்கல்லில் மாரைப் பிழிந்து விடும்போதும், மல்லிகைப் பூவை வாங்கி வைத்துக் கட்டி பாலை முறித்தபோதும் அவளுக்கு உயிரே போயிற்று.’
‘தன்னந்தனியே வினோதமான உருவத்துடன் அந்தக் கிராமத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் சுற்றிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணுக்கு யாரும் வேண்டாம். அவள் ஒரு தாய் இல்லை. யாருக்கும் அவள் தமக்கை இல்லை. தங்கை இல்லை. மனைவி இல்லை. அவள் வெறும் மனுஷி. ஐந்தாறு வருடங்களாக அந்த மண்ணில் உழலும் மனிதர்களோடு அவளும் ஒருத்தி. அவளே கல் அறுத்து பெரிய பெரிய செங்கற்களாய்ச் சுட்டு அவளே வினோதமாய் கட்டிய அந்த வினோதமான வீடும் லோச்சனாவைப் போலவே…’
‘வானம் இருண்டு வந்தது. மலைமலையாக மேகங்கள் அடர்ந்து வந்தன. அவள் ராகவனிடம் போவது அவளுக்கு மறந்து வந்தது. அவன் வரும் போதெல்லாம் தொட மாட்டானா என்று மனம் தவிக்கும். எப்போதாவது ஒருமுறையாவது அவள் கைகளைப் பிடித்து வைத்து லோச்சனத்தின் சின்ன ஆனால் தடித்த உதடுகளைக் கவ்வ மாட்டானா என்று இருக்கும். ராணியா வாய் திறந்து கொடு என்று கேட்பாள்? ஆனால் ராகவன் நிச்சலனமாக கருணை வடிவாய் அவளைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பான்.’
மிகவும் சர்ரியலிஸ்டிக்கான, அமானுஷ்யமான உணர்வுகளைத் தரக் கூடிய கதை ‘பற்றி எரிந்த தென்னை மரம்.’ இந்தக் கதையைப் போலவே ஒரு பெண்ணின் அடக்கப்பட்ட காம உணர்வுகளைச் சொல்லும் இன்னொரு கதை கடைசிக் கட்டி மாம்பழம். மன்னார்குடியில் மதுரம்பாள் வடிவேலு தம்பதிக்கு பத்து பெண் குழந்தைகள், ஒரு ஆண். வடிவேலு பட்டாளத்தான். பட்டாளத்திலேயே இறந்து விடுகிறான். பிரேதம் கூடக் கிடைக்கவில்லை. அந்த வீட்டுக்கு அழையா விருந்தாளியாக வரும் கலியராஜன் அந்தப் பதினோரு குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்கி வேலைக்கும் அனுப்பி வைக்கிறான். இருபது ஆண்டுகள். ஊரில் அந்தக் குடும்பத்தைப் பற்றி என்னென்னவோ பேசுகிறார்கள். மதுரம்பாளுக்கும் அவன் அங்கே வருவது பிடிக்கவில்லை. ஆனால் அவர்களுக்கு அவனை விட்டால் வேறு நாதியும் இல்லை.
மதுரத்துக்கும் அவனுக்கும் 20 வயது வித்தியாசம். இருந்தாலும் ஒரு ஆணை இன்னும் திரும்பிப் பார்க்க அவளுக்கு இருந்த திமிரைப் பற்றி அவளே வருத்தப்பட்டு, எட்டு நாள் விரதம் இருந்து தண்ணீரோடு அம்பாளுக்கு வேண்டுதல் செய்து விரதத்தை முடித்திருக்கிறாள். இதற்கிடையில் மதுரத்தின் பத்து பெண்களுக்குமே கலியனைக் கட்டிக் கொள்ள விருப்பம்தான். ஆனால் அவனோ அவர்களோடு எவ்வளவுதான் பாசமாகப் பழகினாலும் திருமணம் என்ற பேச்செடுத்தால் ஒதுங்கிப் போய் விடுகிறான். அந்த இருபது ஆண்டுகளில் அவனோ மதுரமோ ஒரு வார்த்தை பேசிக் கொண்டது இல்லை. அவன் முன்னே அவள் அடுக்களைக்குள் ஒதுங்கி விடுவாள். அவளுடைய உலகமே அடுக்களைதான் என்று ஆகிப் போனது. அவளுக்கு எப்போதாவது உடம்புக்கு வந்தால் கூட ஏனென்று கேட்க மாட்டான் கலியன். அவன் வர வேண்டும் என்று அவள் நினைக்காவிட்டாலும் நெஞ்சு வலி ஏறிக் கொண்டே போகும். அவனோ எட்டிக் கூட பார்க்க மாட்டான். மதுராம்பாளுக்கு அவமானமும், கஷ்டமும், வேதனையும், வெட்கமும் நெஞ்சில் அறையும்.
பேய்த்தனமான ஆசையும், மிருகத்தனமான நேர்மையும், எந்திரம் போன்ற உழைப்பும், பத்துப் பெண்களின் தாய்மையும் ஒன்றாகச் சேர்ந்து நெஞ்சம் பாறையாய்க் கட்டிக் கொள்ளும். அன்னம் தண்ணி ஆகாரம் ஏதுமில்லாமல் கட்டிய சேலையுடன் அவள் ஏன் இருட்டில் கிடக்கிறாள் என்று பொண்டுவள் யாருக்கும் தெரியாது.
20 ஆண்டுகளில் ஆறு பெரிய பெண்களுக்கும் தன் முயற்சியிலேயே திருமணம் செய்து வைத்து விடுகிறான் கலியராஜன். ஆனால் இவ்வளவு காலமும் அவன் மணம் முடித்துக் கொள்ளவில்லை. எல்லாம் முடிந்து ஒருநாள் மது அருந்தி விட்டு மதுரத்திடம் வந்து ஆவேசமாகத் தன் துயரத்தைக் கொட்டுகிறான். ‘ஏய்… யாருகிட்டடீ கதெ வுடுறே? ஒரு வருஷமா ரெண்டு வருஷமா? இருவது வருஷ்ம்டீ இருவது வருஷம்… ஒரு நாளு நான் பாக்க நல்ல துணி கட்டியிருப்பியா? நாயே, ஒரு நாளு ஏம் மொகத்தெ நிமுந்து பாத்துருப்பியா? நான் இருந்தா முத்தத்துக்கே வர்றதில்லெ. அடேயப்பா, நளாயினி, சாவித்திரி கறுப்பு. நெஞ்சுல ஆசெயெ வச்சுக்கிட்டுத் தானடீ வூட்டுக்குள்ள ஒளிஞ்சுக்கிட்டிருந்தே? ராஸ்கோல்! ராஸ்கோல்! ஏய்… இனிமே நடிச்சே இதே எடத்துல கொன்னுபுடுவேன். உண்மையைச் சொல்லுடீ… என்னெ நீ மனசுக்குள்ள வச்சே ஏமாத்தலே? வேஷம் போடலே? என்னெ நினைக்கவே இல்லையா? நெஜமா சொல்லு?’
கொலைஞன் என்று ஒரு கதை. விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றி எத்தனையோ பேர் எழுதுகிறார்கள். ஆனால் தஞ்சை ப்ரகாஷின் அருகில் கூட அவர்களால் வர முடியாது என்று தோன்றுகிறது. பீடிக் கம்பெனியில் வேலை செய்வதாகச் சொல்லி சகுந்தலாவைத் திருமணம் செய்து கொள்கிறான் ரெங்கராஜன். அவள் பார்த்த பல சினிமாக்களில் வரும் கதாநாயகர்களை எல்லாம் பிசைந்து உருட்டியது போல் உடம்பும் அரும்பு மீசையும் கருகருவென்ற சுருண்ட முடியும் உயர்ந்த தோள்களுமாய் மயக்குகின்ற உடல்வாகு கொண்டவன். ஆனால் கல்யாணம் ஆகி வந்த ஒரு வருடத்தில் பத்து வீடு மாறி விட்டான். ஒரு வீட்டில் இரண்டு வாரம் கூடத் தங்குவதில்லை. என்ன வேலை செய்கிறாய் என்றால் சரியாக பதில் இல்லை. ‘பயமா இருக்குங்க.’ ‘என்னடி பயம்? ராத்திரி நெரங்கழிச்சி வாரேன். குடிக்கிறேன். வேற ஏதாவது கெட்டப் பழக்கம் இருக்கா?’
எனக்குப் பணம் வேண்டாம் என்கிறாள் சகுந்தலா. அவன் என்ன செய்கிறான். தெரியாது. எப்போதாவது வருகிறான். வந்தவுடனே விருந்து சினிமா நாடகம். ராத்திரி பகலாக அவள் மடியில் வாசம். மற்றபடி அவனைப் பற்றி எதுவுமே தெரியாது. ஒருநாள் அவன் சட்டையைக் கழற்றிப் போட்டபோது அதில் ரத்தக் கறை. எனக்கு நீங்கள் வேண்டும் என்கிறாள் அவள். ‘நான் தான் இருக்கேனே?’ ‘எங்க இருக்கீங்க? எனக்குத் தெரியலீங்க. நீங்க யாரு? எனக்குப் புரியலீங்க’ என்கிறாள்.
அவளுக்குப் பதினாலு வயசு இருக்கும்போது ஊரில் ஒரு டெண்ட் கொட்டகை போட்டு சர்க்கஸ் வந்தது. அதில் ஒருவன் ஐநூறு கிலோ இரும்புத் தட்டுகளை அடுக்கி இருபுறமுமாக மாட்டி குறுக்குக் கம்பியின் மூலம் பளு தூக்கினான். எல்லோரும் அவன் உடம்பைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். கரளை கரளையான சதை சொன்னபடி கேட்டது. பலகை பலகையாக மாரும், முதுகும் சதையாலேயே இரும்புச் சிலை போல் அமைந்திருந்தது. அந்த சர்க்கஸ்காரனைப் போல் இருந்தான் ரெங்கராஜன். அவன் சாப்பாடு என்ன தெரியுமா? எட்டு பத்து கோழி, இருபது முப்பது முட்டை, ஒரு படி பருத்திப் பால். ஆனால் அவளுக்குத் தெரிந்தது அவனுடைய உடம்பு மட்டும்தான். ரெங்கராஜன் என்றால் அந்த உடம்பு மட்டும்தானா?
இருவரும் ஒரு புதிய வீட்டுக்குப் போகிறார்கள். அன்றைய தினம் அவள் அவனைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல் விடப் போவதில்லை என்கிறாள். சொல்கிறான். அவன் ஒரு அரசியல் ரௌடி. போலீஸில் பதினேழு கொலை கேஸில் அவன் பெயர் இருக்கிறது. திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஒரு பெண்ணைப் பார்க்கப் போகிறான். அவள் ஓடிப் போய் கிணற்றில் குதித்து விட்டாள். அவனா கொலை செய்கிறான்? அவனைக் கொலை செய்ய வைக்கிறார்கள். அவன் ஒரு பிணம். மரணத்தைச் சுமந்து கொண்டே நடமாடுபவன். இதெல்லாம் தப்பு என்று தெரிவதற்குள்ளேயே கொலை செய்ய ஆரம்பித்து விட்டவன். முதல் கொலை செய்தபோது அவன் வயது எட்டு. செத்தது ஒரு போலீஸ்காரன். தப்பு என்று ஒப்புக்கொண்டு நடுங்கினால் அவனால் கொலை செய்ய முடியாது. அவனைக் கொலை செய்தால்தான் அவனுக்கு இந்த ரத்த வாழ்விலிருந்து விடுதலை!
கேட்டு விட்டு சகுந்தலா அழுதாள். விடாமல் அழுது கொண்டேயிருந்தாள். அவளுக்கு அவன் ஆறுதல் சொல்ல முடியாது. தஞ்சாவூர் வரதராஜ பெருமாள் கோவில் பட்டர் ஒருவரின் பிராமண சந்தானமாக அவன் பிறந்ததை அவளுக்குச் சொல்ல முடியாது. ரெண்டு பெண்டாட்டிக்காரனான பட்டருக்கு மூன்றாவது பெண்டாட்டியாக முத்தோஜியப்பா சந்தில் குடியிருந்த மராட்டிய டான்ஸ்காரி ராணுபாய் வீட்டுக்கு ஏன் போகிறார் என்று தெரியாமல் அப்பாவின் கையை ஆத்திரத்தில் கடித்து விட்ட காரணத்துக்காக கோவில் மடப்பள்ளியில் காய்ந்து கொண்டிருந்த வடைச்சட்டி எண்ணெயில் அவன் கைகளைப் பிடித்து முக்கி விட்ட தகப்பனார் ரங்காச்சாரியின் கொலை பற்றி அவளிடம் சொல்ல முடியாது. கொட்டு கொட்டென்று கொட்டிய மழையில் அம்மா சாகக் கிடந்தபோது ரெண்டாவது பெண்டாட்டியும், மூணாவது பெண்டாட்டியும் வீட்டில் இருந்த வெண்கலப் பானையிலிருந்து பலகை வரை சட்டிப் பானை வரை மழையில் நனைந்து கொண்டு ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு வீட்டில் உள்ள குழந்தைகள் அலற அவரவர் கைக்குக் கிடைத்ததையெல்லாம் எடுத்துக் கொண்டு போனபோது அம்மா வாயைப் பிளந்து கொண்டு பரலோகம் போயிருந்தாள் என்பதை எல்லோருமாகச் சேர்ந்து அவனைக் கொன்ற கொலையாக சகுந்தலாவிடம் கூறிப் புரிய வைக்க முடியுமா?
ஒருநாள் பட்டினி இருநாள் பட்டினி என்றால் எல்லோருக்கும் விளங்கும். தஞ்சாவூரில் மழைக்காலம் என்றால் அந்தக் காலத்தில் இருபத்தியெட்டு நாட்கள் தொடர்ந்து அடைமழை பொழியும். ஊர் முழுவதும் வெள்ளக்காடாகும். வீட்டில் ஒரு மணி அரிசி இருக்காது. தொடர்ந்து பெய்த மழையில் ஈரம் பூத்த தரையில் வெறும் உயிரோடு குழந்தைகளை வைத்துக்கொண்டு அந்த ஐயங்கார் பெண்மணி – அதுதான் அவன் தாயார் லோகாம்பாள் – கொல்லையில் இருந்து மூங்கில் குருத்து ஒன்றை அறுத்து வேக வைத்துக் குழந்தைகளுக்குக் கொடுத்து தானும் தின்று வயிற்று வலியால் துடித்துக் கொண்டிருந்தாள். அம்மா கூப்பிட்டும் அவன் மூங்கில் குருத்து சாப்பிடப் போகவில்லை. சாப்பிட்டால் பசி தீயாய் வயிற்றுக்குள் கொடியோடி படரும் நெருப்பில் பொசுங்க வேண்டும். அதை விடப் பட்டினி கிடக்கலாம்.
வீடு முழுவதும் ஒழுகுகிறது. எங்கு பார்த்தாலும் ஜலம். பசி வேகம் காதைத் துளைக்கிறது. பசி வயிற்றில் எரிப்பதைத்தான் சகுந்தலா கேள்விப்பட்டிருப்பாள். பசி காதைக் குடைவது, பசி நெஞ்சில் அதிர்வது, கடைசியாக உயிரைக் குடிப்பது எதையும் சகுந்தலா கேட்டுக் கூட தெரிந்திருக்க மாட்டாள். இருபத்தி எட்டாவது நாள். மழை நிற்கவில்லை. தொண்ணூறு வயது தாத்தா திண்ணையில் மல்லாந்து விட்டார். வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் குழந்தைகள் கைகால்களை அசைக்க முடியாமல் செத்துக் கிடந்தனர். அப்போதும் தரை எல்லாம் மழை ஓடிக் கிடந்தது. அம்மா லோகாம்பாள் முற்றத்தில் மழையில் விறைத்துக் கிடந்தாள். உயிர் இரவே கூட்டை விட்டுக் கடந்திருந்தது. முதலில் பசி. பின்னர் வயிற்றில் தீ. அதன் பின் காடு எரிவது போல் உடம்பின் ஒன்பது வாசல்களிலும் தீச்சரங்கள் பறக்கும். உடல் வியர்வையில் குளிக்கும். பின்னர் பசித்தீ அடங்கி விடும். காதுகள் இரையும். விம்மென்று ஓங்கார ஓலம் கேட்கும். நெஞ்சுத் துடிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஓசைக்குள் அடங்கும்போது உடம்பின் சத்து முழுவதும் வெளியேறும். உடம்பு உயிரைப் பிரிய முடியாமல் வெட்டி வாங்கும். கொட்டும் மழையில் இந்தப் பட்டினி விடாயை அந்தக் குடும்பம் முழுவதும் இரவு முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக அனுபவித்து பஞ்ச பூதங்களில் கலந்து கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருந்ததை தானும் செத்துக் கொண்டே அனுபவித்த கோரத்தை எப்படி யாரிடம் சொல்ல முடியும். விளங்க வைக்க முடியும். யாரும் ஒத்துக் கொள்ள வேண்டாம். சட்டம் சொல்கிறது. கொல்லாதே. சட்டம் சொல்கிறது. திருடாதே. ஆனால் அவன் வீட்டில் நடந்த கொலைகளை சட்டம் ஏற்றுக் கொள்ளாது. வீடு முழுவதும் எட்டு ஒன்பது பிணங்கள் நாறிக் கொண்டிருக்க அங்கிருந்து ஏனென்று தெரியாமல் படி இறங்கி மழையில் கொலையிலிருந்து தப்பி ஓடினான் ரெங்கராஜன்.  இதெல்லாம் சகுந்தலாவுக்குப் புரியுமா? 
கில்லர் ரெங்கராஜன் ஒரு மந்திரியின் அடியாள். மந்திரி ஒரு பதினாறு வயதுப் பெண்ணைக் காதலித்தார். அவள் கர்ப்பமானதும் விட்டு விட்டார். ஆனால் உயிரோடு விட்டால் அவள் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தை எதிர்க்கட்சிக் கொடியுடன் பிறந்து விட்டால் என்ன செய்வது என்று அவருக்குப் பயம். ஒருநாள் விடியற்காலை நான்கு மணிக்கு ஒரு நட்சத்திர ஓட்டலின் பின்சந்து சாக்கடையில் முராடிக் ஆசிட் எனும் கொடூரமான திராவக மணம் எழும்பியபோது குடித்துக் கொண்டிருந்த சாயாவை வைத்துவிட்டு ஓடிப் போய் பார்த்தபோது அந்தப் பதினாறு வயது உடல் அந்த அடர் ஹைட்ரோக்ளோரிக் அமிலத்தில் சதை சதையாகக் கரைந்து எலும்புகள் உருகி நீராகி சதையும் நிணமும் கொழுப்பும் அமிலத்தில் உள் ஆழ்ந்து போய் அவளது நீண்ட வார் கூந்தல் கூட இனம் காண முடியாமல் அமிலத்தால் தீயுண்டு அவள் வயிற்று சிசுவும் கரைந்து உருத் தெரியாமல் சாக்கடையின் பாசி பிடித்த சுவர்களும் பொசுங்கிப் புகைய ஆவி குமிழியிட்டு ஓடிய பயங்கரம் கில்லர் ரெங்கராஜனைத் திகில் கொள்ள வைத்தது.
இப்படி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். நீங்களே வாசித்துப் பாருங்கள். உலகின் மிகச் சிறந்த சிறுகதைகளை இப்படி அனாயாசமாக எழுதித் தள்ளியிருக்கிறார் தஞ்சை ப்ரகாஷ். 
ப்ரகாஷ் பற்றி எழுதி மாளாது போல் தோன்றுகிறது. அவருடைய பேய்க் கவிதை என்ற சிறுகதை புண்டரீகன், பெருந்திரு என்ற சகோதர சகோதரிக்கு இடையேயான பாலியல் உறவை ஒரு தொன்மக் கதையைப் போல் சொல்லும் ட்ரான்ஸ்கிரெஸிவ் சிறுகதை. அதேபோல் மேபல். 25 பக்கங்களில் எழுதப்பட்ட ஒரு காவியம். ஒரு தந்தைக்கும் மகளுக்குமான உறவைச் சொல்கிறது. திரும்பவும் சமூக ஒழுங்கை மீறும் கதை. பேய்க் கவிதை போல் வெளிப்படையாக அல்லாமல் மிகவும் சூட்சுமமாக, கானல் நீர்த் தோற்றமாக அந்த உறவு எழுதப்பட்டிருக்கிறது.
பொதுவாக தமிழில் விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையை எழுதும் படைப்பாளிகளிடம் ப்ரகாஷின் எழுத்தில் இருக்கும் தீவிரமும் வெறியும் உன்மத்தமும் இருப்பதில்லை. இதைத்தான் ரொலான் பார்த் (Roland Barthes) வாசிப்பு இன்பம் (Pleasure of the Text) என்று சொல்கிறார். ப்ரகாஷின் சிறுகதைகளைப் படிக்கும்போது எனக்கு அந்தோனின் ஆர்த்தோவின் (Antonin Artaud) Theatre of Cruelty என்ற கருத்தாக்கம் ஞாபகத்தில் வந்தது. ப்ரகாஷின் சிறுகதைகளோடு நாம் ஸோஃபாக்ளிஸ், யூரிப்பிடஸ் போன்ற கிரேக்க நாடகாசிரியர்களையும், கார்ஸியா லோர்க்காவின் The House of Barnarda Alba, ஜான் ஜெனேவின் Deathwatch, Maids ஆகிய நாடகங்களையும் இணைத்துப் படிக்கலாம். அத்தகைய வாசிப்பு எப்பேர்ப்பட்ட ஒரு மேதை நம்மோடு வாழ்ந்து நம் மொழியோடு உறவாடியிருக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள உதவும்.  ப்ரகாஷின் புனைவுலகில் பயணிக்கும்போது நான் அடைந்த பெரிய ஆச்சரியம் என்னவென்றால், ஒரு பேட்ஸ்மன் எப்படி மட்டையைப் பிடிக்கும் போதெல்லாம் இரட்டைச் சதம் அடிக்க முடியும் என்பது போன்றதே. ப்ரகாஷ் தான் எழுதிய எல்லாக் கதைகளிலும் இரட்டைச் சதம் அடித்திருக்கிறார். ஒரு படைப்பாளி தன்னுடைய அத்தனை கதைகளையும் சிருஷ்டிகரத்தின் உச்சபட்சமாகப் படைக்க முடியும் என்பது மிக அபூர்வமாக நேரும் அதிசயம். ப்ரகாஷ் அப்படிப்பட்டதோர் அதிசயம்.
கட்டுரை மிகவும் நீண்டு போய் விட்டதால் ப்ரகாஷின் மீனின் சிறகுகள், கள்ளம் ஆகிய நாவல்கள் பற்றி எழுதவில்லை. இப்போது நாம் செய்ய வேண்டிய அவசரமான பணி என்னவென்றால், ப்ரகாஷின் நூல்களைத் தொகுத்து செம்பதிப்பாக வெளியிடுவதுதான். அதோடு அவரை வாசித்து விவாதிக்கவும் வேண்டும்.
நன்றி: ப்ரகாஷின் நூல்களைக் கொடுத்து உதவிய நண்பர்கள் டாக்டர் ஸ்ரீராம், கவிஞர் ஆரா, செல்வகுமார், கீரனூர் ஜாகிர்ராஜா. கயாமத் கதை பற்றி விளக்கம் அளித்த வெரோனிகா.  

Sep 7, 2015

கடன் பொறியில் சிக்க வைக்கும் திட்டமில்லாத செலவுகள்

தமிழ் இந்து நாளிதழில் வாசித்த கட்டுரை  


முன்பெல்லாம் கை நிறைய பணம் கொண்டு சென்றோம், பை நிறைய பொருட்களை வாங்கி வந்தோம் என்று பெரியவர்கள் சொல்லக் கேட்டிருப்போம். இது சும்மா பேச்சு வழக்குக்காக சொல்லப் பட்டதல்ல, அதுதான் உண்மை. ஆனால் இப்போதோ பை நிறைய பணம் கொண்டு சென்றாலும், கையளவு பொருட்களைத்தான் வாங்க முடிகிறது. எந்த விதமான திட்டமும் இல்லாமல் செலவிட நேரும்போது உடனே பர்சில் கை வைத்து பார்க்க வேண்டியிருக்கிறது. வரவுக்கு மீறி செலவு செய்வது நம்மை கடன் பொறியில் சிக்க வைக்கும் என்பதுதான் அனுபவ உண்மை.

இந்த மாதம் வீட்டுச் செலவுக்கு ஒதுக்கிய தொகையைப் போல அடுத்த மாதத்துக்கு ஒதுக்க முடியவில்லை. அடுத்த மாதத்தில் 1,000 ரூபாயாவது கூடுதலாக ஒதுக்கினால்தான் விலைவாசி ஏற்றத்தைச் சமாளிக்க முடியும் என்பதாக இருக்கிறது. மார்க்கெட்டில் இப்போது வெங்காயம் விலையை கேட்டால் உரிக்காமலேயே கண்ணீர் வருகிறது.

ஆண்டுக்கு ஒருமுறைதான் வருமானம் அதிகரிக்கிறது. ஆனால், பொருள்களின் விலையோ நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த நிலைமையை சமாளிக்க ஒவ்வொருவரும் ஒரு வழிமுறைகளை கடைபிடிக்கின்றனர். சிலர் செலவுகளை கட்டுப்படுத்துகின்றனர், சிலர் சேமிப்பை குறைக்கின்றனர், சிலரோ செலவுகளைக் குறைக்காமல் கூடுதல் நேரம் உழைத்து வருமானத்தை அதிகரித்துக் கொள் கின்றனர்.

அதாவது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிகளை நம்மால் தவிர்க்க முடியாது. என்னதான் கட்டுப்படுத் தினாலும் விலைவாசியை இனிமேல் குறைக்கவும் முடியாது. அதனால் விலை ஏற்றத்திற்கு பழகிக்கொள்வதும், அதை சமாளிப்பதற்கான வழி தேடுவதுமே புத்திசாலித்தனமாக இருக்க முடியும். ஆனால் இதற்கு தனியாக திட்டமிட வேண்டாம். கொஞ்சம் முயற்சி இருந்தால் மட்டும்போதும். இதற்கேற்ப வாழ்க்கை தரத்தை திட்டமிட்டுக் கொள்வதும், செலவுகளை அமைத்துக்கொள்ளவும் வேண்டும்.

தவிர்க்க முடியாத அத்தியா வாசிய செலவுகளைக் குறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றாலும், நம்மையும் அறியாமல் அல்லது திட்டமில்லாமல் செய்கின்ற செலவுகளை தவிர்க்கக் கற்றுக்கொள்ள வேண்டும். மருத்துவம், கல்வி, சேமிப்பு போன்றவற்றில் சமரசமில்லாமல், பெட்ரோல் , ஹோட்டல் செலவு போன்ற விஷயங்களில் கறாராக இருந்தால் நமது செலவுகளை கட்டுப்பாடாக வைத்திருக்க முடியும்.

திட்டமிடுவது

கட்டுப்பாடாக செலவு செய்வது என்கிற விஷயத்தில் பலருக்கும் அலட்சியம்தான். முக்கியமாக பலருக்கு வரவு செலவு குறித்து தெளிவான திட்டமே கிடையாது. குடும்ப வருமானத்தில் அவசர செலவுகள், உடனடி தேவைக்குரிய செலவுகள், எதிர்கால திட்டத்திற்குரிய செலவுகள், கல்வி, மருத்துவ செலவுகள் போன்றவற்றை கணக்கிட்டு தெளிவாக ஒதுக்க வேண்டும். மாத சம்பளத்தை மட்டும் கணக்கிலெடுப்பார்கள். பிற சொத்துகள் மூலம் சில்லரையாக வரும் வருமானங்களை கணக்கில் சேர்க்காமல் செலவு செய்து செய்து கொண்டிருப் பார்கள். இதைத் தவிர்க்க வேண்டும்.

சேமிப்பு

எந்த நெருக்கடியிலும் சேமிப்பை விட்டுவிடக்கூடாது. அவசரத்துக்கு இதுதான் உதவும். பத்து வருடத்துக்கு முன்பு சேமிக்கத் தொடங்கியிருந்தால் இன்று அது பெரும் தொகை. இது அவசரகாலத்துக்கு மட்டுமல்ல, எதிர்கால பணவீக்கத்துக்கு ஏற்ப உங்களது செலவுகளை சமாளிப்பதற்கும் உதவும்.

கடன்

நமது வருமானத்தை தாண்டி செலவு செய்யாமல் பார்த்துக் கொள்வது முக்கி யம். மேலதிகமாக செலவு செய்கிறோம் என்றால் கடனுக்கு வழி செய்கிறோம் என்று அர்த்தம். கிடைத்தாலும் நமது வருமானத்தையும் தாண்டி வாங்கு வதை தவிர்க்கலாம். கடனே வாங்கக் கூடாது என்று முடிவெடுங்கள்.

கிரெடிட் கார்டு

அவசரத்துக்கு என்று கிரெடிட் கார்டு பயன்படுத்தத் தொடங்கி இப்போது எதற்கெடுத்தாலும் கிரெடிட் கார்டு நீட்டுவதை வழக்கமாக வைத்திருப்பது செலவுகளை அதிகரிக்கவே செய்யும். ஒரு வருடத்தின் கிரெடிட் கார்டு பயன் பாட்டை கணக்கிலெடுத்து அதற்கு எவ்வளவு வட்டி கட்டியிருக்கிறோம் என்பதைப் பாருங்கள். கிரெடிட் கார்டு கையிலிருப்பது அவசியம் இல்லாத பொருட்களையும் வாங்கத் தூண்டும் என்பதும் ஞாபகத்தில் இருக்கட்டும்.

வாகன பயன்பாடு

தனிநபர் செலவில் கணிசமான தொகை யை சாப்பிடுவது வாகனங்கள்தான். எரிபொருள், பராமரிப்பு என மாதம் ஒரு தொகை வைக்க வேண்டும். அக்கம் பக்கத்து தெருவுக்கு செல்ல வேண்டும் என்றாலும் வாகனத்துக்கு பழகி வருகிறோம். பொதுப் போக்குவரத்துக்கு பழகுவதும், நமது சொந்த வாகனங்களை தேவைக்கு ஏற்ப பயன்படுத்துவதற்கும் பழக வேண்டும்.

ஷாப்பிங்

வீட்டுக்குத் தேவையான பொருட்களை சில்லரையாக வாங்காமல் மொத்தமாக வாங்குவது நல்லது. அதுபோல எந்த பொருளை எவ்வளவு வாங்க வேண்டும் என்பதிலும் தெளிவு வேண்டும்.அடுத்த மாதம்தான் ஒரு பொருளுக்கு பயன் இருக்கிறது என்றால் அதை இப்போதே வாங்கி ஸ்டாக் வைத்துக் கொள்ளக் கூடாது.

தள்ளுபடி

ஷாப்பிங் சலுகைகளை தாராளமாகப் பயன்படுத்தலாம். ஆனால் தள்ளுபடி பயனுள்ளதாக இருக்க வேண்டும். சலுகை விலையில் கிடைக்கிறது என்பதற்காக பல பொருட்களையும் வாங்கிக் குவிப்பதை தவிர்க்க வேண்டும். சில பொருட்களை 3 வாங்கினால் 1 இலவசம் கொடுப்பார்கள். நமக்கு 2 பொருள் இருந்தாலே அதிகம் என்கிற பட்சத்தில் 2 வாங்கினால் மட்டும் போதும். ஷாப்பிங் நேரத்தில் அந்த நேர முடிவுகளில் அதிக கவனமாக இருந்தால் திட்டமில்லாச் செலவுகளைத் தவிர்க்கலாம்.

பொழுதுபோக்கு

நகரத்தில் வசிக்கும் மக்களுக்கு வாரந்தோறும் ஏதேனும் ஒரு இடத்துக்கு குடும்பத்துடன் வெளியே செல்லும் கலாச் சாரம் தவிர்க்க முடியாத அம்சமாக மாறி வருகிறது. இதைத் தவிர்க்க முடியாது என்றாலும், அடிக்கடி செல்வதை குறைத்துக் கொள்ளலாம். கணவன், மனைவி, இரண்டு குழந்தைகள் கொண்ட குடும்பம் ஒரு முறை ஹோட்டல் சென்றால் குறைந்தபட்சம் 1,000 ரூபாயாவது செலவாகிறது.

மின்சாரம்

மின்சாரத்தை செலவு செய்வதிலும் நம்மிடம் அலட்சியம் உள்ளது. இதன் மூலமும் செலவுகள் அதிகரிக்கிறது. குறிப்பாகக் குறைந்த மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும் மின் விளக்குகளை பயன்படுத்தினால் மின்சார செலவுகளை கட்டுப்படுத்தலாம். அவசியம் இருந்தால் மட்டுமே ஏசி பயன்படுத்த வேண்டும். தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தினால் மோட்டார் இயக்குவதற்கான மின்சாரம் சிக்கனமாகும் என்கிற கண்ணோட் டத்திலும் யோசிக்க வேண்டும்.

செல்போன்

பண்டிகை நாட்களில் சகட்டு மேனிக்கு வாழ்த்து குறுஞ்செய்திகளை அனுப்பு வார்கள். வழக்கத்தைவிட அதிகக் கட்டணம் என்றாலும் தெரிந்தே செய்யும் இந்த பழக்கம் தவிர்க்க வேண்டியதில் முக்கியம். எந்த வகையில் செலவு செய்தாலும் நமது தேவையிலிருந்தே எல்லாவற்றையும் அணுகு வேண்டும். இதனால் திட்டமில்லாத செலவுகளை தவிர்க்க முடியும்.

பத்து ரூபாய் பாக்கி வரவேண்டும் என்றால் அதற்கு வேறு பொருளை எடுத்து ரவுண்ட்ஆப் செய்யும் பழக்கம் கூட திட்டமில்லாத செலவுதான். எனவே எந்த இடத்தில் யோசிக்காமல் செலவு செய்கிறோம் என்பதைப் யோசி யுங்கள்.
ஒவ்வொரு செலவையும் நமது தேவையை ஒட்டியே இருப்பதுபோல திட்டமிடுங்கள். திட்டமில்லாத செலவு களை தவிர்ப்பதற்கு அதுவே சிறந்த வழி.