தமிழகத்தில் பருவமழை களை கட்டிவிட்டது. மகிழ்ச்சி. அதே சமயம் பாதிப்புகளுக்கும் குறைவில்லை. தாழ்வான பகுதியில் வீடுகளை வெள்ளம் எப்போது வேண்டுமானாலும் சூழும் நிலை இருக்கிறது. சென்னை மிதக்கிறது. வெள்ளத்தை எதிர்கொள்ள நாம் என்னென்ன விஷயங்களில் தயாராக இருக்க வேண்டும்? என்னென்ன பொருட்களை இருப்பு வைக்க வேண்டும்? வழிகாட்டுகிறார்கள் மதுரை மாவட்ட தீயணைப்பு அலுவலர் சரவணன், திண்டுக்கல் மருத்துவர் ஹர்சவர்த்தினி, இல்லத்தரசி கயல்விழி ஆகியோர்.

உணவு

குறைந்தபட்சம் அரிசி, உப்பு, தண்ணீர் வேண்டும். கேஸ் முன்கூட்டியே வாங்கி வைப்பது நல்லது. பால்பவுடர், காய்கறி, பிரட், பிஸ்கட் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். தண்ணீரைக் கட்டாயம் கொதிக்க வைத்துப் பயன்படுத்துங்கள். தண்ணீரில் பெருஞ்சீரகத்தைச் சேர்த்துக்கொள்வது, ஜீரணத்துக்கு உதவும்.

மருந்துகள்

காய்ச்சல், சளி, இருமல், வயிற்றுப்போக்குக்கான பாரசிட்டமால், செட்ரிசின், காஃப் சிரப், லோப்ரமைட், எலக்ட்ரால் பவுடர், டெரோலாக் பவுடர் போன்றவற்றைக் கட்டாயம் இருப்பு வையுங்கள். நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகளை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, இதயநோயாளிகளுக்கு முதலுதவி மாத்திரைகள் அவசியம்.

பாதுகாப்பு

மின்சாரம் எப்போது வேண்டுமானாலும் காலை வாரலாம் என்பதால், மெழுகுவத்திகளும், தீப்பெட்டிகளும் தேவை. செல்போன்களை எப்போதும் புல் சார்ஜில் வைத்திருங்கள். ஸ்மார்ட் போன்கள் என்றால் பேட்டரி சேவிங் மோடில் போடுவது அவசியம். மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி நிர்வாகத்தின் பேரிடர் மீட்பு அலகின் எண்ணை செல்போனில் சேமித்து வைப்பது நல்லது. வீட்டில் கீறல் விழுந்த சுவர் இருந்தால், தள்ளி இருங்கள். மின்கம்பத்தையோ, அதையொட்டியுள்ள மரங்களையோ தொடுவது ஆபத்து. மின்கம்பி கீழே அறுந்து கிடந்தால், மின்வாரியத்துக் தகவல் தர வேண்டுமே தவிர, அதனைச் சுயமாக அப்புறப்படுத்த முயற்சிக்கக் கூடாது. மின்சாதனங்களை இயக்குவதிலும் கவனம் தேவை.

அவசர உதவி எண்கள்

மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் : 1070
மாவட்டக் கட்டுப்பாட்டு மையம் : 1077
மின்சாரம் : 1912
தீயணைப்புத் துறை : 101
மருத்துவ உதவி : 108

எச்சரிக்கை.. எச்சரிக்கை..

தாழ்வான பகுதிகளில் குடியிருப்பவர்கள், பேட்டரியில் இயங்கும் விளக்குகள், ரேடியோ வைத்திருப்பது நல்லது. மின்தடை நேரத்திலும் அரசின் அறிவிப்புகளைத் தெரிந்துகொள்ள அது உதவும். கயிறு, நீண்ட குச்சிகள், கார் டியூப் போன்றவை உயிர்காக்கும். வெள்ள முன்னறிவிப்புகளை உதாசீனப்படுத்தக் கூடாது. வெள்ளம் செல்கிறபோது குறுக்கே கடக்க முயற்சிப்பது தவறு. அரையடி உயர நீரோட்டம்கூட மனிதர்களைக் கீழே தள்ளி உருட்டிச் சென்றுவிடும். வெள்ளத்தின் ஆழத்தையோ, திசையையோ சரியாகக் கணிக்க முடியாது என்பதால், கயிறு கட்டாமல் அதைக் கடக்க முயற்சிக்கக் கூடாது.