மீண்டும் முருங்கைமரம் ஏறியிருக்கிறது திரைப்பட வரிச்சலுகை பற்றிய சர்ச்சை. ஒரு காலத்தில் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு தரப்பட்டால், அந்தப் படத்தின் டிக்கெட் விலை வழக்கமாக வசூலிக்கப்படும் கட்டணத்தைவிட எவ்வளவு குறைந்திருக்கிறது என்பதை டிக்கெட் கொடுக்கும் திரையரங்க கவுன்டரிலேயே எழுதி வைத்திருப்பார்கள். அன்று வரிவிலக்குக் கொடுக்கப்பட்டாலே அது சிறந்த படமாகத்தான் இருக்கும்.

குழந்தைகளுக்கு ஏற்ற படமென்றால் பள்ளிகள் தங்கள் மாணவர்களைக் கூட்டம் கூட்டமாகத் திரையரங்குக்கு அழைத்துச் சென்று வரிவிலக்கு பெற்ற படத்தைக் காட்டுவார்கள். ஆனால் இன்று நிலைமையே வேறு. திரைப்படங்களுக்குத் தரப்படும் வரிவிலக்கு திரைப்படங்களின் உண்மையான நுகர்வோரான ரசிகர்களுக்குச் சென்று சேர்வதில்லை. வரிச்சலுகையை அனுபவித்துக் கொள்பவர்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் என்றும்.. “ இல்லை... இல்லை.. திரையரங்கு உரிமையாளர்கள்” என்றும் மாறி மாறிக் கைகாட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில்தான் பொதுஜனத்தின் தரப்பிலிருந்து பல பொதுநல வழக்குகள் தொடக்கப்பட்டன.

தீர்க்கமான தீர்ப்பு

இத்தகைய பொதுநல வழக்குகளில் கடந்த சில மாதங்களுக்கு முன் கே.ஜே. சரவணன் என்ற வழக்கறிஞர் தொடுத்த வழக்கு அழுத்தம் திருத்தமாக உயர் நீதிமன்றத்தை ஈர்த்தது. காரணம் தனது சொந்த திரையரங்க அனுபவத்தையே டிக்கெட் ஆதாரங்களுடன் மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் என்பவர் மூலம் வழக்காகத் தொடுத்திருந்தார் சரவணன்.
அதில் ‘யூ’ சான்றிதழ் தரப்பட்டு தமிழக அரசின் வரிச்சலுகையைப் பெற்ற ‘கயல்’ என்ற திரைப்படத்தைக் குடும்பத்துடன் பார்த்ததாகவும் ஆனால், திரையரங்க நிர்வாகம் கேளிக்கை வரியுடன் முழு கட்டணத்தையும் தங்களிடம் வசூலித்துவிட்டதாகவும் கூடுதலாக வசூலித்த தொகையை வட்டியுடன் திருப்பித் தரவேண்டும் என்றும் தனது தரப்பில் கோரியிருந்தார். நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், கடந்த வாரம் அதிரடி தீர்ப்பை உத்தரவாக வழங்கினார் நீதிபதி.

சலுகை முழுவதும் ரசிகர்களுக்கே!

“திரைப்படங்களை மக்களுக்குத் திரையிட்டு காட்டுவது திரையரங்க உரிமையாளர்களின் கடமை. அந்தக் கடமையோடு, வரி விலக்கு சலுகை விதிமுறைகளையும் அவர்கள் அமல்படுத்த வேண்டும். வரிச்சலுகை என்பது உரிமை இல்லை. அது ஒரு மானியம்தான். கேளிக்கை வரிச்சலுகை என்பது திரைப்படத் துறைக்கும், திரையரங்க உரிமையாளர்களின் நலனுக்காக மட்டுமே தவிர, அது ரசிகர்களுக்குக் கிடையாது என்று அரசு தரப்பில் கூறுவதை ஏற்க முடியாது.

கேளிக்கை வரிச்சலுகை என்பது திரைப்படம் என்ற தயாரிப்பின் நுகர்வோரான பார்வையாளர்களுக்கே உரியது. வரிச்சலுகை பெற்ற படங்களைக் காண வரும் பார்வையாளர்களிடம் அதிக வரி வசூலிக்கப்பட்டிருந்தால், அது திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. எனவே, கூடுதலாக வசூலிக்கப்பட்ட 107 ரூபாயை மனுதாரரிடம் திரையரங்க நிர்வாகம் திருப்பிக் கொடுக்க வேண்டும். இதேபோல, கடந்த காலத்தில் பார்வையாளர்களிடம் கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகையை, சம்பந்தப்பட்ட நபர்களிடம் திருப்பிக்கொடுக்க முடியாது.

எனவே, கூடுதலாக வசூலித்த தொகையை தமிழக வணிக வரி மற்றும் பதிவுத்துறை செயலாளரிடம் திரையரங்க உரிமையாளர்கள் ஒப்படைக்க வேண்டும். வரிச்சலுகையின் பலன் முழுமையாக ரசிகர்களுக்குத்தான் சென்றடைய வேண்டும். எனவே, தகுந்த உத்தரவை 4 வாரத்துக்குள் தமிழக தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை செயலாளர், ஆணையர் ஆகியோர் பிறப்பிக்க வேண்டும்” என்று விரிவாக நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

மீண்டும் முருங்கை மரம்

இந்நிலையில், தீபாவளிக்கு வெளியான படங்களில் அஜித் நடித்திருந்த ‘வேதாளம்’ படத்துக்குக் கேளிக்கை வரிவிலக்கு சலுகையை தமிழக அரசு அளித்திருந்தது. நீதிமன்ற உத்தரவுப்படி வரிவிலக்கு போக டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து திரையரங்கு சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வழக்கம்போலவே வரித் தொகையையும் சேர்த்தே சென்னை போன்ற மாநகரங்களில் உள்ள தியேட்டர்களில் முழுமையாகக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாக ரசிகர்கள் தரப்பில் குமுறுகிறார்கள்.

வழக்கமாக நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் வசூலிக்கப்பட்டது மட்டுமல்ல பல திரையரங்குகளில் படம் வெளியாகும் முதல் தினத்தில் சிறப்புக் காட்சிகள் என்ற பெயரில் 300 ரூபாயிலிருந்து 1000 ரூபாய் வரை பிளாட் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாகவும், இது பெரிய கதாநாயகர்களின் படங்களுக்கு தொடர்வதாகவும் சொல்கிறார்கள் ரசிகர்கள். மொத்தத்தில் பழையபடி வரிச்சலுகை வேதாளமாக முருங்கை மரம் ஏறிவிட்டது.