மனிதவளம், வேலைவாய்ப்பு, போக்குவரத்து வசதி, பெருகும் குடியிருப்புகள், விரியும் விஸ்தீரணம் என மாநிலத் தலைநகரத்துக்கான அத்தனை அம்சங்களும் நிறைந்தது நமது சென்னை மாநகரம். வெளியூர்கள், வெளிமாநிலங்கள் என எங்கிருந்து எத்தனை பேர் வந்தாலும் வந்தாரை வாழவைக்கும் தலைநகரமாக தனிச்சிறப்புடன், தனித்துவத்துடன் இன்றளவும் திகழ்கிறது சென்னை.
கோயம்பேடு பகுதியில் போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்த வெள்ளம்.
கோயம்பேடு பகுதியில் போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்த வெள்ளம்.
இவ்வளவு பெருமைகள் வாய்ந்த சென்னை மாநகரம் சமீபத்திய கன மழையைத் தாக்குப்பிடிக்க முடியா மல் மாநரகமாகிப்போனது. சாலை கள், சுரங்கப்பாதைகள், தெருக்கள் மட்டுமல்லாது வீடுகளிலும் புகுந்தது மழைநீர். திரும்பிய பக்கமெல்லாம் வெள்ளம். வாகனங்கள் சென்ற சாலைகளில் படகுகள் மிதந்த காட்சி. வெள்ளத்தின் நடுவே சிக்கிய மக்களை ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்கவேண்டிய சூழல்.

சமூகத்தின் கீழ்தட்டு மக்கள் மட்டு மின்றி, நடுத்தர மக்கள், பணக்கார வர்க்கம் என அனைத்து தரப்பினரை யும் தயவுதாட்சண்யமின்றி வெளியே துரத்தியது வீடுகளில் அடாவடியாகப் புகுந்த வெள்ளம். கட்டமைப்பு வசதி கள் மிகுந்த, மாநிலத் தலைநகரில் ஏன் இந்த நிலை? 375 ஆண்டுகள் பழமையான சென்னையின் இந்த நிலைக்கு காரணம் என்ன? இதை எப்படி மாற்றுவது?

பூகோள அமைப்பின்படி பார்த்தால், தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள், கடல் மட்டத்தைவிட அதிக உயரத்தில் உள்ளன. கடலை ஒட்டிய சென்னை, நாகை, கடலூர் மாவட்டங்கள் கடல் மட்டத்தில் இருந்து குறைந்த உயரத்தில் உள்ளன. சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகள் சராசரியாக 2 முதல் 10 மீட்டர் உயரத்தில் உள்ளன. வெள்ளத்தால் அதிக பாதிப்பு ஏற்படுவதற்கு இதுவும் காரணம் என்று கூறப்படுகிறது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 1,450 ஏரிகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு, சென்னையில் தி.நகர், வள்ளுவர் கோட்டம், நந்தனம் உள்ளிட்ட இடங்களில் 36 ஏரிகள் இருந்துள்ளன. நகரமயமாக்கல் அதிகரிப்பால், இவை அழிந்துவிட்டன. புறநகர் பகுதிகளில் உள்ள ஏரிகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன.
தீவு போல மாறிய சென்னை தாம்பரம் வரதராஜபுரம் பகுதியில் ஹெலிகாப்டர் உதவியுடன் நடந்த மீட்புப் பணி.
தீவு போல மாறிய சென்னை தாம்பரம் வரதராஜபுரம் பகுதியில் ஹெலிகாப்டர் உதவியுடன் நடந்த மீட்புப் பணி.
இதில் சோழவரம், செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஆகிய 4 ஏரிகள்தான் சென்னையின் குடிநீர் ஆதாரங்கள். இவை தவிர, கொரட்டூர், போரூர், வளசர வாக்கம், விருகம்பாக்கம், வேளச் சேரி, அயனம்பாக்கம், ஆதம்பாக்கம், பல்லாவரம், உள்ளகரம், கீழ் கட்டளை, ஜமீன் பல்லாவரம், செம் பாக்கம் ஏரிகள் அந்தந்த இடங் களின் நீர்ப்பிடிப்பு பகுதிகளாக உள்ளன. இவைதான் நீலத்தடி நீர் ஆதாரமாகவும் உள்ளன.

ஆனாலும், தொடர்ந்து நடக்கும் ஏரி ஆக்கிரமிப்புகளும், மழைநீர் வடிகால்கள் அழிக்கப்பட்டதும்தான் சென்னையின் வெள்ள பாதிப்புக்கு காரணம் என்கின்றனர் பொதுப்பணித் துறையினர்.

தாழ்வான பகுதிகளில் சேரும் மழைநீர், கால்வாய்கள் வழியாக குளத்தை அடையும். உபரிநீர் அங்கிருந்து கால்வாய் வழியாக கடலைச் சென்றடையும். பொது வாக நீர்நிலைகளில் பாசனத் துக்காக நீரை வெளியேற்றும் அமைப்புகளும், ஏரி நிரம்பினால் தானாக உபரிநீர் வெளியே றும் ‘கலங்கல்’ என்ற அமைப்பும் இருக்கும். தற்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட் டங்களில் பெரும்பாலான ஏரிகளில் இந்த கலங்கல் இல்லை. மேலும், மழைநீர் வெளியேறும் கால்வாய்கள், கடலுக் குள் செல்லும் முகத்துவாரங்கள் குறுகிவிட்டதாலும் வெள்ளநீர் வடிய தாமதமாகிறது என்கின்றனர் பொதுப்பணித் துறையினர்.

இதுகுறித்து பொதுப்பணித் துறை பாசனப்பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ஏரிகளில் நீர் நிரம்பினால், அதன் அருகே உள்ள நஞ்சை, புஞ்சை நிலங்கள் வழியாக உபரிநீர் வெளியேறும். அந்த நிலங்கள் தற்போது குடியிருப்புகள் ஆகிவிட்டன. சென்னையில் சிஐடி நகர், அண்ணா நகர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், முகப்பேர் போன்ற பகுதிகளில் உள்ள நிலங்களின் மூல ஆவணங்களை ஆய்வு செய்தால் அந்த நிலம் எத்தகையது என்று தெரியவரும்.
சைதாப்பேட்டையில் கரையோர குடியிருப்புகளில் அடையாறு ஆற்றுநீர் புகுந்துள்ளது. | படங்கள்: ம.பிரபு, க.ஸ்ரீபரத், ஜி.கிருஷ்ணசுவாமி
சைதாப்பேட்டையில் கரையோர குடியிருப்புகளில் அடையாறு ஆற்றுநீர் புகுந்துள்ளது
விவசாய நிலங்கள் அனைத்தும் படிப்படியாக கான்கிரீட் கட்டிடங்களாகவும், சிமென்ட், தார்ச் சாலைகளாகவும் மாறிவிட்டன. தொடர்ந்து நீர்நிலைகளும் அழிக்கப்படுவதால், மழைநீர் வெளியேற வழியில்லை. இதனால்தான், மழை வந்தால் சென்னை தத்தளிக்கிறது.

இதற்கு முன்பு 1943, 1976, 2005-ம் ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளத்தை கணக்கிட்டு, பெருநகர முழுமைத் திட்டம் தயாரிக்கப்பட்டது. அந்த திட்டத்தில், மழைநீர் வடிகால் குறித்தும் திட்டமிடப்பட்டது. அதில், வட சென்னைக்கு அளிக்கப்பட்ட திட்டம் கிடப்பில் உள்ளது. அம் பத்தூர், கொரட்டூர், மாதவரம், செம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் கால்வாய்கள் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணிகள், நீதிமன்ற வழக்குகளால் நிற்கின்றன.

தாம்பரம் உள்ளிட்ட பகுதிக ளில் மழைநீர் வடிகால்கள் ஆக்கிரமிக் கப்பட்டதால், சாலைகளில் மழைநீர் தேங்குகிறது. மேலும், சென்னையில் அமைக்கப்படும் பல்வேறு மழை நீர் கால்வாய்கள் முறையாக இணைக் கப்படாமல் உள்ளன.

இப்போதுள்ள ஏரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் அடிப்படையில், 11 டிஎம்சி நீரை மட்டுமே சேமிக்க முடியும். உபரிநீர்கூட கால்வாய்கள் மூலமாக மட்டுமே கடலில் கலக்க வேண்டும். தற்போது கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. கால்வாய்கள் மூலம் கடலுக்குள் தண்ணீரை கொண்டு செல்லும் அடையாறு, கூவம், கொசஸ்தலை போன்ற ஆறுகளும் சுருங்கிவிட்டன. இவற்றை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர, அதிக அளவில் நிலம் கையகப்படுத்த வேண்டியிருக்கும். அப்படி செய்தால் மட்டுமே குடியிருப்புகளில் தண்ணீர் தேங்குவதை தடுக்க முடியும்!

கால்வாய்கள் பராமரிப்பு அவசியம்

- வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்

செயற்கைக்கோள் தகவல்களைக் கொண்டு சென்னையில் பாதாள சாக்கடைகள், சாலைகள், கட்டிடங்கள், மழைநீர் தேங்கும் பகுதிகள் குறித்து எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு செய்து விரிவான அறிக்கையை 4 ஆண்டுகளுக்கு முன்பு அரசிடம் அளித்தது. கோடையில் தண்ணீர் பற்றாக்குறையும், மழைக்காலத்தில் வெள்ளமும் சென்னையில் வழக்கமாகிவிட்டது.

இதை தவிர்க்க மழைநீர், கழிவுநீர் கால்வாய்களை ஆண்டுதோறும் தூர்வாரி பராமரிக்க வேண்டும். அரசின் மழைநீர் சேமிப்பு திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும். மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து வரைபடம் தயாரிப்பது, எதிர்கால தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவும்.

வேளச்சேரி பாதிக்கப்பட்டது ஏன்?

அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலை உணர்வு மைய இயக்குநர் பேராசிரியர் எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன்

சென்னை ஏற்றத்தாழ்வு இல்லாத சமதளப் பகுதி. எனவே, மழைநீர் மண்ணில் ஊறுவதற்கும், பூமிக்குள் இறங்கவும் போதிய நேரம் இருக்காது. மேலும், மழைநீர் சென்றடைய நகருக்குள் ஏரிகள் எதுவும் இல்லை. புறநகர் பகுதிகளிலும் நீர்நிலைப் பகுதிகள் அதிகம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

வேளச்சேரி, தரமணி பகுதியில் பாதாள மழைநீர் வடிகால் வசதி அமைக்கும் வகையில் விஜயநகர் தொடங்கி பக்கிங்ஹாம் கால்வாய் வரை மேற்கொள்ளப் பட்ட பணிகள் முடிக்கப்படவில்லை. அதனால்தான் வேளச்சேரி பகுதியில் இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழைக்காலம் தொடங்கும் முன்பாகவே மழைநீர் வடிகால் வசதிகள் சிறப்பாக ஏற்படுத்தப்பட வேண்டும். மழைநீர் செல்லும் பகுதிகளை சுத்தப்படுத்தி, சரிசெய்ய வேண்டும். ஏரிகள், நீர்ப்பாதைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மும்பையில் இதுபோன்ற பணிகளை ஜூன் மாதமே தொடங்கிவிடுகின்றனர். மழைநீர் வடிகால்களை சரிசெய்தாலே சென்னையில் மழைவெள்ள பிரச்சினை சரியாகிவிடும்.

மக்கள் செய்யவேண்டியது என்ன?

- அண்ணா பல்கலைக்கழகத்தின் பேரிடர் தணிப்பு மற்றும் மேலாண்மை மைய இயக்குநர் பேராசிரியர் டி.திருமலைவாசன்

சென்னையில் 500 சதுர கி.மீ. சுற்றளவில் எந்தெந்த பகுதி எவ்வளவு உயரத்தில் இருக்கிறது என்று ஆகாய மார்க்கத்தில் லேசர் ஸ்கேனர் உதவியுடன் 2009-ல் தமிழக பொதுப்பணித் துறை, மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறைகளின் நிதி உதவியுடன் கணக்கு எடுத்தோம். மழைநீர் வடிகால் வசதி பணிக்காக அந்த கணக்கெடுப்பு தகவல் பொதுப்பணித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. மழைநீர் வடிகால் வசதி திட்டத்துக்காக இந்த விவரங்களை மாநகராட்சியும் பயன்படுத்திக்கொண்டது.

சென்னையின் மழை வெள்ளப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் மக்களின் ஒத்துழைப்பு அவசியம். மழைநீர் வடிகால்களில் குப்பைகளை போடக்கூடாது. அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகளைச் சுற்றி சிறிதுகூட இடம் விடாமல் சிமென்ட் தளம் போடுவதை தவிர்க்க வேண்டும். பூமிக்குள் மழைநீர் இறங்க கொஞ்சமாவது மண் பரப்பை விட்டுவைக்க வேண்டும்.

காலி இடங்களில் நீர்த்தேக்கம்

- பொதுப்பணித் துறை முன்னாள் சிறப்பு தலைமை பொறியாளர் அ.வீரப்பன்

மழைநீர் தேங்காமல் ஓடும் வகையில் வாட்டத்துடன் வடிகால்கள் கட்டப்படாததும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்த 36 ஏரிகள், 100 குளங்களை ஆக்கிரமித்து தூர்த்ததும்தான் இப்போதைய பிரச்சினைக்கு முக்கிய காரணம்.

மழைநீர் வடிகால்களை குழாய்கள் மூலம் இணைத்து, அருகே உள்ள கால்வாய்கள் வழியாக கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய், ஓட்டேரி நல்லா ஆகியவற்றில் இணைத்து முறையாக பராமரிக்கலாம். திருவொற்றியூர், வில்லிவாக்கம், கொளத்தூர், திருநின்றவூர், தாம்பரம், முடிச்சூர், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, பெருங்குடி, வேளச்சேரி போன்ற பகுதிகளில் காலியாக உள்ள நிலங்களில் 100 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சுரங்க நீர்த்தேக்கம் அமைக்கலாம்.

இதற்கு செலவு அதிகம் ஆகும் என்றாலும்கூட, மழை வெள்ளம், தண்ணீர் தட்டுப்பாடு என்ற இரண்டு பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு கிடைக்கும்.

தொற்றுநோய் பரவும் அபாயம்

சென்னையில் கழிவுநீர் வெளியேறும் பாதாள சாக்கடையும், மழைநீர் வெளியேறும் வடிகால்களும் தனித்தனியே அமைக்கப்படுகின்றன. ஆனால், பெரும்பாலான இடங்களில் பாதாள சாக்கடைகளே மழைநீர் வடிகாலாக உள்ளன. இதனால் மழைநீருடன் பிளாஸ்டிக் பை, குப்பைகள் போன்ற திடக்கழிவுகளும் பாதாளச் சாக்கடையில் அடைத்துக் கொள்கின்றன.

கழிவுநீர் வெளியேற வழியின்றி, பொங்கி வெளியே ஆறாக பெருக்கெடுத்து, மழைநீருடன் கலந்து ஓடுகிறது. பல இடங்களில் 2 வாரங்களாக கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

திட்டமிடல் இல்லாமல் உருவான புறநகர் பகுதிகள்

சென்னையின் புறநகர் பகுதிகளாக உருவெடுத்துள்ள பல பகுதிகள் நீர்நிலைகளாக இருந்தவை. அவற்றை அழித்தே பல நகர்கள் உரு வாக்கப்பட்டிருக்கின்றன. இதில் வெகுவாக விதிமுறைகள் மீறப் பட்டுள்ளன. 1,189 சதுர கி.மீ. பரப்புள்ள சென்னை பெருநகரில் புதிய குடியிருப்பு பகுதிகளை உருவாக்க சிஎம்டிஏ (சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்) அங்கீகாரம் அவசியம்.

வீட்டுமனைகள் உரு வாக்கும்போதே விரிவாக ஆய்வு செய்து கழிவுநீர், மழைநீர் வெளியேறும் வசதி, குடிநீர், சாலைகள், இணைப்பு சாலைகளை ஏற்படுத்த வேண்டும். பூங்கா, விளை யாட்டு மைதானம், பள்ளி, பொது பயன்பாட்டுக்கான இடங்கள் ஒதுக் கப்பட வேண்டும். ஆனால், இவை எதையும் செய்யாமல் மனைகளை விற்கின்றனர். எப்படியாவது இடம் வாங்கினால் போதும் என்ற எண் ணத்தில், மக்களும் அங்கு இடம் வாங்கி வீடுகளை கட்டிக்கொள்கின்றனர்.

கட்டமைப்பு வசதிகள் இல்லாத இடத்தில் உருவாகும் குடி யிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்துவிடுகிறது என்கிறார் ஓய்வு பெற்ற சிஎம்டிஏ அதிகாரி ஒருவர்.

மிகவும் திட்டமிட்டு 40 ஆண்டு களுக்கு முன்பு உருவாக்கப்பட்ட சென்னை அண்ணா நகர், அகலமான சாலைகளுடன் அமைக்கப்பட்டுள் ளது. ஆனால், கடந்த 20 ஆண்டுக ளில் உருவாக்கப்பட்ட புறநகர் பகுதிக ளில் எந்த திட்டமிடலும் இல்லை. இதனால், பல தெருக்கள் முட்டு சந்தாக முடிகின்றன. இதனால் பாதாள சாக்கடை, குடிநீர் குழாய்கள் அமைப்பது மாநகராட்சிக்கு பெரும் சவாலாக உள்ளது.

வட சென்னையில் தற்போது வெள்ளத்தில் மிதக்கும் கொளத்தூர், விநாயகபுரம் போன்ற பகுதிகளில் எந்த திட்டமிடலும் இல்லாமல் குறுகிய சாலைகளுடன் பிரம்மாண்டமான புதிய குடியிருப்புகள் உருவாக்கப் பட்டுள்ளன. உள்ளகரம், புழுதிவாக் கம், மடிப்பாக்கம், வேளச்சேரி, தரமணி, மேற்கு தாம்பரம் என தற்போது வெள்ளநீர் சூழ்ந்துள்ள பல பகுதிகளிலும் இதே நிலைதான் உள்ளது.

சிஎம்டிஏ பரிந்துரை

சிஎம்டிஏ வெளியிட்ட சென்னை பெருநகர பகுதிக்கான 2-ம் முழுமைத் திட்டம் 2026-ல் வெள்ள அபாயத்தை தடுப்பதற்கான பல்வேறு பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில..
# நிவாரணப் பணிகளில் மட்டுமின்றி, பாதிப்புகளை தடுப்பது, குறைப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
# பேரிடர் காலங்களில் அரசோடு மக்களும் இணைந்து செயல்படும் கலாச்சாரத்தை உருவாக்க விழிப்புணர்வு முகாம்கள் நடத்த வேண்டும்.
# ஊர்க்காவல் படை போல பேரிடர் மேலாண்மைக்காக பயிற்சி பெற்ற தன்னார்வ தொண்டர் படையை உருவாக்க வேண்டும்.
# உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்களுக்கு பேரிடர் குறித்து பயிற்சி அளிக்க வேண்டும்.

நிலத்தடி நீரை பாதுகாக்கும் முறைகள்

- சென்னையில் உள்ள மத்திய நிலத்தடி நீர் வாரியத் தலைவர் ஏ.சுப்புராஜ், விஞ்ஞானிகள் டாக்டர் பி.உமாபதி, கே.சிவசண்முகநாதன்
நகர்ப்புறங்களில் வீடு, அலுவலகம், சாலை ஓரம், பொது இடங்கள், மழைநீர் தேங்கும் இடங்களில் செறிவூட்டுக் குழி, செறிவூட்டும் வாய்க்கால், குழாய் கிணறுகள், நீரூட்டும் கிணறுகள் போன்றவற்றை அமைக்கலாம். இதன்மூலம், நிலத்தடி நீரை செயற்கை முறையில் செறிவூட்டலாம். கிராமப்புறங்களில் சிற்றோடை தடுப்பு, கரைகள் மற்றும் வரப்புகள், கூழாங்கற்கள் தடுப்பணை மற்றும் கல்லணைகள், கசிவுநீர் குட்டைகள், தடுப்பணைகள், நீரூட்டும் சுரங்கங்கள், நீரூட்டும் கிணறு, நிலத்தடி தடுப்புச் சுவர் ஆகியவை மூலம் மழைநீரை சேமிக்கலாம். ஆண்டுதோறும் இவற்றை முறையாக பராமரிப்பது மிகவும் முக்கியம்.