இணையத்தில் அவ்வப்போது மிகவும் சுவார‌ஸ்யமான இணையதளம் அறிமுகமாகி கவனத்தை ஈர்க்கும். இந்த வகை தளங்களைப் பயனுள்ளவை என்று சொல்ல முடியாது. ஆனால், கொஞ்சம் வித்தியாசமான அல்லது முற்றிலும் மாறுபட்ட கருத்தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும் என்பதால் இவற்றைப் புறந்தள்ளிவிடவும் முடியாது.

இப்படி சமீபத்தில் அறிமுகமாகி இருக்கும் இணையதளமான ‘டிவின்ஸ்ட்ரேஞ்சர்ஸ்.நெட்' உங்களைப் போலவே தோற்றம் கொண்ட ஒருவரைக் கண்டுபிடித்துக் காட்ட முற்படுகிறது.

இதற்கு முதலில் நீங்கள் உங்கள் ஒளிப்படத்தை இந்தத் தளத்தில் பதிவேற்றி, உங்கள் முக அம்சங்களையும் குறிப்பிட வேண்டும். உடனே இந்தத் தளம் ஏற்கெனவே சமர்ப்பிக்கப்பட்ட ஒளிப்படங்கள் மற்றும் அவற்றின் முக அம்சங்களில் இருந்து உங்களைப் போலவே ஒருவர் இருந்தால் அடையாளம் காட்டுகிறது. ஆனால் அத்தகைய நபர் கண்டறியப்படும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டும். இது உடனே கூட நிகழலாம். ஏன், சில நேரங்களில் வேறு ஒருவர் தேடலில் அவரைப்போலவே நீங்கள் இருப்பதாக அடையாளாம் காட்டப்படலாம். அவ்வாறு நிகழ்ந்தால் சுவாரஸ்யமாகத்தான் இருக்கும்.

உங்களைப்போல தோற்ற ஒற்றுமை கொண்டவரைக் கண்டுகொள்வதுடன் அவர்களுடன் தொடர்புகொண்டு பேசவும் செய்யலாம். ஏற்கும் அல்லது நிராகரிக்கும் உரிமை அவருக்கு உண்டு. உங்களுக்கும் உண்டு.

இணையத்தின் மீதான சுவாரஸ்யத்தைத் தக்க வைத்துக்கொள்ள இந்த வகையான தளங்கள்தான் உதவுகின்றன!
இணைய முகவரி: http://twinstrangers.net/