கருத்தறியும் வாக்கெடுப்பின் முடிவுகள்படி, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகியது தெரியும்தானே? ஆனால், பலர் இங்கிலாந்து வெளியேறியதாகவே புரிந்துகொள்கிறார்கள்.

உண்மையில், பிரிட்டன் என்பது இங்கிலாந்து கிடையாது. இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து ஆகிய நான்கு நாடுகள் இணைந்த கூட்டமைப்புதான் பிரிட்டன். யுனைடெட் கிங்டம் என்பதை யு.கே. என்று சுருக்கிச் சொல்வார்கள். அதுவும் பிரிட்டனைத்தான் குறிக்கும்; இங்கிலாந்தை அல்ல. இதன் விரிவாக்கம், ‘யுனைடெட் கிங்டம் ஆஃப் கிரேட் பிரிட்டன் அண்டு நார்தர்ன் அயர்லாந்து’ என்பது.

நான்கு நாடுகளின் கூட்டமைப்புதான் பிரிட்டன். அதில் அங்கம் வகிக்கிற ஒவ்வொரு நாட்டுக்கும் தனியான தன்னாளுகை, தனியான தலைநகர், தனியான அரசாங்கம் இருக்கிறது.

ஸ்காட்லாந்தின் தலைநகர் எடின்பரோ. இந்த நாடே ஒரு தீவுதான் என்றாலும், சுமார் 790 சிறு தீவுகளையும் உள்ளடக்கியிருக்கிறது ஸ்காட்லாந்து. 1707-ல் இது பிரிட்டனின் அங்கமானது.

வேல்ஸ் நாட்டின் தலைநகர் கர்டிப். 13-ம் நூற்றாண்டில் இங்கிலாந்து அரசர் முதலாம் எட்வர்டு இந்த நாட்டைப் போரில் வென்று இங்கிலாந்துடன் இணைத்தார். பின்பு, சுதந்திரம் பெற்று தனி நாடாகிவிட்டது என்றாலும், 1536- ல் பிரிட்டன் எனும் கூட்டமைப்புக்குள் வந்துவிட்டது வேல்ஸ்.

சிலர் அயர்லாந்தும் பிரிட்டனின் ஓர் அங்கம் என்று கருதுகிறார்கள். அப்படியில்லை. அது தனி நாடாகவே உள்ளது. இப்போதும்கூட அது ஐரோப்பிய ஒன்றியத்திலேயே நீடிக்கிறது. 1801-ல் ஒட்டுமொத்த அயர்லாந்தும் யு.கே.வின் அங்கமாக இருந்தது. 1922-ல் அது தனியே பிரிந்து சென்றுவிட்டது. இருப்பினும் அயர்லாந்து தீவின் வடக்கு முனை மட்டும், அதாவது, ஒட்டுமொத்தத் தீவின் ஆறில் ஒரு பங்காக உள்ள வடக்கு அயர்லாந்து மட்டும், தனி நாடு அந்தஸ்துடன் பிரிட்டனுடன் சேர்ந்துகொண்டது. இதன் தலைநகர் பெல்ஃபாஸ்ட்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறிய விஷயத்தில் இங்கிலாந்து மக்கள் அளவுக்கு ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து மக்கள் ஆர்வம் காட்டவில்லை. அதிருப்தியில் உள்ள அவர்கள், பிரிட்டனில் இருந்து விலகுவது குறித்துப் பேசுகிறார்கள். ஆனால், இப்போதைக்கு அவ்வாறு நடைபெறுவதற்கான சாத்தியங்கள் குறைவு என்கிறார்கள்.