விண்வெளி ஆராய்ச்சி என்றாலே ராகேஷ் சர்மா, கல்பனா சாவ்லா மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகிய விண்வெளி வீரர்கள்தான் நமக்கு ஞாபகத்துக்கு வருவார்கள். ஆனால், வானியல் துறை எனப்படும் விண்வெளி தொடர்பான துறை பல பிரிவுகளையும் பணிகளையும் கொண்டது. ஒரு விண்வெளி ஆராய்ச்சிப் பிரிவில் விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் என்று பல வேலைப் பிரிவுகளும் வாய்ப்புகளும் உள்ளன.

நமது பூமியைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள விண்வெளி ஆராய்ச்சித் தொழில்நுட்பங்கள் உதவி செய்கின்றன. அப்போலோ மூன் ப்ரோக்ராம் திட்டத்தின் அடிப்படையில் மனிதர்கள் முதலில் நிலவில் இறங்கியபோதுதான், பூமியின் முதல் ஒளிப்படங்கள் எடுக்கப்பட்டன. பூமி மட்டுமின்றி, நமது பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது என்பதை ஆராய விண்வெளி ஆராய்ச்சிகள் அவசியம்.

மேலிருந்து பூமியை நிர்வகிக்கிறோம்

பூமியிலிருந்து நாம் அனுப்பும் செயற்கைக் கோள்கள், தொலைக்காட்சி, வானொலி மற்றும் தொலைபேசி சமிக்ஞைகளைக் கடத்துவதற்கு உதவுகின்றன. புவிநிலையறி அமைப்பு (Global Positioning System) பூமியில் செல்லும் கார்களுக்கும் வானில் பறக்கும் விமானங்களுக்கும் வழிகாட்டுகின்றன. பூமியை ஒட்டுமொத்தமாக நெருக்கமாக பார்த்து செயற்கைக் கோள்கள் அனுப்பும் ஒளிப்படங்கள் மூலம் பூமியை நிர்வகிப்பது எளிமையாக உள்ளது. பூமியிலுள்ள சமுத்திரங்கள், மழைக்காடுகள், பாலைவனங்கள், பனித்திட்டுகள், பருவநிலை மற்றும் நகரங்களைப் பார்வையிட முடிகிறது. கார்களிலிருந்தும், தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளிலிருந்து வெளிப்படும் புகையால் சுற்றுச்சூழலும் ஓசோன் அடுக்கும் மாசுபடுவதைச் செயற்கைக் கோள் படங்களின் உதவியுடன் தெரிந்துகொண்டு மாசுபாட்டைக் குறைக்கும் வழிகளைத் திட்டமிடவும் சாத்தியமாகிறது.

புதுப்பிக்கத்தக்க மின் ஆற்றல் முன்னோடி

விண்வெளித் துறைதான் புதுப்பித்தக்க மின்னாற்றலை முன்னோடியாகப் பயன்படுத்திய துறை. விண்வெளி ஆராய்ச்சித் துறையைச் சேர்ந்த பொறியாளர்கள்தான் செயற்கைக் கோள்களைச் செயல்படுத்துவதற்கு சூரிய மின்கலங்களை முதன்முதலில் பயன்படுத்தினார்கள். ஒரு செயற்கைக் கோள் பயன்படுத்தும் ஒவ்வொரு வாட் மின்சாரத்தையும் தயாரிப்பது சூரிய மின்கலங்கள்தான்.

பருவநிலை மாறுதல்கள் மற்றும் பேரிடர்களைக் கண்காணித்தல்

பருவநிலைகள் மாறுவதையும் இயற்கைப் பேரிடர்களையும் கணிப்பதற்கு செயற்கைக் கோள்களே உறுதுணையாக உள்ளன. சமுத்திரங்களின் வெப்பநிலையைக் கணித்து, புயல், சூறாவளி, வெள்ளம் போன்ற பேரிடர்களுக்கு முன்னரே அரசுகளும் மக்களும் தயாராவதற்கும் செயற்கைக் கோள்கள் நமக்கு உதவுகின்றன. புவிவெப்பமடைவதால் பனிப்படிவுகள் உருகுவது, மழைக்காடுகளின் பரப்பு குறைவது போன்றவற்றையும் பற்றித் தெரிந்துகொள்ள செயற்கைக் கோள் தொழில்நுட்பங்களே ஆதாரமாக உள்ளன. விண்வெளி ஆராய்ச்சியில் என்னென்ன வேலைவாய்ப்புகள் உள்ளன என்பதை இப்போது பார்ப்போம்.

விண்வெளி வீரர்

உலகம் முழுக்கவே விண்வெளி வீரர் ஆவதற்கான வாய்ப்புகள் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளன. ஒரு விண்வெளி வீரராக ராக்கெட்டில் பயணிப்பதற்கு அதிகபட்ச ஆரோக்கியத் தகுதியும், கடும் பயிற்சிகளும் அவசியம். அறிவியல் அல்லது கணிதத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் நல்ல அனுபவம் கொண்ட விமான ஓட்டியாகவும் இருத்தல் அவசியம். விண்வெளி வீரர்களில் பெரும்பாலானவர்கள் முதுகலை அல்லது ஆய்வுப்பட்டம் முடித்தவர்களாக இருந்துள்ளனர். உயரம், எடை, கண்பார்வைத் துல்லியம் அவசியம். நாசா போன்ற புகழ்பெற்ற விண்வெளி நிலையங்கள் தங்களுக்கென்று பிரத்யேகமான தகுதி, திறன்களை விண்வெளி வீரர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு வைத்துள்ளன.

விண்வெளிப் பொறியாளர்கள்

விண்வெளி ஆராய்ச்சியை பூமியிலிருந்தே சாத்தியப்படுத்துபவர்கள் விண்வெளிப் பொறியாளர்கள்தான். விண்வெளி செயற்கைக் கோள்கள் மற்றும் விண்வெளி நிலையங்களை வடிவமைப்பதோடு மட்டுமின்றி அவற்றின் பணிகளை ஒழுங்குபடுத்துவதும் இவர்கள்தான். ஏரோஸ்பேஸ் அல்லது ஏரோநாட்டிகல் இன்ஜீனியரிங், ஏவியானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமெண்டேஷன் இன்ஜீனியரிங், கம்ப்யூட்டர் சயன்ஸ் அண்ட் இன்ஜீனியரிங், மெட்டிரீயல்ஸ் இன்ஜீனியரிங், மெக்கானிக்கல் இன்ஜீனியரிங், ரோபாட்டிக்ஸ் இன்ஜீனியரிங், ஸ்பேஸ்க்ராப்ட் இன்ஜீனியரிங், டெலிகம்யூனிகேஷன் இன்ஜீனியரிங் படித்தவர்கள் விண்வெளிப் பொறியாளர்களாகலாம்.

வானியலாளர்கள்

வானியலில் வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவில் பணியாற்ற வாய்ப்புகள் உள்ளன. வேற்றுக் கிரகங்களி லிருந்து கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி மருந்துத் துறை ஆராய்ச்சி யாளர் புதிய மருந்துகளை உருவாக்கலாம்.

வான் இயற்பியலாளர்கள்

விண்மீன்கள், விண்பொருட்கள் மற்றும் விண்வெளியில் இயற்பியல் விதிகளின் செயல்பாடுகளை ஆராய்பவர்கள் வான் இயற்பியலாளர்கள் (Astrophysicists).

வான் உயிரியலாளர்கள்:

வேற்று கிரகங்களில் உயிரினங்கள் உள்ளனவா என்பதை ஆராய்பவர்கள்.

வான் வேதியலாளர்கள்

விண்வெளியில் காணப்படும் வேதிப்பொருட்கள் மற்றும் விண்கற்களின் வேதிக்கலவைகளை ஆராய்பவர்கள்.

மருத்துவர்கள் மற்றும் மருத்துவ விஞ்ஞானிகள்

விண்வெளி வீரரோ, ஒரு பிராணியோ விண்வெளியில் பயணிக்கும்போது அவருக்கு ஏற்படும் உடல் விளைவுகள், அங்கு கொண்டுசெல்லப்படும் தாவரங்களுக்கு ஏற்படும் விளைவுகளை ஆராய்ச்சி செய்பவர்கள்.

நிலவியலாளர்கள்

பூமி, மற்றும் கிரகங்களின் நிலவியல் பண்புகளை ஆராய்பவர்கள்.
வானிலையியல் வல்லுநர்கள்
விண்வெளியாலும் மற்ற கிரகங்களா லும் பூமியின் தாக்கத்தை ஆராய்பவர்கள்.

தொடர்பியல் தொழில்நுட்பம்

தொடர்பியல் தொழில்நுட்ப வியலாளர்கள், கணிப்பொறி வரை வடிவமைப்பாளர்கள் (கம்ப்யூட்டர் எய்டட் டிசைன்), எலக்ட்ரிஷியன்கள், லேசர் டெக்னிஷியன்கள், தர உத்தரவாத நிபுணர்கள், ரேடார் நிபுணர்கள், ரோபாட்டிக் நிபுணர்கள், செயற்கைக் கோள் நிபுணர்கள் விண்வெளித் தொடர்பு தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதில் முதுகெலும்பாகச் செயல்படுகின்றனர்.

இந்தியாவில் வேலைவாய்ப்பு

இந்தியன் ஸ்பேஸ் ரிசர்ச் ஆர்கனைசேஷன்
டிஃபன்ஸ் ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட் ஆர்கனைசேஷன்
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்
நேஷனல் ஏரோநாட்டிக்கல் லபாரட்டரீஸ் லிமிடெட்
ஏரோஸ்பேஸ் இன்டஸ்ட்ரி

இஸ்ரோவில் வேலை

1969-ல் விஞ்ஞானி விக்ரம் சாராபாயால் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) உருவாக்கப்பட்டது. உலகின் மிகப் பெரிய விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் ஆறில் ஒன்றாக இது உள்ளது. 35 வயதுக்குக் கீழ் உள்ள இந்தியக் குடிமக்கள் இஸ்ரோ நடத்தும் எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் சயன்ஸ் அல்லது மெக்கானிக்கல் இன்ஜீனியரிங்கில் பி.இ. அல்லது பி.டெக். முடித்தவர்கள், 65 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்கள் எடுத்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை

ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் இஸ்ரோ சார்பாக எழுத்துத் தேர்வு நடத்தப்படுகிறது. இணையம் வழியாகவே இத்தேர்வு நடக்கும்.

விண்வெளி அறிவியலைக் கற்றுத்தருபவர்கள்

இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் ஸ்பேஸ் சயன்ஸ் அண்ட் டெக்னாலஜி, திருவனந்தபுரம்
பிர்லா இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி, மெஸ்ரா, ராஞ்சி
இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் சயன்ஸ், பெங்களூரு
இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி, மும்பை, சென்னை, காரக்பூர் மற்றும் கான்பூர்

விண்வெளி விஞ்ஞானியாக

இயற்பியல், வேதியியல், கணிதம் இவற்றைப் பாடங்களாக பிளஸ் டூ-வில் எடுத்தவர்கள், இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் ஸ்பேஸ் சயன்ஸ் அண்ட் டெக்னாலஜியில் சேர்ந்து பி.டெக். படிக்கலாம். அங்கே ஏரோஸ்பேஸ் இன்ஜீனியரிங், ஏவியானிக்ஸ், பிசிக்கல் சயன்ஸ் ஆகிய பிரிவுகள் உள்ளன. ஐஐடி ஜேஇஇ (IIT JEE) தேர்வு மூலம் ஐஐஎஸ்டியில் சேரலாம்.