சதுப்பு நிலங்களைக் காப்பாற்ற முடியாத மாநில அரசுகளிடம் இறுதி அதிகாரம் தரப்படுவது ஏன்?

சதுப்பு நிலங்கள் தொடர்பான விதிகளை மாற்றப்போகிறது மத்திய அரசு. ‘சதுப்பு நில (பாதுகாப்பு, நிர்வாகம்) விதிகள் 2010’ என்பதில் மாற்றங்களைச் செய்து, ‘சதுப்பு நில (பாதுகாப்பு, நிர்வாகம்) விதிகள் 2016’ உருவாக்கப்படவிருக்கிறது. இதற்கான யோசனைகளைக் கூறுமாறு மாநில அரசுகளிடம் மத்திய அரசு கேட்டிருக்கிறது. எந்த வகை சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பது, எந்தவிதமான செயல்களைச் சதுப்பு நிலங்களில் அனுமதிப்பது என்ற முடிவுகளை இனி மாநில அரசுகளே எடுத்துக்கொள்ளலாம். இயற்கை வளங்களின் குன்றா வளர்ச்சி, இயற்கைச் சமநிலை சேவை போன்றவற்றுக்குப் பாதிப்பு இல்லாமல், இந்த முடிவுகளை மாநில அரசுகள் மேற்கொள்ள புதிய விதிகள் அனுமதிக்கப்பட இருக்கின்றன.

மேலோட்டமாகப் பார்க்கும்போது, கூட்டாட்சித் தத்துவத்தை அப்படியே பின்பற்றுவதைப் போலவும் அதிகாரப் பரவலாக்கலை வலுப்படுத்துவதைப் போலவும் தோன்றும். ஆனால், சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க உள்ளூர் தேவைகளும் விருப்பங்களும் நல்ல காரணிகளாக இருக்க முடியாது என்பதே யதார்த்தம். மேலும், புதிய சதுப்பு நில விதிகள் தொடர்பான வரைவு வாசகங்களை சந்தேகக் கண்கொண்டு பார்க்காவிட்டாலும், சற்றே கவனமாகப் பார்த்தாக வேண்டும்.

மத்திய சதுப்பு நில ஒழுங்காற்று ஆணையத்தைத் தேவையற்றதாக்குகின்றன இந்த விதிகள். இதுவரை சதுப்பு நிலங்களை அடையாளம் காண்பதும் பாதுகாப்பதும் இந்த ஆணையத்தின் முக்கியக் கடமைகளாக இருந்தன. இரண்டாவதாக, சதுப்பு நிலங்கள், பல்லுயிர்ப் பெருக்கம், பவளப்பாறைகள், அலையாத்திக் காடுகள் மற்றும் சதுப்புநில வளாகங்கள் என்பவற்றை வரையறுக்கும் வாசகங்கள் இடம்பெறவில்லை. இறுதியாக, சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்த பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. மேலும், சதுப்பு நிலங்களுக்குக் கேடு விளைவிக்கும் நடவடிக்கைகள் பற்றி ஏதும் இல்லை.

நீர்நிலைகளுடனான சோதனை

ஆறுகளிலிருந்தும் சதுப்பு நிலங்களிலிருந்தும்தான் தண்ணீர் பெறப்படுகிறது. ஆனால். அதற்கும் அவற்றுக்கும் தொடர்பு இல்லை என்பதைப் போலப் பார்க்கப்படுகிறது. தண்ணீரை ஒரு மூலாதாரமாகவோ பண்டமாகவோதான் பார்க்கிறார்களே தவிர, இயற்கையின் சுற்றுச்சூழலில் அதுவும் ஒரு இன்றியமையாத கண்ணி என்பதைப் பார்க்கத் தவறுகிறார்கள்.

கர்நாடக அரசு எல்லா ஆறுகளிலும் வண்டலைச் சுரண்டி எடுத்து ஆழப்படுத்தியிருக்கிறது. மத்தியப் பிரதேச அரசு கென், பேட்வா என்ற இரு ஆறுகளை இணைக்கும் வேலையில் இறங்கியிருக்கிறது. இதுபோன்ற திட்டங்களை வகுப்பதற்கு முன்னால், இதனால் சுற்றுச்சூழலில் என்னென்ன பாதிப்புகள் வரும் என்று ஆராய வேண்டும். அதை விடுத்து, தண்ணீரை எப்படிப் பயன்படுத்தலாம் என்ற சிந்தனை மட்டுமே மேலோங்கி நிற்பதால், இப்படித் திட்டமிடுகிறார்கள். நதியை ஆழப்படுத்துவதால் அதிகத் தண்ணீர் வேகமாக வழிந்தோடக் கூடும். ஆனால், ஆற்றுப் பாதைக்குக் கீழேயுள்ள நிலத்தடி ஏரிகளுக்குத் தண்ணீர் இறங்குவது குறைந்துவிடும். அதிகமாகச் சுரண்டிவிட்டால் ஆற்றின் நீர்ப்பெருக்குக் காலம் தவிர, ஏனைய காலங்களில் நிலத்தடி நீர்மட்டம் வற்றக்கூடும். இரு ஆறுகளை இணைப்பதால் நீரியல் அமைப்பே மாறும்.

ஆணையத்தின் அவசியம்
சதுப்பு நிலங்கள் யாருக்குச் சொந்தம் என்பது பொதுவான கேள்வி. இதற்கான பதில்தான் சதுப்பு நிலங்களின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கிறது. பிஹார் மாநிலத்தின் கன்வர் ஏரி ஆக்கிரமிப்புகள் காரணமாக அதன் மொத்த அளவில் மூன்றில் ஒரு பங்காக இப்போது சுருங்கிவிட்டது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் தால் ஏரியும் அப்படித்தான் சுருங்கியிருக்கிறது. நகர்மயமாதலில் ஏரிகளுக்குத் தண்ணீரைக் கொண்டுசெல்லும் ஓடைகள் ஆக்கிரமிக்கப்பட்டு, தண்ணீர் வரத்து குன்றிவிடுகிறது. பெங்களூரு நகரில் குடியிருப்புகள் பெருக்கத்தால் பல ஏரிகள் நீர்வரத்து இல்லாமல் வற்றியும், குப்பைகளால் நிரம்பி அழிந்தும்வருகின்றன. டெல்லியிலும் இதேதான் நிலை.

எங்கிருந்தாலும் தண்ணீரை உறிஞ்சி எடுக்கவும் சதுப்பு நிலங்களை ஆக்கிரமிக்கவும் அரசியல்வாதிகள் நெருக்குதல்களை ஏற்படுத்துகின்றனர். இதன் காரணமாகவே மாநில அரசுகளால் சதுப்பு நிலங்களைச் சுற்றியுள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளைக் கையகப்படுத்தவும் பாதுகாக்கப்பட்ட பகுதி என்று அறிவிக்கவும் முடியாமல் அழிகின்றன. சதுப்பு நிலங்களைக் காப்பாற்ற முடியாத நிலையில் மாநில அரசுகள் இருக்கும்போது, அவை தொடர்பாக முடிவெடுக்கும் இறுதி அதிகாரத்தை மாநிலங்களிடம் ஒப்படைக்க முயல்வதேன்?

விடுபட்ட முக்கியமான அம்சம்
சதுப்பு நிலம் என்பது எவையெல்லாம் அடங்கியது என்பதைப் புதிய வரைவு விதிகள் விவரிக்கவே இல்லை. சதுப்பு நிலங்கள் மூலம் அரசுக்கு நேரடியாக வருமானம் ஏதும் இல்லை என்பதால், நிலப் பதிவேடுகளில் அந்த இடங்களைத் தரிசு நிலங்கள் என்று குறிப்பதே வழக்கமாக இருக்கிறது. நாடு முழுக்க 1,88,470 சதுப்பு நிலங்கள் உள்ளன என்று தேசிய சதுப்பு நில வரைபட ஆவணம் தெரிவிக்கிறது. ஆனால், இந்த எண்ணிக்கையே மிகமிகக் குறைவானது. உத்தரப் பிரதேசத்தில் மட்டுமே ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சதுப்பு நிலப் பகுதிகள் உள்ளன. ஆனால், அவற்றில் பெரும்பாலானவற்றை மாநில அரசு அடையாளம் காணவே இல்லை.

ஈரானின் ராம்சர் நகரில் நடந்த சர்வதேச மாநாட்டில் சதுப்பு நிலங்கள் எவை என்பதை அடையாளம் காணும் விதிகள் வகுக்கப்பட்டன. அவை எக்காலத்துக்கும் பொருந்தும் வகையிலானவை. அந்த வகையில் அடையாளம் காணப்படும் சதுப்பு நிலங்கள் சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதையும் குறிப்பிட வேண்டும். ஏராளமான பறவைகள், மீன்கள், இதர பிராணிகள் வாழும் இடங்கள் சதுப்பு நிலங்களாகும். ஏரி அல்லது குளம் என்பது வெறும் நீர்த்தேக்கம் மட்டுமே. சதுப்பு நிலம் என்பது ஏராளமான உயிரினங்கள் வாழும் இடம். அதே வேளையில், மனிதர்களால் உருவாக்கப்படும் ஏரிகள், குளங்கள் போன்றவைகூடப் பல்வேறு உயிரினங்களுக்கு வாழிடமாக அமைவதும் உண்டு. தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஏரிப் பகுதிகள் அப்படிப்பட்டவை. அது பறவைகள் சரணாலயமாகவும் மீன் கூட்டங்கள் உள்ளிட்ட நீர்வாழ்வன வாழுமிடமாகவும் திகழ்கின்றன. எனவே, சுற்றுச்சூழல் ரீதியிலான அடையாளப்படுத்தலை, அரசின் புதிய விதிகள் கைவிட்டு அவை அழிவதற்கே வழிவகுக்கின்றன.

சதுப்பு நிலங்களை அடையாளம் காண்பது, பாதுகாப்பது என்ற செயல்களை உள்ளாட்சி அமைப்புகளிடமும் மாநில அரசுகளிடமும் விடுவது சரியல்ல. அவை சேதமுறாமலும் அழியாமலும் காப்பாற்றப்படுவதற்கான முன்னேற்பாடுகள் சட்ட ரீதியாகவோ அமைப்புரீதியாகவோ இல்லை. அத்துடன் அறிவியல்பூர்வமாக வகுக்கப்பட்ட சட்டத்தின்படியோ வழிகாட்டல்படியோ சதுப்பு நிலம் எதுவென்று வரையறுக்கப்படாத நிலையும் காணப்படுகிறது. நிலத்தடி நீர்மட்டத்தைக் காப்பதற்கான சட்டத்துக்கும் இந்த விதிகளுக்கும் தொடர்பில்லை என்றும், இந்த இரண்டும் வெவ்வேறு விஷயங்கள் என்பதைப் போலவும் பார்க்கப்படுகிறது.

நாட்டின் சில பகுதிகளில் தண்ணீர் பற்றாக் குறையும், இன்னும் சில பகுதிகளில் தண்ணீர் மிகுதியும் காணப்படுகிறது. சதுப்பு நிலங்களை எப்படிப் பயன்படுத்துவது என்பதை அரசியல் தலைமை மட்டும் தீர்மானித்தால் போதாது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்காமல் குன்றா வளர்ச்சியைப் பாதுகாக்க முடியாது. எனவே, நம்முடைய சதுப்பு நில விதிகளானது சதுப்பு நிலங்களை வெறும் திறந்தவெளி நீர்த்தேக்கங்களாக மட்டும் பார்ப்பது போதாது. சதுப்பு நிலங்களை எப்படி அடையாளம் காண்பது, பாதுகாப்பது என்பதும் விதிகளில் கட்டாயம் இடம்பெற வேண்டும்.

- நேஹா சின்ஹா, மும்பை இயற்கை வரலாற்றுச் சங்க உறுப்பினர்.

தமிழில்: சாரி