மான்டேக் சிங் அலுவாலியா பேட்டி

மன்மோகன் சிங் அணியின் முக்கியமான தளகர்த்தர் மான்டேக் சிங் அலுவாலியா. பிரதமர் பதவியில் மன்மோகன் அமர்ந்திருந்த 10 ஆண்டுகள் அவருக்கு உறுதுணையாகவும் ஆலோசகராகவும் மத்திய திட்டக் குழுவின் துணைத் தலைவராகவும் இருந்தவர். உலகமயமாக்கல் பாதையை இந்தியா தேர்ந்தெடுத்து 25 ஆண்டுகள் ஆகும் நிலையில், அவர் அளித்த பிரத்யேகப் பேட்டி இது.

1991 பொருளாதார நெருக்கடி மீட்புக் குழுவில் நீங்கள் முக்கிய உறுப்பினர்; அதற்குப் பிறகு நம்பிக்கை பல மடங்கு பெருகியது. அதே போன்ற நெருக்கடி பிறகு ஏற்படவில்லை; பொருளாதாரக் கொள்கை வகுப்பில் அதே போன்ற துணிச்சலும் நெஞ்சுரமும் அதற்குப் பிறகும் இருந்ததாகக் கூற முடியுமா?

1991 நெருக்கடி மிகவும் தீவிரமானது. உடனடியான, துணிச்சலான பதில் நடவடிக்கை தேவைப்பட்டது. நிதியமைச்சர் மன்மோகன் சிங், பிரதமர் நரசிம்ம ராவின் முழு ஆதரவோடு விரைவாகவும் துணிச்சலாகவும் செயல்பட்டார். நெருக்கடியைச் சமாளிக்க மட்டும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த நெருக்கடியையே வாய்ப்பாகப் பயன்படுத்தி, அமைப்பு முறையையே மாற்றியமைக்கும் அளவுக்குக் கட்டமைப்புகளில் மாறுதல்களைக் கொண்டுவந்தார். 1950-களிலும் 1960-களிலும் அறிமுகப்படுத்தப்பட்ட பொருளாதார நிர்வாக முறைமை அதற்குப் பிந்தைய காலத்துக்குப் பொருந்தாமல் போய்விட்டது. அதைப் பற்றிப் பலமுறை பேசிவிட்டனர். தொழில், வர்த்தகக் கொள்கையைச் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்பதை அனைவருமே ஒப்புக்கொண்டனர். தனியார் துறைக்கும் சந்தைகளுக்கும் முழு வாய்ப்பைத் தர வேண்டும் என்றனர். அரசியல் நிலையில் அவற்றுக்கு ஆதரவில்லை. அதிலும் குறிப்பாக இடதுசாரிகள் ஏற்கவேயில்லை. அதற்குப் பிறகு அத்தகைய துணிச்சலை நான் பார்க்கவேயில்லை. அதே சமயம், அதே போன்ற நெருக்கடியும் ஏற்படவில்லை. மகிழ்ச்சி தரும் அம்சம் என்னவென்றால், நரசிம்ம ராவுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அனைத்துப் பிரதமர்களுமே சீர்திருத்தங்களைத் தொடர்ந்து மேற்கொள்வதுதான். திட்டங்களுக்கு இப்போது புதிய பெயர் சூட்டப்பட்டாலும் அவை பழைய திட்டங்களே. 1955 முதல் 1990 வரையில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி சராசரியாக 4% தான் இருந்தது. இதேபோல், தனிநபர் உற்பத்தி வளர்ச்சி ஆண்டுக்கு 2% என்ற அளவில்தான் வளர்ந்தது. சீர்திருத்தங்களை மேற்கொண்ட பின்னர், சராசரியாக ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7% ஆக அதிகரித்தது. மக்கள்தொகை பெருகும் வேகம் மட்டுப்பட்டது. நபர்வாரி உற்பத்தி வளர்ச்சி 5.5% ஆனது. அதுதான் வித்தியாசம். வருவாய் வேகமாக உயர்ந்தது, யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம், தொழில் தொடங்கலாம் என்ற அளவுக்குப் பொருளாதாரம் திறந்துவிடப்பட்டது. அதற்கு முந்தைய ஆண்டுகளைவிட வறுமை வேகமாகக் குறைந்தது. மக்களுடைய எதிர்பார்ப்புகள் மாறிவிட்டன. வறுமைக்கோட்டுக்கு மேலே தள்ளப்படுவது மட்டும் போதாது என்று ஏழைகள் கருதுகின்றனர். தரமுள்ள வேலை, கல்வி, சுகாதாரம், பாதுகாக்கப்பட்ட குடிநீர் போன்ற சேவைகளைப் பெறுவதில் சம உரிமை வேண்டும் என்கின்றனர். நாம் இத்துறையில் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும்.

சீர்திருத்தங்களுக்கு முன்னால், இந்தியாவின் வளர்ச்சி பிற வளரும் நாடுகளை விடக் குறைவாக இருந்தது. சீர்திருத்தங்களுக்குப் பிறகு வளர்ந்த நாடுகளைவிட அதிகமாகிவிட்டது. சீனம் மட்டுமே விதிவிலக்கு.

மாற்றங்களின் வேகம் தொடர்பான தன்னுடைய கருத்துகள் மாறிவிட்டன என்று மன்மோகன் கூறியிருக்கிறார்; “மெதுவாக மாற வேண்டும் என்றே விரும்பினேன். ஆனால், நாட்டின் சூழலைப் பார்த்தபோது, மெதுவாகச் செய்வதற்கான நேரம் இதுவல்ல என்ற எண்ணம் ஏற்பட்டது. அடிப்படையான மாறுதல்களைச் செய்ய வேண்டும் என்றால், அதற்கான நேரம் இது என்றே முடிவு செய்தேன்” என்கிறார் மன்மோகன். அவரே பிரதமராகப் பதவி வகித்தபோது ‘கொள்கை அமலில் தேக்கநிலை’ வந்துவிட்டதாகப் பின்னர் கூறப்பட்டது. அதைப் பற்றிக் கூறுங்களேன்?

சுற்றுச்சூழல் துறை அனுமதி கிடைக்காததால் தொழில் திட்டங்களின் காத்திருப்பு எண்ணிக்கை உயர்ந்தது, அரசு - தனியார் பங்கேற்பில் (பி.பி.பி.) தீர்க்கப்படாத பூசல்கள், அடித்தளக் கட்டமைப்பில் முதலீடு செய்தவர்களுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடிகள் போன்றவற்றைத்தான் ‘கொள்கை அமலில் தேக்கநிலை’ என்று நீங்கள் கூறுவதாகப் புரிந்துகொள்கிறேன். 12-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் இது நிச்சயம் பிரச்சினையாக இருந்தது. 2012 இறுதியில் திட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்தது. 8% வளர்ச்சி என்பது ஆதரவான அரசின் கொள்கைகளைப் பொறுத்தது என்று கூறியிருந்தோம். கொள்கை வகுப்பதில் தேக்கநிலை ஏற்பட்டால், வளர்ச்சி வேகம் 5% முதல் 5.5% ஆகக் குறைந்து விடும் என்று எச்சரித்தோம். தேக்கநிலைக்கு முக்கியக் காரணம், தீர்வு காண ஒத்துழைக்காமல் அமைச்சகங்கள் செயல்பட்டதுதான். அதற்கும் தீர்வு காண வழிகள் ஆராயப்பட்டன. அதற்குள் பொதுத் தேர்தல் நெருங்கிவிட்டது.

வெகு உறுதியுடன் நாங்கள் செயல்பட்டது பல முறை. அவற்றிலிருந்து சிலவற்றைக் கூறுகிறேன். 2013-ல் ரூபாயின் மாற்று மதிப்பு தொடர்பாக அழுத்தம் தரப்பட்டது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (இறக்குமதி மதிப்பு அதிகம் - ஏற்றுமதி மதிப்பு குறைவு) அதிகமாகி மொத்த உற்பத்தி மதிப்பில் 4% ஆனது. அந்நிய மூலதனமும் நாட்டிலிருந்து வெளியேறத் தொடங்கியது. அதனால், ரூபாயின் மாற்று மதிப்பு வேகமாகச் சரிந்தது. செலாவணி மாற்று மதிப்பை நெகிழ்ச்சியாக வைத்திருந்ததால் பன்னாட்டுச் செலாவணி நிதியத்தின் உதவியைப் பெறாமலேயே நிலை மையைச் சமாளித்தோம். நிதிப் பற்றாக்குறையைக் குறைத்தே தீருவது என்ற உறுதியான முடிவை நிதியமைச்சர் அப்போது எடுத்ததும், கைவசம் அதிகளவில் இருந்த அந்நியச் செலாவணி மதிப்பும் கைகொடுத்தன. அப்போது நாங்கள் தயங்கியிருந்தால் விளைவுகள் வேதனை தந்திருக்கும்.

2007-08 உலக நிதி நெருக்கடிக்குப் பிறகு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அறிவித்த நிதித் தூண்டல் நடவடிக்கைகளால் பொருளாதாரத் துயர் அதிகமானது என்று முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறியிருக்கிறார். அந்த முடிவுகளை எடுத்தவர்களில் நீங்களும் ஒருவர்…

அந்த நிதித் தூண்டல் முடிவுகளின் பின்னால் நான் இருந்தேன் என்று அவர் கூறியிருக்க மாட்டார் என்று நம்புகிறேன். நிதி நிர்வாகம் தொடர்பான முடிவுகளை எடுப்பது நிதியமைச்சகம்தான். நெருக்கடிக்கு எதிராக தொடக்கமாகச் சில ஊக்குவிப்புகளை வழங்கலாம் என்பதை ஆதரித்தேன். அப்போதைக்கு அதுதான் சரியான நடவடிக்கை. ஜி-20 அமைப்பும் அதைத்தான் பரிந்துரைத்தது. 2009-10-ல் வளர்ச்சி வீதத்தைப் பாதுகாத்ததற்குப் பிறகு 2010-ல் அவற்றைத் திரும்பப் பெற்றிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் அடுத்த 3 ஆண்டுகளுக்கு நாம் நல்ல பொருளாதார நிலையில் இருந்திருப்போம் என்று கருதுகிறேன்.

திட்டக் குழு தன்னைப் புதிதாக மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும் என்று அதன் கடைசிக் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருந்தார். திட்டக் குழு தனது செயல்பாடுகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏன் ஏற்பட்டது?

எல்லா நிறுவனங்களுமே தாங்கள் தோற்றுவிக்கப் பட்டதற்கான லட்சியத்தை நிறைவேற்றுகிறோமா என்று அவ்வப்போது பரிசீலித்து வர வேண்டும். புதிய பொருளாதாரச் சூழலில் அரசின் கொள்கைகளுக்கு ஆதரவாகத் திட்டக் குழு போன்ற நிறுவனம் எப்படிச் செயல்பட முடியும் என்று சிந்திக்குமாறு மன்மோகன் எங்களைக் கேட்டுக்கொண்டார். அது தொடர்பாக விரிவான அறிக்கை அளித்த நான், அடுத்து வரும் அரசு அதன் மீது நடவடிக்கை எடுத்துக்கொள்ளட்டும் என்றேன். துறைவாரியான கொள்கைகள், தனியான திட்டங்கள் தொடர்பாக திட்டக் குழு சுதந்திரமாக அதே சமயம் உள்ளுக்குள் மட்டும் பரிமாறிக்கொள்ளும் வகையில் கருத்துகளையும் ஆலோசனைகளையும் வழங்க வேண்டும் என்ற யோசனையையும் தெரிவித்திருந்தேன். திட்டமிடல் என்பது எந்தத் திட்டத்துக்கு, எந்த மாநிலத்துக்கு, எவ்வளவு நிதி ஒதுக்க வேண்டும் என்பதில்தான் தொடர்ந்து அதிக கவனம் செலுத்தியதே தவிர, துறைவாரியான திட்டங்கள் மீது கவனம் செலுத்தவில்லை. அதேபோல, திட்டங்களை அறிவியல்பூர்வமாக மதிப்பிட்டுப் பார்த்ததில்லை. தேவைப்படும்போது நிபுணர்களை வரவழைத்துப் பயன் படுத்திக்கொள்ளும் வசதி திட்டக் குழுவுக்கு இருந்தது.

பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு முந்தைய காலத்தில் பெரும்பாலான திட்டங்களுக்குத் தேவைப்பட்ட நிபுணத்துவ ஆலோசனை, துறைகளுக்கு உள்ளே 80% அளவுக்கும் வெளியே 20% அளவுக்கும் கிடைத்தது. இப்போது அது தலைகீழ் விகிதமாகிவிட்டது. முக்கியமான துறைகளில் இப்போது தனியார் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. வெளியில் இருக்கும் நிபுணத்துவத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் வழிமுறை ஏதும் அரசிடம் இல்லை. ஆலோ சனைக் குழுக்களோ, நிபுணர்க ளின் வழிகாட்டலோ போதாது. அந்தந்தத் திட்டங்களை மேற் பார்வை பார்த்து அமல் செய்யக் கூடிய நிபுணர்கள் நிர்வாகப் பொறுப்பிலே அரசின் சிறப்பு அதிகாரியாகவே இருக்க வேண்டும். ஆண்டுக்கு ரூ.2 கோடியில் அந்தந்த வேலைகளுக்கு நிபுணர்களைச் சிறப்பு அதிகாரியாகப் பணியில் அமர்த்திக்கொள்ள தீர்மானம் கொண்டுவந்தேன். அதை வரவேற்றவர்கள், அப்படி ஒருவரைக் கொண்டுவரும் நடைமுறை சிக்கலானது என்று குறிப்பிட்டனர். ஒரு பத்திரிகை அந்தத் தொகை ரொம்ப அதிகம் என்றுகூடக் குற்றம் சாட்டியிருந்தது!

திட்டக் குழு கலைக்கப்பட்டு, நிதி ஆயோக் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு ஓராண்டு கடந்துவிட்டது. முந்தைய அமைப்பில் இருந்த குறைகளைக் களையும் விதத்தில் இது இருக்கிறதா, இப்போதைய தேவைக்கு ஏற்ப அமைந்துள்ளதா?

நீங்கள் கூறியபடி இது தொடங்கப்பட்டு சில காலம்தான் ஆகிறது. அங்கே என்ன நடக்கிறது என்றே எனக்குத் தெரியாத போது கருத்துச் சொல்ல முடியவில்லை. புதிய அமைப்பு நன்றாகச் செயல்பட வேண்டும் என்று வாழ்த்துகிறேன். தரமான ஆய்வும் கூர்மையான ஆலோசனைகளும் அரசின் கொள்கையைச் சிறப்பாக அமல்படுத்த உதவும். அதுதான் நிதி ஆயோக்கின் வரம்பு என்று கேள்விப்படுகிறேன்.

வளர்ச்சி தொடர்பாக மத்திய புள்ளிவிவரத் துறை அளித்த மதிப்பீடுகள் சரியாகத்தான் கணக்கிடப்பட்டுள் ளனவா என்ற சந்தேகம் இருப்பதாக ப.சிதம்பரம் உட்பட பலர் சந்தேகம் எழுப்பியுள்ளனர். தொழில்துறையில் உண்மையிலேயே மீட்சி ஏற்பட்டிருக்கிறதா என்ற சந்தேகமும் எழுந்திருக்கிறது. தரவுகள் சுட்டிக்காட்டும் அளவுக்கு உண்மையில் அத்துறை மீட்சி பெற்றுவிடவில்லை என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்த விவாதத்தில் உங்களுடைய நிலை என்ன? புள்ளிவிவர மதிப்பீடுகளுக்கும் உண்மை நிலைக்கும் இடையே எப்படித் தொடர்பில்லாமல் போக முடியும்?

சிதம்பரம் மட்டும் இந்த சந்தேகத்தை எழுப்பவில்லை. அரசின் பொருளாதார ஆய்வறிக்கையே வியப்பு தெரிவித்திருக்கிறது. எனவே, தீர்க்கப்படாத சில அம்சங்கள் இதில் இருக்கின்றன. வளர்ச்சி வீதம் தொடர்பான புதிய புள்ளிவிவரங்கள் பழைய குறியீடுகளைவிட அதிகமாக இருக்கின்றன. இதைப் பற்றி விசாரிக்க பிரணாப் சென் என்பவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருப்பதாக அறிகிறேன். மத்தியப் புள்ளிவிவர அலுவலகம் வெகு விரைவில் இதைத் தீர்த்துவைக்க வேண்டும்.

இப்போது சீனத்தில் வளர்ச்சி வேகம் குறைந்திருக்கிறது. சீனத்தைவிட நம்முடைய வளர்ச்சி வேகம் அதிகம். சீனத்தின் புள்ளிவிவரம் உண்மையான வளர்ச்சியை மிதமிஞ்சிக் காட்டுவதாக பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். சீனத்தின் புள்ளிவிவரமே கேள்விக்குள்ளாக்கப்பட்டால் நம்முடையதும் அப்படியே கேள்விக்குள்ளாக்கப்படும். நம்மிடம் உள்ள தகவல்களை எந்த அளவுக்கு வேகமாக பரிமாறிக்கொள்கிறோமோ அந்த அளவுக்கு நல்லது.

இருண்டு காணப்படும் உலகப் பொருளாதாரச் சூழலில் இந்தியா அமைதியான தனித் தீவாகக் காட்சி தருகிறது. பன்னாட்டுச் சூழலின் அதிர்ச்சியால் பாதித்துவிடாமல், உள்நாட்டுத் தொழில் துறை அதைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறது. இது இப்படியே நீடிக்குமா? இந்தியப் பொருளாதாரம் பெரும்பாலும் உள்நாட்டு உற்பத்தி, நுகர்வை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதா?

ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சி நடைமுறையை நாம் சார்ந்திருக்கவில்லை என்பது உண்மையே. அதனாலேயே நாம் உலக அளவிலான அதிர்ச்சிகளால் பாதிக்கப்படாத நிலையில் இருக்கிறோம் என்று பொருள் அல்ல. முன்பைவிட நாம் இப்போது வெளிப்படையாகச் செயல்படுகிறோம். எனவே, உலகின் எந்தப் பகுதியில், எது நடந்தாலும் நமக்கும் அது முக்கியமே. பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவு என்ற அதிர்ச்சி இப்போது நமக்குச் சாதகமாக இருக்கிறது.

இந்தியாவின் வளர்ச்சி உள்நாட்டு அம்சங்களைப் பொறுத் திருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன். அடித்தளக் கட்டமைப்பில் முதலீடு செய்வதும் தனியார் முதலீட்டைப் புதுப்பிப்பதும் முக்கியம். இவ்விரண்டுமே இறக்குமதியைத்தான் ஊக்குவிக்கும். வெளி வர்த்தகப் பற்றுவரவை நிர்வகிக்க ஏற்றுமதியை அதிகரித்தாக வேண்டும். இந்தியத் தொழில்துறையில் நவீனத் தொழில்நுட்பங்களைப் புகுத்த நேரடி அந்நிய முதலீடும் அவசியம். நமது உற்பத்தி உலக சந்தைக்குக் கொண்டுசெல்லப்பட வேண்டும். அதற்கு நாம் வர்த்தகப் பேச்சுகளை நடத்த வேண்டும். எனவே, உலகப் பொருளா தாரத்துடன் தொடர்புகொள்வது அவசியம். உலகப் பொருளாதாரத்தை அலட்சியம் செய்தால் நமக்கு அது ஆபத்தைத் தரும்.

ரகுராம் ராஜனுக்கு எதிராக சுப்பிரமணியன் சுவாமி பிரச்சாரம் செய்தார். அதனால்தான் அவர் ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியை இரண்டாவது முறையாக ஏற்க மறுத்துவிட்டார் என்று நம்பப்படுகிறது. பாஜக அவரை விரட்டிவிட்டது என்றும் கூறுகின்றனர். ராஜன் இந்தியாவில் ஆற்றிய பணி குறித்தும் அவர் வெளியேற்றப்படும் விதம் குறித்தும் ஏதாவது கூற விரும்புகிறீர்களா?

‘‘மீண்டும் ஆசிரியர் பணிக்குச் செல்கிறேன்’’ என்று ராஜனைச் சொல்ல வைத்தது எது என்று தெரியாது. இந்தியப் பொருளாதார நிர்வாகக் குழுவினருக்கு இது உண்மையிலேயே பேரிழப்பு. மிகச் சிறந்த ஆளுநராக அவர் பணியாற்றினார். சர்வதேச அளவில் அவர் மீது மரியாதை அதிகம். இப்படிப்பட்ட திறமைசாலி ஆளுநராக இருந்தால் இந்தியாவின் கொள்கைகளுக்கே தனி மதிப்பு ஏற்படும்.

2013-ல் ஏற்பட்ட நெருக்கடியை நன்றாகக் கையாண்டார். அவர் தொடங்கிய சீர்திருத்தங்களை வெகு விரைவாகப் பூர்த்தி செய்ய வேண்டும்.

இப்போது இருப்பதைவிட மோசமான நிலைக்கு சீனம் செல்லுமா?

சீனத்தின் பொருளாதாரம் எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்ற கவலை உலக நாடுகளிடையே காணப்படுகிறது. கடந்த 30 ஆண்டுகளாகப் பராமரித்துவந்த வளர்ச்சி வேகத்திலிருந்து அவர்கள் குறைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. 6.5% ஆக அதன் வளர்ச்சி குறைந்தாலும், இந்த நிலையை அது பராமரிக்க முடிந்ததே பாராட்டுக்குரியது என்று கருதப்பட்டது. ஆனால், அந்தத் தரவும் உண்மைதானா என்கிற சந்தேகம் இப்போது ஏற்பட்டிருக்கிறது. சிலர் அது 4.5% என்று கூறுகின்றனர். அப்படியானால், வேலைவாய்ப்பு குறைந்து சீனத்திலேயே பதற்றம் அதிகரித்துவிடும். சர்வதேச நெருக்கடிகளுக்குப் பிறகும் கடன் வழங்கியதால் மனை வணிகத் துறை அதிக அடுக்கங்களைக் கட்டி பொருளாதார வளர்ச்சியைத் தக்க வைக்க உதவியது. ஆனால், வேலைவாய்ப்பும் வருமானமும் மற்ற துறைகளில் இல்லாததால் அந்த வீடுகளை வாங்க ஆட்கள் இல்லை. சீனப் பொருளாதார வளர்ச்சியின் அச்சாணியே ஏற்றுமதிதான். இப்போது உலக நாடுகள் நெருக்கடிகளில் ஆழ்ந்திருப்பதால் சீனத்தின் ஏற்றுமதி பெருகுவதற்கும் வாய்ப்புகள் குறைவு. சீனம் பாதிக்கப்பட்டால் அது அலையலையாக பிற நாடுகளிலும் எதிரொலிக்கும்.

பிரெக்ஸிட் சொல்வது என்ன? ஐரோப்பிய ஒன்றியம் என்ற ஏற்பாடு வெற்றியா, தோல்வியா? இதன் பொருளாதார விளைவுகள் என்னவாக இருக்கும்?

பிரெக்ஸிட் முடிவு வியப்பளித்தது. மேல்தட்டு வர்க்கம் எவ்வளவோ இனிமையாகப் பேசினாலும் சாமானிய பிரிட்டிஷ் மக்களின் வாழ்க்கையில் வளம் இல்லை. அந்த விரக்தியே பிரெக்ஸிட் ஆதரவாக மாறியிருக்கிறது. பிரிட்டனில் மட்டுமல்ல; ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் இப்படித்தான் இருக்கிறது. வேலைவாய்ப்பு, வருவாய் குறைந்துவிட்ட நிலையில் வேற்று நாட்டிலிருந்து மக்கள் குடியேறுவது எல்லோரையும் பீதியில் ஆழ்த்திவருகிறது. பிரிட்டன் வெளியேறித்தான் ஆக வேண்டுமா என்று எனக்குத் தெரியவில்லை. புதிய பிரதமர் இதை நாடாளுமன்றத்தின் அடுத்த பொதுத் தேர்தலுக்கு தள்ளிவிட வாய்ப்பு இருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் என்ற சோதனை முயற்சி இனி சரி செய்ய முடியாத அளவுக்குத் தோற்று விட்டது என்று இப்போதே முடிவு கட்டிவிட முடியாது. பிரெக்ஸிட் டால் ஏற்படக்கூடிய ஆக்கபூர்வ முடிவை யூகிக்க முடிய வில்லை. எதிர்மறையாகப் பலது நடக்கும் என்று தெரிகிறது.

உலகம் முழுக்க தேசியவாதம் வலுத்துவருகிறது. இது பொருளாதாரச் சூழலுடன் தொடர்புள்ளதா? உலகப் பொருளாதாரம் எப்போது மீட்சி பெறும்? எந்தவிதப் பொருளாதாரம் மீட்சிக்குத் தலைமை தாங்கும்?

பொருளாதாரம் சார்ந்த தேசியவாதத்தின் எழுச்சிக்கு இப்போதைய நிரந்தரமான பொருளாதார இன்னல்களே காரணம். நிலைமை திருந்திவிடும் என்று அரசுகள் தொடர்ந்து அலறுகின்றன. உண்மையில் அப்படி எதுவும் நடப்பதில்லை. சீனா இன்னும் பிரச்சினைகளில் ஆழ்ந்திருப்பதால் இந்த ஆண்டு மீட்சி வரும் என்று நினைக்கவில்லை. ஐரோப்பாவில் பிரச்சினைகள் ஏற்கெனவே அதிகம், பிரெக்ஸிட் வேறு பிரச்சினையைப் பெரிதாக்கிவிட்டது. அமெரிக்காவில் பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்நாடுகளில் பொருளாதாரம் மீட்சி அடைந்தால், ஓரளவுக்குப் பலவீனமான மீட்சியை அடுத்த ஆண்டு பார்க்க முடியும். கச்சா எண்ணெய் விலை இப்போதைக்கு அதிகமாக உயராது, இது நமக்கு நன்மை தான். ஆனால், ஏற்றுமதிச் சந்தையில் கடும் போட்டி இருக்கும், அது நமக்கு பாதகமானது. இந்த இடைப்பட்ட காலத்தில் நாம் அமைப்புரீதியான சீர்திருத்தங்களை விரைந்து மேற்கொண்டால் அந்நிய நேரடி முதலீட்டை அதிகம் ஈர்க்க முடியும்.

சுருக்கமாகத் தமிழில்: சாரி,

© ‘தி இந்து’ ஆங்கிலம்