‘இன்றைக்கு யார் யாரெல்லாம் சாப்பிடலை? சாப்பிடாதவங்க எல்லாரும் கையைத் தூக்குங்க’- மருத்துவப் பணி காரணமாகக் கிராமப்புறப் பள்ளிகளுக்குச் செல்லும்போது மாணவர்களிடம் கேட்கும் முதல் கேள்வி இதுவாகத்தான் இருக்கும். அநேகமாகச் சரிபாதிக் குழந்தைகள் கையைத் தூக்கிவிடுவார்கள். பள்ளிக்கு நேரமாச்சு, பஸ்ஸுக்கு லேட்டாயிருச்சு, பசிக்கலை, வீட்டில் சமையல் செய்யலை, பழைய சோறு சாப்பிடப் பிடிக்கலை என்பது போன்ற காரணங்களைச் சொல்வார்கள். ‘வீட்டில் சாப்பிட ஒன்றுமில்லை’, ‘பழைய சோற்றைச் சாப்பிடப் பிடிக்கவில்லை’ என்பதுதான் அதிகமானோர் சொல்லும் பதில். பொதுவாகக் கிராம ஊராட்சிப் பள்ளிகளின் நிலைமை இதுதான்.

தொடக்கப்பள்ளி சிறுகுழந்தைகள் காலையில் சாப்பிடாமல் வருவதைப் பார்ப்பது வேதனைதான். இதனால் பள்ளிக்குச் செல்லும்போதெல்லாம் ஒரு பிஸ்கெட் பாக்கெட்டை வாங்கிச் செல்வேன். அதைப் பார்த்துவிட்டு ‘சார், இன்னைக்குக் கொடுத்துட்டுப் போய்டுவீங்க, நாளைக்கு யார் கொடுப்பாங்க?’ என்று ஒரு ஆசிரியர் கேட்டார்.

மதிய உணவுத் திட்டம்

ஒரு வேளை சாப்பிடாமல் இருந்தால், பெரியவர்களுக்கே கண்ணைக் கட்டிக்கொண்டு வரும். எதையும் தெளிவாகப் பார்க்க முடியாது; தலை சுற்றும்; காது அடைக்கும்; எதிலும் கவனம் செலுத்த முடியாது. அப்படியென்றால் சிறு குழந்தைகளுக்கு எப்படி இருக்கும். பசி மயக்கம், வயது வித்தியாசம் பார்க்குமா என்ன?

பள்ளிகளில் கல்வி இலவசம் என்றிருந்த காலத்திலும் மாணவர்களின் குறைவான வருகைக்கு வறுமைதான் காரணம் என்பதையும் உணவு ஒரு முக்கியப் பிரச்சினை என்பதையும் அறிந்த அன்றைய முதல்வர் காமராஜர் மிகுந்த சிரமங்களுக்கு இடையில் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டுவந்தார். இதன்மூலம் பள்ளியில் பயிலும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமானது. அவர்களுக்கு ஒரு வேளை உணவும் கிடைத்தது.

இத்திட்டத்தைத் தொடங்கி வைத்த காமராஜர், ‘அன்னதானம் நமக்குப் புதிதல்ல. இதுவரை வீட்டுக்கு வந்தவர்களுக்கு உணவு அளித்தோம். இப்போது பள்ளிக்கூடத்துக்கு வருபவர்களுக்குச் சோறு போடுகிறோம்’ என்று கூறினார். அதற்கு நிதி ஒரு பிரச்சினை என்றால் இந்தத் திட்டத்துக்காக ஊர்வலமாகச் சென்று பிச்சை எடுக்கவும் அவர் தயாராக இருந்தார் என்பதை அறியும்போது, இந்தத் திட்டத்தில் அவருக்கு இருந்த அளப்பரிய ஆர்வத்தையும் மாணவர்களிடம் கொண்டிருந்த ஈடுபாட்டையும் அறிய முடிகிறது.

நகர்ப்புறக் குழந்தைகளின் பிரச்சினை

கிராமப்புறக் குழந்தைகளுக்கு உணவு கிடைக்காதது பிரச்சினை என்றால், நகர்ப்புறக் குழந்தைகளுக்கோ அதுவே தலைகீழ். ‘என் குழந்தை சரியாகச் சாப்பிடுவதேயில்லை, காய்கறி எதை வைத்தாலும் தொடுவதே கிடையாது’, ‘காலையில் ஒரு இட்லி அல்லது ஒரு தோசைதான் சாப்பிடுகிறார்கள். கேட்டால் ‘ஸ்கூலுக்கு நேரமாச்சு’ என்று சாக்குபோக்கு சொல்கிறார்கள்…

ஸ்கூலுக்குக் கொண்டுசென்ற மதிய உணவையும் அப்படியே கொண்டுவந்துவிடுகிறார்கள் அல்லது கொட்டிவிடுகிறார்கள்’ - இது நகர்ப்புறப் பெற்றோரின் ஆதங்கம்; வருத்தம். இதைத் தவிர உடம்பை ‘ஸ்லிம்மாக’ வைத்துக்கொள்ள வேண்டும் என்று சிலர் காலை உணவைத் தவிர்த்துக் கொண்டிருக்கின்றனர்.

‘உனக்குப் பிடித்த காய்கறிகளின் பெயர்களைச் சொல்லு’ என்று குழந்தைகளிடம் கேட்டால், உருளைக்கிழங்கு, தக்காளி மிஞ்சிப்போனால் கத்திரிக்காய், முருங்கைக்காய்... அதற்கு மேல் சொல்லத் தெரிவதில்லை. லேஸ், குர்குரே, பீட்சா, நூடுல்ஸ், பர்கர் தெரிந்த அளவுக்கு நம் குழந்தைகளுக்குக் காய்கறிகள் தெரியவில்லை.

இதற்கு பெற்றோரான நாமும் ஒரு காரணம். குழந்தைகளை மார்க்கெட்டுக்கு, காய்கறிக் கடைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். வகை வகையான பச்சை, மஞ்சள் காய்கறி, கீரைகளைக் காண்பித்து ஒவ்வொன்றின் சிறப்பையும் எடுத்துச் சொல்லி, நம் வாழ்வில் அவற்றின் பங்கை உணர்த்த வேண்டும். காய்கறிகளை விளைவித்துச் சந்தைக்குக் கொண்டுவருவதற்கு உழவர்கள் படும் பாடும் துயரங்களும் அவர்களுக்குத் தெரிய வேண்டும். அதற்குப் பிறகு காய்கறிகளைக் குழந்தைகள் ஒதுக்கமாட்டார்கள்.

காலை உணவு ஏன் முக்கியம்?

காலை உணவு மிக முக்கியம் என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள். உடல்நலனில் காலை உணவு முதன்மையானது, ராஜா சாப்பிடுவதைப்போல அது இருக்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள். சிறப்பான ஊட்டச்சத்து மிகுந்தும் நிறைவாகவும் அந்த உணவு இருக்க வேண்டும்.

இரவு உணவுக்குப் பின் சுமார் 10 மணி நேரம் கழித்து மறுநாள் காலை 8 மணிக்குத்தான் காலை உணவைச் சாப்பிடுகிறோம். இந்த நீண்ட விரதத்தைப் போக்குவதுதானே காலை உணவு (Break - fast) . இந்த உணவைத் தவிர்த்துவிட்டால், அடுத்து 1 மணிக்குத்தான் மதிய உணவைச் சாப்பிடுவோம். அப்போது முழுமையான உணவைச் சாப்பிடாத இடைவெளி 15 மணி நேரமாகிவிடும். இப்படி இருந்தால் வயிற்றுவலி, வயிற்றுப்புண், நோய் எதிர்ப்பாற்றல் குறைவு, ரத்தச் சோகை போன்ற உடல்நலக் கேடுகள் ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம். இதுபோன்ற இடையூறுகள் அடிக்கடி வாழ்க்கையில் இடைப்படும்.

பசியோடு இருக்கும் குழந்தையால் பாடத்தில் கவனம் செலுத்த முடியாது. நினைவாற்றலுக்கு, மேம்பட்ட கவனிப்புத் திறனுக்கு, நன்றாகப் பேசுவதற்கு, தனித்திறமைக்கு, சிறந்த முறையில் கல்வி கற்பதற்கு, பிரச்சினைகளுக்கு நல்ல முறையில் தீர்வு காண்பதற்கு - காலை உணவு மிகவும் அவசியம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

காலை உணவைத் தவிர்த்தால், வளரிளம் பெண்களுக்கு ரத்தசோகை போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். மாதவிடாய்க் காலத்தில் அதிகமான ரத்தப்போக்கு ஏற்படுவதற்குச் சாத்தியம் உள்ளது. திருமணமான பிறகு பிரசவக் காலத்திலும் அதிக ரத்தப்போக்கு ஏற்படலாம், பிரசவமும் சிக்கலாகலாம்.

அனைவருக்கும் அவசியம்

காலையில் நாம் சாப்பிடும் உணவுதான் நாள் முழுக்கச் சுறுசுறுப்புடனும் புத்துணர்ச்சியுடனும் செயல்பட உதவுகிறது. நலமான வாழ்வு, சுறுசுறுப்பான செயல்பாடு, நீண்ட ஆயுள் ஆகியவற்றுக்குக் குழந்தைகளுக்குக் காலை உணவு அவசியம். இதையெல்லாம் உணர்ந்துகொண்டுதான் ‘வயிற்றிலே ஈரமில்லாதவன் எப்படிப் படிப்பான்? ஏழைக் குழந்தைகளுக்குப் பள்ளிக்கூடத்திலேயே சோறு போட்டுப் படிக்க வைக்க வேண்டும்’ என்று காமராஜர் அன்று நினைத்தார்; செயல்படுத்தியும் காட்டினார்.

நலவாழ்வில் முக்கியப் பங்கை வகிக்கும் காலை உணவு, பள்ளி மாணவர்களின் உடல்நலனில் மட்டுமல்லாமல் அவர்களுடைய கல்வியிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை அறிந்து, தமிழகத்தின் சில பகுதிகளில் பள்ளியிலேயே காலைச் சிற்றுண்டி வழங்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக மாணவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும், கல்வித் தரத்தை உயர்த்தும் காலை உணவை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கட்டுரையாளர், மதுரை தேசியக் கண் மருத்துவச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் 
தொடர்புக்கு: veera.opt@gmail.com