உடல் வலி லேசாகத் தோன்றியதுமே, வலி நிவாரணி மருந்துகளைத் தேடிப் பெரும்பாலோரின் மனம் அல்லாடத் தொடங்கிவிடுகிறது” என்கிறது ஓர் ஆய்வு. இதுவரை தடை செய்யப்பட்ட எத்தனை வலிநிவாரணி மாத்திரைகள், நம் உடலுக்குள் நீச்சலடித்துப் பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கும் என்பதைப் பற்றி சிந்தித்திருக்கிறோமா? சாதாரண உடல் வலிக்கும் சிறிய வீக்கங்களுக்கும் வலிநிவாரணி (Analgesic), வீக்கமுறுக்கி (Anti-inflammatory) மருந்துகளை எடுத்துக்கொண்டு சுய மருத்துவர்களாக மாறிவிட்ட `மாடர்ன்’ மக்கள், முன்னோர் பின்பற்றிய ‘ஒற்றடம்’ எனும் சிறந்த சிகிச்சையை மறந்ததன் விளைவாக, பல்வேறு பக்கவிளைவுகளைச் சந்தித்துக் கொண்டிருப்பது நிதர்சனம்.

ஒற்றட முறைகளைப் பற்றி சித்தர்கள் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர். சித்தர்களின் ஒற்றட முறைகளும், வழக்கத்தில் மக்கள் பின்பற்றும் ஒற்றட முறைகளும் எண்ணிலடங்காதவை.

வாத நோய்கள் தீர

கடுமையான உடல் உழைப்பு, சிறிதும் உடல் உழைப்பின்மை (Sedentary Lifestyle) போன்ற காரணிகளால் உண்டாகும் உடல் வலி மற்றும் இடுப்பு பொருத்து வலி, கழுத்து வலி ஆகியவற்றுக்கு ஒற்றட முறைகள் நல்ல பலன் கொடுக்கும். மருத்துவ எண்ணெய்களான வாத நாராயணன் தைலம், குந்திரிக தைலம், பிண்டத் தைலம் ஆகியவற்றை வலியுள்ள இடங்களில் பூசி, அதன் மேல் ஆமணக்கு, நொச்சி, தழுதாழை போன்ற இலைகளைக்கொண்டு ஒற்றடம் கொடுக்கலாம்.
ஓமம், முடக்கறுத்தான் இலையைக்கொண்டு செய்யப்படும் ஒற்றடம் வாத நோயாளிகளுக்கு உகந்தது. பிரம்மி இலை ஒற்றடம் மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும் என்கிறது சித்த மருத்துவம். ஒற்றடம் கொடுப்பதால் உண்டாகும் வெப்பத்தால், குருதிக்குழல் விரிவாக்கம் (Vasodilation) நடைபெற்று, தடைபட்ட ரத்த ஓட்டம் அதிகரித்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தேங்கிய நச்சுப்பொருட்களும் விரைவாக வெளியேற்றப்படுகின்றன.

கட்டிகளுக்கும் வீக்கங்களுக்கும்

மஞ்சள் தூள் அல்லது எலுமிச்சைத் துண்டு ஆகியவற்றை ஒரு துணியில் முடிந்துகொண்டு, சூடேறிய நல்லெண்ணெயில் மூழ்கவிட்டு, சூடு குறைந்த பின் அடிபட்ட வீக்கங்களுக்கு ஒற்றடம் கொடுக்க, வலியின் தாக்கம் படிப்படியாகக் குறையும். இன்றும் மலைக்கிராமங்களில் வசிப்பவர்கள், தங்கள் உடல் வேதனையைக் குறைக்க, வண்ண வண்ண மாத்திரைகளைத் தேடாமல், உப்பைக் கொண்டு ஒற்றடம் கொடுக்கும் மருத்துவ முறையை மேற்கொள்கின்றனர். நோயின்றி வாழ, உணவில் உப்பின் அளவை குறைத்துக்கொண்டு, ஒற்றடம் கொடுப்பதற்கு மட்டும் உப்பின் பயன்பாட்டை அதிகரிக்கலாம்.

பழங்காலத்தில் போர்களின்போது, வீரர்களுக்குக் காயங்களால் ஏற்பட்ட வீக்கங்கள் மற்றும் வேதனையைக் குணமாக்க, ஒற்றட முறைகள் அதிக அளவில் முதலுதவி சிகிச்சையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

வெந்நீர் ஒற்றடம்

கம்பளித்துணி அல்லது காடாத்துணியை கொதிக்கும் வெந்நீரில் நனைத்து, பின் நீரைப் பிழிந்துவிட்டு, வலியுள்ள இடங்களில் ஒற்றடம் கொடுக்கலாம். கட்டிகளின் தீவிரத்தைக் குறைக்கவும் இம்முறையைப் பயன்படுத்தலாம். பொதுவாக வெந்நீர் ஒற்றடம் கட்டிகளுக்கும் வீக்கங்களுக்கும் சிறந்தது. அதற்காக, எலும்பு முறிவால் உண்டான வீக்கத்தை ஒற்றட முறைகளால் சரி செய்துவிடலாம் என்பது அறியாமை. பொதுவாக ஒரு வீக்கமோ, கட்டியோ நீண்ட நாட்கள் தொடரும்போது, மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதும் முக்கியம்.

கபநோய்கள் மறைய

மார்புச் சளி, இருமல் போன்ற கபநோய்கள் நீங்க, நெஞ்சுப் பகுதியில் கற்பூராதி தைலத்தைத் தடவி, செங்கற்பொடி அல்லது சுண்ணாம்பு காரைத்தூள் (அ) கோதுமைத் தவிடு ஆகியவற்றால் ஒற்றடம் கொடுக்க நோய் குணமாகும். பயன் இல்லாத நிலையில், தேவைப்படும்போது மட்டும் `ஆண்டிபயாடிக்’ மருந்துகளை நாடி சென்றால், மருந்துகளின் பக்கவிளைவுகளிலிருந்து தப்பிக்கலாம். நெஞ்சில் கட்டிய கோழையை வெளியேற்ற, அரிசித் தவிடு ஒற்றடமும் கற்பூரவல்லி இலை ஒற்றடமும் உதவும்.

முள் தைத்த காயத்துக்கு

முட்கள் அல்லது கூரிய கற்கள் பாதங்களில் குத்துவதால் உண்டாகும் காயத்துக்கு, குத்திய பொருளை நீக்கிய பின், காயம்பட்ட இடத்தில் நல்லெண்ணெய் தடவி, எருமை சாணத்தைச் சூடேற்றித் துணியில் முடிந்து ஒற்றடம் கொடுக்க விரைவில் காயம் காணாமல் போகும் என்கிறார்கள் கிராம மக்கள். `உப்பு நல்லெண்ணெய்’ ஒற்றடமும் இதற்குப் பயன் அளிக்கும்.

சில நோய்களுக்கு

வயிற்று வலி குறைய, ஆமணக்கு விதையால் ஒற்றடம் கொடுப்பது நல்லது. சிறு குழந்தைகளுக்கு உண்டாகும் வயிற்றுவலியைப் போக்க ஆமணக்கு இலை, வெற்றிலையை வதக்கி வயிற்றுப் பகுதியில் ஒற்றடம் கொடுக்கலாம். உடலைத் தேற்றுவதற்காக முட்டையைச் சாப்பிட்ட பின், அதன் ஓட்டை தூக்கி எறியாமல், ஓட்டை கருக்கிய சாம்பலைக்கொண்டு ஒற்றடம் கொடுக்க வாத, கப நோய்கள், சில வகையான காய்ச்சல்களும் நீங்கும். புளி, பூண்டு, உப்பு சேர்ந்த ஒற்றடக் கலவை மூட்டு வலிகளுக்குச் சிறந்தது. மணலை லேசாக வறுத்து, துணியில் முடிந்து இசிவுகளுக்கும் வலிகளுக்கும் ஒற்றடம் கொடுக்கலாம். புளியங்கொட்டையில் சிறிது நீர் விட்டு அரைத்துப் பசைபோலச் செய்து, துணியில் முடித்து ஒற்றடம் கொடுக்க ரத்தக் கட்டுகள் மறையும்.

பயன்படும் பொருட்கள்

வாத நாராயணன் இலை, வேப்பிலை, எருக்க இலை, துளசி இலை, துத்தி இலை, புளிய இலை போன்ற மூலிகைகளையும் பயன்படுத்தலாம். ஒற்றடத்துக்குத் தேவையான சூட்டை நீண்ட நேரம் நிலைக்கச் செய்யும் பொருட்களான அரிசி தவிடு, உப்பு, கொள்ளு மாவு, ஓமம், நெல் போன்றவற்றையும் பயன்படுத்தலாம். இலைகளை வதக்க ஆமணக்கு எண்ணெயைப் பயன்படுத்தலாம்.

ஒற்றட ‘பேக்

மேலேகுறிப்பிட்ட மூலிகைகளை உலரவைத்து, தேவைப்படும்போது எண்ணெயில் வதக்கி, துணியில் முடிந்து பயன்படுத்தும் வகையில் ரெடிமேடாக, சில ஒற்றட `பேக்’குகளைத் தயார் செய்துகொள்ளலாம் (Dry packs). அல்லது இலைகளைப் பச்சையாக, அவ்வப்போதுத் தாவரங்களிலிருந்து எடுத்து, துண்டு துண்டாக நறுக்கி, லேசாக எண்ணெயில் வதக்கி, பின் துணியில் முடிந்து ஒற்றடம் கொடுக்கப் பயன்படுத்தலாம்.
உடலில் ஏற்படும் வலியானது, செயற்கையான ‘சிந்தடிக் ’ மருந்துகளால் குறையாமல் போகலாம். ஆனால், அன்பு உறவுகள் அளிக்கும் இதமான இயற்கை ஒற்றடத்தால் நிச்சயம் குறையும் என்பது உளவியல் உண்மை.

ஒற்றடம்: கவனிக்க வேண்டியவை

# லேசான தலைவலிகளுக்கு, நம் உள்ளங்கையைக் கொண்டு (உள்ளங்கை ஒற்றடம்) நெற்றி மற்றும் தலைப் பகுதியில் தடவும்போது உண்டாகும் இதமான வெப்பமும் நிச்சயம் நிவாரணம் அளிக்கும்.
# ரத்தக்கட்டுகள் குறையவும், வலியின் தீவிரம் குறையவும், மூட்டுகளின் இயக்கங்கள் சிறப்படையவும் ஒற்றட முறைகளைப் பின்பற்றலாம்.
# நாட்பட்ட புண்கள், உணர்ச்சியற்ற தோல் பகுதி, புற்று கட்டி ஆகியவற்றில் ஒற்றடம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
# அதிகமான சூட்டில் ஒற்றடம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். ஒற்றடச் சூட்டின் காரணமாகத் தோலில் ஏதேனும் பாதிப்பு உண்டானால், அவ்விடத்தில் தடவத் தேங்காய் எண்ணெய் சிறந்த தேர்வு.
# சித்த மருத்துவத்தில் உள்ள குங்கிலிய வெண்ணெய் எனும் களிம்பையும் பயன்படுத்தலாம்.
# ஒற்றட முறைகள் மற்றும் ஒற்றடத்துக்குப் பயன்படும் மூலிகைகள் பற்றி அறிந்துகொள்ள அருகிலுள்ள அரசு அல்லது பதிவு பெற்ற சித்த, ஆயுர்வேத மருத்துவர்களை அணுகலாம்.