உலகமயமாக்கல் எனும் புதிய உலகுக்குள் 1991-ல் இந்தியா நுழைந்தது. பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள வேண்டிய கட்டாயம்; வாங்கிய கடனுக்குத் தங்கத்தை அடமானம் வைக்கும் நிலை என்று தத்தளித்துக்கொண்டிருந்த இந்தியப் பொருளாதாரம், கடும் விமர்சனங்களுக்கு மத்தியில் துணிச்சலுடன் அந்த முடிவை எடுத்தது. இதோ இன்றைக்கு 25 ஆண்டுகள் கடந்துவிட்டன. கடந்துவந்த பாதையைத் திரும்பிப் பார்க்கும் தருணம் இது!

1991 பொருளாதார நெருக்கடி: என்ன பின்னணி?

வெளிநாட்டில் வாங்கிய கடனின் ஒரு தவணையைக்கூட இந்தியா செலுத்தத் தவறிவிடுமோ என்ற இக்கட்டான பொருளாதாரச் சூழல் அக்காலகட்டத்தில் உருவாகி யிருந்தது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெளிநாட்டுக் கடன் 26%, உள்நாட்டுக் கடன் 55%. அப்போது இந்தியாவிடம் இருந்த அந்நியச் செலாவணிக் கையிருப்பு இரண்டு வார இறக்குமதிக்குக்கூடப் போதவில்லை. இச்சூழலில், வெளிநாட்டுக் கடன் தவணையை எவ்வாறு கொடுப்பது? இதுமட்டுமல்லாமல், ஏற்றுமதி - இறக்குமதி இடைவெளி அதிகரித்துக்கொண்டே போனது. அரசின் உள்நாட்டுக் கடன் பெருகியதால் இரண்டு விளைவுகள் ஏற்பட்டன ஒன்று, பண அளிப்பு அதிகரித்து விலைவாசி 15%-தைக் கடந்தது. இரண்டு, வட்டி விகிதம் உயர்ந்து தனியார் முதலீடும் தேய்ந்தது.

இந்தச் சிக்கல் வர என்ன காரணம்?

பொருளாதாரச் சிக்கல் என்பது, நேற்று பெய்த மழையில் நனைந்து இன்று காய்ச்சல் வருவது போலன்று. பல ஆண்டுகளாக நடந்துவரும் பொருளாதார நிகழ்வுகளைச் சரியாகப் புரிந்துகொள்ளாதது, சாதுரியமான அரசியல் ஆளுமை இல்லாமல் - சரியான பொருளாதாரக் கொள்கை முடிவுகளை எடுக்காமல் இருந்ததன் ஒட்டுமொத்த விளைவுதான் 1991 பொருளாதாரச் சிக்கல்.

அப்படியானால், 1950-90 காலகட்டத்தின் 40 ஆண்டு பொருளாதாரக் கொள்கைகள்தான் இதற்குக் காரணமா?
இல்லை. பொருளாதாரக் கொள்கைகளும் நடவடிக்கை களும் தொடர் நிகழ்வுகளாக இருந்தாலும், 1980-களில் இந்தச் சிக்கலுக்கான விதை ஆழமாக ஊன்றி வளர்ந்தது. இந்த 10 ஆண்டுகளில் 8 நிதி அமைச்சர்கள் இருந்துள்ளனர். இதில், கடைசி 5 ஆண்டுகளில் மட்டும் 6 நிதி அமைச்சர்கள் இருந்திருக்கின்றனர். இப்படியான நிலையில், பொருளாதாரக் கொள்கைகளில் தொடர்ச்சி எப்படி இருந்திருக்கும்?

1980 நிலவரம்தான் இந்தச் சிக்கலின் தொடக்கமா?

1980-ல் நாம் இதுபோன்ற ஒரு பொருளாதாரச் சிக்கலைச் சந்தித்தோம். அன்றும் இறக்குமதிக்குப் போதிய அந்நியச் செலாவணி இல்லாமல், அரசின் பட்ஜெட் பற்றாக்குறை அதிக ரித்து, பணவீக்கம் உயர்ந்து, இந்தச் சூழலில் பன்னாட்டுச் செலாவணி நிதியத்திடம் ஒரு பில்லியன் டாலர் வரை கடன் வாங்கினோம். இதில் பெரும் பகுதி பெட்ரோலியத் துறையில் முதலீடு செய்யப்பட்டது. 1981-82-ம் ஆண்டு பட்ஜெட்டின் பற்றாக்குறையும் வெகுவாகக் குறைக்கப்பட்டது. இதற்காக வரி வருவாய் பெருக்கப்பட்டது, பெட்ரோல், உரம், மின்சாரம் விலைகள் உயர்த்தப்பட்டன. ஆனால், அடுத்த ஆண்டே இந்த முயற்சிகள் கைவிடப்பட்டு, மீண்டும் அரசின் பட்ஜெட் பற்றாக்குறை உயர ஆரம்பித்தது.

1980-களில் அரசின் பட்ஜெட் பற்றாக்குறை அதிகரித்ததற்கு என்ன காரணம்?

1980-கள் முழுவதும் அரசின் பட்ஜெட் பற்றாக்குறை 7% முதல் 10% வரை இருந்தது. ஒருபுறம் அரசின் வரி வருவாய் அதிகரிக்கவே இல்லை. வரி வருவாயும், வரி அல்லாத வருவாய்களாக இருக்கும் அரசு நிறுவனங்களின் லாபம், அரசுத் துறைகளின் வசூல் என எதுவும் உயரவில்லை. அவற்றை உயர்த்த அரசும் முனையவில்லை. அரசின் செலவுகள் பல வகைகளில் உயர்ந்தது - அரசுத் துறை நிறுவனங்களின் முதலீட்டினை உயர்த்தியது, அதிகக் கடனை அதிக வட்டிக்கு வாங்கியதும் அடுத்த ஆண்டுகளில் அரசின் வட்டிச் செலவை உயர்த்தின. அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியச் செலவுகள் உயர்ந்தன.

அந்நியச் செலாவணிச் சிக்கலுக்கு என்ன காரணம்?

1980-களின் முற்பகுதியில் அரசுத் துறை நிறுவனங்களில் முதலீடுகளை அரசு உயர்த்தியது. அதே நேரத்தில், அரசு நிறுவனங்கள் வெளிநாடுகளில் கடன் வாங்கவும் அனுமதி வழங்கப்பட்டது. முதலீடுகள் உயர்ந்தாலும், அரசு நிறுவனங்களின் லாபம் உயராமல் இருந்ததால், வாங்கிய கடனுக்கான முதலும் வட்டியும் 1980-களின் பிற்பகுதியில் பெருகிக்கொண்டே போனது. இவற்றை அந்நியச் செலாவணி கொண்டுதான் அடைக்க வேண்டும். 1980-களின் பிற்பகுதியில் இந்தியாவில் அந்நிய முதலீடும், இறக்குமதியும் தாராளமாக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து இறக்குமதி உயர்ந்ததுபோல ஏற்றுமதி உயராமல் இருந்ததால் அந்நியச் செலாவணி செலுத்துநிலையில் இடைவெளி அதிகரித்தது.
இந்த 10 ஆண்டுகளில் இந்தியாவுக்கு வந்துகொண்டிருந்த அந்நிய நாட்டுக் கொடைகளும் மூன்றில் ஒரு பங்காகக் குறைந்தன. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்த நிலையில் இருந்தது. வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் இந்தியாவில் வைத்திருந்த சேமிப்புக் கணக்கு வைப்பு நிதியும் குறைய ஆரம்பித்தது.

இது எப்படிப் பொருளாதார வளர்ச்சியைப் பாதித்தது?

1970-களுடன் ஒப்பிடும்போது 1980-களில் பொருளாதார வளர்ச்சி அதிகமாக இருந்தது. 1980-வரை இந்தியாவின் ஆண்டுப் பொருளாதார வளர்ச்சி 3.5% வரைதான் இருந்தது. இதனை ‘இந்து வளர்ச்சி விகிதம்’என்றே பழித்தனர். அதாவது, இந்தியா இதற்கு மேல் வேகமாக வளர முடியாது என்ற எண்ணம் அது. இதைப் பொய்யாக்கும் விதத்தில் 1980-களில் 5% பொருளாதார வளர்ச்சியை அடைந்தோம். ஆனால், இந்த வளர்ச்சி நிலையில்லாதது என்பதை வெகுவேகமாகப் புரிந்துகொண்டோம். 1991-92-ல் இந்தியாவின் ஆண்டு வளர்ச்சி விகிதம் 1.2%தான்.

பணவீக்கம் அதிகரித்ததற்கு என்ன காரணம்?

அப்போதுள்ள நடைமுறைப்படி இந்திய அரசு பட்ஜெட் பற்றாகுறையைச் சரிக்கட்ட இரண்டு வழிகளில் கடன் வாங்கலாம். ஒன்று, மத்திய ரிசர்வ் வங்கியிடம். மற்றொன்று, அதனிடம் உள்ள அரசு வங்கிகளிடம். மத்திய ரிசர்வ் வங்கிக்கு அரசு தன் கடன் பத்திரங்களைக் கொடுத்து, மிகக் குறைந்த வட்டிக்குக் கடன் வாங்கலாம். மத்திய ரிசர்வ் வங்கியும் அதற்கு இணையாகப் பணத்தை அச்சிட்டு வழங்கும். இதனால் பணவீக்கம் ஏற்படும். அரசுத் துறை வங்கிகளிடம் மத்திய அரசு கடன் வாங்கும்போது, வங்கியினால் தனியார் துறைக்குக் கடன் கொடுக்கப் பணம் இருக்காது. அல்லது அதிக வட்டிக்குத்தான் கடன் கொடுக்க வேண்டும். இதனால், தனியார் உற்பத்திச் செலவு உயர்ந்து பணவீக்கம் ஏற்படும். எனவே, அரசு தொடர்ந்து அதிக பட்ஜெட் பற்றாக்குறை வைத்திருந்ததால், பணவீக்கம் கட்டுக்கடங்காமல் போனது.

இதற்கான முன்னெச்சரிக்கை சமிக்ஞைகள் எதுவும் நமக்குத் தெரியவில்லையா?

1980-களில், மத்திய அரசு ‘தொடர்ந்து பட்ஜெட் பற்றாக் குறையை வைத்திருப்பது தவறு, அதனைச் சரிசெய்ய மத்திய ரிசர்வ் வங்கிடம் கடன் வாங்குவதும் தவறு’ என்று மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர்கள் மன்மோகன் சிங்கும்(1982-85), ஆர்.என். மல்ஹோத்ராவும் (1985-90) சுட்டிக்காட்டினர். இது பணவீக்கத்தை அதிகரிக்கிறது என்பதை எடுத்துக்காட்டி எச்சரித்தனர். இதை யாரும் கேட்கவில்லை. குறிப்பாக ஆர்.என்.மல்ஹோத்ரா மத்திய அரசுக்கு 1989 மே மாதம் எழுதிய கடிதத்தில், “தீர்க்கமான முடிவுகள் எடுக்கா விடில், அந்நியச் செலாவணி செலுத்துநிலை பற்றாக்குறை விரிவடையும். குறிப்பாக, குறைந்த அந்நியச் செலாவணி கையிருப்பு இருப்பதால், ஏற்றுமதி - இறக்குமதி இடை வெளியைக் குறைக்க வேண்டும்” என்று எச்சரித்தார்.

உலக வங்கி தனது ஆண்டு அறிக்கைகளில் அவ்வப் போது இந்தியாவின் பொருளாதார நிலை குறித்து கவலை தெரிவித்தது. குறிப்பாக, கட்டுக்கடங்காமல் போகும் அந்நியச் செலாவணி செலுத்துநிலை பற்றாக்குறை, பட்ஜெட் பற்றாக்குறை ஆகியவற்றை அந்த அறிக்கைகள் சுட்டிக்காட் டின. உலக வங்கியிடம் கடன் வாங்கப்போவதில்லை என்று நினைத்ததால் அவர்கள் சொல்வதை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ளவும் இல்லை.

இந்தியா தங்கத்தை அடமானம் வைத்ததாகச் சொல்லப்பட்டதே?

1991 மே 16-ல் இந்திய ஸ்டேட் வங்கி 200 மில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கத்தை சுவிட்சர்லாந்த்தைச் சேர்ந்த ஒரு வங்கியிடம் விற்றது. 1991 ஜூன் 21-ல் நரசிம்ம ராவ் பிரதமராகவும், மன்மோகன் சிங் நிதி அமைச்சராகவும் பதவி ஏற்றனர். ஜூலை 4-18, 1991 ஆகிய இரண்டு வாரங்களில் நான்கு தவணைகளில் மத்திய ரிசர்வ் வங்கி, இங்கிலாந்து வங்கியிடம் 47 டன் தங்கத்தை அடமானம் வைத்து 400 மில்லின் டாலர் கடன் வாங்கியது. தங்கத்தை அடமானம் வைக்கும் முடிவு முந்தைய அரசு மே மாதமே எடுத்தாலும் அதனைச் செயல்படுத்த ஜூலை மாதம் ஆனது. இதுமட்டுமல்லாமல் பன்னாட்டுச் செலாவணி நிதியத்திடம் 220 மில்லியன் டாலர் அவசரக் காலக் கடன் வாங்கினோம். ஜூலை 24, 1991 மன்மோகன் சிங் தனது முதல் பட்ஜெட் உரையை நாடாளுமன்றத்தில் நிகழ்த்தினார்.

இதுதான் புதிய பொருளாதாரக் கொள்கையின் ஆரம்பமா?

ஆம். அரசுக் கட்டுப்பாட்டில் இருந்த பெட்ரோல், உரம், சர்க்கரை, சமையல் எரிவாயு ஆகிய பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டன. வெளிநாட்டு இந்தியர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய ஊக்கப்படுத்தப்பட்டனர். கருப்புப் பணத்தையும் சொத்தையும் மீண்டும் கணக்கில் கொண்டுவந்து வரி செலுத்த ஒரு முறை வாய்ப்பு வழங்கப் பட்டது. வட்டி வருமானம், கமிஷன் வருமானம் வழங்கும் போது வருமான வரிப் பிடித்தம் செய்ய வழி செய்யப்பட் டது. ஏற்றுமதி ஊக்கப்படுத்தப்பட்டது. வெளிநாட்டு முதலீடு களை இந்தியா கவர புதிய திட்டங்கள் தயாரிக்கப்பட்டன. ஏற்றுமதித் தொழிலில் உள்ள நிறுவனங்கள் இறக்குமதி செய்ய வழிமுறைகள் எளிதாக்கப்பட்டன. இந்திய ரூபாயின் அந்நியச் செலாவணி மாற்று விகிதம் ஜூலை 1 அன்று 9% மீண்டும் ஜூலை 3 அன்று 11% குறைக்கப்பட்டது. இதனால் இறக்குமதி குறைந்து, ஏற்றுமதி அதிகரிக்கும் வாய்ப்பு உருவானது.

அடுத்த சில மாதங்களில் பல பொருளாதாரக் கொள்கை மாற்றங்கள் நிகழ்ந்தன. வரி விதிப்பு எளிமையாகி, வரி விகிதங்கள் குறைந்தன. அரசு செலவுகளைக் குறைக்க முடிவு கள் எடுக்கப்பட்டன. பொதுத் துறை முதலீடுகள் தனியாருக்கு விற்கப்பட்டன. இறக்குமதி எளிமையாக்கப்பட்டு, அதன் மீது வரி விகிதமும் குறைக்கப்பட்டது. பங்குச் சந்தையைக் கண் காணித்து முறைப்படுத்த ‘செபி’க்கு அதிகாரம் வழங்கப்பட் டது. வங்கிகளில் அரசு கடன் வாங்குவது குறைந்து, தனியாருக்குக் கடன் கொடுப்பது ஊக்குவிக்கப்பட்டது. தொழில் துறை மீதான எல்லா கட்டுப்பாடுகளும் படிப்படியாகக் குறைக்கப்பட்டன. எல்லாத் துறைகளிலும் தனியார் துறை பங்களிப்பு ஊக்கப்படுத்தப்பட்டது.

நவீன இந்தியாவில் உலகமயம் பிறந்தது!

- இராம. சீனுவாசன்
சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்
தொடர்புக்கு: seenu242@gmail.com