சீர்திருத்தம் எனும் சொல்லை நமக்கு அவர்கள் இப்படித்தான் அறிமுகப்படுத்தினார்கள். மூன்று இலக்கணங்களோடு: 1. தாராளமயம், 2. தனியார்மயம், 3. உலகமயம். மொத்தத்தில் நவீன தாராளமயம்! 1991-ல் நவீன தாராளமயச் சீர்திருத்தங்கள் தீவிரப்படுத்தப்பட்டன. “தாராளமயம், தனியார்மயம், உலகமயக் கொள்கைகள் இணைந்த நவீன தாராளமயத்தால் பன்னாட்டு, உள்நாட்டு முதலீடுகள் பெருகும், வேலைவாய்ப்புகள் பெருகும், வறுமை மறையும்” என்றார்கள். கடந்த 25 ஆண்டுகளின் அனுபவம் என்ன?

இந்திய மற்றும் அந்நிய முதலாளிகள் மீதான கட்டுப்பாடுகளை முற்றிலும் நீக்கி அவர்கள் தங்கு தடையின்றி லாபம் ஈட்டுவதை ஊக்குவிப்பதையே நவீன தாராளமயமாக நாம் அறிந்திருக்கிறோம். தனியார்மயத்தின் ஒரு முக்கிய அம்சம் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்கு விற்பது. இன்னொரு அம்சம், அரசின் பொறுப்பு என்று கருதப்பட்டுவந்த, பொது நன்மை நோக்கில் செயல்பட வேண்டிய கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளைத் தனியாரிடம் ஒப்படைத்து, லாபத்தின் அடிப்படையில் அவற்றைச் செயல்படுத்துவது.

தாராளமயமும் தனியார்மயமும் இணைந்து அமலாக்கப்படும் நிலையில், லாப நோக்கில் செயல்படும் தனியார் அமைப்புகளை ஒழுங்குபடுத்துவதும் அவற்றின் மீது சமூக நெறிமுறைகளை விதித்துச் செயல்படுத்துவதும் மிகவும் சிக்கலான விஷயங்களாகிவிட்டன. பொருளாதாரரீதியில் உலகமயத்துக்கு இரண்டு முக்கிய அம்சங்கள் உண்டு: 1. சரக்கு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சார்ந்த கட்டுப்பாடுகளை நீக்கி, நாட்டின் பொருளாதாரத்தைப் பன்னாட்டு வணிகத்துக்கு முழுமையாகத் திறந்துவிடுவது. இது பொருட்களுக்கும் சேவைகளுக்கும் பொருந்தும். 2. நிதி வடிவில் மூலதனம் நாட்டுக்குள்ளே வருவதையும் அதன் விருப்பப்படி நாட்டை விட்டு வெளியே செல்வதையும் தங்கு தடையில்லாமல் அனுமதிப்பது.

பொருளாதார வளர்ச்சி

உள்நாட்டு மொத்த உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 1991-2003 காலகட்டத்தில் ஆண்டுக்கு 6%-க்குச் சற்றுக் குறைவாக இருந்தது. 1991-க்கு முந்தைய 10 ஆண்டுகளின் வளர்ச்சி விகிதமும் இப்படித்தான் இருந்தது. 2௦௦3-2௦௦8 காலகட்டத்தில் இது கணிசமாக அதிகரித்தது. பின்னர் சரிந்தது. 1980-81 - 2013-14 காலகட்டத்தில் சராசரியாக 6.1%.

தாராளமய காலத்தில் வளர்ச்சி விகிதத்தில் கூடுதல் வேகம் இருந்ததாகச் சொல்ல முடியாது. எனினும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக 6%-க்கும் சற்று அதிகமான வளர்ச்சி விகிதம் இருக்கிறது என்பதைப் புறந்தள்ள முடியாது. இதற்கான காரணங்கள் பல. 1980-களுக்கு முன் மேற்கொண்ட அரசு முதலீடுகள்; அதனால் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி தந்த பலங்கள்; 1980-களில் தொடங்கி, பன்னாட்டு அரங்கில் கடன் பெறும் வாய்ப்புகளில் ஏற்பட்ட பெரும் முன்னேற்றங்கள்; ஆங்கிலமும் தொழில்நுட்பமும் அறிந்த மலிவான உழைப்புப் படை, லட்டாகக் கிடைத்த மென்பொருள் ஏற்றுமதி வாய்ப்புகள், தாராளமயக் கொள்கை களால் கிடைத்த கூடுதல் லாப வாய்ப்புகள் என்று பல காரணங்கள் உண்டு. இவற்றை உலகமயத்தின் ‘மாஜிக்’ என்று புரிந்துகொள்வது சரியல்ல. மேலும், உலகமயம் தந்துள்ள வளர்ச்சியின் தன்மையால் விவசாயம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் பிரச்சினைகள் முளைத்துள்ளன.

வளர்ச்சியின் தன்மை

1984-85 - 1994-95 காலகட்டத்தில் வேளாண் வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 4.1%. 1994-95 - 2004-05 காலகட்டத்தில் ஆண்டுக்கு 0.6%. மக்கள்தொகை வளர்ச்சிக்கு ஈடுகட்டும் அளவுக்குக்கூட உணவு உற்பத்தி அதிகரிக்கவில்லை. மாறாக, தானிய உற்பத்தி சரிந்தது. விடுதலைக்குப் பின் 1950-1995 காலத்தில் இந்த நிலைமை ஏற்படவில்லை. தொழில் துறையின் வளர்ச்சி 1984-85 முதல் 1994-95 காலகட்டத்தில் ஆண்டுக்கு 6.2% ஆக இருந்தது, 1994-95 முதல் 2004-05 காலட்டத்தில் ஆண்டுக்கு 5% எனக் குறைந்தது. இந்த இரண்டு அம்சங்களையும் சேர்த்துப் பார்த்தால், தாராளமயத்தின் முதல் 15 ஆண்டுகளில் பொருள் உற்பத்தித் துறைகளின் வளர்ச்சி மந்தமாகவே இருந்ததைப் புரிந்துகொள்ளலாம்.

சேவைத் துறை வளர்ந்தது என்றவுடன் பலரும் வங்கி, காப்பீடு, தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளையே முதலில் மனதில் கொள்வார்கள். ஆனால், இத்துறைகள் சேவைத் துறையின் ஒரு பகுதியே. இத்துறைகளில் பணிபுரிவோரில் ஒரு சிறு பகுதியினர் வசதியாக இருக்க இயலும் என்றாலும், இங்கும்கூடக் கணிசமான பகுதியினர் நிச்சயமற்ற பணிகளில் குறைந்த ஊதியங்களுக்குப் பணிபுரிகின்றனர். மறுபுறத்தில் சேவைத் துறையில் சிறுவணிகம், வேறு பல குறைந்த வருமானம் தருகின்ற சுய வேலைகளில் ஏராளமான உழைப்பாளிகள் உள்ளனர். இதன் பொருள் என்னவென்றால், தாராளமயக் கொள்கைகள், அவற்றின் முதல் பதினைந்து ஆண்டுகள் அமலாக்கத்தில் பொருள் உற்பத்தி வளர்ச்சியைப் பெருமளவிற்குச் சாதிக்கவில்லை என்பதுடன், நிகழ்ந்த சேவைத் துறை வளர்ச்சியும், ஒரு சிறிய பகுதி நீங்கலாக, பெருமளவிற்கு உற்பத்தித் திறன் உயர்வையோ, உழைப்போர் வருமான உயர்வையோ சாதிக்கவில்லை என்பதுதான். இதையடுத்து, 2004-14-ல் ஓரளவு வேளாண் வளர்ச்சியில் மீட்சி ஏற்பட்டபோதிலும், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி இடையிடையே அதிகரித்தபோதிலும், தாராளமயம் பாய்ச்சல் வேக வளர்ச்சி தரவில்லை என்பது தெளிவு.

வேளாண் நெருக்கடி

வேளாண் நெருக்கடியின் துயரமான அம்சம் பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகளின் தற்கொலைகள். 1997-2012 காலகட்டத்தில் 2,80,000 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். இத்துயரம் தொடர்கிறது. வேளாண் மக்கள் எதிர்கொண்ட இந்த நெருக்கடிக்கு அரசின் தாராளமய கொள்கைகளே காரணம். அரசின் பட்ஜட் பற்றாக்குறையைக் குறைப்பது என்ற பெயரில் உரம், எரிபொருள், மின்சாரம் உள்ளிட்ட இடுபொருள் மானியங்கள் வெட்டப்பட்டு, உற்பத்திச் செலவு உயர்ந்தது. ஆனால், அளவுக் கட்டுப்பாடு இன்றி அயல்நாட்டு வேளாண் பொருட்களின் இறக்குமதி அனுமதிக்கப்பட்டதால் உள்நாட்டு விளைபொருட்கள் விலை வீழ்ச்சியைச் சந்தித்தன. நிதித்துறைச் ‘சீர்திருத்தங்கள்’ விவசாயக் கடனைக் குறைத்து வட்டி விகிதங்களை உயர்த்தின. விவசாயிகள் கந்துவட்டிக்காரர்களிடம் சிக்கும் நிலை ஏற்பட்டது. அரசின் செலவைக் குறைப்பது என்ற தாராளமயக் கொள்கை கிராமப்புறக் கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த அனுமதிக்கவில்லை. பாசனம், வேளாண் விரிவாக்கம், வேளாண் ஆராய்ச்சி அனைத்துமே பலவீனமடைந்தன. பொது விநியோக முறை சீரழிக்கப்பட்டது. தனியார்மயத்தால் கல்வி, ஆரோக்கியச் செலவுகளும் அதிகரித்து விவசாயக் குடும்பங்கள் கடன் வலையில் வீழ்ந்தன. மறுபுறம், அரசின் கொள்கைகள் நிலம் மற்றும் மூலதனக் குவியலை ஊக்குவிக்கும் வகையில் நில உச்சவரம்புச் சட்டங்களை நீக்குகின்றன. விவசாயிகள் நிலம் மற்றும் உற்பத்தி சொத்துகளை இழப்பதன் மூலமும் அரசுகள் இயற்கை வளங்களை அடிமாட்டு விலைக்குப் பன்னாட்டு இன்னாட்டு ஏகபோக நிறுவனங்களுக்கு வாரி வழங்குவதன் மூலமும் விவசாயிகளின் துயரம் தொடர்கிறது.

வேலைவாய்ப்புகள் பெருகினவா?

உலகமயத்தால் நிகழ்ந்துள்ள வளர்ச்சி வேலைவாய்ப் புகளைப் பெருக்கவில்லை. தொழில் துறையில், குறிப்பாக ஆலை உற்பத்தித் துறையில், முறைசார் பணியிடங்கள் அதிகரிக்கவே இல்லை. ஒட்டுமொத்தமாக உருவான பணியிடங்களும் அமைப்புசாராப் பணியிடங்கள். 1993 முதல் 2005 வரையிலான காலகட்டத்தில் ஏதேனும் ஒரு பணியில் (சுய வேலை உட்பட) இருப்போர் எண்ணிக்கை 1.20 கோடி அதிகரித்தது. இது 1983-1994 காலத்திய வளர்ச்சியைவிட மந்தம் என்பது ஒரு செய்தி. ஆனால் மேலும் துயரமான செய்தி, 2004 முதல் 2012 வரை இந்த எண்ணிக்கை 10 லட்சம் மட்டுமே அதிகரித்தது என்பதாகும்.

சாகாக் கோடு

அரசின் வறுமைக் கோடு என்பது ஒரு சாகாக்கோடு என்றுதான் சொல்ல வேண்டும். 2011-12-ல் நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு ரூ.50-க்கும் குறைவாக செலவு செய்தவர்கள் கிராமப்புறங்களில் 80%. நகரப்புறங்களிலும் கிட்டத்தட்ட 50% பேர். நாகரிக வாழ்க்கைக்குத் தேவையான குறைந்தபட்ச அம்சங்களை வைத்துப் பார்த்தால், நமது நாட்டில் 80%-க்கும் அதிகமான மக்கள் வறியவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். நமது நாட்டில், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் கிட்டத்தட்ட பாதிப் பேர் வயதுக்கேற்ற எடையை எட்டாதவர்கள். சஹாரா பாலைவனத்திற்குத் தெற்கே வசிக்கும் ஆப்பிரிக்க நாடுகளில்கூட இந்த விகிதம் நான்கில் ஒரு பங்குதான்.

ஏற்றத்தாழ்வுகள்

தொழிலிலும் நிலவுடைமையிலும் பொதுவாகச் சொத்து விநியோகத்திலும் நம் நாட்டில் ஏற்றத்தாழ்வு ஏற்கெனவே இருந்துவந்துள்ளது என்றாலும், கடந்த 25 ஆண்டுகளில் இவை பல மடங்குகள் அதிகரித்துள்ளன. 2008-ல் அமெரிக்க டாலர் கணக்கில் ஒரு பில்லியன் டாலர் - அதாவது, 100 கோடி டாலர் சொத்து மதிப்பு கொண்ட இந்தியச் செல்வந்தர்கள் எண்ணிக்கை 41. அதன் பின் ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிராகப் பெரிதும் சரிந்தது, இந்த எண்ணிக்கையைக் குறைத்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு நேர் மாறாக, 2013-ல் இந்த எண்ணிக்கை 53, 2014-ல் 70 என்று அதிகரித்து, 2016-ல் நூறைக் கடந்தது. 130 கோடி மக்கள் வாழும் நாட்டில் 100 ஆகப் பெரிய செல்வந்தர்களின் சொத்து நாட்டின் வருமானத்தில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்காக உள்ளது.

இந்தியப் பெருமுதலாளிகள் அவர்கள் சொத்துகளைப் பிரம்மாண்டமான அளவில் அதிகரித்துள்ளனர். நாட்டின் முன்னணித் தொழில் குழுமங்கள் அவற்றின் இணைய தளத்தில் தரும் தகவலின்படியே பல மடங்கு உயர்ந்திருக்கின்றன. டாட்டா குழுமத்தின் சொத்து 1990-ல் ரூ.10,922 கோடி. 2012-13-ல் இது ரூ.5,83,554 கோடியாக உயர்ந்தது. இதேபோல, அம்பானி குழுமத்தின் சொத்துகள் ரூ.3167 கோடியிலிருந்து ரூ.5,00,000 கோடியாக உயர்ந்தது. மறுபுறம் சுட்டெரிக்கும் உண்மை என்ன? கணிசமான பகுதி மக்கள் அடிப்படைத் தேவைகளான குடிநீர், கழிப்பறைகூட இன்றி நிற்கிறார்கள். ஊட்டச்சத்து குறைவான தாய்மார்கள், குழந்தைகள், ரத்த சோகையில் வாடும் வளரிளம் பெண்கள், பிறக்கும் 1000 சிசுக்களில் 40 சிசுக்கள் ஒரு ஆண்டுக்குள் இறக்கும் அவல நிலை இப்படி தொடர்கிறது கொடுமைப் பட்டியல்!

பெருகும் ஏற்றத்தாழ்வுகள்தான் கட்டற்ற தாராளமயத்தின் முக்கிய இலக்கணம். கல்வி, வேலை, மக்கள் நல்வாழ்வு, அனைவருக்கும் நாகரிக வாழ்க்கை ஆகிய இலக்குகளை அடைய, மக்கள் நலனை மையப்படுத்தும் மாற்றுப் பாதை அவசரம், அவசியம்!

- வெங்கடேஷ் ஆத்ரேயா, பேராசிரியர், தொடர்புக்கு: venkatesh.athreya@gmail.com