சோவியத் ஒன்றியம் ஒருநாள் உடைந்து சிதறியது. ரஷ்யாவின் வீதிகளில் கிளர்ச்சியாளர்களை ஒடுக்க வந்த, பீரங்கிகளின் வாயில் பூங்கொத்துகளைச் செருகினார்கள் மக்கள். ராணுவத்தினர் சிரித்தவாறே கையசைத்துக் கடந்தார்கள். ஒரு மர்மக் கணத்தில் தகர்ந்து நொறுங்கியது பெர்லின் சுவர். ஆளுக்கு ஒரு கோடரியுடன் வந்து ஒரு கல்லையாவது பெயர்த்தெடுத்துச் செல்ல முயன்றார்கள். காரணங்கள் நீண்ட காலமாகக் கனல்கின்றன. வரலாறு நம்ப முடியாத தருணத்தில் நிகழ்ந்துவிடுகிறது. கூடவே, ஒருபோதும் எதிர்பாராத தொடர் விளைவுகளையும் காலத்தின் கையில் திணித்துச் செல்கிறது.

உலகின் ஐந்து பெரும் வல்லரசுகளில் ஒன்றும் முதலாளித்துவத்தின் இதயமுமான பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று அந்நாட்டின் பெரும்பான்மை மக்கள் பொது வாக்கெடுப்பில் வாக்களித்திருப்பது, உலகமயமாக்கல் மீது விழுந்திருக்கும் ஒரு அடியாகவே தோன்றுகிறது. இது உருவாக்கும் அதிர்வலைகளின் தாக்கம், உலகம் எளிதில் கடக்கக் கூடியதாக இருக்கும் என்று தோன்றவில்லை.

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின் கிளர்ந்தெழுந்த உலகமயமாக்கல் காலகட்டம் பெரும் சந்தேக நிழல்கள், எதிர்க் கூச்சல்கள், பய இருளின் இடையே வளர்ந்தெழுந்தது என்றாலும், அதை நம்பிக்கையின் ஊடே பார்த்த கண்களும் உண்டு. உலகின் அழுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த பலர், ஒரு புதிய வாய்ப்புலகம் உருவாகிவருகிறது என்றும் அது சுத்திகரிக்கப்பட்ட முதலாளித்துவம் என்றும் நம்பினார்கள். இந்தியாவிலேயே தலித் அறிவுஜீவிகள், தொழில்முனைவோர் சிலர், இந்தியத் தொழில்துறையைச் சாதியப் பிடியிலிருந்து உலகமயமாக்கல் விடுவிக்கும் என்று நம்பினர். அந்நாட்களில் இடதுசாரித் தொழிற்சங்கங்கள் உலகமயமாக்கலுக்கு எதிரான போராட்டங்களைத் தீவிரப்படுத்தியபோது, அம்பேத்கரியர்கள் பலர் அதிலிருந்து விலகி நின்றது ஞாபகத்துக்கு வருகிறது.

இந்த நம்பிக்கைகளுக்கு உலகமயமாக்கம் செய்த நியாயம் என்ன? ஒரு இந்திய உதாரணம் இது. கால் நூற்றாண்டுக்கு முன்பு, காக்கி அரைக்கால்சட்டையில் ரயில் நிலையத்தைச் சுத்தப்படுத்திக்கொண்டிருந்தவர் அரசு ஊழியர். இன்று நீலநிற முழுக்கால்சட்டையுடன் தொப்பி அணிந்து, அதே ரயில் நிலையத்தைச் சுத்தப்படுத்திக்கொண்டிருப்பவர் அவரது மகன். அவரிடம் இயந்திரங்கள் இருக்கின்றன. காலில் பூட்ஸ், கையில் கையுறை. இன்றைக்கு அவர் தனியார் நிறுவனம் ஒன்றின் ஒப்பந்தக் கூலி. அரசு நிறுவனத்துக்கும் தொழிலாளிக்கும் இடையில் அயல் பணி ஒப்படைப்பு நிறுவனம் என்ற பெயரில் ஒரு தரகுக் கும்பலும் உண்டு கொழிக்கிறது.

சொத்துகளை விற்று உருவாகும் வசதியும் சௌகரியங்களும் வெகுநாள் நீடிப்பதில்லை. 2008-ல் உலகளாவியப் பொருளாதார மந்தநிலை ஏற்பட்ட போதே, ஒரு விஷயம் வெளிப்பட்டது: உலகமயமாக்கலுடனான மக்களின் தேனிலவுக் காலம் முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது; மோசமான காலம் சமீபிக்கிறது!

முதலாளித்துவத்தை உலகமயமாக்கல் ஜனநாயகப்படுத்தவில்லை. தரகர்களைப் பரவலாக்கியது. மாறாக, இந்த ஜனநாயக யுகத்துக்கேற்ப முதலாளியத்துக்கும் காலனியத்துக்கும் ஒரு புதிய வடிவம் கொடுத்தது. கலகமும் உருவாகாமல், மக்களும் செத்துவிடாமல் இருப்பதற்கான குறைந்தபட்சப் பிராண வாயுவை இந்தப் புதிய வடிவம் ஒரு சலுகையாக அளித்தது. பாரம்பரிய முதலாளியத்தின் நேரடி ஆதிக்க முறைக்கு மாற்றாக, தான் பின்னின்று அரசியலை இயக்கும் தரகு அரசியலையும் கள்ள உறவு முதலாளிகளையும் அது பெரிய அளவில் வளர்த்தெடுத்தது. உலகம் முழுவதும் அப்பட்டமான அத்துமீறல்களையும் சுரண்டல்களையும் ஆட்சியாளர்கள் துணையுடன் அது பகிரங்கமாக நிறைவேற்ற ஆரம்பித்தபோது, மக்கள் அதைப் பார்த்தும் பார்க்காதவர்களாகக் கடந்தார்கள். அன்றாட உயிர்ப் போராட்டத்தைத் தாண்டிய சிந்தனைக்குப் பிராண வாயு இடம் கொடுப்பதில்லை.

2008 அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமாவின் எழுச்சிக்குப் பின்னிருந்த ‘மாற்றம்’ என்ற சொல்லுக்கு மக்கள் மத்தியில் உருவான மந்திர மகிமை ஒரு வரலாற்று சமிக்ஞை. உலகளவில் முதலாளித்துவ அறம் பேசுபவர்களும் தாராளவாதிகளும் மிதவாதிகளும் இடதுசாரிகளும் நவயுகத்துக்கேற்ற மாற்றை யோசிப்பதற்கான ஒரு வரலாற்று அறைகூவலாகக்கூட அந்த சந்தர்ப்பத்தைக் கருதியிருக்க முடியும். அப்படி நடக்கவில்லை. விமர்சனங்களைத் தாண்டி, அவர்களால் ஒரு உருப்படியான மாற்றை முன்வைக்க முடியவில்லை. விளைவாக, சாமானிய மக்களின் பார்வை வெறிக்கூச்சலும் வெற்றுமுழக்கங்களும் கொண்ட வலதுசாரிகளை நோக்கித் திரும்பியது.

2011-ல் ஒரு ஆப்பிரிக்க கரீபியன் சுட்டுக்கொல்லப்பட்டதன் தொடர்ச்சியாக லண்டன் எரிந்தது. கலவரத்தையே ஒரு சாக்காக்கி லண்டன் மக்கள் கடைகளை அடித்து நொறுக்கினர். சூறையாடினர். முகத்தைக்கூட மறைத்துக்கொள்ளாமல், யாருக்கும் பயப்படாமல் கடைகளில் புகுந்து, சாவதானமாகத் தனக்கேற்ற பொருட்களைக் கொள்ளையடித்தனர். தங்கள் உடைமைகளை எடுத்துச் செல்வதுபோல உரிமையோடு எடுத்துச் சென்றார்கள். அப்போதே பிரிட்டன் ஆட்சியாளர்களுக்குத் தேவையான சமிக்ஞைகள் மக்களிடமிருந்து செல்ல ஆரம்பித்திருந்தன. பிரிட்டனில் முதலாளித்துவ அறம் பேசுபவர்களும் தாராளவாதிகளும் மிதவாதிகளும் இடதுசாரிகளும் நம்பிக்கையான ஒரு மாற்றை முன்வைக்க முடியாத சூழலில், இப்போது வலதுசாரிகளின் பக்கம் மக்கள் சாய்ந்திருக்கின்றனர்.

உலகமயமாக்கம் உருவாக்கியிருக்கும் மிகப் பெரிய கேடும், உலகமயப் பொருளாதாரம் எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவாலும் அது உருவாக்கியிருக்கும் இடைவெளியில் இருக்கிறது. பொருளாதாரத்தில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையில் அது உருவாக்கியிருக்கும் பெருத்த, முன்னெப்போதும் இல்லாத இடைவெளியே அரசியலில் ஆட்சியாளர்களுக்கும் ஆளப்படுகிறவர்களுக்கும் இடையிலான பாரதூரமான இடைவெளியாகப் பிரதிபலிக்கிறது.

எந்த ஒரு சமூகமும் இறுதியாகப் பதுங்குமிடம் இனவாத அரசியல். நவீன யுகத்தில் அந்த இடத்தில் தேசியவாத அரசியல் உட்கார்ந்திருக்கிறது. பிரிட்டனிலும் அதுவே நடந்திருக்கிறது. இந்தியாவில், அமெரிக்காவில், பிரிட்டனில் எங்கும் இதன் வெவ்வேறு வடிவங்களையே வெவ்வேறு முகங்களின் வழியே பார்க்கிறோம். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் முடிவின் தொடர்ச்சியாக ஸ்காட்லாந்து இனி பிரிட்டனில் நீடிக்குமா; அயர்லாந்தின் தேசிய இனப் போராட்டம் என்னவாகும்; வேல்ஸ் எப்படி முடிவெடுக்கும்; ஐரோப்பிய ஒன்றியம் இனி எவ்வளவு காலம் நீடிக்கும் என்று பல கேள்விகள் உயிர்த்தெழுந்திருக்கின்றன. இடைவெளி மேலும் மேலும் கேள்விகளை உருவாக்கும்.

ஒன்றிய அமைப்பையே தேசக் கட்டுமானமாக வரித்துக்கொண்ட இந்தியாவுக்கும் இதில் மிகப் பெரிய எச்சரிக்கை இருக்கிறது. 2008 பொருளாதார மந்தநிலையை முன்கூட்டி யூகித்த, ‘முதலாளித்துவத்தை முதலாளிகளிடமிருந்து காப்போம்’ என்று புத்தகத்தை எழுதிய ரகுராம் ராஜனை எது ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பதவியிலிருந்து வெளியேற்றும் பின்னணிகளின் மத்தியில் இருப்பது.. பிரிட்டனை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற்றும் பின்னணிகளின் மத்தியிலும் இருக்கிறது. காஷ்மீரைத் தொடர்ந்து, இப்போது நாகாலாந்துக்கும் தனிக்கொடி, தனி பாஸ்போர்ட் உரிமை வழங்கும் நிலையை நோக்கி நகர்ந்திருக்கிறது இந்திய அரசு. சுதந்திரத்துக்குப் பிந்தைய ஆறு தசாப்தங்களில் ஒரு ஒன்றியமாக இந்த அரசு, தன்னுடன் இணைந்தவர்களுக்கு இதுவரை எதைக் கொடுத்திருக்கிறது, அவர்கள் இந்த ஒன்றியத்திலேயே தொடர எதைக் கொடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறது என்பதற்கான குறியீடுகளில் ஒன்று இது.

மேலிருந்து பார்ப்பவருக்குப் பள்ளத்தாக்கு. கீழிருந்து பார்ப்பவருக்குச் சிகரம். இடைவெளிகளை வாதங்களால் மட்டுமே நீண்ட நாளைக்கு இட்டு நிரப்ப முடியாது!

சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in