வாஸ்கோ ட காமா போன்ற ஐரோப்பியக் கண்டுபிடிப்பாளர்கள் இந்தியப் பெருங்கடல் பகுதிக்குள் பிரவேசிக்கும் முன்பு, சீனாவின் மிங் வம்சத்தைச் சேர்ந்த அதிசயக் கடல் தளபதியான ட்சங் ஹ, அவரது உலகக் கடல் பயணத்தின் ஒரு பகுதியாக இப்பகுதிக்கு ஒரு பெரும் படையோடு வந்தார். 1409-ல், இலங்கையில் காலி நகரில் அவர் ஒரு மும்மொழிக் கல்வெட்டை நிறுவினார். உலக அளவில் தமது வர்த்தகம் செழிப்புற வேண்டும் என்பதற்காக, அவர் அல்லாவையும் புத்தனையும் தென்னாவரம் நாயனாரையும் அதில் வேண்டிக்கொண்டிருந்தார். அந்தக் கல்வெட்டு சீன, பாரசீக, தமிழ் மொழிகளில் இருந்தது.

அல்லாவையும் புத்தனையும் உங்களுக்குத் தெரியும். ஆனால், தென்னாவரம் கோயிலின் தெய்வத்தை உங்க ளுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. வாஸ்கோ ட காமாவை உங்களுக்குத் தெரியும். ட்சங் ஹ பற்றி? ஆசியப் பிரதேசத்தில் சீனமும் அரபியும் பாரசீகமும் வர்த்தக மொழிகளாக இருந்ததை நீங்கள் அறிந்திருக்கலாம். அந்தப் பட்டியலில் நமது தமிழும் இருந்தது என்பதை? தென்னாவரம் கோயிலின் இறைவனை மிங் வம்சத்தின் கீர்த்திமிக்க கடற்தளபதி வேண்டிக்கொள்ள பின்னிருந்த காரணம் பக்தி அல்ல; குமரிப் பெருங்கடலின் அன்றைய புவிசார் அரசியல்.

வரலாற்றின் சதுக்க பூதம்

இன்றைய உலகமயமாதல் சூழலில் தமிழர்களையும் தமிழகத்தையும் தமிழையும் பற்றி யோசிக்கும்போது, வரலாற்றின் சதுக்க பூதம் நம்மைப் பார்த்து எள்ளி நகையாடுகிறது. வண்டிவண்டியாய் மயில்பீலிகளைப் பழைய ஏற்பாடு சாலமனின் தேசத்துக்கு அளித்த காலம் முதல் ட்சங் ஹ தென்னாவரம் இறைவனை வேண்டிய காலம் வரை, எத்தனையோ நூற்றாண்டுகளாக இந்தியப் பெருங்கடலின் மையப் பகுதியின் வர்த்தக உரிமையைத் தம்மிடம் வைத்திருந்தது பண்டைய தமிழகம். அவரவர் பகுதியில் அவரவர் வர்த்தகம் என்பது அன்றைய கடல்சார் பட்டுப் பாதை நியதியாக இருந்தது. நமது இடம் நம்மிடம் இருந்தது.

14,15-ம் நூற்றாண்டுகளில் தமிழகம் தன் அரசியல் இறையாண்மையை இழந்தது. ஆனால், அந்தக் காலம் தமிழர்களின் மரபணுக்களில் பதிந்துவிட்டதை யாரும் மாற்ற இயலவில்லை. அதனால்தான் 90-களில் புதிய உலகமயமாதல் ஒன்று அமெரிக்கத் தலைமையில் ஏற்பட்டபோது, அந்தப் புதிய ஒழுங்கில் வெகு இலகுவாகத் தமிழகமும் சென்று ஒட்டிக்கொண்டது.

அன்றைய தமிழர்கள் பிரமாதமான உலக வர்த்தகர்கள். கிபி முதல் நூற்றாண்டின் கிரேக்க நூலான
‘பெரிப்ளஸ் மேரீ எரித்ரேயி' தமிழகத்தின் சேர, பாண்டிய துறைமுகங்கள் இந்தியத் துணைக் கண்டத்தின் வர்த்தக வாசல்களாக இருந்தன என்பதைக் காட்டுகிறது. தமிழ் வணிகர்கள் தங்கள் நாட்டின் விளைபொருட்களான முத்தையும் ஆடைகளையும் மட்டும் அங்கே விற்கவில்லை. இமயத்திலிருந்தும் வடகிழக்கு இந்தியாவிலிருந்தும் வாசனைத் திரவியங்களைக் கொள்முதல் செய்து, அவற்றைக் கிழக்குலகுக்கும் மேற்குலகுக்கும் ஏற்றுமதி செய்தார்கள். தமிழக, இந்திய, மேற்குலகப் பண்டங்களின் படங்களுடனான அழகான பட்டியல் ஒன்றை எடுத்துக்கொண்டுதான், தங்களுக்கு வர்த்தக வாய்ப்புகளை நல்க வேண்டும் என்று கோருவதற்காக, பிற்காலச் சோழர்களின் தூதுவர்கள் சீனப் பேரரசர்களைச் சந்தித்தார்கள். கடலோடிச் சமூகத்துக்கு வேறென்ன தெரியும்?

உலகமயமாதல் விதை

அந்த மரபணு இன்னும் இருக்கிறது. தமிழகம் நவீன காலத்தின் ஒவ்வொரு பொருளாதார யுகத்திலும் தன்னைப் புதுப்பித்துக்கொண்டே வந்திருக்கிறது. நேருவின் திட்டமிடப்பட்ட பொருளாதார யுகத்தின் அரசு, பொதுத் துறை வேலைகளைப் பெறுவதற்கு இடஒதுக்கீடு என்கிற கருவியை ஏந்தியது. பிறகு, தமிழ் அடையாள, மாநில உரிமை மனநிலையும் இடஒதுக்கீடும் மாநிலம் தழுவிய உள்கட்டமைப்பு வசதியும் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்தின. 1965 மொழிப் போராட்டத்தினூடாக நாம் தக்கவைத்துக்கொண்ட ஆங்கிலமும் 80-களில் எம்ஜிஆர் காலத்தில் தொடக்கக் கல்வியில் சத்துணவும் இடைநிலைக் கல்வியில் ப்ளஸ் டூ முறையும் உயர் கல்வியில் தனியார் பொறியியல் கல்லூரிகளும் தமிழ் நிலத்தை எதையோ எதிர்பார்த்துப் பண்படுத்திவைத்திருந்தன. 90-களில் உலகமயமாதல் வந்தபோது, அந்த நிலத்தில் விதைகள் விழுந்தன. உலகின் தகவல்நுட்பத் தேவைகளுக்கான சேவைகளை அளிக்க நம்மை நொடிப்பொழுதில் தகவமைத்துக்கொண்டோம். மெய்நிகர் பட்டுப்பாதையில் நமக்கான ஓர் இடத்தை உருவாக்கத் தெரிந்துகொண்டோம்.

இந்த அழகான சித்திரத்தின் மறு பகுதியில் நாம் அபாயகரமான தீங்குகளையும் வெகுவிரைவில் கண்டோம். மனித வளத்தின்மீதும் இயற்கையின்மீதும் உள்நாட்டுப் பொருளாதார இறையாண்மையின்மீதும் வாழ்வின் ஒவ்வொரு கூறின்மீதும் இந்த உலகமயமாதல் ஏற்படுத்திவரும் தீங்குகளை வெகுவிரைவில் கண்டறிந்தோம். அதனால்தான் எவ்வளவு வேகமாக உலகமயமாதலுக்கு உட்பட்டோமோ அதே வேகத்தில் அதன் தீங்குகளுக்கு எதிரான போராட்டங்களையும் நாம் நடத்தத் தொடங்கினோம்.

கார்ல் மார்க்ஸ்தான் சரி

உலகமயமாதல், அது செல்லும் இடங்களில் எல்லாம் உருவாக்கும் ஏற்றத்தாழ்வை தமிழகமும் இன்று காண்கிறது. உலகமயமாதலின் தொடக்க பதிற்றாண்டுகளில் (1990-2010) அந்த ஏணியில் சரசரவென ஏறிய இளைஞர்களின் சமூகப் பின்புலம் வேறு. அவர்களில் பெரும்பாலானோர் மேல், மேல்-இடைநிலைச் சாதிகளிலிருந்து வந்தவர்கள். அந்த ஏணியில் ஏறுவதற்கான வாய்ப்புகள் அற்ற அல்லது மறுக்கப்பட்ட ஒரு பெரும் சதவீத மக்கள் குறிப்பாக, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். அதனால், கொதித்துப்போயிருக்கிறார்கள். இந்த முரண்தான் இன்று தமிழ்நாட்டில் திராவிட - எதிர் தமிழ்த் தேசியம், ஆதிக்க சாதி எதிர் - தலித் அரசியல், இயற்கைவள மாஃபியா எதிர் - பசுமை இயக்கம் என உருவெடுத்திருக்கிறது. வரலாற்றில் பொருளாயத பின்புலத்தைக் கருத்தில்கொள்ளாமல் எந்த முரணையும் முழுமையாகப் புரிந்துகொள்ள இயலாது. மீண்டும் கார்ல் மார்க்ஸ்தான் சரி: ஏடறிந்த வரலாறு எல்லாம் வர்க்கப் போராட்டத்தின் வரலாறுகளே.

இதற்கிடையில், உலகமயத்தின் இறக்கைகளை அணிந்து மீண்டும் பறந்துசென்றான் தமிழன். சோழர் காலத்துக்குப் பிறகு, கூலிகளாக மட்டுமே சென்றவன், 90-களிலிருந்து சம்பளக்காரனாகச் செல்லத் தொடங்கினான். மெல்ல மெல்ல தனக்கான உலக உறவுகளையும் கலாச்சாரத்தையும் அவன் உருவாக்கிக்கொள்ளத் தொடங்குகிறான். தமிழ் அடையாளத்தை மீட்டெடுக்கிறான். இன்று உலகத் தமிழர் என்றொரு வலைப்பின்னல் இருக்கிறது. அது ஈழத்துக்கும் சென்னை வெள்ளப் பேரிடருக்கும் எதிர்வினை புரிகிறது. அது நூறு உலக நகரங்களிலிருந்துகொண்டு ‘கபாலி’யையும் செல்லினத்தையும் தரவிறக்கம் செய்கிறது. தமிழ்க் கணினி உலகம் ஒன்றே சாட்சி, உலகத் தமிழர்களின் உறவுக்கு.
சாதக பாதகங்களை ஆராய்ந்த பிறகு, மீளத் திருப்ப முடியாத இந்த உலகமயமாக்கத்தை நாம் எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்பதுதான் இப்போதைய கேள்வி. நாம் 90-களுக்கு முந்தைய காலத்துக்குத் திரும்புவது சாத்தியமில்லை. நாம் போக வேண்டிய வழி என்ன?

நமது பலம் எதில்?

நமது வரலாறே நமக்கான அந்த வழியைக் காட்டுகிறது. நவீன வர்த்தகத்தில், புதிய சமூகப் பொறுப்புகளின் வரையறையின் கீழ், நாம் நமக்கான இடத்தை அடைவது மட்டுமே நமது அக, புற நெருக்கடிகளுக்கான தீர்வாகும். தமிழகத்தில் சமூகச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான திறவுகோலும் அங்கேதான் இருக்கிறது.

உலகமயமாதல் என்பது, இனி ஒருவழிப் பாதையோ ஒற்றைப் பரிமாணமுடையதோ அல்ல. உலகப் பொருளாதாரத்துக்கு ஒவ்வொரு சமூகமும் ஆற்றக்கூடிய பிரத்யேகப் பங்களிப்புகள் உண்டு. இன்ன பொருளை, இன்ன தேசத்திலிருந்து வாங்கினால் சிறப்பு. அப்படியானால், இன்ன பொருளைத் தமிழகத்திலிருந்து வாங்கினால்தான் சிறப்பு என்று கூறும்படியான பொருட்களையும் சேவைகளையும் நாம் அளிக்க முடியுமா? முத்து, பாண்டிய தேசத்திலிருந்து வந்தால்தான் பெருமை. தேறல், யவன தேசத்திலிருந்து வந்தால்தான் கிறக்கம். கார், ஜப்பானிலிருந்தும் ஆலோசனைச் சேவைகள் அமெரிக்காவிலிருந்தும் வந்தால்தான் சரி.

உலக அங்காடியில் நமது பங்கு என்ன என்பதையும், அதை மனித/இயற்கை வளத்துக்குத் தீங்கின்றி உருவாக்கும் வழிமுறைகளையும் நாம் கண்டறிய வேண்டும். நமது பலம் எதில்? திரைப்பட நுட்பங்களா? மென்பொருளா? இயற்கை உணவா? இட்லி - தோசையா? டி-ஷர்ட்டா? எதிர்வரும் காலத்தில் எதில் நாம் கில்லாடிகளாக இருக்கப்போகிறோம்? தகவல் தொழில் நுட்பத்திலா, பசுமை ஆற்றலிலா? நாம் பட்டியலிட்டாக வேண்டும். அதில் நிபுணத்துவம் பெற்றாக வேண்டும். நாம் சுமங்கலித் திட்டங்களை அனுமதிக்கத் தேவையில்லை. நியாயச் சந்தை முறைகளை கைக்கொள்ளும் வணிகங்களுக்கே இனி எதிர்காலம் உண்டு. அதே சமயத்தில்,
‘அவுட்சோர்ஸிங்' முறையில் மட்டுமின்றி, தமிழகத்தின் பிராண்டுகளை உருவாக்கி எடுத்துச்செல்ல வேண்டும்.

தமிழர்களுக்கான அலிபாபா

தமிழ்நாட்டில் இன்று நிலவும் பதற்றங்கள் அனைத்துக்கும் பொருளாதாரமே தீர்வாகிவிட முடியாது. ஆனால், பொருளாதார அடிப்படையைப் புதுப்பிக்காமல் எந்தச் சமூக மேம்பாட்டையும் காண முடியாது, பதற்றத்தையும் தவிர்க்க முடியாது. இன்றைய தமிழக இளைஞர்கள் - குறிப்பாகச் சிறு நகர, கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு - உற்பத்தி சார்ந்த வேலைகள் பெரிதும் இல்லை. மத்திய - மாநில அரசுகளின் திட்டங்களும் மயக்க மருந்துகளும் நம்மைக் கரைசேர்க்கப் போவதில்லை. அதேசமயம், வளர்ச்சி என்ற பெயரால் இழைக்கப்பட்டிருக்கிற கொடுமைகள் நம்மைத் திசைபுரியாத குழப்பத்துக்கு உள்ளாக்கியிருக்கின்றன. இத்தனையையும் மீறி நாம் பொருளாதார மேம்பாட்டை அடைய வேண்டும் என்றால், அது சாதாரண விஷயம் அல்ல. ஆனால், இது நமது பிரத்யேகமான சிக்கல் அல்ல, உலகம் முழுக்கவே இதுதான் சிக்கல்.

இன்றைய பாணியிலான உலகமயமாதல்தான் நமக்குப் புதிது. ஆனால், உலகப் பொருளாதாரம் என்பது மிகப் பழையது. அதில் வேறு சாத்தியங்களைத் தேடி நாம் நமது கப்பல்களைச் செலுத்தியாக வேண்டும். உலகிலுள்ள எல்லாச் சமூகங்களுமே உலகப் பொருளாதாரத்தில் பங்கெடுப்பதற்கான உரிமைகளும் வாய்ப்புகளும் உள்ளவைதான். நாம் நமக்கான பங்கை விட்டுக்கொடுத்துவிட முடியாது. வலுவான ஏற்றுமதிப் பொருளாதாரம் இல்லாமல், எந்த நாடும் முன்னேறிவிட முடியாது. தற்சார்புப் பொருளாதாரம் என்பது கதவை உள்ளிருந்து சாத்திக்கொள்வதல்ல.

ட்சங் ஹவின் மும்மொழிக் கல்வெட்டில் தமிழ் இடம்பெற்றதைப் போல, அதே சீனாவைச் சேர்ந்த ஜாக் மாவின் உலக வர்த்தக இணையதளமான அலிபாபா.காமில் தமிழ் இடம்பெறும் ஒரு நாளுக்காக அல்லது தமிழர்களுக்கான ஒரு அலிபாபா.காம் உருவாகும் ஒரு நாளுக்காக நாம் காத்திருக்கிறோம். காவிரிப்பூம் பட்டினத்தில் ஏற்றுமதி, இறக்குமதி நடந்ததை பட்டினப் பாலையில் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியதை நினைவுகூர்வோம். உலக வணிகம் அவ்வளவு இயல்பானது தமிழனுக்கு. வெறும் ஆறு, ஏழு நூற்றாண்டுகள்தான் அதை நாம் தவறவிட்டிருக்கிறோம். இந்த உலகம் உலகமயமாவதற்கு முன்பே உலகமயமான ஒரு கலாச்சாரத்துக்குச் சொந்தக்காரனாக தமிழனுக்கு ஒரு மீளெழுச்சி அசாத்தியமானதல்ல.

- ஆழி செந்தில்நாதன் 
மொழி நிகர்மைக்கும் உரிமைக்குமான பரப்பியக்கத்தின் (CLEAR) கூட்டக ஒருங்கிணைப்பாளர், எழுத்தாளர், தொழில்முனைவோர்.

தொடர்புக்கு: zsenthil@gmail.com