தொண்ணூறுகளின் மத்தியில் இந்தியாவின் கிராமங்கள் வரை பரவியிருந்த அரசியல் நகைச்சுவைகளில் ஒன்று, அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ் ஒரு ‘மெளனச் சாமியார்’ என்பது. தமிழ் உட்பட எட்டு இந்திய மொழிகளும், பிரெஞ்சு உள்ளிட்ட ஐந்து அந்நிய மொழிகளும் அறிந்த பெரும் பண்டிதரான நரசிம்ம ராவ், அனைத்து மொழிகளிலும் மெளனம் காத்தவர் என்று நகைச்சுவையாகக் குறிப்பிடுபவர்களும் உண்டு. உண்மையில், 1990-களின் தொடக்கத்தில் வயது காரணமாக அவர் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்த நிலையில், ஆன்மிக அமைப்புகளிலிருந்து அழைப்பு வந்தது. குறிப்பாக, குற்றாலத்தில் உள்ள மெளனசாமி மடத்திலிருந்து அவருக்கு அழைப்பு வந்தது. அதே நரசிம்ம ராவ் அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவின் வளர்சிக்கான பாதையை அகலத் திறந்துவைத்தார் என்பதுதான் வரலாற்றின் சுவாரஸ்ய முரண்!

ஆபத்தில்லாதவர்

இந்திரா அமைச்சரவையில் சிறிதுசிறிதாக முன்னேறி மேலே சென்ற ராவ், ராஜீவ் அமைச்சரவையிலும் முக்கியமான பதவிகளை வகித்தார். எந்த விதத்திலும் தலைமைக்கு ஆபத்து தராதவராக, கொடுத்த வேலையைத் திறம்படச் செய்பவராக இருந்தார் நரசிம்ம ராவ். அப்படியிருந்தும்கூட, 1991 தேர்தலில் 70 வயதான நரசிம்ம ராவ் கழற்றிவிடப்பட்டார். ராஜீவ் படுகொலைக்குப் பின்னர், காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. சோனியா காந்தி, கட்சித் தலைமையைக் கையில் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை.

கோஷ்டி கோஷ்டியாக ராஜாங்கம் நடத்திய தலைவர்களை விட்டுவிட்டு கோஷ்டியைக் கையில் வைத்திராத நரசிம்ம ராவின் வசம் அந்தப் பதவி சென்று சேர்ந்தது. திறம்படக் காய்களை நகர்த்தி, காங்கிரஸின் தலைவராகி, தேர்தலில் நிற்காமலேயே பிரதமர் ஆனார் நரசிம்ம ராவ்.

திண்டாட்டத்தில் இந்தியா

பஞ்சாப், காஷ்மீர் மாநிலங்களில் தீவிரவாதப் பிரச்சினை காரணமாகத் தேர்தல் நடைபெறவில்லை. தேர்தல் நடைபெற்ற 521 இடங்களில் காங்கிரஸ் 232 இடங்களை மட்டுமே பெற்று, சிறுபான்மை அரசை உருவாக்கக்கூடியதாக இருந்தது. பாஜகவும் தேசிய முன்னணியும் இடதுசாரிகளும் சேர்ந்து, காங்கிரஸைவிட அதிக இடங்களைக் கையில் வைத்திருந்தனர்.

ஆட்சியைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் நரசிம்ம ராவ் இருந்தார். ஆனால், கட்சியிலேயே அவர்மீது பலருக்கும் மரியாதையும் அபிமானமும் இருக்கவில்லை. அர்ஜுன் சிங், சரத் பவார் போன்றவர்கள் ராவைக் கவிழ்க்கும் எண்ணத்தில் இருந்தனர். சோனியா தலை அசைத்திருந்தால் ராவைத் தூக்கிவிட்டு அந்த இடத்தில் வேறு யாரையாவது உட்கார வைத்திருக்க முடியும். கட்சி, ஆட்சி இரண்டிலுமே தடுமாற்றம். ஆனால் அதைவிட மோசமாக, தேசப் பொருளாதாரமே ஆட்டம் கண்டிருந்தது. 1990 வளைகுடாப் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்திருந்தது. வி.பி. சிங், சந்திரசேகர் தலைமையிலான அரசுகள் நிலையற்றவையாக இருந்ததால், வெளிநாட்டு இந்தியர்கள் இந்தியாவுக்குத் தம் பணத்தை அனுப்பத் தயாராக இல்லை.

1984-1989 காலகட்டத்தில் ராஜீவ் நிறைய அந்நியக் கடன்களை வாங்கியிருந்தார். அவற்றை 1991-ல் அடைக்க வேண்டியிருந்தது. இவை எல்லாமாகச் சேர்ந்து, இந்தியாவிடம் வெறும் இரண்டு வாரங்களுக்குத் தேவையான அந்நியச் செலாவணி மட்டுமே கையிருப்பில் இருந்தது. குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்குத் தேவையான கையிருப்பாவது இருக்க வேண்டும். எனவே, இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்த தங்கம் அந்நிய நாட்டில் அடகு வைக்கப்பட்டு, அந்நியச் செலாவணிக் கடன் பெறப்பட்டது.

புதிய பொருளாதாரக் கொள்கை

இந்தியப் பொருளாதாரத்தை மீட்க வேண்டும் என்றால், இந்தியா அதுவரையில் பின்பற்றிவந்த சோஷலிசக் கொள்கைகளைத் தூர எறிய வேண்டும். முற்றிலும் மாறுபட்ட, திறந்த பொருளாதாரக் கொள்கைகளை முன்மொழிய வேண்டும். அவற்றைச் செயல்படுத்த சரியான ஆட்களைக் கொண்டுவர வேண்டும். சோஷலிசத்திலேயே ஊறிவந்திருக்கும் தன் அமைச்சரவையையும் கட்சி உறுப்பினர்களையும் சமாளிக்க வேண்டும். தம்மைக் கவிழ்க்க நேரம் பார்த்துக்கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகளைச் சமாளிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்புகளில் ஜெயிக்க வேண்டும்.

புதிய பொருளாதாரக் கொள்கைகளை அதிவேகத்தில் அமல்படுத்தி, அந்நியச் செலாவணியை அதிகப்படுத்தி, பொருளாதாரத்தை முடுக்கி விட்டு, உற்பத்தியை அதிகரித்து, வரிகளைச் சீராகச் சேகரித்து, அரசு வருமானத்தை அதிகப் படுத்தி, கிடைக்கும் வருவாயில் மக்களுக்கான நலத் திட்டங்களைத் தர வேண்டும். தேவையற்ற மானியங்களை நிறுத்த வேண்டும். பழைய தொழிலதிபர்களுக்கு, அந்நிய முதலீடுகளைக் கண்டு அஞ்சாதீர்கள் என்று நம்பிக்கை அளிக்க வேண்டும். புதிய தொழில்முனைவோர்களை ஊக்குவிக்க வேண்டும். வேலை வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும். இவற்றுக்கிடையே எதிர்க்கட்சிகள் செய்யும் குழப்பங்களை எதிர்கொள்ள வேண்டும்.

ராவ் அருமையான குழு ஒன்றை உருவாக்கினார். நிதியமைச்சராக மன்மோகன் சிங், வர்த்தக அமைச்சராக ப.சிதம்பரம் போன்ற திறமைசாலிகள். அவர்களுக்கு உதவி செய்ய அமர்நாத் வர்மா, நரேஷ் சந்திரா, மாண்டேக் சிங் அலுவாலியா, ஜெய்ராம் ரமேஷ், அஷோக் தேசாய், ராகேஷ் மோகன் போன்ற அதிகாரிகள். தொழில்துறை அமைச்சகத்தை ராவ் தன் கையிலேயே வைத்துக்கொண்டார்.

என்னென்ன சீர்திருத்தங்கள்?

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இரண்டு கட்டங்களில் படிப்படியாகக் குறைக்கப்பட்டது. இந்த மாற்றம் காரணமாக ஏற்றுமதியாளர்கள் மிகுந்த பயன் அடைந்தனர். இதன் காரணமாக, ஏற்றுமதியாளர்களுக்கு அரசு அளித்துவந்த மானியம் நிறுத்தப்பட்டது.

24 ஜூலை 1991 அன்று புதிய தொழில் கொள்கை அறிவிக்கப்பட்டது. அதுவரையில், யார் எதை உற்பத்தி செய்யலாம் என்பதை அரசே தீர்மானித்துவந்தது. சில துறைகள் தவிர, இந்தக் கொள்கை முற்றிலுமாக நீக்கப்பட்டது. அரசுத் துறை நிறுவனங்கள் மட்டுமே இயங்கலாம் என்று இருந்த துறைகள் குறைக்கப்பட்டன. பிற துறைகளிலும் தனியார் முதலீடுகளுக்குத் தடையில்லை என்று ஆனது.

ஏகபோகத் தடுப்புச் சட்டங்கள் தளர்த்தப்பட்டன. நிறுவனங்கள் பெரிதாக ஆக முடியாமல் இருந்த செயற்கையான தடைகள் நீக்கப்பட்டன. பல துறைகளில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டது.

அதே தினத்தில் நிதியமைச்சர் மன்மோகன் சிங் நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பித்தார். பொருட்களை இறக்குமதி செய்வதில் இருந்த பல்வேறு தடைகள் நீக்கப்பட்டன. ஏற்றுமதியை ஊக்குவிக்கும் திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. உரம், சர்க்கரை போன்றவை மீதான மானியங்கள் குறைக்கப்பட்டன.

பிற சீர்திருத்தங்கள்

மேலே சொன்ன சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்திய பின் 1992-ம் ஆண்டின் இடையிலேயே அந்நியச் செலாவணிக் கையிருப்பு மூன்று மாதத் தேவையைத் தாண்டிவிட்டது. ராவ் நினைத்திருந்தால், அப்படியே பழைய சோஷலிசப் பாதைக்குத் திரும்பியிருக்க முடியும். ஆனால், கம்யூனிஸத்தைக் கடைப்பிடித்த சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியை அவர் பார்த்திருந்தார். சீனாவின் டெங் சியோபிங் சந்தைப் பொருளாதாரத்தைக் கையில் எடுத்து, சீனாவின் நிலையை வெகுவாக உயர்த்தியிருந்ததைக் கவனித்திருந்தார். சிங்கப்பூர், தென் கொரியா, தைவான், தாய்லாந்து, மலேசியா போன்ற தெற்காசிய நாடுகளில் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் ஏற்பட்டிருந்த முன்னேற்றங்களைக் கவனித் திருந்தார்.
அரசுக் கட்டுப்பாட்டின் மூலம் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தவே முடியாது என்பதையும் தொழில் முனைவோரின் ஈடுபாடு இல்லாமல் தொழில் வளர்ச்சி சாத்தியமே இல்லை என்பதையும் ராவ் மிகச் சரியாகப் புரிந்துகொள்ளத் தொடங்கியிருந்தார். அதனாலேயே பழைய சோஷலிச மாதிரிக்கு ராவ் திரும்ப விரும்பவில்லை.

பங்குச்சந்தைச் சீர்திருத்தம்

இந்தியாவில் பங்குச் சந்தை என்ற ஒன்று புழக்கத்தில் இருந்தாலும் அதில் நிறுவனப் பங்குகளைப் பட்டியலிடுவது அரசின் கையிலேயே இருந்தது. நரசிம்ம ராவ் இதனை மாற்றினார். சந்தையே பங்கின் விலைகளைத் தீர்மானிக்கும் நிலை உருவாக்கப்பட்டது. ஹர்ஷத் மேத்தா ஊழல் போன்றவை இந்தக் காலகட்டத்தில் நடந்ததைத் தொடர்ந்து, அவற்றைத் தடுக்கும் முயற்சியாக, இவ்விஷயத்தில் கண்காணிப்பு வளையம் இறுக்கமானது. பதிவுசெய்யப்பட்டவர்கள் மட்டுமே பங்குச் சந்தையில் தரகர்களாக இருக்க முடியும் என்ற முறை அமல்படுத்தப்பட்டது. அந்நிய நிதி நிறுவனங்கள் இந்தியப் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வது அனுமதிக்கப்பட்டது.

இன்ஃபோசிஸ் மென்பொருள் நிறுவனம் பங்குச் சந்தை மூலம் பணம் திரட்ட முடிந்தது இந்தச் சீர்திருத் தங்களால்தான். இந்திய மென்பொருள் துறை மிகப் பெரிய அளவு விரிவடைய இந்தச் சீர்திருத்தங்களே காரணம்.

1993-ல், தனியார் வங்கிகள் அனுமதிக்கப்பட்டன. அரசுத் துறை மட்டுமே இயக்கிவந்த மின் உற்பத்தி, சாலைகள் அமைத்தல், பாலங்கள் கட்டுதல் போன்றவற்றில் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டன. உள்கட்டுமானம் பெரிய அளவு விரிவடைந்தது. தொலைக்காட்சி சேவை, விமான சேவை, செல்பேசி சேவை ஆகிய துறைகளில் தனியார் முதலீடு ஊக்குவிக்கப்பட்டது.

இறுதியாக, உலக வர்த்தக அமைப்பில் இந்தியா உறுப்பு நாடாகியது. உலக வர்த்தகத்தில் இந்தியா முக்கியமான பங்காற்றத் தொடங்கியது. ஏற்றுமதி, இறக்குமதி இரண்டுமே பெருகின.

1994, 1995, 1996 நிதியாண்டுகளில் இந்தியாவின் உற்பத்தி வளர்ச்சி விகிதம் முறையே 6.7, 7.6, 7.5% என்று இருந்தது. முன்னெப்போதும் இருந்திராத வளர்ச்சி இது. அந்நியச் செலாவணிக் கையிருப்பு 1991-ல் இருந்ததைப் போல 15 மடங்கு அதிகரித்திருந்தது. வேலைவாய்ப்பு பெருமளவு அதிகரித்தது. சம்பளங்கள் தனியார் துறையில் மட்டுமல்லாது, அரசுத் துறையிலும் அதிகரித்தன. இதன் காரணமாக வரி வருவாய் அதிகரித்தது. வரி வருவாய் அதிகரித்த காரணத்தால், மக்களின் வாழ்வு நிலை மேம்பட்டது. எனினும், 1996 தேர்தலில் நரசிம்ம ராவ் தோற்கடிக்கப்பட்டார்.

எப்படிச் சாதித்தார்?

கட்சிக்குள் எழும்பிய எதிர்ப்புகளை, நேரு, இந்திரா, ராஜீவ் பெயர்களைக் கொண்டே ராவ் அடக்கினார். எல்லாத் திட்டங்களுக்கும் அடிப்படை நேரு, இந்திராவின் கருத்துகள்தான் என்று ராவ் சொன்னதை காங்கிரஸார் பெரும்பாலும் நம்பினர். அவர்களுடைய சிந்திக்கும் திறன் அதற்குமேல் இருக்கவில்லை. அமைச்சரவையில் ஏற்பட்ட எதிர்ப்புகளையும் ராவ் திறம்படக் கையாண்டார். சோனியாவை வாரம் ஒருமுறை அவர் வீட்டுக்கே சென்று சந்தித்து, அவரிடமிருந்து எந்தப் பிரச்சினையும் ஏற்படாமல் சில ஆண்டுகளுக்குப் பார்த்துக்கொண்டார்.

பாஜகவின் எதிர்ப்பைச் சமாளிக்க அவர்களிடம் இடதுசாரிகள் பற்றிய எச்சரிக்கையை மறைமுகமாக உணர்த்துவதைத் தொடர்ந்து கடைப்பிடித்தார். அதேபோல், தனக்குப் பிறகு பாஜக ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று இடதுசாரிகளுக்கு மெளன எச்சரிக்கையும் விட அவர் தயங்கவில்லை.

தேர்தல் தோல்விக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சி நரசிம்ம ராவை ஒட்டுமொத்தமாகக் கைகழுவியது. கட்சியின் அதிகாரபூர்வ வரலாற்றிலிருந்து அவருடைய பெயர் அழிக்கப்பட்டது. அவர் இறந்ததும் அவருடைய பூத உடல்கூடக் கட்சி அலுவலகத்துக்குள் அனுமதிக்கப் படவில்லை. அவரை எவ்வாறெல்லாம் அவமதிக்க முடியுமோ அவ்வாறெல்லாம் சோனியா காந்தி ஆதரவாளர்கள் நடந்துகொண்டனர். நடந்துகொள்கின்றனர்.

கடந்த 25 ஆண்டுகளில் இந்தியா அடைந்துள்ள வளர்ச்சி குறிப்பிடத் தக்கது. இந்த வளர்ச்சி நாட்டில் அனைவரையும் சென்றடையவில்லை என்பதும், ஏற்றத் தாழ்வு அதிகரித்திருக்கிறது என்பதும் உண்மைதான். ஆனால், 90-களுக்கு முன்பு இருந்ததைவிடவும், இன்றைக்கு மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது. அதற்கான ஆதார விசையாக நரசிம்ம ராவ் இருந்தார் என்பதே வரலாறு!

- கட்டுரையாளர் பதிப்பாளர், எழுத்தாளர்.