Dec 27, 2015

அணையில் பதிந்திருப்பது சேறல்ல ஆட்சியாளர்கள் மீதான கறை!

ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு

சோழர் கட்டிய கல்லணையில் தூர் இல்லை. பாண்டியர் கட்டிய மருதூர் அணைக்கட்டில் தூர் இல்லை. பழந்தமிழர் கட்டிய காலிங்கராயன் அணைக்கட்டு, கொடிவேரி அணைக்கட்டு எவற்றிலும் தூர் இல்லை. காமராஜர் கட்டிய அணைகளிலும் பெரியதாகக் குறை சொல்ல முடியாது. அதேசமயம் கடந்த 1982 தொடங்கி 2001-ம் ஆண்டு வரை இரு திராவிடக் கட்சிகளின் ஆட்சியிலும் மாறி மாறி சோத்துப்பாறை என்கிற நீர்த்தேக்கம் ஒன்று கட்டப்பட்டது. சுமார் 20 ஆண்டுகள் இழுத்தடித்து கட்டி முடிக்கப்பட்டது அணை இது. அவ்வளவு ஆண்டுகளாக கட்ட வேண்டிய பெரிய அணைக்கட்டும் அல்ல அது. சிறு நீர்த்தேக்கம் மட்டுமே அது. அதில்தான் இன்று தூர் ஏறி துர்நாற்றம் அடிக்கிறது. தவறு தண்ணீரில் இல்லை. பொறியாளர்கள் மீதும் இல்லை. அநாகரிக அரசியலால் உருவான துர்நாற்றம் அது.

கொடைக்கானல் மலையில் இருந்து உற்பத்தியாகும் வராக நதி பேரிஜம் நீர்த்தேக்கம் வழியாக வைகை நதிக்கு வந்துகொண்டிருந்தது. 1982-ல் எம்.ஜி.ஆர். ஆட்சியில் இருந்தார். அப்போது பெரியகுளம் அருகே லட்சுமிபுரம், கைலாசப்பட்டி, கல்லுப்பட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 1040 ஏக்கரில் புதிய நஞ்சை ஆயக்கட்டு அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி பெரியகுளத்தில் இருந்து சுமார் 7 கி.மீ தொலைவில் சோத்துப்பாறை என்கிற இடத்தில் வராக நதியில் அணை கட்டும் பணிகள் தொடங்கின. இடம் வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்ததால் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அனுமதி வாங்குவது உட்பட தொடக்கக் காலத்தில் சில சில சிக்கல்கள் இருந்தன.

ஆனால், எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் குழப்பங் களால் திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. அதிமுக மற்றும் திமுக அடுத்தடுத்த ஆட்சி அமைத்தாலும் 14 ஆண்டுகள் இந்தத் திட்டத்துக்கு பெரியளவில் ஒன்றும் நிதி ஒதுக்கவில்லை. 96-ம் ஆண்டுதான் இந்தப் பகுதியை நேரில் பார்வையிட்ட அன்றைய முதல்வர் கருணாநிதி இந்தத் திட்டத்துக்காக ரூ.35 கோடியை ஒதுக்கினார். ஒருவழியாக பணிகள் மீண்டும் நடந்தன. 2000-ம் ஆண்டில் 100 மில்லியன் கனஅடி தண்ணீரை தேக்கும் வகையில் கிட்டத்தட்ட பணிகள் இறுதி கட்டத்தை எட்டியிருந்தன. அதேசமயம் அணைக்காக வெட்டிய மண், பாறைகள், வனங்களில் அப்புறப்படுத்திய மரம், செடிகள் எல்லாம் அணைக்குள் மலைபோல தேங்கியிருந்தன. அவற்றை அப்புறப்படுத்திவிட்டு, சில இடங்களில் கல் பதிக்கும் பணிகளைச் செய்ய வேண்டியதுதான் மிச்சம். இன்னும் சில இடங்களில் மணல்போக்கிகளை அமைக்கலாம் என்று பொறியாளர்கள் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

திட்டத்தை மீண்டும் மறந்துப் போனார்கள். உள்ளே மலைபோல் கொட்டப்பட்டிருந்த மண், கற்கள், மரங்கள் எதுவும் அப்புறப்படுத்தப்பட வில்லை. விவசாயிகள் எவ்வளவோ போராட்டங்களை நடத்தினார்கள். அசைந்துகொடுக்கவில்லை அதிகாரிகள். அதேசமயம் மழை பெய்யத் தொடங் கியது. அணையில் தண்ணீர் ஏறியது. ஏற்கெனவே அணையில் மண், பாறை மற்றும் குப்பைகள் மேடிட்டிருந்ததால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. வேறு வழியில்லாமல் அணையைத் திறக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போதும் ஆட்சியாளர்கள் யாரும் இங்கு எட்டிக்கூட பார்க்கவில்லை. அன்றைக்கு அதிகாரத்தின் உச்ச பொறுப்பில் இருந்தவரின் சொந்த மாவட்டம் இது. கடைசியில் பெரும் அரசியல் சர்ச்சைகளுக்கு இடையே மாவட்ட ஆட்சியர் வந்து அணையைத் திறந்தார்.

அதன் பின்பு 14 ஆண்டுகளில் அணையில் ஏராளமான சேறு, மணல் சேகரமாகிவிட்டது. பலமாக ஒருமழை பெய்தால் அணை நிரம்பிவிடும். அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் தாமரைக்குளம், பாப்பையன்பட்டி, பொய்குளம் உள்ளிட்ட கண்மாய்கள் வழியாக வராக நதிக்குச் செல்கிறது. அணையின் கொள்ளளவு சுமார் 70 சதவீதம் குறைந்துவிட்டதாகச் சொல்கிறார்கள் விவசாயிகள். இந்தத் துர்நாற்றம் அடிக்கும் தண்ணீர்தான் பெரியகுளம் நகராட்சி மற்றும் 15 ஊராட்சிகளின் குடிநீர்த் திட்டங்களுக்கு சுத்திகரிக்கப்பட்டுப் பயன்படுத்தப் படுகிறது. அரசியல் காழ்ப்புணர்வு ஓர் அணையை எப்படியெல்லாம் அலங் கோலமாக்கியிருக்கிறது என்பதற்கான உதாரணம் சோத்துப்பாறை அணை.

சுமார் 6 மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல் அருகே நெய்க்காரப்பட்டி கிராமத்தில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. யாருமே எதிர்பார்க்காத பெரும் வெள்ளம் அது. சாலைகள் அனைத்தும் மூழ்கிவிட்ட நிலையில் மக்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.

வெள்ளத்துக்குக் காரணம் தூர் வாரப்படாத குதிரையாறு அணை என்கிறார்கள் விவசாயிகள். கொடைக்கானல் மலையில் இருந்து வரும் குதிரையாற்றில் பழநி கோயிலின் தெற்கே கட்டப்பட் டிருக்கிறது குதிரையாறு அணை. பழநி, நெய்க்காரப்பட்டி, சின்ன களையம் புத்தூர், பாப்பம்பட்டி, காவலப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 6,500 ஏக்கர் இந்த அணையின் மூலம் பாசனம் பெறுகின்றன. அணை மிகவும் சிறியது என்பதாலும் அணையிலும் தூர் மேடிட்டிருப்பதாலும் கொள்ளளவு குறைந்து ஒருநாள் கூட இதில் தண்ணீர் தேங்குவது இல்லை. இப்படி வேகமாக வழிந்தோடிய வெள்ளம்தான் நெய்க்காரப்பட்டியைச் சூழ்ந்தது. சமீபத்தில் உலக வங்கியின் நிதியில் ரூ.1 கோடியில் இந்த அணையின் கரை களைப் பலப்படுத்துவது, கதவுகளைச் சீரமைப்பது போன்றப் பணிகளை செய்தார்கள். ஆனால், அணையைத் தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என்கி றார்கள் விவசாயிகள்.

கொடைக்கானல் மலையில் இருந்து உருவாகும் இன்னொரு ஆறான பரப்பலாற்றில் ஒட்டன்சத்திரத்துக்கு மேலே 1974-ம் ஆண்டு வனத்துக்குள் கட்டப்பட்டது பரப்பலாறு அணை. 90 அடி உயரம் கொண்ட இதில் 197.98 மில்லியன் கனஅடி தண்ணீரை தேக்கலாம். இந்த அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் முட்டு சமுத்திரம், பெருமாள் குளம், பாப்பாகுளம், ஓட்டைக்குளம், முத்துகோபால சமுத்திரம், காவேரியம்மாபட்டி குளம், சடையகுளம், செங்குளம், கருங்குளம் உள்ளிட்ட குளங்களை நிரப்புகிறது. ஆனால், இன்று இதில் சுமார் 50 சதவீதம் தூர் மேடிட்டுக் கிடக்கிறது. இதனால், அணை ஒரு மாதத்துக்குள் வற்றிவிடுகிறது.

மேற்கண்ட அணைகள் எல்லாம் சிறு துளி உதாரணங்கள் மட்டுமே. மேட்டூர் அணை தூர் வாராததால் கடந்த 40 ஆண்டுகளில் கடலுக்குச் சென்ற மிகை நீர் 3,025 டி.எம்.சி. இதன் ஆண்டு சராசரி 75 டி.எம்.சி. தமிழகத்தில் அணைகள் தூர் வாராததால் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும் வெள்ளத்தில் சராசரியாக கடலில் கலக்கும் மிகை நீர் 259.76 டி.எம்.சி. இது அரசு தெரிவிக்கும் புள்ளிவிவரம். உண்மையில் வெள்ளக் காலங்களில் 400 டி.எம்.சி. கடலில் கலக்கிறது என்கிறார்கள் நீரியல் நிபுணர்கள். தமிழகத்தின் 25 நீர்த் தேக்கங்களின் மொத்தக் கொள்ளளவு 5,738.15 மில்லியன் கனமீட்டர். ஆனால், இதில் சேற்றின் அளவு மட்டும் சுமார் 2,000 மில்லியன் கனமீட்டர்.

இது வெறும் சேறு மட்டுமல்ல. குளறுபடியின் குறியீடு இது. ஊழலின் குறியீடு இது. அலட்சியத்தின் குறியீடு இது. அழிவின் குறியீடு இது. எல்லாவற்றையும்விட சுமார் அரை நூற்றாண்டாக தமிழகத்தை ஆட்சி செய்துகொண்டிருக்கும் திராவிடக் கட்சிகளின் மீது படிந்த கறையின் குறீயிடு இந்தச் சேறு! 

No comments:

Post a Comment