Dec 27, 2015

மதுரையின் கூவம் கிருதுமால் நதி!

மதுரை எல்லீஸ் நகரில் ஓடும் கிருதுமால் நதி. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
மதுரை எல்லீஸ் நகரில் ஓடும் கிருதுமால் நதி. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு

நதிகள் இணைப்புத் திட்டம் தொடங்கி கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் வரை ஏராள மான திட்டங்கள் தீட்டப்படுகின்றன. சொல்லப்போனால் நாம் புதியதாக எந்தத் திட்டத்தையும் தீட்டத் தேவையில்லை. நமக்கு என்னென்ன தேவை என்பதை நமது முன்னோர் கள் முறையாக செய்து வைத்துவிட்டார்கள். நாம் அவற்றை அழிக்காமல் இருந்தாலே போதும்.

பண்டைய தமிழர்களின் நீர்ப் பாசனக் கட்டுமான தொழில்நுட்பத் திறமைக்குக் கிடைத்த முதல் ஆதாரம் வைகை நதியில் கண்டெடுக்கப்பட்ட அரிகேசரி கால்வாய் தொடர்பான கல்வெட்டுதான். கி.பி. 690-ம் ஆண்டு பாண்டிய மன்னன் அரிகேசரியால் வைகை ஆற்றில் சோழவந்தான் அருகே வாய்க்கால் வெட்டப்பட்டது என்று ஏற்கெனவே பார்த்தோம். வைகையின் உபரி நீர் வீணாகக் கூடாது என்பதற்காக வெட் டப்பட்ட அந்தக் கால்வாயை பாண்டியர்கள் நாகமலையில் உற்பத்தியாகி ஓடும் காட்டாறான கிருதுமாலுடன் இணைத்தார் கள். அந்த வகையில் தமிழர்களின் மிகத் தொன்மையான பாசனக் கட்டமைப்பு வைகை - அரிகேசரி கால்வாய் - கிருதுமால் நதி இணைப்பு திட்டம்.

சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத் தில் இருந்து இடதுபுறமாக பிரியும் ஒரு கால்வாய் தேனூர், திருவேடகம், சமய நல்லூர், பரவை, வண்டியூர் ஆகிய பகுதிகள் வழியாக சென்று கண்மாய்களை நிரப்பியது. வலதுபுறம் செல்லும் கால்வாய் தென்கரை கால்வாய், நிலையூர் கால்வாய், கொடிமங்கலம், மாடக்குளம், கீழமாத்தூர், துவரிமான், கோச்சடை, அச்சம்பத்து, பல்லவ ராயன், அவனியாபுரம், சிந்தாமணி, ராவுத்த பாளையம், ஆரப்பாளையம், அனுப்பானடி, பனையூர், சொட்டதட்டி, கொட்டியனூர், கொந்தகை, விறகனூர் வழியாக சென்று கண்மாய்களை நிரப்பியது. மற்றொரு பக்கம் பிரியும் கால்வாயின் இடதுபுறம் சக்கி மங்கலம், குன்னத்தூர், சாக்குடி, பூவந்தி, அங்காடிமங்கலம், மாடப்புறம், கணக்கன்குடி, பதினெட்டான் கோட்டை, கரிசக்குளம் கண்மாய்களை நிரப்பியது.

வலதுபுறம் செல்லும் கால்வாய் புளியங்குளம், மணலூர், திருப்புவனம் வரையில் கண்மாய்களை நிரப்பியது. இப்படியாக சுமார் 86 கண்மாய்கள் வைகை - அரிகேசரி - கிருதுுமால் இணைப்பு மூலம் தண்ணீரைப் பெற்றன. மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்றன. கிருதுமாலின் மொத்த நீளம் 200 கி.மீ. மதுரை நகருக்குள் மட்டும் இது சுமார் 30 கி.மீ ஓடுகிறது. இறுதியாக கிருதுுமால் ராமேசுவரம் அருகே கடலில் கலக்கிறது.

பாசனத்துக்கு மட்டுமல்ல, பக்திக்கும் பெயர் பெற்றது கிருதுமால் நதி. கூடலழகர் கோயில் அருகே ஓடிய கிருதுமாலின் தண்ணீரில்தான் கூடலழகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டிருக்கிறது. கூடற்புராணம் கிருதுமாலை கூடலழகர் அணிந்த மாலை என்று போற்றுகிறது.
 
‘வேகமாதலின் வேகவதி என்றும்
மாகம் வாய்ந்ததனால் வையை என்றும்தார்
ஆகலால் கிருதுமாலையதாம் என்றும்
நாகர் முப்பெயர் நாட்டு நதியரோ’

- என்கிறது அந்தப் பாடல்.
 
அதாவது வேகமாக பாய்வதால் வேகவதி என்றும், திருமாலின் ஒரு திருவடி சத்தியலோகம் சென்று அங்கிருந்து நீர் வையத்தில் விழுந்ததால் வையை என்றும், அதன் ஒரு பிரிவு கூடலழகருக்கு மாலையாக அணிவிக்கப்பட்டது. அதுவே கிருதுமாலை என்கிறது கூடற்புராணம்.

மதுரையில் இப்போதும் தைப்பூசத்துக்கு முதல் நாள் அறுப்புத் திருவிழா நடக்கும். சுந்தரேஸ்வரரும் அம்மனும் கோயிலில் இருந்து புறப்பட்டு சிந்தாமணி கிருதுமால் நதிக்கரைக்கு வருவார்கள். நதிக்கரையில் மீனாட்சி அம்மனே நெல் அறுவடை செய்கிறாள் என்பதை உணர்த்தும் சடங்கு இது. இதுமட்டுமல்ல, மதுரையின் தொன்மையான விழாக்கள் அனைத்தும் கிருதுமால் நதியை அடிப்படையாகவே கொண்டிருந்தன. கிருத யுகம், திரேதாயுகம், துவாபர யுகம், கலி யுகம் ஆகிய அனைத்து யுகங்களிலும் கிருதுமால் நதியின் சிறப்பை கூடற்புராணம் விளக்குகிறது.

ஆனால், நவீன யுகத்தில்தான் நதியை அழித்துவிட்டார்கள். 1980-களின் தொடக் கத்தில் மிகக் குறுகிய காலத்தில் அதிவேக மாக அழிக்கப்பட்டது கிருதுமால் நதி. மதுரை யில் வடிவேலன் என்றொரு நண்பர் இருக் கிறார். ஓய்வு பெற்ற அரசு ஊழியர். அரசரடி கிருதுமாலை பார்க்கும்போதெல்லாம் கண்ணீர் விடுவார்.

“நல்லா ஞாபகம் இருக்கு. 1980-ம் வருஷம் இங்கனதான் தண்ணியை மொண்டு குடிப்போம்” என்பார் அவர். இன்னொரு பெரி யவர் அழகுமுத்து வேலாயுதம். கிருதுமால் நதியை சீரமைக்கக் கோரி அரசு அலுவல கங்கள் மற்றும் நீதிமன்றங்களின் படிகள் ஏறிக்கொண்டிருக்கிறார். 90-களின் தொடக் கம் வரையிலும் கூட மதுரை புறநகரிலும் சிவகங்கையிலும் நதியை நன்னீருக்காக மக்கள் புழங்கியிருக்கிறார்கள்.

இன்றைய தலைமுறையினருக்கு கிருது மால் என்கிற பெயரே தெரியவில்லை. ‘அய்யே, சாக்கடைண்ணே’ என்கிறார்கள். பொன்மேனி, எல்லீஸ் நகர், மதுரை மத்திய பேருந்து நிலையம், மாகாளிப்பட்டி, கீரைத் துரை, சிந்தாமணி இங்கெல்லாம் கிருது மாலை நெருங்க முடியவில்லை. துர்நாற்றம் மூச்சடைக்கிறது. நகரின் அத்தனை கழிவு களும் பகிரங்கமாக நதியில் கொட்டப்படுகி றது. தனியாரும் அரசாங்கமும் கண்மண் தெரி யாமல் நதியை ஆக்கிரமித்திருக்கிறார்கள். நதியின் உடல் நசுக்கி ஓடுகின்றன மதுரை - போடி, மதுரை - விருதுநகர், மதுரை - ராமேசுவரம் இருப்புப் பாதைகள்.

கிருதுமால் நதியை நம்பியிருந்த கண்மாய்கள் அத்தனையும் காய்ந்துப்போய் விட்டன. சுமார் 40 ஆயிரம் ஏக்கர் விவசாயம் அழிந்துவிட்டது. 2004-ல் ரூ.25 கோடி மதிப்பில் ஜவஹர்லால் நேரு புனரமைப்புத் திட்டத்தில் கிருதுமாலை சுத்திகரிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. நதி மேலும் சாக்கடை ஆனது. உலக வங்கி உதவி யோடு தமிழ்நாடு நீர்வள, நிலவள மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ. 74 கோடியில் பணிகள் நடந்தன. எந்த முன்னேற்றமும் இல்லை. இதற்கிடையே நதியை சீரமைக்க மதுரை மாநகராட்சிக்கு சிறப்பு நிதியாக ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. நதிக்கு அல்ல, அரசியல்வாதிகளுக்கும் அதிகாரி களுக்கும் யோகம்தான். பணத்தை செல வழிக்க சென்னைக்கு கூவம், மதுரைக்கு கிருதுமால்.

புராணங்களில் கூடலழகரின் மார்பில் மாலையாக படர்ந்தது கிருதுமால் நதி. பாண்டியர்கள் காலத்தில் தொன்மையான பாசனத் திட்டமாக இருந்தது கிருதுமால் நதி. நம் காலத்தில்தான் அது சாக்கடையாக மாறிவிட்டது. நிகழ்காலத்தில் நாம் செய்த பாவம் அது. அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும் என்பார்கள். தெய்வம் கொல்லாவிட்டாலும் நதி ஒருநாள் தன்னை அடைந்தே தீரும். 

No comments:

Post a Comment