Dec 27, 2015

முன்னோர்களிடம் இருந்தது தெய்வ நம்பிக்கை மட்டுமல்ல... மனிதநேயமும்தான்!

கலிங்கின் அணைக் கற்கள் வழியாக அடுத்த ஏரிக்குப் பாய்ந்தோடும் தண்ணீர்.
கலிங்கின் அணைக் கற்கள் வழியாக அடுத்த ஏரிக்குப் பாய்ந்தோடும் தண்ணீர்.

ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு

ஏரிகள், குளங்களுக்கும் நமது முன்னோரின் தெய்வ நம்பிக்கை களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. அன்று ஒவ்வொரு கோயிலிலும் குளம் வெட்டுவது முக்கியமான கடமையாகக் கருதப்பட்டது. அதனால்தான் தமிழகத்தில் இன்றும் 3 ஆயிரம் கோயில் குளங்கள் இருக்கின்றன. அவை பராமரிப்பு இல்லாமல் இருக்கலாம். ஆனால், அழியாமல் இருப்பதற்குக் காரணம் 
இந்த தெய்வ நம்பிக்கைதான். அதே சமயம் நம் முன்னோர்களின் தெய்வ நம்பிக்கையில் ஒரு நியாயமும் இருந்தது.

சங்கிலித் தொடர்களாக அமைக்கப் பட்ட குளங்களில் பெரும்பாலும் கடை சிக் குளங்கள் கோயில் குளங்களாக அமைக்கப்பட்டன. உதாரணத்துக்கு, திருநெல்வேலி தாமிரபரணியின் கடைசிக் குளம் திருச்செந்தூர் முருகன் கோயில் குளம். கன்னியாகுமரி பழை யாற்றின் கடைசிக் குளம் பகவதி அம்மன் கோயில் குளம். நம் முன் னோர்கள் மழை பெய்யத் தொடங்கிய வுடன் விவசாயப் பணிகளை ஆரம்பித்து விடவில்லை. கோயில் குளம் நீர் நிரம்பும் வரை காத்திருந்தார்கள். அந்தக் கடைசிக் குளத்தில் தண்ணீர் நிரம்புவதை உறுதி செய்யும் வகையிலான தொழில் நுட்பங்களை வடிவமைத்தார்கள்.

அவற்றில் முக்கியமானவை கலிங்கு கள், அணைக் கற்கள் தொழில்நுட்பம். சங்கிலித் தொடர் குளங்களில் ஒரு குளத்தில் நீர் நிறைந்ததும், உபரி நீர் கலிங்குகள் வழியாக வெளியேறி அடுத்தடுத்த ஏரிகளை அடையும். இந்த கலிங்குகளின் மட்டத்துக்கு மேல் 2 அடி உயரத்துக்கு அணைக் கற்கள் நடப்பட்டன. வரிசையாக குச்சி போன்று நீட்டிக்கொண்டிருக்கும் இந்த அணைக் கற்களுக்கு இடையே வெள்ளக் காலங்களில் பலகைகளை சொருகுவார்கள். இதனால், மேலும் 2 அடி உயரத்துக்குத் தண்ணீர் தேங்கும். இதன் மூலம் வெள்ளத்தில் இருந்து ஊரும் காப்பாற்றப்பட்டது. இவ்வாறு ஓர் ஏரியின் கலிங்கு வரை தண்ணீர் தேங்கினால் அதுதான் அந்த ஏரியின் பாதி கொள்ளளவு. கலிங்குக்கு மேல் இருக்கும் அணைக் கற்களின் பலகை யின் மேல்மட்டம் வரை தண்ணீர் தேங் கினால் அதுதான் அந்த ஏரியின் முழுக் கொள்ளளவு.

தலைமடை பகுதியின் வரத்துக் கால்வாயில் தண்ணீர் வரும்போது அனைத்துக் குளங்களின் அணைக் கற்களில் இருந்து பலகைகளை எடுத்து விடுவார்கள். இதனால், தண்ணீர் வேக மாகக் கடைமடையின் கடைசிக் குளம் வரை செல்லும். கடைசி குளத்தின் கலிங்கு மட்டத்துக்குத் தண்ணீர் நிரம்பியதும் மீண்டும் அனைத்துக் குளங்களிலும் பலகையைப் போடு வார்கள். இதன்படி அனைத்துக் குளங்க ளிலும் சரிசமமாக நீர் நிரம்பியது உறுதி செய்யப்பட்டது.

கடைசிக் குளம் நிரம்பியதும் அதிலி ருந்து தண்ணீரை எடுத்து தெய்வத்துக்கு அபிஷேகம் செய்வார்கள். அதன் பின்பே தலைமடை தொடங்கி கடைமடை வரை ஒரே நேரத்தில் விவசாயப் பணி கள் தொடங்கும். இதிலிருந்து நாம் ஒன்றை புரிந்துக்கொள்ள வேண்டும். தெய்வத்துக்கு அபிஷேகம் செய்த பின்பு விவசாயப் பணிகளைத் தொடங்குவது என்பது தெய்வ நம் பிக்கை மட்டுமல்ல; அதில் நியாயம் வலியுறுத்தப்பட்டது. சமத்துவம் வலி யுறுத்தப்பட்டது. கடைமடையின் கடைசிக் குளத்துக்கு தண்ணீர் சேரும் முன்பு தலைமடைப் பகுதியில் விவ சாயத்துக்குத் தண்ணீர் எடுத்தால் அடுத்தடுத்த மடைப் பகுதிகளில் இருக்கும் விவசாயிகளுக்குத் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். எல்லோருக்கும் தண்ணீர் கிடைக்க வேண்டும். எனவே, கடை மடையின் கடைசிக் குளம் நிரம்பும் வரை காத்திருந்தார்கள். இருக்கும் நீரை சரிசமமாக பங்கிட்டு பாசனம் செய்தார்கள்.

இதேபோல ஆறு, ஏரிகளின் முக்கியக் கரை, கலிங்குகளில் அய்யனார், சுடலை மாடன், நாட்றாயன், கருப்பர் போன்ற எல்லைச் சாமிகளுக்கும் சப்த கன் னிக்கைகளுக்கும் கோயில்கள் எழுப்பி னார்கள். காரணம், தெய்வ நம்பிக்கை மட்டுமல்ல; கலிங்குப் பகுதிகளில் யாரும் மண் எடுத்துவிடக் கூடாது; கலிங் குகள் பலவீனம் அடைந்துவிடக் கூடாது என்கிற பாதுகாப்பு உணர்வும் அதில் அடங்கியிருந்தது.

ஆனால், கடந்த 30 ஆண்டுகளாக நடந்த ஏரிகள் சீரமைப்பின்போது இந்த அணைக் கற்கள் அகற்றப்பட்டன. புதிய ஏரிகளில் கலிங்குகள் அணைக் கற்க ளுடன் அமைக்கப்படவில்லை. கலிங்கு களே நேரடியாக அணைக் கற்கள் உயரத் துக்கு அமைக்கப்படுகின்றன. இதனால் தலைமடை குளங்களே நிரம்பத் தாமதமா கின்றன. மழைக்கு ஏற்ப அல்லது வெள் ளத்துக்கு ஏற்ப தண்ணீரை அடுத் தடுத்து திறந்துவிட முடிவதில்லை. பல நேரங்களில் கடை மடைக் குளங்க ளுக்குத் தண்ணீர் செல்வதில்லை.

வளர்ச்சி அடைந்த நவீன சமூகமாக சொல்லிக்கொள்ளும் நம்மிடையேதான் எத்தனை எத்தனை தண்ணீர்ப் பங்கீட்டுப் பிரச்சினைகள். நாடுகளுக்கு இடையே, மாநிலங்களுக்கு இடையே மட்டுமல்ல, இன்று இங்கே ஒவ்வொரு மாவட்டங்களுக்கு இடையேயும் இருக்கிறது தண்ணீர்ப் பங்கீட்டுப் பிரச்சினை. கிராமங்களுக்கு இடையே இருக்கிறது தண்ணீர்ப் பங்கீட்டுப் பிரச்சினை. ஒருகாலத்தில் பவானி சாகர் அணை கட்டினால் தங்களுக்குத் தண்ணீர் கிடைக்காது என்று ஆட்சேபணை தெரிவித்தார்கள் டெல்டா விவசாயிகள். இன்றும் திருநெல்வேலி - தூத்துக்குடி விவசாயிகள் இடையே தாமிரபரணி நதி நீர் பங்கீட்டு பிரச்சினைகள் இருக் கின்றன.

அவ்வளவு ஏன்? இன்று பெரு நகரங்களில் பல வீடுகளில் வீட்டின் உரிமையாளருக்கு தனியாக ஒரு தண்ணீர்த் தொட்டி. வாடகைதாரர் களுக்குத் தனியாக ஒரு தண்ணீர்த் தொட்டி. வாடகைதாரர்களின் தொட்டி ஒருபோதும் முழுமையாக நிரம்பாது. இருப்பவர் முங்கிக் குளித்துக்கொள்ள லாம். இல்லாதவர் முக்கால் உடம்புகூட நனைக்க முடியாது. என்ன ஒரு சமத்துவம், சகோதரத்துவம்!

காவிரி, தாமிரபரணி ஆறுகளின் தண்ணீர் கடைமடை விவசாயி வரைச் சென்று சேராததற்குக் காரணம் மழை யின்மை கிடையாது. நமது மனமின்மை. அக்கறையின்மை. அடுத்தவர் எக்கெடு கெட்டால் என்ன என்கிற சுயநலம். கூடவே அநாகரிக அரசியல், தொழில் நுட்பக் கோளாறுகள், பராமரிப்பின்மை, அலட்சியம்.

நம் முன்னோருக்கு அறிவியலும் தெரிந்திருந்தது. ஆன்மிகமும் தெரிந் திருந்தது. சமத்துவமும் தெரிந்திருந்தது. குறிப்பாக, அவர்களிடம் இருந்தது தெய்வ நம்பிக்கை மட்டுமல்ல; மனித நேயமும்தான்! 

No comments:

Post a Comment