Dec 27, 2015

அவமானப்பட வேண்டியது விவசாயிகளல்ல... நாம்தான்!

நெல்லை குறுக்குத்துறையில் கரைபுரண்டோடும் தாமிரபரணி படம்: எம்.லட்சுமி அருண்
நெல்லை குறுக்குத்துறையில் கரைபுரண்டோடும் தாமிரபரணி படம்: எம்.லட்சுமி அருண்

ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு

தாமிரபரணியில் தண்ணீர் பெருக்கெடுத்துக் கரைபுரண்டு ஓடுகிறது. பாபநாசம், மணிமுத்தாறு, ஸ்ரீவைகுண்டம் அணைகள் நிரம்பி வழிகின்றன. ஆனால், கரைபுரண்டோடும் ஆற்றை கவலையோடு பார்க்கிறார்கள் விவசாயிகள். ஆறு நிரம்பி ஓடினால் மகிழ்ச்சி அடைவதுதானே விவசாயிகளின் இயல்பு. ஆனால், இங்கே மட்டும் நிலைமை தலைகீழாக இருக்கிறது. வெள்ளம் வந்து ஊரை அழித்துவிடுமோ என்கிற கவலையில்லை அது. பசியில் கண்கள் பஞ்சடைத்த நிலையில் கண் எதிரே உணவு இருந்தும் கையில் எடுத்து உண்ண முடியாத கையறு நிலையில் வரும் கண்ணீர் அது. காவிரி டெல்டா விவசாயிகளின் சோகத்தை அறிந்த நமக்கெல்லாம் அவ்வளவாக தெரிந்திராத 21 ஆண்டுகால சோக வரலாறு அது! 

தூத்துக்குடி மாவட்டத்தின் மூன்று வகை சாகுபடிகளில் இரண்டு வகை சாகுபடிகள் கிட்டத்தட்ட அழிந்தேவிட்டது என்பதை ஏற்கெனவே பார்த்தோம். குறிப்பாக, தண்ணீர் பற்றாக்குறையைக் காரணம் காட்டி ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையில் நடந்துவந்த கார் சாகுபடிக்கு அரசே அனுமதி மறுத்துள்ளது. கடைசியாக 1993-ம் ஆண்டில் செய்ததுதான் தூத்துக்குடி விவசாயிகள் செய்த கடைசி கார் சாகுபடி. அதன் பின்பு அத்தனையும் காலி. கன்னடியன் கால்வாயின் பாசனத்தில் 2 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் கருகிப்போயின. தென்காசியில் ஆயிரம் ஹெக்டேர் கடலை சாகுபடி அழிந்துப்போனது. சேரன்மாதேவியில் 2 ஆயிரம் ஏக்கர் சாகுபடி அழிந்தது. அம்பாசமுத்திரம் தாலுகாவில் நடந்துவந்த 9,924 ஹெக்டேர் சாகுபடி 8,420 ஹெக்டேராகக் குறைந்தது. கடனா நதிப் பாசனத்தில் 9 ஆயிரம் ஹெக்டேர் சாகுபடி 3,500 ஹெக்டேராகக் குறைந்தது. இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

இப்படி கார் சாகுபடியை நம்பி வாங்கிய கடனில் மூழ்கிப்போன விவசாய நிலங்கள் ஏராளம். மூன்று போகம் விவசாயம் இரண்டு போகம் ஆனது. அடுத்தடுத்த ஆண்டுகளில் அது ஒரு போகமாகக் குறைந்துவிட்டது. அதுவும் பொறுக்கவில்லை அந்நிய குளிர்பான நிறுவனங்களுக்கு. ஏற்கெனவே தூத்துக்குடியின் ஒன்பது தொழிற்சாலைகளுக்கு தினமும் 30 லட்சம் கனஅடி தண்ணீர் அளிக்கப்பட்டு வந்தச் சூழலில், அந்நிய குளிர்பான நிறுவனங்களுக்கு என்று சீவலப்பேரியில் தினமும் 50 லட்சம் லிட்டர் தண்ணீர் உறிஞ்சப்பட்டது. கங்கைகொண்டானில் தினமும் ஒன்பது லட்சம் லிட்டர் உறிஞ்சப்பட்டது. இன்னும் இன்னும் தண்ணீரை உறிஞ்ச திட்டங்கள் தீட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.

ஒருபக்கம் தொழிற்சாலைகள் மற்றும் அந்நிய நிறுவனங்களின் தண்ணீர் சுரண்டல். கேட்டால் நாட்டுக்குத் தொழில் வளர்ச்சி தேவை என்கிறார்கள். சரி, அப்படியே ஆகட்டும். இருக்கும் நீர் நிலைகளையாவது சரி செய்யலாம் இல்லையா? வைகுண்டம் அணையின் கீழே மொத்தம் 53 ஏரிகள், குளங்கள் இருக்கின்றன. அவற்றின் மொத்தக் கொள்ளளவு 2,274 மில்லியன் கனஅடி. ஆனால், அவற்றில் இன்று ஆயிரம் மில்லியன் கனஅடி தண்ணீரைக் கூட தேக்க முடியவில்லை. அத்தனையும் தூர் மேடிட்டுக்கிடக்கின்றன.

நீரைத் தேக்க முடியாததால் கடந்த 97-98ல் வினாடிக்கு 60 ஆயிரம் கனஅடி தண்ணீர் கடலுக்குச் சென்றது. 2004-ம் ஆண்டில் 150 மில்லியன் கனஅடி தண்ணீர் கடலுக்குச் சென்றது. 2005-ம் ஆண்டு 2 ஆயிரம் கோடி கனஅடி தண்ணீர் கடலுக்குச் சென்றது. இதோ இப்போது இந்தக் கட்டுரையை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் இந்த வினாடியில்கூட 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் கடலுக்குச் சென்றுகொண்டிருக்கிறது. பற்றி எரிகிறது விவசாயிகளின் வயிறு. கடலுக்கு நன்னீர் தேவைதான். ஆனால், விவசாயத்துக்கு இல்லாமல் கூடுதலாகத் தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது; அதனை கட்டுப்படுத்துங்கள் என்று கதறுகிறார்கள் விவசாயிகள்.

இவ்வாறு கூடுதல் தண்ணீர் கடலில் கலப்பது குறித்து ஆய்வு செய்ய கடந்த 2001-ம் ஆண்டு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான டி.எஸ்.விஜயராகவன் தலைமையில் மூவர் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு தனது அறிக்கையில் தாமிரபரணியில் இருந்து சராசரியாக 75 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி = 100 கோடி கனஅடி) தண்ணீர் கூடுதலாகக் கடலுக்குச் செல்வதாக அறிவித்தது.

தொடர்ந்து ஏராளமான திட்டங்கள் போடப்பட்டன. ஏரலுக்கு கிழக்கே ஆலடியூரில் 7 அடி கொள்ளளவு கொண்ட தடுப்பணை கட்ட ரூ.5 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டது. 53 குளங்களையும் தூர் வார ரூ.140 கோடியிலும், மருதூர் கீழக்காலை மேம்படுத்த ரூ.67.56 கோடியிலும் திட்டங்கள் தயாரிக்கப்பட்டன. அத்தோடு சரி, அவை எதுவும் நடக்கவில்லை. இப்போதுதான் பசுமை தீர்ப்பாயத்தை நாடிய பின்பு மெதுவாக அசைந்து வைகுண்டத்தை தூர் வாரிக்கொண்டிருக்கிறார்கள். அதிலும் எப்படிக் கொள்ளை அடித்தார்கள் என்பதைதான் நேற்று பார்த்தோமே.

ஒரு விஷயம் தெரியுமா? 1948-ம் ஆண்டு தாய்லாந்து நாட்டில் கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டது. அங்கு உணவு உற்பத்தியை அதிகரிக்க இந்திய அரசு நான்கு பேரை தாய்லாந்துக்கு அனுப்பியது. அவர்களின் மூவர் தமிழக விவசாயிகள். ஒருவர் வங்காளி. அவர்கள் அங்கு சென்றுப் பார்த்தபோது தாய்லாந்து விவசாயிகள் நேரடி நெல் விதைப்பை மட்டும் செய்துவந்தது தெரிந்தது. அவர்கள் நெல்லை அறுவடை செய்த பின்பு வைக்கோலை வயலில் எரித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், இங் கிருந்து சென்ற நம் விவசாயிகள், பழந்தமிழர் பின்பற்றிய பசுந்தாள் பயிரிட்டு மடித்துவிடும் முறையை அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். நாற்றங்காலில் விதை விதைக்க வேண்டும்; அதில் பயிராகும் நாற்றைப் பறிக்க வேண்டும்; அடுத்து அந்த நாற்றுகளை வயலில் நடவு செய்ய வேண்டும் என்று கையைப் பிடித்துச் சொல்லிக்கொடுத்தார்கள். அதுவரை ஏக்கருக்கு அரை டன்னுக்கும் குறைவான மகசூலை மட்டுமே பார்த்த தாய்லாந்து விவசாயிகள், அன்று முதன்முறையாக நான்கு டன் மகசூலை எடுத்தார்கள். மலைபோல் விளைந்த நெல்லைப் பார்த்து மலைத்துப்போனார்கள் அவர்கள். நன்றிப் பெருக்கில் நமது விவசாயிகளைப் போற்றும் வகையில் அதற்கு ‘மதராஸ் சாகுபடி’ என்று பெயரிட்டு பெருமைப்படுத்தினார்கள்.

ஆனால், அந்த விவசாயிகளின் வழித்தோன்றல்களுக்கு இங்கே என்ன நடக்கிறது? தண்ணீர் மறுக்கிறார்கள். அந்நியன் கேட்டால் அள்ளிக் தருகிறார்கள். பன்னாட்டு முதலாளி கைதட்டினால் ஓடி வரும் தண்ணீர், உள்நாட்டு விவசாயி கேட்டால் ஒதுங்கிப்போகிறது. தூத்துக்குடியின் விவசாயி கார் சாகுபடி நெல்லை கண்ணில் பார்த்து 21 ஆண்டுகள் ஆகிவிட்டது. நிலத்தை விற்றுவிட்டு ஆயிரக்கணக்கான விவசாயிகள் அகதிகளாக இடம் பெயர்ந்துவிட்டார்கள். ஊருக்கெல்லாம் சோறிட்ட அந்தக் கரங்கள் இன்று தூத்துக்குடி, திருநெல்வேலி அரசு மதுபானக் கடைகளில் மேசையைத் துடைத்துக்கொண்டிருக்கின்றன. உள்ளூரில் வேலை செய்தால் அவமானம் என்று கருதி விவசாயிகள், சென்னை போன்ற பெருநகரங்களில் ஏவல் வேலை செய்கிறார்கள். 

இதற்கெல்லாம் அவமானப்பட வேண்டியது அவர்கள் அல்ல; இத்தனை காலம் அந்த விவசாயிகளின் கையால் சோறு சாப்பிட்ட நாம்தான் அவமானப்பட வேண்டும்; வெட்கித் தலைகுனிய வேண்டும்! 

No comments:

Post a Comment