Dec 27, 2015

சென்னைவாசிகளுக்கு வந்தால் மட்டும்தான் ரத்தமா?

  • 30 ஆண்டு கால ஆக்கிரமிப்பில் சிக்கியிருக்கும் பெரியகுளம் பகுதியின் பொட்டல் குளம், நஞ்சாவரம் குளங்கள்.
    30 ஆண்டு கால ஆக்கிரமிப்பில் சிக்கியிருக்கும் பெரியகுளம் பகுதியின் பொட்டல் குளம், நஞ்சாவரம் குளங்கள்.

ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு

இத்தனை காலமாக இல்லாத கோபம் இப்போது வந்திருக்கிறது. சென்னையில் அரசியல் கட்சி தலைவர்கள் தொடங்கி அடித்தட்டு மக்கள் வரை நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பொங்குகிறார்கள். அடையாறு வெள்ளத்துக்குக் காரணமான ஆக்கிரமிப்புகள் அடித்து நொறுக்கப் படுகின்றன. பெரும் கட்டிடங்கள், வணிக நிறுவனங்கள், கோயில்களும்கூட தப்ப முடிய வில்லை. அசுர வெள்ளத்துக்கு முன் அரசியல் தலையீடுகள் அமுங்கிவிட்டன. சாட்டையைச் சுழற்றுகிறார்கள் அதிகாரிகள். அனல் பறக் கின்றன தொலைக்காட்சி விவாதங்கள். வரிந்துக்கட்டிக்கொண்டு எழுதுகிறார்கள் வல்லுநர்கள். நல்ல விஷயம். வரவேற்போம். 

அதேசமயம் சென்னைவாசிகளுக்கு வந்தால் மட்டும்தான் ரத்தமா? அதுவே கிராமத்து விவசாயிக்கு வந்தால் தக்காளி சட்னியா என்று எழும் கேள்வியை அவ்வளவு எளிதாக ஒதுக்கித் தள்ள முடியவில்லை. நேற்று இன்றல்ல, சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கண் மாய்களின் ஆக்கிரமிப்புகளை அகற் றுங்கள், வெள்ளம் வந்து வெள்ளாமை மூழ்கிபோகின்றன என்று கதறுகிறார்கள் பெரியகுளம் விவசாயிகள். நடத்தாத போராட்டம் இல்லை. பார்க்காத அமைச் சர்கள் இல்லை. முதல்வர், பிரதமர், ஜனாதிபதி வரை புகார் அனுப்பி விட்டார்கள். தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் லாசர் சட்டமன்றத்திலும் பேசிவிட்டார். இன்றும் குறைந்தது மாதத்துக்கு 10 போராட் டங்கள் நடைபெறுகின்றன. இன்னும் என்னதான் செய்வது? ஒபாமாவுக்கா ஓலை அனுப்ப முடியும்?

ஒவ்வோர் ஆண்டும் நொந்து சாகிறார் கள் விவசாயிகள். கண்மாய்களின் ஆக்கி ரமிப்பின் நீட்சியாக ஆண்டுதோறும் சிந்துவம்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, ஜெயமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு கலவரங்கள் வெடிக்கின்றன. வெட்டு குத்துக்கள் நடக்கின்றன. பருவமழை தொடங்குகிறதோ இல்லையோ, நவம்பர் மாதம் பிறந்தால் பெரியகுளத்தில் இருந்து ஒரு போலீஸ் பட்டாலியன் அங்கு செல்வது சம்பிரதாயமாகிவிட்டது. கடந்த வாரம் நடந்த ஒரு தண்ணீர் பற் றாக்குறை சண்டையில்கூட டிராக்டரை கண்மாய்க்குள் தள்ளிவிட்டார்கள் விவசாயிகள்.

அடிப்படையில் தேனி மாவட்டம் ஆறுகள் சூழ்ந்த ஊர். தெற்கே முல்லை பெரியாறு, சண்முகா நதி, வைகை ஓடு கின்றன. மேற்கே குரங்கணி நதி ஓடுகிறது. வடக்கே வராக நதி, மஞ்சளாறு, பாம்பாறு ஓடுகின்றன. இவற்றில் பெரி யாறு தவிர, மற்ற ஆறுகளில் மழைக் காலங்களில் மட்டுமே தண்ணீர் இருக்கும். வைகை இங்கே ஓடினாலும் அதிலிருந்து பாசனம் கிடையாது. அது இங்கே பெரும் பள்ளத்தில் ஓடு கிறது. அணைக்காக நிலங்களைக் கொடுத்த விவசாயிகள் பரந்து விரிந்த அணையையும் பள்ளத்தில் ஓடும் வைகையையும் கண்குளிரப் பார்த்துக்கொள்ள மட்டும் முடியும். அள்ளி அனுபவிக்க முடியாது. இங்கி ருந்து 45 கி.மீ தொலைவுக்கு அப்பால் அணைப்பட்டியில்தான் வைகையின் நேரடிப் பாசனம் தொடங்குகிறது.

ஆக, இங்கு கண்மாய் பாசனம்தான் பிரதானம். அந்தக் கண்மாய்களிலேயே கை வைத்திருப்பதுதான் பிரச்சினைக்கு அடிப்படை காரணம். பெரியகுளம் தாலுகாவில் பொட்டல்குளம், நஞ்சா வரம் குளம், நெடுங்குளம், குட்டிக்குளம், ரெங்கன் குளம் ஆகிய ஐந்து கண் மாய்கள் இருக்கின்றன. பாம்பாறு மூலம் தண்ணீர் பெறும் சங்கிலித் தொடர் கண்மாய்கள் இவை. இந்த ஐந்து குளங்களும் நிரம்பி மறுகால் பாய்ந் தால் அடுத்தடுத்த ஊர்களில் இருக்கும் குள்ளப்புரம் முதல் கண்மாய், இரண் டாம் கண்மாய், மறுகால்பட்டி கண்மாய், பொம்மிநாயக்கன்பட்டி கண்மாய், சிந்துவம்பட்டி கண்மாய் ஆகிய அடுத்த ஐந்து குளங்களுக்குத் தண்ணீர் செல்லும்.

ஆனால், பொட்டல்குளம், நஞ்சாவரம் குளம், நெடுங்குளம், குட்டிக்குளம், ரெங்கன் குளம் ஆகிய ஐந்து கண் மாய்கள் சுமார் 20 ஆண்டுகளாகவே ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன. கரை தொடங்கி கண்மாய் வரை தென்னை, வாழை, கரும்பு தோட்டங்கள் போட்டிருக் கிறார்கள். பல இடங்களில் கண்மாயின் சுவடே தெரியவில்லை. கண்மாய்க்குள் தண்ணீர் வந்துவிடக் கூடாது என்பதற்காகக் கரைகளை வெட்டிவிடு கிறார்கள். இதனால், அருகில் இருக்கும் சுமார் 2,000 ஏக்கர் விவசாய நிலங்க ளுக்குள் வெள்ளம் புகுந்து பயிர்கள் மூழ்கிவிடுகின்றன. அதேசமயம், ஆக்கிர மிப்பு காரணமாக அடுத்துள்ள ஐந்து கண்மாய்களுக்குத் தண்ணீர் செல்வதும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தடைபட்டிருக்கிறது. அங்கெல்லாம் வறட்சியில் தவிக்கிறார்கள் விவசாயிகள். ஒருபக்கம் வெள்ளம், இன்னொரு பக்கம் வறட்சி.

அதிகாரிகளிடம் கேட்டால் கை வைத்தால் தூக்கி அடித்துவிடுவார்கள் என்கிறார்கள். ஆக்கிரமித்திருப்பது அத்தனை பேரும் அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள். இப்போது நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி வரும் முக்கிய எதிர்க்கட்சியின் இரண்டு பிரமுகர்கள் சுமார் 600 ஏக்கர் கண்மாய் நிலத்தை ஆக்கிரமித்துள்ளார்கள். அதற்கு மின் இணைப்பும் கொடுக்கப் பட்டிருக்கிறது. அரசியலோடு சாதிய மும் கைகோத்திருக்கிறது. ஆக்கிரமிப் பாளர்களில் பெரும்பாலானவர்கள் தேனி மாவட்டத்தின் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள். கை வைத்தால் ஓட்டு வங்கியில் ஓட்டை விழுந்துவிடும் என்று அஞ்சுகிறது அரசு.

சென்னையில் போரூர் ஏரியின் நடுவே தனியார் கல்வி நிறுவனத்துக்காக பொதுப் பணித்துறை போட்ட சாலையை அகற்றும்படி உத்தரவிட்டுள்ளது பசு மைத் தீர்ப்பாயம். கூவத்தில் கழிவு நீரை திறந்துவிட்டதற்காக மெட்ராஸ் ஃபெர்டிலைசர் நிறுவனத்தை மூட உத்தரவிட்டுள்ளது பசுமை தீர்ப்பாயம். இப்போது மட்டுமல்ல; நீதிமன்றங்கள் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி பல காலமாக உத்தரவுகளைப் பிறப் பித்துக்கொண்டேதான் இருக்கின்றன. அரசுகள்தான் அலட்சியம் காட்டுகின்றன.

2001-ல் ஆண்டில் உச்ச நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பில் “ஒரு குளத்தில் தண்ணீர் இல்லை என்பதாலேயே அதனை பிற பயன்பாட்டுக்கு மாற்றக் கூடாது. தண்ணீர் இருந்தாலும் இல்லா விட்டாலும் குளம் குளம்தான். அவற்றை பாதுகாக்க வேண்டியது அரசின் பொறுப்பு” என்றது. 2005-ல் கள்ளக்குறிச்சி தச்சூர் ஏரி ஓடைப் புறம் போக்கு ஆக்கிரமிப்பின்போது தீர்ப்பு கூறிய உயர் நீதிமன்றம், “தச்சூர் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகள், ஓடைகள், வரத்துக்கால், வெள்ளக்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்” என்று உத்தரவிட்டது. 2006-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், “நீர்நிலைகள் அரசுக்குச் சொந்தமானவை அல்ல; அவற்றை காக்கும் அறங்காவலர்களாகவே அரசு இருக்க வேண்டும். அவற்றை எடுத்துக் கொள்ளவும் பிறருக்குப் பயன்படுத்த அனுமதிக்கவும் அரசுக்கு அனுமதி இல்லை” என்றது.

சமீபத்தில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், “நீர்நிலைகளின் ஆக்கி ரமிப்பை அகற்றுவது குறித்து அரசு விரிவான வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டது. கடந்த வாரம் இயற்கை வளம் சங்கத்தின் தலைவர் சண்முகசுந்தரம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம், “தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை ஆக்கிரமித்து எந்தக் கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது. தமிழக அரசு இதனை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும்” என்றது.

நீதிபதிகள் உத்தரவிடத்தான் முடியும். உத்தரவுகளை அமல்படுத்த வேண்டியது அரசின் கடமை அல்லவா! 

No comments:

Post a Comment