Dec 27, 2015

மழை நீர் சேகரிப்பை மறுத்தல் தகுமோ?

கட்டிடங்களில் இருந்து மழை நீரை சேமிப்பதற்கான செயல்முறை விளக்கம். (கோப்புப் படம்)
கட்டிடங்களில் இருந்து மழை நீரை சேமிப்பதற்கான செயல்முறை விளக்கம். (கோப்புப் படம்)

ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு

*
ஏரிகள், நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு குறித்து மூலை முடுக்கெல்லாம் பேசுகிறார்கள். தொலைக்காட்சி தொடங்கி தெருவோர தேநீர் கடைகள் வரை விவாதங்கள் விரிகின்றன. ஆட்சியாளர்களை, அரசியல்வாதிகளை, அதிகாரிகளை, நில வணிகர்களை வசைபாடுகிறார்கள். தெரியாமல் ஏரிக்குள் நிலம் வாங்கி வீடு வாங்கிவிட்டோம் என்று அழுது புலம்புகிறார்கள். இப்படி எல்லாம் பேசும் நாம், வசதியாக ஒன்றை மறந்துவிட்டோம். அது மழை நீர் சேகரிப்புத் திட்டம். என்ன ஆனது அந்தத் திட்டம்? கடந்த 10 ஆண்டுகளாக அந்த திட்டம் கிட்டத்தட்ட அழிந்தேபோய்விட்டது. 
 
ஆறு, ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளில் ஓடும் நீரின் வேரை அறுப்பது மட்டும் பாவம் அல்ல. நிலத்தடிக்குள் ஓடும் நீரின் வேரை அறுப்பதும் பெரும் பாவமே. பூமி என்பது உயிரற்ற பொருள் அல்ல; அது உயிருள்ள ஜீவன். அது பஞ்ச பூதங்களையும் உள்ளடக்கிய ஓர் உயிரினம். பஞ்ச பூதங்களில் முக்கிய மானது தண்ணீர். குறிப்பாக, நன்னீர். பூமிக்கு அது தேவை. தண்ணீர் இல்லாமல் போனால் பூமி என்கிற உயிரினம் செத்துவிடும். செயற்கைக் கோள் பார்வையில் பார்த்தால் பூமிப்பந்து மூச்சு விட்டு சுவாசிப்பதை மெல்லிய அதிர்வுகளாக உணர முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

கடலின் உவர் நீர் சூரிய வெப்பத்தில் ஆவியாகி அது நன்னீராகப் பொழிகிறது. இது ஆறுகளில் ஓடியும் மண்ணில் விழுந்தும் மீண்டும் கடலில் சேர்கிறது. இதில் கணிசமான பகுதி நிலத்தடி நீராக ஊடுருவுகிறது. இதுவே இயற்கையான நீரியல் சுழற்சி (Hydraulical cycle). இதைத்தான் இன்று அறுத்து எறிந்திருக் கிறோம். வெள்ளத்துக்கு இதுவும் ஒரு முக்கியமான காரணம்.

இன்று எத்தனை வீடுகளில், எத்தனை தனியார், அரசு கட்டிடங்களில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் பராமரிக்கப் படுகின்றன? சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டவை அவை. தெருவில் தொடங்கி வீட்டின் முற்றம் வரை கான்கிரிட் பூசி மண்ணை புதைத்து விட்டோம். தண்ணீர் இல்லாமல், மூச்சு விட முடியாமல் தவிக்கிறாள் பூமித் தாய். சென்னை நகரில் பல இடங்களில் பாதாள சாக்கடையின் இரும்பு மூடிகள் வெள்ளத்தின் சீற்றத்தில் தூக்கி எறியப்பட்டன. பலரது வீடுகளுக்குள் கழிப்பறையின் மலத் தொட்டியில் இருந்து வெள்ளம் பொங்கியிருக் கிறது. மழை நீர் பூமிக்குள் ஊடுருவ முடியாமல் போனதன் விளைவு இது.

தமிழகத்தில் அக்டோபர் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும் வடகிழக்குப் பருவமழையின் சராசரி அளவு 439 மி.மீ. ஆனால் இந்த முறை அக்டோபர் 1-ம் தேதி தொடங்கி டிசம்பர் 8-ம் தேதி வரை மட்டுமே 639.30 மி.மீ மழை பெய்துள்ளது. சென்னையில் கடந்த இரு மாதங்களில் பெய்ய வேண்டிய இயல்பான மழை அளவு 698.40 மி.மீ. ஆனால், இதுவரை மட்டுமே 1,605.2 மி.மீ. மழை பெய்துள்ளது. அதாவது, சுமார் மூன்று மடங்கு அதிகம் மழை பெய்துள்ளது. தமிழகத்தின் ஆண்டு சராசரி மழை அளவான 925 மி.மீட்டர் என்பது நமது அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திராவை விட அதிகம் என்பதை ஏற்கெனவே பார்த்தோம். அதேசமயம் இங்கு அந்த மழை நீரை சேமிப்பதற்கான ஏரிகள், குளங்கள் அனைத்தும் பராமரிக்காமல் அவை மண் மேடிட்டும் ஆக்கிரமிப்புக்குள்ளாகி இருக்கின்றன என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை மறந்துபோனது சரியா?

ஓராண்டில் எவ்வளவு மழை பெய்கிறதோ அந்த அளவுக்கான நிலத்தடி நீரைத்தான் பயன்படுத்த வேண்டும். ஆனால், நாம் ஆயிரம் லிட்டர் நிலத்தடி நீரை சேமித்தால் 10 ஆயிரம் லிட்டர் தண்ணீரை உறிஞ்சுகிறோம். இதனை கருத்தில் கொண்டுதான் கடந்த 2002-ம் ஆண்டு மழை நீர் சேகரிப்புத் திட்டம் கட்டாயமாக்கப்பட்டது. அரசு, தனியார் கட்டிடங்களில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு கட்டாயமாக்கப்பட்டது. புதிதாகக் கட்டப்படும் வீடுகள், கட்டிடங்களில் மழை நீர் கட்டமைப்பு இருந்தால் மட்டும் உள்ளாட்சி அமைப்புகள் அனுமதி வழங்கின. போர்க்கால அடிப்படையில் மாநிலம் முழுவதும் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு செயல்படுத்தப்பட்டது. ஓர் ஆண்டிலேயே அதற்கு நல்ல பலன் கிடைத்தது. சுமார் 20 % நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது.

தொடர்ந்து 2003-ம் ஆண்டு நிலத்தடி நீர் மேலாண்மைச் சட்டம் இயற்றப்பட்டது. நிலத்தடி நீரை உறிஞ்சுவதைக் கட்டுப்படுத்துவது, நிலத்தடி நீரை விற்பனை செய்வதை கட்டுப்படுத்துவது, குறிப்பிட்ட ஆழத் துக்கு மேல் ஆழ்துளை கிணறுகளைத் தோண்டுவதைக் கட்டுப்படுத்துவது போன்றவை இந்தச் சட்டத்தின் முக்கிய அம்சங்கள். ஆனால், காலப்போக்கில் இந்தச் சட்டமும் நீர்த்துப்போனது. அதேபோல 2006-ம் ஆண்டுக்குப் பிறகு மழை நீர் சேமிப்புத் திட்டமும் கைவிடப்பட்டது.

ஆனால், திட்டம் தொடங்கப்பட்ட 2002-ம் ஆண்டு முதல் இன்று வரை அந்தத் திட்டத்துக்கு என தனியாக தமிழக நிதி நிலை அறிக்கையில் நிதி ஒதுக்கவில்லை என்பதுதான் அதிர்ச்சியான விஷயம். திட்டத்தை கட்டாயப்படுத்தி அமல்படுத்திய காலகட்டத்திலேயே திட்ட செலவு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் தலையில் கட்டப்பட்டது. சுமார் 10 ஆயிரம் சதுர அடி கொண்ட ஒரு அரசு கட்டிடத்தில் மழை நீர் சேமிப்புக்கான உள் கட்டமைப்பை ஏற்படுத்த ஆரம்ப செலவாக சுமார் ரூ.3 லட்சம் செலவாகும். ஆண்டுதோறும் பராமரிப்புக்கு சுமார் ரூ.50 ஆயிரம் செலவாகும். ஆனால், இதற்கான தனியாக எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. பெரிய நகரங்களில் இருக்கும் அரசு கட்டிடங்களுக்கு ஆண்டுதோறும் பராமரிப்பு நிதி ஒதுக்கப்படுகிறது. இதனை Lump sum provision என்றழைக்கிறார்கள். இப்படி ஐந்து லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டால் அதில் இருந்து ஐந்தாயிரம் ரூபாயை மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு களின் பராமரிப்புகளுக்காகப் பயன் படுத்திக் கொள்ளலாம் என்று வாய்மொழி உத்தரவிடப்பட்டது. யானைப் பசிக்கு சோளப் பொரி போன்றது இது.

அதே போல 2006-க்குப் பிறகு புதிய கட்டிடங்களுக்கு அனுமதி அளிக்கும்போது மழை நீர் சேகரிப்புத் திட்டம் கட்டாயமாக்கப்படவில்லை. தமிழகத்தில் சுமார் 18 லட்சம் பாசனக் கிணறுகள் இருக்கின்றன. மழை நீர் தொட்டி அமைத்து, பாசனக் கிணறுகளின் நீர் மட்டத்தை உயர்த்த மத்திய அரசு குறு விவசாயிகளுக்கு ரூ.4 ஆயிரம், பெரிய விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரம் மானியம் அளித்தது. ஆனால், பெரும்பாலான விவசாயி களிடம் விழிப்புணர்வு இல்லாததால் இந்தத் திட்டமும் சரியாக செயல் படுத்தப்படவில்லை.

தமிழகத்தில் இந்த நிதியின் பெரும் பகுதி மத்திய அரசுக்குத் திருப்பி அனுப்பப்பட்டது. இதனால், கடந்த 10 ஆண்டுகளில் மழை நீர் சேகரிப்பு உள்கட்டமைப்புகள் அனைத்தும் அழிந்துப்போயின. தற்போதைய வெள்ளத்துக்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம்.
 
மழையை எப்படி அளப்பது?

மழையின் அளவு மி.மீட்டர் அளவுகளில் குறிப்பிடப்படுகிறது. அதாவது, ஒரு பகுதியில் பெய்யும் மழை நீர் மண்ணுக்குள் புகாமல் தரையின் மீது தேங்கியிருக்கும் மி.மீ உயரமே அந்தப் பகுதியின் மழை அளவு. அதற்காக பள்ளமான அல்லது மேடான பகுதிகளை கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் வானிலை ஆராய்ச்சி மையங்களில் இதற்கான சாதனங்களை வைத்து மழைப் பொழிவின் அளவை கணக்கிடுவார்கள். 

No comments:

Post a Comment