Dec 27, 2015

நற்குறி சொன்ன நாஞ்சில் நாட்டு அடிமைகள்!


நீர் நிலைகளின் ஆக்கிரமிப்பு, ஆக்கிரமிப்புகளை அகற்றாத அலட்சியம், அதன் நீட்சியாக நிகழ்ந்த வெள்ளம், ஏரியில் தண்ணீர் திறப்பு சர்ச்சைகள், நிவாரணப் பணிகளின் தாமதம் இப்படி சங்கிலித் தொடராக அமைந்த எதிர்மறையான விஷயங்களுக்கு எல்லாம் அடிப்படை காரணம் என்ன? அரசியல் சுதந்திரமின்மை. மொத்த அதிகாரத்தின் குவி மையமாக இருக்கிறார்கள் கட்சிகளின் தலைவர்கள். இதனை கட்சியின் கட்டுக்கோப்பு என்று சொல்ல இயலாது. யாரும் சுயமாக கருத்து சொல்ல முடியாது. சுயமாக செயல்பட முடியாது. தலைமை தவறிழைக்கும்போது தட்டிக் கேட்க முடியாது. 1980-களில் சென்னையின் முக்கிய ஏரியை தலைவர் ஒருவர் தனியாருக்குக் கொடுத்தபோது அதனை கேள்வி கேட்பார் யாரும் இல்லை. ஆற்று மணலை எல்லாம் அள்ள கட்சிகளின் தலைமைகளே தலை அசைத்தபோது தட்டி கேட்பார் யாரும் இல்லை. நீர் நிலைகளைப் பாதுக்காக்கும் சட்டங்களைத் தளர்த்தியபோது கேள்வி கேட்பார் யாரும் இல்லை.

நாஞ்சில் நாட்டில் மன்னர்கள் காலத்தில் அடிமை முறை இருந்தது. இந்த அடிமைகளை ஒப்பிடும்போது அந்த அடிமைகளின் திறமை களைக் கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை. அதற்காக அடிமை முறையை நியாயப்படுத்தவில்லை. வரலாற்றை திரும்பிப் பார்க்கிறோம், அவ்வளவே. நாஞ்சில் நாட்டில் கடந்த 18.6.1853 வரை அடிமை முறை இருந் தது என்கிறார் நட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் அ.கா.பெருமாள். அடிமை சமூகத்தில் பிற்படுத்தப் பட்ட சமூகங்களைச் சேர்ந்த அடிமைகள்தான் அதிகம். சில குறிப்பிட்ட சமூகங்களைச் சேர்ந்த அடிமைகளை எவ்வளவு விலை கொடுத்தும் வாங்கத் தயாராக இருந்தார்கள் பண்ணையாளர் கள். காரணம், நீர் நிலைகள் பராமரிப்பு மற்றும் பாசனத் தொழில்நுட்பங்களில் அவர்களுக்கு இருந்த அபாரத் திறமை. நீர் நிலைகளை எப்படி பாதுகாக்க வேண்டும்? எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை எல்லாம் அவர்கள் அறிந்திருந்தார்கள். இயற்கையை அவர்கள் துல்லியமாக கணித்தார் கள்
 
எப்போது மழை பெய்யும்?

“சூரியனையும் சந்திரனையும் ஒளிவட்டம் சூழ்ந்து நின்றால் அது மழைக்கான அறிகுறி. இதை ‘வட்டம் கட்டுதல்’ என்று அழைத்தார்கள். இதைப் பார்த்துவிட்டு வித்தும் வைக்கோலும் காய வைத்தார்கள். பருந்து சிறகை விரித்து வெயிலில் நின்றாலோ, வெள்ளைக் கொக்கு பந்தி பந்தியாக நெடுநேரம் உட்கார்ந்திருந்தாலோ, மேட்டில் வெள்ளெலி வளை தோண்டினாலோ, நாரை, வெள்ளைக் கொக்கு, நமுகு வடக்கு நோக்கி பறந்தாலோ மழை பெய்யும். புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் ஈசல் பறப்பதும், கறையான் கள் புற்றைத் திறப்பதும், புரட்டாசி 15-ம் தேதிக்கு மேல் கீழ்க்காற்று அடிப்பதும், வடமேற்கில் காற்றடிப்பதும் மழைக்குரிய அடையாளம். சூரியன் மறையும்போது கிழக்கே மூன்று பட்டைகளாக நீலக்கோடு இருந்தாலோ, வெண்ணிறமாக இருந்தாலோ மழை பெய்யும். சூரியன் உதயத்தின்போதும் மறைவின்போதும் பக்கச் சூரியன் தெரிவதும் மழைக்குரிய அடையாளம்.
 
எப்போது மழை பொய்க்கும்?

கார்த்திகை மாதம் மருளைமுத்துக் கொடி தழைத்தால் மழை பெய்யாது. கோழிக்காளான் பூத்தால் மழை பெய்யாது. நாரை, வெள்ளைக் கொக்கு ஆகிய பறவைகள் தெற்கு நோக்கி வலசை சென்றால் மழை பெய்யாது. வெள்ளெலி பள்ளத்தில் புடை எடுத்தால் மழை பெய்யாது. புரட்டாசி முதல் மாசி வரை தென்மேற்கில் காற்றடித்தால் கிழக்கில் இருந்து வரும் மழைக் காற்று உலர்ந்து, மழை பெய்யாது. முழு நிலவைச் சுற்றி இடைவெளியுடன் வட்டம் தெரிந்தால் மழை பெய்யாது. இதனை ‘கோட்டை கட்டுதல்’ என்பார்கள். இதனை எல்லாம் அடிமைகள் சொல்லக் கேட்டு அதற்கேற்ப முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மழைக்கு முன்பாக நீர் நிலைகளைப் பராமரித்தார்கள். வறட்சியை அறிந்து தானியங்களை சேமித்தார்கள். வெள்ளம் மற்றும் புயலை அறிந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டார்கள்.

சுமார் 60-க்கும் மேற்பட்ட நெல் வகைகளை அடிமைகள் அறிந்திருந்தார்கள். சம்பா, முண்டன், அரிக்கிராவி போன்ற நெல் வகைகள் பாமர மக்களின் உணவாக இருந்தன. சீரகச் சம்பா, கொத்தமல்லிச் சம்பா, மல்லிகை சம்பா, புனுகுச் சம்பா, ஆனைக் கொம்பானை போன்ற நெல் வகைகள் வசதி படைத்தவர்களின் உணவாக இருந்தன. அறுவங்குறுவா நெல் அறுபது நாட்களில் விளைந்தது. புளுதி புரட்டி நெல்லை கையாலே மண்ணை புரட்டி பருவம் செய்தார்கள்.

நீண்ட தூரம் செல்லும் வழிப்போக்கர்களுக்கு சொர்ண வாரி என்கிற நெல் வகை இருந்தது. அரிசியை இடிக்கத் தேவையில்லை. சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைத்து புட்டுக்குழலில் போட்டு அவித்தால் போதும். கொக்கிச் சம்பா மீன் குழம்புக்கு ஏற்றது. சிவப்பு நிற வல்லரக்கன் அரிசி கொழுக்கட்டைக்கு ஏற்றது. இவை நீண்ட நேரம் பசி தாங்கும். இதுவும் தொலைதூரப் பயண உணவாகப் பயன்பட்டது. சீரகச் சம்பாவை பயிரிடும்போதே வயலில் கறிவேப்பிலையை நறுக்கிப் பொடியாக தூவிவிடுவார்கள். சாதம் வடிக்கும்போது அரிசி மணக்கும்.

இந்த நெல் வகைகளை எல்லாம் எப்படி பயிர் செய்ய வேண்டும்? எந்த காலத்தில் எந்த நெல் வளரும்? பயிரை பூச்சிகள் தாக்காமல் எப்படி பாதுகாக்க வேண்டும் என்பது எல்லாம் அடிமைகளுக்குத் தெரிந்திருந்தது. அன்னத்துப்பூச்சி பயிர்கள் பாதிக்கும் செம்பநோய் அல்லது கவலை நோய்க்கு வேப்பம் விதையைப் பொடித்து தண்ணீர் கலந்து வயலில் தெளித்தார்கள். சிலர் ஊர்ச் சுற்றி பன்றியின் மலத்தையும் தண்ணீரில் கலந்து தெளித்தார்கள். நெற்பயிரை வெட்டுக்கிளி கடித்து குருத்து நோய் ஏற்பட்டால் மிளகாய்ப் பொடியை வயலில் தூவினார்கள். ஒட்டுண்ணிப் பூச்சியால் வரும் அருவிளை நோய்க்கு சாம்பலை தூவினார்கள்.
 
ராப்பாடிகள் பாடிய நீர்நிலைப் பாட்டு

ராப்பாடிகள் என்றொரு பிரிவினர் இருந்தார்கள். இவர்கள் குறிப்பிட்ட ஓர் ஒடுக்கப்பட்ட பிரிவிலேயே மேலும் ஒடுக்கப்பட்ட பிரிவினர். இவர்கள் பகலில் வெளி வரக்கூடாது; பெண்கள் இவர்களைப் பார்க்கக் கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகள் இருந்தன. ராப்பாடி இரவு நேரத்தில்தான் ஊருக்குள் வருவார்கள். அவர்கள் உடலைக் கருப்பு நிற அங்கியால் போர்த்தியிருப்பார்கள். தலையில் உச்சி வளைந்த சர்க்கஸ் கோமாளி போன்ற கருப்புத் தொப்பி அணிந்திருப்பார்கள். கையில் சிற்றுடுக்கு இருக் கும். அதை அடித்தபடியே கண்ணை உருட்டி உச்சஸ்தாயியில் பாடுவார்கள். மழை எப்போது பெய்யும்? எப்போது பொய்க்கும்? வெள்ளம் எப்போது வரும்? பஞ்சம் எப்போது வரும்? ஊருக் குள் ஏரிகள் எப்படி இருக்கின்றன? குளங்களில் கரைகளில் செய்ய வேண்டிய வேலைகள் என்ன? நீர்நிலைகளை எப்படி பராமரிப்பது? இந்த வருடம் என்ன பயிரை நடுவது என்பதெல்லாம் அந்தப் பாட்டின் மையமாக இருக்கும்.

ராப்பாடிகளின் உடுக்கைச் சத்தம் தூரத்தில் கேட்கும்போதே மக்கள் சிறுபாத்திரத்தில் நெல்லை வாசலில் வைத்துவிடுவார்கள். ராப்பாடியுடன் வரும் உதவியாளர் ஒருவர் நெல்லை சேகரித்துக் கொள்வார். இந்த ராப்பாடிகளைப் பார்த்தால் தெரு நாய்கள் எல்லாம் தெறித்து ஓடிவிடும். காரணம், இவர்களின் தோற்றம் அல்ல. இவர்கள் வரும்போதே காட்டுக்குள் சென்று அப்போது கழித்த ஓநாயின் மலத்தை உடலெங்கும் பூசிக்கொண்டு வருவார்களாம். அந்த மலத்தின் வாடையை நாய்களால் தாங்க முடியாது. அதுதான் நாய்கள் தெறித்து ஓடும் ரகசியம். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட நாஞ்சில் நாட்டு கிராமங்களில் இந்த ராப்பாடிகள் பாடி வந்தார்கள்’’ என்கிறார் அ.கா.பெருமாள். 

No comments:

Post a Comment