நல்லுடல் வளர்ப்போம்!

“எக்சர்சைஸ் செய்யாததாலதான் தொப்பை போடுதுன்னு, நல்லா தெரியுது. என்ன பண்றது சார்? ஆபீஸ் போயிட்டு வர்றதுக்கே நேரம் சரியா இருக்கு. இதுல எங்கே எக்சர்சைஸ் பண்ண?"

“சுகர் இருக்கு. சாப்பாட்டுனால மட்டும் அதை கண்ட்ரோல் பண்ண முடியல. வாக்கிங் போகணும். காலைல குழந்தைங்கள ரெடி பண்றது, சமையல், ஆஃபிஸ் வேலை, அது, இதுன்னு என்னோட அன்றாட வேலைக்கு மத்தில, வாக்கிங் எல்லாம் யோசிக்கவே முடியல”

அலுவலகத்தில் பணிபுரியும் பெரும்பாலானவர்களின் புலம்பல் இப்படியாகத்தான் இருக்கும்.

ஒவ்வொரு மனிதனும் ஆரோக்கியமாக வேலைகளைச் செய்ய நாள் ஒன்றுக்கு 2,400 கலோரிகள்வரை தேவைப்படுகிறது. உணவு மூலம் நம் உடலுக்குக் கிடைக்கும் கலோரி எனப்படும் சக்தியை, வியர்வை சிந்தி உழைப்பதன் மூலம் எரிக்க வேண்டும். வேலை செய்வதன் மூலம்தான், உடலில் தேவையில்லாத கொழுப்பு படிவது குறைகிறது.

நம்மில் பலருக்கு உடலுக்குத் தேவையான அளவு கலோரி கிடைப்பதில்லை என்ற பிரச்சினை நிச்சயமாக இல்லை. அதேநேரம், உடலில் தேங்கும் கலோரியைச் செலவழிக்காமல் இருப்பதால் ஏற்படும் பிரச்சினைகளே அதிகம்.
இப்படிப்பட்டவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. பணிபுரியும் அலுவலகத்திலேயே சில எளிய பயிற்சிகளைச் செய்வதன் மூலம், தேவைக்கு அதிகமான உபரி கலோரியை எரிக்க முயற்சிக்கலாம். அதற்கு உதவும் சில எளிய பயிற்சிகள்:

நிற்பது, நடப்பது

l உங்களுடைய வாகனத்தை உங்கள் அலுவலகம் இருக்கும் வளாகத்தில் நிறுத்தாமல், சற்றுத் தள்ளி வசதி யான வேறொரு இடத் தில் நிறுத்தலாம். வளாகத்துக்குள்தான் நிறுத்த வேண்டும் என்றாலும்கூட, நிறைய நடந்து செல்வது மாதிரியான இடத்தில் நிறுத்துங்கள்.

l தனிநபர் வாகனங்களான இருசக்கர வாகனம், கார் போன்றவற்றைப் பயன்படுத்தாமல் பஸ், ரயிலில் பயணிப் பதன் மூலம் கூடுதல் நேரம் நிற்கவும், குறைந்தபட்சமாக வாவது நடக்கவும் வேண்டி வரும். இதுவும் தேவையற்ற கலோரியை எரிக்க நல்ல வழி.

l அலுவலகத்துக்கு சைக்கிளில் செல்வதன் மூலம் கணிசமான கலோரியை எரிக்கலாம்.

l லிஃப்ட், எஸ்கலேட்டர் போன்றவற்றைப் பயன்படுத்துவதைக் குறைத்துக் கொண்டு, நடப்பது, மாடிப்படிகளில் ஏறி இறங்குவதுகூட நல்ல உடற்பயிற்சிதான்.

அலுவலகத்துக்குள்

l “அலுவலகத்தில் ஓடியாடி வேலை செய்பவர்களைவிட, ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி வேலை செய்பவர்களின் ரத்தக் குழாய்கள், கல்லீரல், இதயம், மூளையில் கொழுப்பு தேங்கிவிடுகிறது. இதனால்தான் பகலில் உறக்கமும் வருகிறது" என்கிறார் நியூயார்க் டைம்ஸின் உடற்பயிற்சி பத்தியாளர் சிரட்சன் ரெனால்ட். அதைத் தடுக்க அலுவலக நேரத்தில் உடலைச் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள எளிய உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்துவர வேண்டும்.

l கணினியின் முன் அமர்ந்து நேரம் காலம் தெரியாமல் வேலை பார்ப்பதால், ஜிம்முக்குப் போக நேரமில்லை என ஏங்குபவரா நீங்கள்? அலுவலக இடைவெளி நேரத்தை ஏதாவது ஒரு வகையில் உடற்பயிற்சிக்குப் பயன்படுத்துங்கள். எளிமையான விஷயம் நடப்பது. அல்லது உங்கள் அலுவலகத்தில் ஜிம் இருக்கிறது என்றால், அதைப் பயன்படுத்துங்கள்.

l அலுவலகத்தில் நின்றபடி சில வேலைகளைச் செய்வது. ஒரு பிரிவிலிருந்து இன்னொரு பிரிவுக்குக் கொடுக்க வேண்டிய கோப்புகளை நீங்களே எடுத்துச் சென்று கொடுப்பது போன்றவற்றைச் செய்யும்போது கணிசமாகக் கலோரி எரிக்கப்படும்.


கை, கால் பயிற்சி

l நீண்ட நேரம் நிமிர்ந்து உட்கார்ந்தே செய்யும் வேலை என்றால், இரு கைகளின் விரல்களைக் கோத்து, பின் கழுத்தில் வைத்து நெட்டி முறிப்பதுபோலத் தொடர்ந்து செய்வதன் மூலம் கொஞ்சம் கலோரியை எரிக்கலாம்.

l குறிப்பிட்ட நேர இடைவெளிகளில் கை, கால்களைத் தொடர்ச்சியாக நீட்டி மடக்குவதன் மூலம் கொஞ்சம் கலோரியை எரிக்க முடியும்.

l கைகளை உயரத் தூக்கி மடக்குவதன் மூலம் கொஞ்சம் கலோரியை எரிக்க முடியும்.

l சக்கரம் இல்லாத இருக்கை, மேசை போன்றவற்றின் விளிம்பைப் பிடித்துக்கொண்டு, குதிகால் தரையில் படுமாறு வைத்துக்கொண்டு தரையை நோக்கிக் குனிந்து நிமிரலாம்.

இன்னும் கொஞ்சம்

l உங்களுடைய குதிகாலை தரையில் ஊன்றி நிற்பதன் மூலம் பாதத்தில் இருக்கும் அக்குபஞ்சர் மையங்கள் தூண்டப்படும். கால்கள் வலுவடையும்.

l 10-லிருந்து 15 நிமிடங்கள்வரை சிரிப்பதன் மூலம், 10-லிருந்து 40 கலோரிவரை எரிக்கப்படும். வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பது உண்மைதான்.

l பெரிய பந்தின் மீது செய்யும் உடற்பயிற்சிகளால், இருக்கையில் ஒரே மாதிரி நேராக உட்கார்வதன்மூலம் சோர்வடையும் தசைகளும் எலும்புகளும் புத்துணர்ச்சி பெறுகின்றன.

l டெக்சாஸ் பல்கலைக்கழக உடல்நல மையம் நடத்திய ஆய்வின்படி காற்று ஏற்றப்பட்ட மென்- குளிர்பானங்களைக் குடிப்பதன் காரணமாக இடுப்புச் சுற்றளவு அதிகரிக்கிறது. இதற்குப் பதிலாகப் பழங்களைச் சாப்பிடலாம்.