இந்திய அணுசக்தித் துறையில் பணிபுரிந்த விஞ்ஞானிகளில் 2009-13 காலகட்டத்தில் 11 பேர் இயற்கைக்கு மாறான வகையில் உயிரிழந்துள்ளது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) மூலம் தெரியவந்துள்ளது.

ஹரியாணாவைச் சேர்ந்த ராகுல் ஷெராவத் கடந்த செப்டம்பர் 21-ம் தேதி இதுதொடர்பான தகவல்களை கேட்டிருந்தார்.

அணுசக்தித் துறையின் ஆராய்ச்சி மையங்கள், ஆய்வுக்கூடங்களில் பணிபுரிந்த 8 விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் வெடிவிபத்து, தூக்குப்போட்டு தற்கொலை, கடலில் மூழ்குதல் போன்ற சம்பவங்கள் மூலம் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இரு விஞ்ஞானிகள் தற்கொலை செய்து கொண்டதாகவும், ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரோம்பேவில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்த சி கிரேடு விஞ்ஞானிகள் இருவரின் உடல்கள் கடந்த 2010-ல் அவர்களின் வீடுகளில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டன.

இதில் ஒருவர் நீண்டகாலமாக உடல்நலமற்று இருந்ததால் தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ராவத்பாட்டாவில் பணிபுரிந்த ஒரு விஞ்ஞானி 2012-ல் தனது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

டிராம்பே பாபா அணு ஆராய்ச்சி மைய வேதியியல் ஆய்வுக் கூடத்தில் 2010-ம் ஆண்டு நடைபெற்ற தீ விபத்தில் 2 விஞ்ஞானிகள் உயிரிழந்துள்ளனர். எஃப் கிரேடு விஞ்ஞானி ஒருவர் மும்பையில் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டார். ஆனால், குற்றவாளி இன்னும் கண்டறியப்படவில்லை.

கல்பாக்கத்தில் பணிபுரிந்த ஒரு விஞ்ஞானி கடந்த 2013-ல் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பான விசாரணை நடந்து வருகிறது.

கர்நாடகத்தில் காளி நதியில் குதித்து ஒரு விஞ்ஞானி தற்கொலை செய்துகொண்டார். இவ்வாறு ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.