இந்தியப் பறவையியலின் முன்னோடிகளில் ஒருவரும் டி.சி. ஜெர்டான் என்று அழைக்கப்படுபவருமான தாமஸ் கேவர்ஹில் ஜெர்டான் இங்கிலாந்தின் டெர்ஹாம் கவுண்டியில் 1811-ல் அக்டோபர் 12 அன்று பிறந்தார். மருத்துவம் பயின்ற அவர் கிழக்கிந்தியக் கம்பெனியின் அறுவைசிகிச்சை மருத்துவராக (துணை சர்ஜன்) இந்தியாவுக்கு 1836-ல் வந்தார்.

சிறு வயதிலிருந்தே பறவைகள் மீதும் தாவரங்கள் மீதும் ஆர்வம் மிகுந்தவர் ஜெர்டான். இந்தியாவுக்கு வந்த பிறகு பறவைகளின் பதப்படுத்தப்பட்ட உடல்களை (specimen) சேகரிக்க ஆரம்பித்தார். தக்காணப் பீடபூமி பகுதியிலும் கிழக்கு மலைத் தொடரிலும் அவர் பணிபுரிந்தார். ஃபுளோரா என்பவரைத் திருமணம் செய்துகொண்டு நெல்லூர் பகுதியிலும் பின்னர் தலைச்சேரியிலும் பணியாற்றினார். இவை இரண்டுமே அன்றைய மதராஸ் மாகாணத்தின் பகுதிகளாக இருந்தவை.

ஏன் இந்த மாற்றம்?

பறவைகள், தாவரங்கள் மட்டுமன்றிப் பூச்சிகள், ஊர்வன, நீர்நில வாழ்விகள், பாலூட்டிகள் ஆகியவற்றிலும் அவருக்கு ஈடுபாடு உண்டு. ஆரம்பத்தில் தான் சேகரித்த பறவைகளின் பதப்படுத்தப்பட்ட உடல்களைச் சரியாக அடையாளம் காண்பதற்காக ஸ்காட்லாந்தில் உள்ள பறவையியலாளர் வில்லியம் ஜார்டைனுக்கு, ஜெர்டான் அனுப்பினார். துரதிர்ஷ்டவசமாக அவரிடம் போய்ச்சேர்வதற்கு முன்பாகவே, அந்தப் பதப்படுத்தப்பட்ட பறவைகளைப் பூச்சிகள் அரித்துவிட்டன.

அதற்குப் பிறகு இனி வேறு யாரையும் நம்பிப் பிரயோஜனமில்லை என்று, தான் சேகரிக்கும் பதப்படுத்தப்பட்ட உயிரினங்களையும், தான் பார்த்ததையும் ஜெர்டான் குறிப்பெடுக்க ஆரம்பித்தார். இப்படியாக, தான் சேகரித்த குறிப்புகளைக்கொண்டு ‘கேட்டலாக் ஆஃப் த பேர்ட்ஸ் ஆஃப் த இண்டியன் பெனின்சுலா’ (1839-1840) என்ற நூலை வெளியிட்டார். இந்த நூலில் 420 பறவைகள் விவரிக்கப்பட்டிருந்தன. அதற்கு முன்னதாக டபிள்யூ.எச். ஸைக்ஸ் என்பவர் 1830-களில் வெளியிட்ட புத்தகத்தைவிட, ஜெர்டான் புத்தகத்தில் விவரிக்கப்பட்ட பறவைகளின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகம்.


முன்னோடிப் புத்தகம்

1862-ல் பணி ஓய்வு பெற்று ஜெர்டான் இங்கிலாந்துக்குச் சென்றார். அப்போது இரண்டு தொகுதிகளாக வெளியானதுதான் ‘தி பேர்ட்ஸ் ஆஃப் இந்தியா’ (1862-1864) என்ற புத்தகம். இந்தியாவில் அதற்குப் பிறகு வெளியான பறவைகள் புத்தகத்துக்கெல்லாம் அதுதான் முன்னோடி.

ஜெர்டானின் புத்தகங்களில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொரு புத்தகம் ‘இல்லஸ்ட்ரேஷன்ஸ் ஆஃப் இந்தியன் ஆர்னிதாலஜி’ 1847-ல் இது வெளியிடப்பட்ட இடம் அன்றைய மதராஸ் (சென்னை) என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்துக்கும் அவருக்கும் இப்படி ஒரு தொடர்பு இருந்திருக்கிறது. இந்தப் புத்தகத்தில் 47 வேறுபட்ட பறவைகளின் 50 ஓவியங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பறவைகளுள் மூன்று இமயமலைப் பறவைகள், ஒன்று இலங்கையைச் சேர்ந்தது. மற்றவையெல்லாம் இந்தியாவுக்குள் காணப்படும் பறவைகள். இதில் பெரும்பாலான பறவைகள் முதன்முறையாக இடம்பெற்றிருந்தது புத்தகத்தை முக்கியமாக்குகிறது.

இந்தப் புத்தகத்தில் அவர் எழுதியிருக்கும் முன்னுரையின்படி பார்த்தால், இந்தப் புத்தகம் பல காலமாகத் தயாரிப்பில் இருந்திருப்பது தெரிகிறது. உள்ளூர் ஓவியர்கள் வரைந்த ஓவியங்களைத் துல்லியத்தின் அடிப்படையில் சரிபார்த்த பிறகு, இந்தப் புத்தகத்தில் ஜெர்டான் சேர்த்திருக்கிறார். அந்த ஓவியங்களுக்கு இணையாக அந்தப் பறவைகளைப் பற்றிய விளக்கங்களையும் ஜெர்டான் எழுதியிருக்கிறார். (இந்தப் புத்தகத்திலிருந்து சில ஓவியங்கள் இங்கே கொடுக்கப் பட்டிருக்கின்றன.) ஜெர்டானின் மற்றப் புத்தகங்கள்: ‘த கேம்பேர்ட்ஸ் அண்டு வைல்டுஃபௌல் ஆஃப் இந்தியா’ (1864), ‘த மேமல்ஸ் ஆஃப் இந்தியா’ (1867).

இந்தப் புத்தகத்தில் அவர் எழுதியிருக்கும் முன்னுரையின்படி பார்த்தால், இந்தப் புத்தகம் பல காலமாகத் தயாரிப்பில் இருந்திருப்பது தெரிகிறது. உள்ளூர் ஓவியர்கள் வரைந்த ஓவியங்களைத் துல்லியத்தின் அடிப்படையில் சரிபார்த்த பிறகு, இந்தப் புத்தகத்தில் ஜெர்டான் சேர்த்திருக்கிறார். அந்த ஓவியங்களுக்கு இணையாக அந்தப் பறவைகளைப் பற்றிய விளக்கங்களையும் ஜெர்டான் எழுதியிருக்கிறார். (இந்தப் புத்தகத்திலிருந்து சில ஓவியங்கள் இங்கே கொடுக்கப் பட்டிருக்கின்றன.) ஜெர்டானின் மற்றப் புத்தகங்கள்: ‘த கேம்பேர்ட்ஸ் அண்டு வைல்டுஃபௌல் ஆஃப் இந்தியா’ (1864), ‘த மேமல்ஸ் ஆஃப் இந்தியா’ (1867).அரிய பறவைகளின் அடையாளம்

இங்கிலாந்தின் நார்வுட்டில் ஜூன் 12 1872-ல் ஜெர்டான் மரணமடைந்தார். இங்கிலாந்தில் பிறந்து இங்கிலாந்தில் இறந்திருந்தாலும் அவரது வாழ்க்கையின் முக்கியமான காலகட்டம் இந்தியாவில் கழிந்திருக்கிறது. தனது ஆர்வத்தாலும் அறிவாலும் இந்தியப் பறவையியலுக்குப் பெரும் ஊக்கத்தைத் தந்துவிட்டுச் சென்றிருக்கிறார் ஜெர்டான். அவரால் முதன்முதலாக விளக்கப்பட்ட ஒரு பறவைக்கு அவருடைய நினைவாக ‘ஜெர்டான்ஸ் கோர்ஸர்’ என்ற பெயரை வைத்தார்கள். உலகின் அரிதான பறவைகளுள் ஒன்று அது. 1900-ல் இறுதியாகப் பார்க்கப்பட்ட அந்தப் பறவை அழிந்துபோய்விட்டது என்று கருதப்பட்டு, பிறகு 1986-ல்தான் மறுபடியும் பார்க்கப்பட்டது.

இங்கிலாந்தின் நார்வுட்டில் ஜூன் 12 1872-ல் ஜெர்டான் மரணமடைந்தார். இங்கிலாந்தில் பிறந்து இங்கிலாந்தில் இறந்திருந்தாலும் அவரது வாழ்க்கையின் முக்கியமான காலகட்டம் இந்தியாவில் கழிந்திருக்கிறது. தனது ஆர்வத்தாலும் அறிவாலும் இந்தியப் பறவையியலுக்குப் பெரும் ஊக்கத்தைத் தந்துவிட்டுச் சென்றிருக்கிறார் ஜெர்டான். அவரால் முதன்முதலாக விளக்கப்பட்ட ஒரு பறவைக்கு அவருடைய நினைவாக ‘ஜெர்டான்ஸ் கோர்ஸர்’ என்ற பெயரை வைத்தார்கள். உலகின் அரிதான பறவைகளுள் ஒன்று அது. 1900-ல் இறுதியாகப் பார்க்கப்பட்ட அந்தப் பறவை அழிந்துபோய்விட்டது என்று கருதப்பட்டு, பிறகு 1986-ல்தான் மறுபடியும் பார்க்கப்பட்டது.

தற்போது ஆந்திராவில் எஞ்சியிருக்கும் அந்தப் பறவைக்கு ‘கலுவிக்கோடி’ என்ற தெலுங்கு பெயர் இருந்தாலும் ‘ஜெர்டான்ஸ் கோர்ஸர்’ என்ற பெயரே இயற்கையியலாளர்கள் மத்தியில் நிலைத்துவிட்டது. அதற்கு டி.சி. ஜெர்டான் மீது உள்ள அன்பும்கூட ஒரு வகையில் காரணம் என்று சொல்லலாம். ஜெர்டானின் நினைவாகப் பெயர் வைக்கப்பட்ட இன்னொரு பறவையான ஜெர்டான்ஸ் பேப்ளரும் (தவிட்டுக்குருவி வகை) ஐம்பது ஆண்டுகளாகப் பார்க்கப்படாமல், இந்த ஆண்டு மீண்டும் பார்க்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை அரியனவற்றின் அடையாளம்தானோ ஜெர்டான்?