இந்த நூற்றாண்டுக்குள் கடல் மட்டம் பல மீட்டர் அதிகரிக்கப்போகிறது.

இந்த நூற்றாண்டின் முடிவில் கடல் மட்டம் கிட்டத்தட்ட ஒரு மீட்டர் உயரம் அதிகரிக்கும் என்கிறது பருவநிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கு இடையேயான குழுவின் ஐந்தாம் மதிப்பீடு அறிக்கை. பருவநிலை மாற்றத்தால் நிகழப்போகும் மிகப்பெரிய அசம்பாவிதம் இதுவாகத்தான் இருக்கும். ஆனால், கடல் நீர் எட்டப்போகும் உயரத்தைக் கணிப்பது விஞ்ஞானிகளுக்கே சவாலாகத்தான் உள்ளது.

இதில் அச்சுறுத்தும் யதார்த்தம் என்னவென்றால், உலகின் அதிகபட்ச மக்கள்தொகை கொண்ட நகரங்கள் பெரும்பாலும் கடற்கரையை ஒட்டித்தான் உள்ளன. ஆக, ஒரு மீட்டர் அளவுக்குக் கடல் மட்டம் உயர்ந்தால் நிச்சயம் பெரிய பரப்பிலான நிலம் அழிவைச் சந்திக்கும்.

கடல் மட்டம் எப்படி உயர்கிறது என அறிவியல் ரீதியாகப் பார்த்தால், கடலின் வெப்பநிலை அதிகரிக்கும்போது பனிப் பாறைகள் உருகும், அதன் விளைவாகக் கடல் விரிவடையும். இப்படிக் கடல் வெப்பமடையும்போது சூறாவளி உருவாகும், கடற்கரைப் பகுதிகள் வெள்ளக்காடாகும்.

உருகும் பனித் தகடுகள்

உலகின் மிகப்பெரிய பனித் தகடுகளும் நன்னீர் பனிப் பாறைகளும் இருப்பது அண்டார்ட்டிகா மற்றும் கிரீன்லாந்தில்தான். அதிலும் மேற்கு அண்டார்ட்டிகாவில் உள்ள பனித் தகடுகளுக்கு ஆதாரம் ஆழ்கடல் மடியில் உள்ள பனிப் பாறைகள்தான். ஆனால், சமீபகாலமாக இந்தத் தாய் பனிப் பாறையின் அடர்த்தி குறைந்துகொண்டே வருகிறது என்கின்றனர் பனியாறியலாளர்கள். கடல் மட்டம் 4.8 மீட்டர் அளவுக்கு உயர்வதற்கு, இந்தக் குறிப்பிட்ட பனித் தகடு மட்டுமே போதுமானது. ஆக, இந்தப் பனித் தகட்டின் சில பகுதிகள் அழிந்துபோனால்கூடக் கடல் மட்டம் உயர்வதை யாராலும் தடுக்க முடியாது.

மறுபுறம் பூமியின் மிகப்பெரிய பனித் தகடு கிழக்கு அண்டார்ட்டிகாவில்தான் இருக்கிறது. இதுவும் மளமளவென்று உருகிக்கொண்டிருக்கிறது. இதனால் 3.4 மீட்டர் அளவுக்குக் கடல் பரப்பை உயர்த்த முடியும். சமீபகாலமாகக் கோடைக்காலம் கிரீன்லாந்தை அதிகப்படியாக உருக்குகிறது. அப்படி கிரீன்லாந்து முற்றிலுமாக உருகிப்போனால் கடல் மட்டம் மேலும் ஆறு மீட்டர் உயர்ந்துவிடும்.

விசித்திர சமிக்ஞை

2009 முதல் 2010 வரை அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையின் கடல் மட்டம் 10 சென்டிமீட்டர் வரை அதிகரித்தது. இதைத் தவிரவும் கடல் தொடர்ந்து வெப்பமடைந்துவருகிறது. கடல் மட்ட உயர்வைத் தவிரவும் மேலும் பல மாற்றங்கள் பெருங்கடலில் நிகழ்ந்தபடி உள்ளன. மிதவைவாழ் உயிரினங்கள் மற்றும் செடிகளின் அழிவு, நத்தை, கிளிஞ்சல்கள் மீதான கடல் அமிலத் தாக்கம், திமிங்கிலம், சால்மன், கடற்பசு உள்ளிட கடல் வாழ் உயிரினங்கள் வெளிப்படுத்தும் விசித்திரமான நடவடிக்கைகள். இப்படி நம்மை அச்சுறுத்தும் பல மாற்றங்கள் ஆழ்கடலில் தொடர்ந்து நிகழ்கின்றன.

பனிப் பாறைகள் உருகும் வேகத்தைத் துல்லியமாகக் கணிக்க முடியாமல்போனதற்குக் காரணம், அது பல நிலைகளில் பின்னிப்பிணைந்திருப்பதுதான். நாசாவில் இருந்து ஓய்வுபெற்று, தற்போது கொலம்பியா பல்கலைக்கழகப் புவி நிறுவனத்தில் பணிபுரியும் ஜேம்ஸ் ஹான்சன், பருவநிலை மாற்றத்தைக் கண்டறிந்த விஞ்ஞானிகளின் முன்னோடி ஆவார். கடல் மட்டம் உயர்வு தொடர்பாக விஞ்ஞானிகள் மவுனம் சாதிப்பதாக இவர் குற்றம்சாட்டுகிறார். தற்போது வெளியாகியுள்ள பேலியோ பருவப் பதிவுடன் ஒப்பிடும்போது, நாம் பின்பற்றிவரும் பனித் தகடு மாதிரிகள் அரதப்பழசானவை என்கிறார்.

பருவநிலை மாதிரிகள், பனித் தகடு மாதிரிகள், பேலியோ பருவநிலைத் தகவல் ஆகியவற்றை விஞ்ஞானிகள் பயன்படுத்துவது வழக்கம். இதில் பேலியோ பருவ ஆய்வு முறை என்பது மனித இனம் தோன்றுவதற்கும் முன்பு, புவியின் வெப்பநிலை தற்போது உள்ளதைக்காட்டிலும் சில டிகிரிகள் கூடுதலாக இருந்தபோது கடல் மட்டத்தை அளவிடப் பயன்படுத்தும் ஆய்வு முறையாகும்.

ஆனால், இந்தப் பழங்கதையை ஒதுக்கிவைத்துவிட்டுப் புதிய அபாயசங்கை ஊதுகிறது ஹான்சன் மற்றும் அவர் குழுவினர் சமீபத்தில் வெளியிட்ட கட்டுரை. இப்போதுள்ள நிலையைவிடக் கூடுதலாக 2 டிகிரி செல்சியஸ் எனும் அபாயகரமான வெப்பநிலையை விரைவில் பூமி எட்டப்போகிறது என்கிறது அக்கட்டுரை. மறுபுறம், 2 டிகிரி செல்சியஸை எட்டாதபடி சூழலியலைத் தக்கவைத்துக்கொள்ளலாம் என்கிறது பருவநிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கு இடையேயான குழு. இருப்பினும் 2 டிகிரி செல்சியஸ் வெப்பத்தைப் பூமி எட்டிய காலகட்டத்தில் கடல்மட்டம் எவ்வளவு உயர்ந்திருக்கும் என்பதை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று துடிக்கின்றனர் விஞ்ஞானிகள்.

“அது தொடர்பாக பேலியோ பருவநிலை ஆய்வு, பருவநிலை மாதிரி வடிவம், தற்போதைய பருவநிலை மாற்றங்களின் அவதானிப்பு ஆகியவற்றை அலசி ஆராய்ந்துவருகிறோம்” என்கிறார் ஹான்சன். அவருடைய ஆய்வின்படி அடுத்த 10 ஆண்டுகளில் பனிக்கட்டிகளின் உருகும் வேகம் இரட்டிப்பாகும். ஆனால், மறுபுறம் இத்தகைய திடீர் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை என்கிறது பருவநிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கு இடையேயான குழு. பனி பாறைகள் உருகுவதால் பெருமளவில் நன்னீர் பெருங்கடலில் கலக்கும் நிலை உண்டாகும். இதனால் தற்போது உள்ள சமநிலை குலைந்து சூறாவளி புறப்படும்.

அழிவின் நுழைவாயிலில் கடற்கரை நகரங்கள்

1 லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் வெப்பநிலை இன்று இருந்ததைக்காட்டிலும் ஒன்று முதல் இரண்டு டிகிரிதான் கூடுதல். ஆனால், அப்போது கடல் மட்டமோ ஐந்து முதல் ஒன்பது மீட்டர் வரை கொந்தளித்து எழுந்தது. அப்படியிருக்க, இன்றைய வாழ்க்கை முறை மற்றும் நுகர்வுக் கலாச்சாரப் போக்கை மட்டுப்படுத்தத் தவறினால், அண்டார்ட்டிகாவின் பனிப் பாறைகள் பெருமளவில் உருகிப் பேரழிவை உண்டாக்குவதை யாராலும் தடுக்க முடியாது. ஏனெனில், நம் வாழ்க்கை முறைக்கும் பசுமைக்குடில் வாயுக்கள் வெளியேற்றத்துக்கும் நேரடித் தொடர்பு உள்ளது.

நடுநடுங்கி உடனடியாக அபாயச் சங்கை ஊத வேண்டியதில்லை என்பதே பல விஞ்ஞானிகளின் கருத்தாக இருக்கிறது. ஆனால் உண்மை யாதெனில், கடல் மட்டம் அதிவேகமாக உயர்ந்துகொண்டிருப்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். “இதுவரை எனக்குக் கிடைத்த ஆய்வுத் தகவல்களின்படி, நான் இறுதியாகவும் உறுதியாகவும் சொல்ல நினைப்பது, இந்த நூற்றாண்டுக்குள் பூமியின் வெப்பநிலை அதிகரித்துக் கடல் மட்டம் பல மீட்டர் அதிகரிக்கப்போகிறது. அடுத்து பனித் தகடுகளின் அழிவால் கடற்கரை நகரங்களைக் கட்டமைப்பதும் கடற்கரையில் நகரங்களை மீட்டுருவாக்குவதும் அபத்தமான கற்பனைகளாக மாறப்போகின்றன”என்று தனது வலைப்பூவில் எச்சரித்திருக்கிறார் ஹான்சன்.

தமிழில் : ம.சுசித்ரா 

© ‘தி இந்து’(ஆங்கிலம்)