தலைமைச் செயலக கிளையை தென்னகத்தில் அமைக்க வேண்டும்


தமிழகத்தின் நிர்வாக நலன் கருதி, தலைமைச் செயலக கிளையை மதுரைக்கு வர வேண்டும் என்ற கோரிக்கை தென்னகத்தில் வலுவடைந்துள்ளது. கர்நாடகா, மகாராஷ்டிர மாநிலங்களில் இருப்பதுபோல மதுரையை இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

புதிய வருவாய் கோட்டங்கள்

மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் ஆட்சி என்பது மட்டும் ஜனநாயகம் அல்ல. அந்த ஆட்சி மக்கள் எளிதில் அணுகக் கூடியதாகவும் இருக்க வேண்டும். அதை கருத்தில் கொண்டுதான், புதிய மாவட்டங்களும், தாலுகாக்களும் உருவாக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன. கடந்த 4 ஆண்டுகால ஆட்சியில், தமிழகத்தில் புதிதாக 9 வருவாய் கோட்டங்களும், 65 புதிய வட்டங்களும், 59 குறுவட்டங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கோட்டாட்சியர் முதல் கிராம நிர்வாக அலுவலர் வரையிலான அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும் சூழலில், தலைமைச் செயலகம் மட்டும் தனது அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க வாய்ப்பு கிடைக்காமல் ஏங்கி நிற்கிறது. அதுவும் தென்னக மக்களுக்கு பாரமாக, தமிழகத்தில் வடக்கு ஓரமாக ஒதுங்கி நிற்கிறது.

தென்னகத்தின் அவஸ்தை

சென்னையில் தலைநகர் இருப்பதன் அவஸ்தையை தென்னகத்தில் பிறந்தவர்களால்தான் உணர முடியும். சென்னையில் புறப்படும் மின்சார ரயில் தென்னகத்தை அடைய வேண்டுமானால், இடையில் நிறுத்தி டீசல் எஞ்சின் மாற்ற வேண்டிய சூழல் தொடர்கிறது. தென்னக மக்கள் சென்னை போக வேண்டுமானால் 3 மாதத்துக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டிய அவலமும் நீடிக்கிறது. சுமார் 700 கிலோ மீட்டருக்கும் அப்பால் உள்ள கன்னியாகுமரி மக்கள், தலைமைச் செயலக அதிகாரி ஒருவரை சந்திக்க வேண்டும் என்றால் குறைந்தது 2 நாட்கள் விடுமுறை எடுக்க வேண்டிய கட்டாயமும் தொடர்கிறது.

கிராம மக்களைப் பொருத்தவரையில் ஆட்சியர் அலுவலகங்கள் தான் தலைமைச் செயலகங்கள் என்றாலும் அதிகாரம் எல்லாம் சென்னையில்தான் குவிந்திருக்கிறது. தகுதியிருந்தும் உரிமை மறுக்கப்படும்போது, மேல்முறை யீட்டிற்காக மக்கள் சென்னை செல்கிறார்கள். பணி நியமனம், இடமாற்றம், நில ஒதுக்கீடு போன்றவற்றிற்கு சென்னை சென்றே ஆக வேண்டும். இவ்வளவு ஏன்? உள்ளூர் அணையில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்றால்கூட, சென்னையில் இருந்து உத்தரவு வர வேண்டியது இருக்கிறது.

வேலை, தொழில் வாய்ப்பு இல்லை

தென்னகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகள் இருக்கின்றன. அதில் படித்து வெளியேறுபவர்கள் எல்லாம் சென்னைக்குப் படையெடுக்கிறார்கள். தென்தமிழகம் பொருளாதாரத்திலும், வேலைவாய்ப்பிலும் பின்தங்கி இருப்பதற்கு காரணம் இங்கே யாரும் தொழில் தொடங்க முன்வராததுதான். கட்டமைப்பு வசதி இல்லை என்று அவர்கள் கூறுகிறார்கள். அதனால், தகவல் தொழில்நுட்ப பூங்காக்களும், தொழில்பேட்டைகளும் காத்தாடுகின்றன.

இதை கருத்தில் கொண்டுதான் "தென்தமிழகத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்பட வேண்டும் என்றால், அதிகார மையம் பக்கத்தில் இருக்க வேண்டும். மகாராஷ்டிர மாநிலத்தை பின்பற்றி தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரை ஆண்டுக்கு ஒருமுறையேனும் மதுரையில் கூட்ட வேண்டும்" என்று சட்டப்பேரவையிலேயே வலியுறுத்தி யுள்ளார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ண சாமி. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கோடைக்கு நகர், குளிர்காலத்துக்கு ஜம்மு என்று இரண்டு தலைநகரங்கள் இருக்கின்றன. சென்னை மாகாணமாக இருந்தபோது, அதன் கோடைக்கால தலைநகராக சென்னையும், குளிர்கால தலைநகராக ஊட்டியும் இருந்தது. ஆட்சி யாளர்களின் சொகுசுக்காக அரசு ஆவணங்கள் மலையேறிச் செல்லும்போது, மக்களின் வசதிக்காக அவை மதுரைக்கு வந்தால் என்ன? என்பது தென்னக மக்களின் கோரிக்கை.

4 மண்டலமாக பிரிக்கலாம்

2006 திமுக ஆட்சியின்போது அரசின் திட்டக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார் தமிழருவி மணியன். சென்னையில் அதிகாரம் குவிவதை விரும்பாத அவர், அமைச்சகங்களை தமிழகம் முழுவதும் பரவலாக்கும் திட்டத்தை முதல்வரிடம் வலியுறுத்தினார். ஆனால், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

"தலைமை செயலகத்தில் மனு அளித்தால் உட னடி நடவடிக்கை இருப்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறோம். ஆனால் கிராமத்தினர் அணுக முடியாத இடமாக அது இருப்பதால், இடைத்தரகர்கள் அதிகரித்து விட்டார்கள். எனவே, மதுரையில் மட்டுமல்ல திருச்சி, கோவை போன்ற இடங்களிலும் தலைமைச் செயலக கிளை வர வேண்டும். உயரதிகாரிகளை அங்கு நியமிப்பதோடு, குறிப்பிட்ட கால இடைவெளியில் முதல்வரும், அமைச்சர்களும் மக்களை சந்திக்க அங்கு வரவேண்டும்" என்கிறார் விருதுநகர் மாவட்டம் நூர்சாகிபுரத்தைச் சேர்ந்த இளைஞர் துள்ளுக்குட்டி.

அரசியல் கட்சிகளும் ஆதரவு

திருச்சியில் துணை தலைநகரம் அமைக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி வருகிறது. பின்தங்கிய மாவட்டங்களின் மேம்பாட்டுக்கு கர்நாடகம், மகாராஷ்டிரத்தைப் பின்பற்ற வேண்டும் என்று பாமக கூறுகிறது. "மாநிலத்திற்குள்ளேயே நிலவும் வேறுபாடு களைக் களையும் நோக்குடன் சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு இந்திய அரசியல் சாசனத்தின் 371வது பிரிவு வழி செய்துள்ளது. அதன்படி 371(2) பிரிவின் கீழ் மாராட்டிய மாநிலத்திலும், 371(டி) பிரிவின் கீழ் ஆந்திர மாநிலத்திலும், 371(ஜெ) பிரிவின் கீழ் கர்நாடக மாநிலத்திலும் பிராந்திய அளவிலான முன்னேற்றத் திட்டங்களுக்கு வழி செய்யப்பட்டுள்ளது. அதேபோல தமிழ்நாட்டில் சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்த அரசியலமைப்புச் சட்டத்தில் 371(கே) என்ற புதிய பிரிவு சேர்க்க வேண்டும். இதைப் பயன்படுத்தி தமிழகத்தில் பின்தங்கிய பிராந்தியங்களுக்காக சிறப்பு மேம்பாட்டு வாரியம் அமைத்தல், அரசுத் திட்டங்கள், நிதி ஒதுக்கீடு, கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளித்தல் ஆகிய நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும்" என்கிறது பாமகவின் நிழல் நிதிநிலை அறிக்கை. இந்த கோரிக்கைகள் வலுத்து வருவதால், சட்டப் பேரவைத் தேர்தலில் இதுவும் முக்கியப் பிரச்சினையாக அமையலாம்.

தலைமைச் செயலக கிளையா? அதிகாரப் பரவலா? என்பதை முடிவு செய்ய வேண்டியது மக்கள்தான். எனவே, தென்தமிழக மக்களிடம் கருத்து கேட்டு, அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமை.
எல்லாம் சாத்தியமே... வழிகாட்டும் உயர் நீதிமன்ற மதுரை கிளை

மதுரையை தமிழகத்தின் 2-வது தலைநகராக்கி னால் முழு வெற்றி காண முடியும்... இது மக்களுக்கான மாற்றம்தான் என்பதை தனது 11 ஆண்டுகால சாதனைகள் மூலம் அச்சாரமிட்டு காட்டுகிறது நாட்டின் ‘பசுமை அமர்வு’ என்று அழைக்கப்படும் உயர் நீதிமன்ற மதுரை கிளை.

10ஆண்டுகளுக்கு முன்புவரை தென் மாவட் டங்களைச் சேர்ந்தவர்கள் உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்றால் சென்னைக்குத்தான் செல்ல வேண்டும். கன்னியாகுமரி, நெல்லையில் இருந்து ஒருவர் சென்னைக்கு சென்றுவிட்டு அன்றே ஊருக்குத் திரும்புவது முடியாத காரியம்.

இதற்கு பயந்தே தென் மாவட்ட வழக்கறி ஞர்கள் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு செல்லாமல் தங்களது மாவட்டங்களுக்கு உள்ளேயே பணி செய்து வந்தனர்.

இந்த சூழலில்தான் சென்னை உயர் நீதிம ன்றத்தின் கிளையை மதுரையில் அமைக்க வேண்டும் என தென்மாவட்டத்தில் தீவிர போராட் டம் நடைபெற்றது. இதையடுத்து மதுரை உலகநேரியில் உயர் நீதிமன்ற கிளை 2004-ல் தொடங்கப்பட்டது. உலகில் எங்கும் இதுபோல் அழகும், பிரம்மாண்டமும் நிறைந்த நீதிமன்றக் கட்டிடம் இல்லை எனும் அளவுக்கு மதுரை கிளை தனது பெருமையை பறைசாற்றிவருகிறது.

இங்கு மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தேனி, திருச்சி, புதுக் கோட்டை, தஞ்சாவூர், கரூர், நெல்லை, தூத்துக்குடி,கன்னியாகுமரி ஆகிய 13 மாவட்ட ங்களைச் சேர்ந்த வழக்குகள் விசாரிக்கப் படுகின்றன. கடந்த ஜூலை 24-ம் தேதியுடன் பத்தாவது ஆண்டை நிறைவு செய்து, 11-வது ஆண்டில் அடியெடுத்துவைத்துள்ளது உயர் நீதிமன்ற மதுரை கிளை. இந்த 10 ஆண்டுகளில் இடைக்கால மனுக்கள் தவிர்த்து பிரதான வழக்குகள் மட்டும் 6.24 லட்சம் முடிக்கப்பட்டுள்ளன. பிரதான மனுக்களுடன் தொடர்புடைய இடைக்கால மனுக்களையும் சேர்த்து கணக்கிட்டால், முடிக்கப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டும். இது மிகப் பெரிய சாதனையாகும்.
உயர் நீதிமன்ற மதுரை கிளை, மாநில நுகர்வோர் ஆணையத்தின் கிளையில் மதுரையில் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்படும் நிலையில், மாநில அரசின் பிற துறைகளின் தலைமையக கிளையை மதுரையில் திறப்பதில் அரசுக்கு சிரமம் இருக்காது. இதனால் ஏக்கத்தில் தவிக்கும் தென் மாவட்ட மக்களின் வாழ்வில் சிரமங்கள் நீங்கும், வளம் பெருகும் என்பது மறுக்க முடியாத உண்மை!