புதிய தொழில்முனைவோர்களை உருவாக்குவதில் மதிப்புக் கூட்டுதல் எனும் மகத்தான கலை முக்கியமான பங்களிப்பை செய்து வருகிறது என்றால் மிகையில்லை. சாதாரண ஒரு விவசாயியின் வருமானத்தை, கனவை, ஆசையை மகத்தான ஒன்றாக மாற்றுகிறது மதிப்புக் கூட்டு தொழில்நுட்பம். மதிப்புக்கூட்டலைக் கற்றுக் கொண்டால் விவசாயி என்கிற நிலையிலிருந்து தொழில் முனைவர் என்கிற இடத்துக்கும் உயர்ந்து விடுகிறார்.

பொதுவாக சந்தைக்கு பொருட் களைக் கொண்டு செல்லும் விவசாயிகள் பெரும்பாலும் சந்தோஷமாக வீடு திரும்பியதாகச் சரித்திரம் இல்லை. அதே சமயம் கொஞ்சம் மாத்தி யோசித்தால் அந்த பொருட்களையே மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி, நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்கின்றனர் தொழில் முன்னோடிகள்.

விவசாயி - தொழில்முனைவோர்

விவசாயப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்பது உடனடியாக தீர்க்கக்கூடிய விஷயம் இல்லை என்பதை புரிந்து கொண்டு மாற்றுத்தீர்வுகளை யோசித்தால் மதிப்புக் கூட்டி விற்பதுதான் சரியான தீர்வாக இருக்க முடியும்.

தென்னை விவசாயி தனது விளைச் சலுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்று காத்திருப்பதைவிட, தென்னை யிலிருந்து கிடைக்கும் பொருட்களை பல்வேறு விதமாக மதிப்புக் கூட்டி விற்பனை செய்யலாம். தேங்காய், இளநீர், மட்டைகள் என அப்படியே விற்பனை செய்யாமல் அதை மதிப்புக் கூட்ட பழக வேண்டும். தேங்காய் பவுடர், தேங்காய் எண்ணெய் என உற்பத்தி செய்யலாம். தேங்காய் மட்டையை பதப்படுத்தி அதை பித் என்கிற வடிவில் கொண்டு வருகிறபோது அதற்கு ஏற்றுமதி வாய்ப்புகளும் அதிக அளவில் உள்ளது.

இளநீரை கார்விங் செய்து அழகாக பேக்கிங் செய்தால் ஷாப்பில் மால்களிலும் விற்பனை செய்ய முடியும். தேங்காய் கொட்டாங்குச்சிகளை எரி பொருளாக மட்டுமே பார்க்கக்கூடாது. இதை வெளிநாடுகளில் ஒரு முறை பயன்படுத்தும் கப்புகளாக பயன்படுத்து வதால் ஏற்றுமதி செய்யலாம்.

ஏற்றுமதி

கார்பன் தயாரிப்புக்கு பயன்படுத்துவதால் அதற்கான வாய்ப்புகளை தேட வேண்டும். இப்படி ஒவ்வொரு பொருளுக்கும் தனித்தனியாக யோசனை செய்தால் மகத்தான வருமானம் கிடைக்கும் என்பதுதான் உண்மை. பொள்ளாச்சியை சேர்ந்த ஒரு விவசாயி தேங்காய் பவுடரை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்.

தேங்காயில் இருந்து தயாரிக்கப்படும் இந்த பவுடரை சாக்லெட், பிஸ்கட், கேக் போன்றவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்கள் அதிகமாக வாங்கிச் செல்கின்றன. வட இந்தியாவிலும் இதற்கு அதிக சந்தை உள்ளது.

தூக்கி எறியும் தேங்காய் மட்டையில் உள்ள நாரைப் பிரித்தெடுத்து அதை விவசாயத்துக்குப் பயன்படுத்தி வருகிறார்கள் ஐரோப்பிய விவசாயிகள். அவர்களுக்குத் தேவையான நார்கள் தமிழ்நாட்டிலிருந்து செல்கிறது. மண் தொட்டியில் தேங்காய் நாரை வைத்து, பத்து லிட்டர் தண்ணீர்வரை ஊற்றினாலும் அப்படியே உறிஞ்சி தக்க வைத்துக் கொள்வதால் அதற்கு வரவேற்பு பலமாக உள்ளது. அந்த நாரில் பயிரை வைத்து வளர்க்கிறார்கள். போன்சாய் மரங்களை வளர்ப்பதற்கு இது சிறந்த முறையாக இருந்து வருகிறது.

தொழிற்சாலை தேவை இல்லை

அதுபோல பால் உற்பத்தியாளர்கள் உரிய விற்பனை விலை கிடைக்க வில்லை, கொள்முதல் இல்லை என பல சிக்கல்களை அனுபவிக்கின்றனர். பல நேரங்களில் கறந்த பாலை கீழே கொட்டியும் அரசின் கவனத்தை ஈர்க்கின்றனர். ஆனால் மதிப்புக் கூட்டல் முறையில் இதில் மகிழ்ச்சியான லாபம் பார்க்கலாம் என்பதுதான் உண்மை. மேலும் இந்த சிக்கல்களுக்கு மதிப்புக் கூட்டல் முறை இவர்களுக்கு தீர்வாக இருக்கும். முக்கியமாக பாலிலிருந்து பல நாட்கள் கெடாமல் இருக்கும் சீஸ் என்கிற பலாடைக் கட்டி தயாரிக்கலாம்.

சீஸ் தயாரிக்க பெரிய தொழிற்சாலை தான் தேவை என்றில்லை, சிறிய அளவில் வீட்டிலேயே உற்பத்தி செய்யலாம். பத்து லிட்டர் பாலை ஒரு லிட்டராக சுருக்கி எளிய முறையில் விற்பனை செய்ய முடியும். ஒரு லிட்டர் பாலில் 100 கிராம் சீஸ்தான் தயாரிக்கலாம். ஆனால், நூறு லிட்டர் பாலின் அடக்கவிலை அதிகபட்சம் 3,000 ரூபாய் என்றால் அதிலிருந்து செய்யப்படும் 10 கிலோ சீஸின் குறைந்தபட்ச விற்பனை விலை 4,000 வரை விற்பனை ஆகிறது. உற்பத்தியில் 90% சீஸ் ஐந்து நட்சத்திர ஓட்டல்களுக்கு செல்கிறது. எவ்வளவு நாட்கள் என்றாலும் கெட்டுப் போகாது. சீஸின் நாட்கள் கூடக் கூட சுவையும் மணமும் அதிகரிக்குமாம்.

பல மடங்கு லாபம்

நெல்லிக்காய் உற்பத்தி செய்த ஒரு விவசாயி இன்று நெல்லி ஜூஸ் தயாரிப்பிலும் கலக்கி வருகிறார். அல்லும் பகலும் கஷ்டப்பட்டு நெல்லிக்காயை நெல்லிக்காயைப் பறித்துக்கொண்டு போனால் ஐந்துக்கும், பத்துக்கும் கேட்டதில் வெறுத்துப்போனவர்தான் ராஜேந்திரன். இன்று நெல்லிக்காயில் இருந்து ஜூஸ், ஜாம், சாக்லெட் போன்றவற்றைத் தயாரிக்கக் கற்றுக் கொண்டு தொழில்முனைவோராக நிற்கிறார். நெல்லி ஊறுகாய், நெல்லி சிப்ஸ், தொக்கு, நெல்லிப் பாக்கு சீவல், நெல்லி குளியல் பவுடர் என பல பொருட்களைத் தயாரிக்கிறார்.

நெல்லிக்காயை பறிச்சு விற்பனை செய்தால் ரூ.50,000 கிடைக்கும். அதையே மதிப்புக் கூட்டப்பட்ட பொரு ளாக விற்பனை செய்கிறபோது பல மடங்கு லாபம் கிடைக்கிறது என்கிறார் இவர். இதைபோல அதிக விளைச்சலால் விலை கிடைக்காமல் அவதிப்படும், தக்காளி விவசாயிகள் மாற்றி யோசிக்கலாம். ஜூஸ், ஜாம், ஊறுகாய், ரெடிமேட் மிக்ஸ் என அதிலிருந்து பல பொருட்களை தயாரிக்கும் கலையைக் கற்றுக்கொண்டால் வருமான இழப்பைத் தவிர்க்க முடியும்.

மதிப்புக் கூட்டு கலையால் தேங்காய் மட்டை போன்ற உபபொருட்களைக் கூட விற்கமுடிகிறது. சில மணி நேரங்களில் கெட்டுபோகும் பால் சீஸ், பன்னீர், பால் பவுடர், கிரீம், என்று மாறுகிறபோது நீண்ட நாட்களுக்கு தாக்கு பிடிக்கிறது. இது போல ஒவ்வொரு தொழிலுலும் ஒன்றை பத்தாக மாற்றும் வித்தையை கற்றுக் கொள்வதே காலத்துக்கேற்ற மாற்றம்.

பொதுவாக பாரம்பரிய தொழில் நுட்பத்தை மட்டுமே நம்பியிருப்பவர்கள் இந்த மதிப்புக் கூட்டலை நம்புவதில்லை. அடுத்த தலைமுறையினர் தொழிலை கையிலெடுக்கும் போதுதான் தொழில் நவீன வடிவம் பெறுகிறது. அதாவது விவசாயி என்ற நிலை மாறி தொழில் முனைவர் என்ற இடத்துக்கு உயர்த்திக்கொள்ளாதவரை விளைச் சலுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்று பேசிக்கொண்டிருக்க வேண்டி யதுதான். அந்த நிலை மாற வேண்டும் என்றால் மதிப்புக்கூட்டல் என்கிற மகத்தான தொழில்வடிவத்தை கற்றுக் கொள்வதே சிறந்த தீர்வாக இருக்க முடியும்.