கருப்புப் பணம் உருவாகிய பின்பு கைப்பற்றுவதைவிட, உருவாவதைத் தடுப்பதே சிறந்தது

கருப்புப் பணத்தை வெளியே கொண்டு வர இந்திய அரசு எடுத்த முக்கிய நடவடிக்கையான இணக்கமுறை காலகட்டம் கடந்த செப்டம்பர் 30-ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. இப்போதைய விவாதம் அத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட சொற்பத் தொகையான சுமார் ரூ. 4,000 கோடியைக் குறித்ததாக இருக்கிறது. அத்துடன் கடந்த 2007-ல் ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது பொதுமன்னிப்புத் திட்டத்தின் கீழ் வசூலான ரூ. 10,000 கோடியுடன் ஒப்பிடும்போது, இது தோல்வியடைந்த திட்டம் என்றே கருதப்படுகிறது. ஏனெனில், இடைப்பட்ட காலத்தில் கருப்புப் பணத்தின் அளவு பல மடங்கு அதிகரித்துவிட்டது.

நிதியமைச்சர் அருண் ஜேட்லியும் அவரது சகாக்களும் வெளியே காட்டிக்கொள்ள இயலாத கோபத்தோடு, இனிமேல் என்ன செய்கிறோம் பாருங்கள் என்று பொங்கத் துவங்கியுள்ளனர். உண்மையிலேயே நடந்தது என்னவென்று அரசு பரிசீலிக்கத் தவறுகிறதா என்பதும் தெரியவில்லை.

உருவாகுமுன் தடுப்பது உசிதம்

வரி ஏய்ப்பு தொடர்பான சட்டங்களில் ஆங்காங்கே காணப்படும் அல்லது வேண்டுமென்றே விடப்படும் ஓட்டைகளைப் பயன்படுத்தி, கருப்புப் பணம் பெருகுவதாக வல்லுநர்கள் சொல்கின்றனர். ஜி.எஸ்.டி. போன்ற வரி சீர்திருத்தங்கள் எவ்வளவு தூரம் பலனளிக்கும் என்பதும் தெளிவாகவில்லை. மாற்று வரி அமைப்புகள் பற்றிய பரிந்துரைகள் எவ்வளவு தூரம் பலனளிக்கும் என்பதும் கருத்தில் கொள்ளப்படவில்லை. ஆகையால், கருப்புப் பணம் உருவாகிய பின்பு கைப்பற்றுவதைவிட, உருவாவதைத் தடுப்பதே உசிதம்.

கருப்புப் பணத்தை ஆராய உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டக் குழு தனது அறிக்கையில் ஒன்றைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. ‘பங்குச் சந்தையில் புழங்கும் கருப்புப் பண நடமாட்டத்தைப் பல்வேறு அரசு வருவாய் புலனாய்வுப் பிரிவுகள் கண்காணிப்பதோடு மட்டுமில்லாமல், அவற்றைத் தடுக்கக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளது உச்ச நீதிமன்றம்.

மேலும், அது விந்தையான ஒரு தகவலையும் சொல்லியுள்ளது. சுமார் 54 ஆயிரம் பேர் மட்டுமே வசிக்கும் கேமன் தீவுகளிலிருந்து சுமார் ரூ. 85 ஆயிரம் கோடி முதலீடுகள் பங்குச் சந்தைக்குள் நுழைந்துள்ளன. இந்த கேமன் தீவுகள் வரிவிலக்குச் சலுகைகளை அளிக்கும் இடங்களில் ஒன்று. இது போன்ற வரிவிலக்கு அளிக்கும் (ஆங்கிலத்தில் இவற்றை ‘டேக்ஸ் ஹேவன் / டேக்ஸ் பாரடைசைஸ்’ என்பார்கள்) நாடுகளால் நம் நாட்டில் அதிகரிக்கும் பணப் புழக்கத்தின் தாக்கம், சமூகச் சீர்கேடுகள், வருமான இடைவெளி, வறுமை, வேலையின்மை போன்றவை உண்டாகின்றன.

எப்படி நடக்கிறது?

பங்குச் சந்தையில் எப்படி இப்பணப் புழக்கம் நடக்கிறது? பங்குச் சந்தை முதலீடுகளை ஊக்கப்படுத்தும் நடைமுறைகள்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. நீண்ட கால முதலீட்டு வருமானத் திட்டம் மூலம் ஏராளமான முறைகேடுகள் நடப்பதாக சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கை தெரிவிக்கிறது. ஏதோ ஒரு ஊர் பேர் தெரியாத நிறுவனத்தின் பங்கு தாறுமாறாக உயரும். எப்படியென்றால், அதன் பங்குகளைப் பல தனிநபர்கள் வாங்கியிருப்பார்கள். அப்படி வாங்குபவர்கள் ‘விருப்பப் பங்குகள்’ எனும் முறையில் அந்நிறுவனத்தின் பங்குகளை வாங்கியிருப்பார்கள். ஒரு நிறுவனம் தானாக விரும்பிச் சிலரை முதலீடு செய்யும்படி அழைக்கலாம். அம்முதலீட்டாளர்களுக்குத் தனது பங்குகளை அளிக்கலாம்.

அப்புறமென்ன, தன் பெயரிலுள்ள ஒரு நிறுவனத்துக்கோ அல்லது பினாமி நிறுவனத்துக்கோ கணக்கில் வராத கருப்புப் பணத்தை கேமன் தீவிலிருந்து ஒருவர் அனுப்பி வைக்கலாம். லாபக் கணக்கும் காட்டலாம்; இழப்புக் கணக்கும் காட்டலாம். அடுத்தது பி-நோட்ஸ் எனும் முறை. இதன்படி ஒரு நிறுவனம் தனது முதலீட்டாளர் யார் என்பதைத் தெரிவிக்காமலேயே பங்குகளில் முதலீடு செய்யலாம். இம்முறையில் பங்குகளைப் பரிவர்த்தனை செய்வதைக் கடுமையாக விமர்சித்தவர் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன். 2008 மும்பைத் தாக்குதல்களுக்குப் பிறகு பி-நோட்ஸ் முறையில் முதலீடுகளைச் செய்வதற்குத் தடை வரும் என்று பலரும் நினைத்தனர். ஆனால், இன்று வரை அது தொடர்கிறது.

விருப்பப் பங்கு முதலீடுகளைச் செய்வதிலிருந்து சுமார் 250 தனிநபர்கள், நிறுவனங்களுக்கு ‘செபி’ சமீபத்தில் தடை விதித்துள்ளது. இது போதாது; விசாரணையும் தண்டனையும் வேண்டும் என்கிறது புலனாய்வுக் குழு. அனைத்தையும் விட போலி நிறுவனங்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் குழு வலியுறுத்தியுள்ளது. ஒரே முகவரி, ஒரே மொபைல் எண்களைக் கொண்டிருக்கும் நிறு வனங்கள் ஏராளம். இவற்றைத்தான் போலி நிறுவனங்கள் என்கிறார்கள். இவற்றின் பெயரிலும் முதலீடுகள். அதுவும் வெளிநாட்டிலிருந்து கருப்புப் பண முதலீடு?

பங்குச் சந்தையில் விலைக் குறியீட்டு எண் ஏன் அடிக்கடி அதிரடியாக மேலே ஏறி, அதலபாதாளத்தில் விழுகிறது என்பது அப்பாவி முதலீட்டாளருக்குப் புரிவதில்லை. எல்லாம் கருப்புப் பணத்தின் மகிமைதான்!

இந்தியாவை விட்டு கருப்புப் பணம் வெளியேறாது. ஏனெனில், இங்கு ரியல் எஸ்டேட் முதல் பல வணிக முதலீடுகள் கருப்பை வெள்ளையாகவும், மீண்டும் கருப்பாகவும் மாற்ற ஏற்றதாக இருக்கின்றன. யாருக்கும் பயமில்லை என்று பொருளாதார நிபுணர் ஸ்வாமிநாதன் எஸ். அங்கலேசரய்யா கூறியிருக்கிறார்.

பங்குச் சந்தை மட்டுமின்றிப் பல ஆண்டுகளாக நிலையாக ஏறிவரும் தங்கத்தின் விலையும் அதை இறக்குமதி செய்யும் அளவும் கூடிக்கொண்டே போவது குழப்பத்தைத் தரலாம். கருப்பை வெள்ளையாக்க விலையுயர்ந்த பொருட்களிலும் முதலீடு செய்கிறார்கள் என்பதுதான் இதில் இருக்கும் சூட்சமம்.

சென்ற ஆண்டு பிரபல ஆங்கில இதழ் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் மும்பையைச் சேர்ந்த விஜய் ஜாதவ் என்பவர் ஃபோரன்ஸ்சிக் ஆடிட்டிங் (தடயவியல் கணக்காயம்) எனும் முறையில் வெளிநாட்டில் சுற்றிக்கொண்டிருந்ததாகச் சொல்லப்பட்ட சுமார் ரூ. 25 லட்சம் கோடி கருப்புப் பணம் இந்தியாவுக்கே திரும்பிவிட்டது என்றார். அவர் சொல்வதை யாரும் நம்பவில்லை. ஆனால், தடயவியல் கணக்காயத்தின் அடிப்படையில் செய்த ஆய்வில் ஒரு பிரபல நிறுவனம் மாட்டிக்கொண்டது. அத்தகவலை முதலில் ஆராய்ந்து சொன்னவர் இதே ஜாதவ்தான். இவரது கணக்கீட்டில் நிறையத் தவறுகள் இருக்கலாம் என்கின்றனர் உளவுத் துறை அதிகாரிகள்.

ஒரே அடையாள எண்

தற்போது சிறப்புப் புலனாய்வுக் குழுவும் ஏற்கெனவே அறியப்பட்ட தகவல்களையே மீண்டும் உறுதிப்படுத்துவதுபோல் அறிக்கை அளித்திருக்கிறது. சில பரிந்துரைகளும் கூட அறியப்பட்டவையே. எடுத்துக்காட்டாகப் பல்வேறு அடையாள அட்டைகளை ஒரே எண்ணுடன் இணைப்பதைச் சொல்லலாம். ஒரு வணிகத்தில் ஆதார், மற்றொன்றில் ஓட்டுநர் உரிமம் இப்படி ஒரே நபர் வேறொருவராக வலம் வர முடியும். இதற்கு முடிவு கட்டத்தான் ஒரே அடையாள எண்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு என்னவாக இருக்கும்? அத்தீர்ப்பு எப்படியிருந்தாலும் இனிமேல் உருவாகப்போகிற கருப்புப் பணத்தை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பதை அரசு முடிவுசெய்து, அதை நடைமுறைப்படுத்தாதவரை கருப்புப் பண வளர்ச்சி தொடர்கதையாகவே இருக்கும்!

- கே. ரமேஷ் பாபு, ஆய்வாளர், பத்திரிகையாளர்,