உலகை அதிரவைத்திருக்கிறது, ஃபோக்ஸ்வேகன் கார்களில், புகை அளவு சோதனையைக் காட்டும் மென்பொருளில் நடந்திருக்கும் மோசடி. இதை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த ஆய்வுக் குழுவில் பணியாற்றியவர்களில், தமிழக இளைஞர் அரவிந்த் திருவேங்கடமும் ஒருவர். அமெரிக்காவின் வெஸ்ட் வெர்ஜீனியா பல்கலைக்கழக ஆய்வுமையத்தில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறார் அரவிந்த். அவருடன் மின்னஞ்சல் வழியாக உரையாடியதிலிருந்து...

 

இந்த விவகாரத்தின் ஆரம்பப் புள்ளி எது?

அமெரிக்காவில் ‘தூய்மையான போக்குவரத் துக்கான சர்வதேச கவுன்சில்’ எனும் அமைப்பு செயல்படுகிறது. ஜான் ஜெர்மன் என்பவர் அதன் நிர்வாகியாகப் பணியாற்றுகிறார். டீசலில் ஓடும் மூன்று ஃபோக்ஸ்வேகன் கார்கள் வெளியிடும் நச்சுத் தன்மை பற்றி ஆராய வேண்டும் என்ற கோரிக்கை யோடு அந்த அமைப்பு எங்கள் பல்கலைக்கழகத்தை அணுகியது. எங்கள் பல்கலைக்கழகமும் இதுபற்றிய ஏராளமான தரவுகளைத் தந்து, இந்த ஆய்வை எங்களிடம் ஒப்படைத்தது.

இத்தகைய பணிகளைச் செய்வதற்காக ‘மாற்று எரிபொருட்கள், இன்ஜின்கள் மற்றும் மாசு வெளியாதல்களுக்கான மையம்’ என்ற தனியான மையத்தையே நாங்கள் வைத்துள்ளோம். நான் அதில்தான் பணியாற்றுகிறேன்.

ஆய்வு நடத்தப்பட்ட முறை மற்றும் அதில் கிடைத்த தகவல்களைப் பற்றி விரிவாகச் சொல்லுங்கள்…

இந்த ஆய்வை நானும் எனது சுவிட்சர்லாந்து நண்பன் மார்க் பெஸ்ச்சும் நடத்தினோம்.

2013-ம் ஆண்டின் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நாங்கள் கலிஃபோர்னியா மாநிலத்தின் கடற்கரை ஓரமாக சுமார் 1,200 கி.மீ. தூரம் சாலைகளில் கார்களை ஓட்டிச்சென்றோம். அவை ஓடும்போது வெளியாகிற நச்சுப்பொருட்களின் அளவை அளக்கும் கருவிகளை காரில் பொருத்தியிருந்தோம். சாலைகளில் ஓட்டும்போதும் ஆய்வகங்களில் ஓட்டும்போதும் இத்தகைய மாசுப்பொருட்கள் வெளியாகும் அளவில் வித்தியாசங்கள் இருக்கவே செய்யும். இது நாங்கள் அறிந்ததுதான்.
கடுமையான விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டிய இன்ஜினீயர்கள் நாங்கள் என்பதால் எங்களையே பலமுறை விமர்சித்துக்கொண்டோம். எந்த முடிவுக்கும் வருவதற்கு முன்னால் எங்கள் ஆய்வு முடிவுகளைப் பல முறை பரிசீலித்தோம். ஒரு கார் நன்றாக ஓடுகிறதா, இல்லையா என்று பார்ப்பது எங்கள் வேலை. மோசடி செய்பவர்களைப் பிடித்துக்கொடுப்பதல்ல. ஆனால், ஃபோக்ஸ்வேகன் கார்களில், சாதாரணமாக நாங்கள் எதிர்பார்க்கும் அளவுகளைவிட மிக அதிகமாக மாசுப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது. சராசரி அளவை விட 15 முதல் 30 மடங்கு அதிக அளவில் மாசுகளின் வித்தியாசம் என்பது நாங்கள் எதிர்பாராதது!

கார் தயாரிப்பு உலகில் ஜாம்பவானான ஒரு நிறுவனம் செய்த மோசடியை வெளிக்கொணர்ந்த ஆய்வு இது. இந்த ஆய்வை மேற்கொண்ட காலகட்டத்தில் உங்கள் மனநிலை எப்படி இருந்தது?

தரவுகளை ஆய்வுசெய்வது என்பது எப்போ தும் வெறுப்பையோ மன அழுத்தத்தையோ தராது. மேலும், எங்களது ஆய்வில் கிடைத்த தரவுகள் சிறப்பானவை. ஆனால், பல்வேறு தரவுகளை ஒப்பிட்டுச் சல்லடையில் போட்டுச் சலிப்பதைப் போல இந்த ஆய்வு அமைந்ததால், ஆய்வறிக்கைகளைத் தயாரிக்கவே எங்களுக்கு ஓராண்டுக் காலம் பிடித்தது.

ஃபோக்ஸ்வேகன் கார்களில் பொருத்தியுள்ள இன்ஜின்களில் உள்ள மென்பொருள் எவ்வாறு வேலை செய்கிறது?

நவீன கார்கள் எல்லாம் தற்போது முழுமையாகக் கணினியால் கட்டுப்படுத்தப்படுகின்றன. மாசு வெளியாதலைக் கட்டுப்படுத்துவதும் ஒரு மென் பொருள்தான். மாசுகளைப் பரிசோதிக்கிற தேர்வு களின்போது மிகவும் சிறப்பாகச் செயல்படும் வகையிலும் மற்ற நேரங்களில் மோசமானமுறையில் செயல்படும்வகையிலும் இந்த கார்களின் மென் பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, ஆய்வகத்தில் இருக்கிறோம் என்பதை அந்த கார் உணர்ந்து அதற்கேற்ப நடந்துகொள்கிறது. மாசுப் பரிசோதனைக்கான தேர்வில் இந்த கார் வெற்றிபெற்றது இப்படித்தான்!

இவ்வளவு பெரிய தாக்கத்தை உங்களின் ஆய்வுகள் ஏற்படுத்தும் என எதிர்பார்த்தீர்களா?

நிச்சயமாக இல்லை. எங்களுக்கு இதெல்லாம் வழக்கமான சோதனைகள். எங்களின் சோதனை முடிவுகளை நாங்கள் பகிரங்கப்படுத்திவிட்டோம். இப்படிப்பட்ட உலகளாவிய விளைவுகள் வரும் என்று நினைத்துக்கூடப் பார்த்ததில்லை.
அதிக அளவு நச்சுத்தன்மை கொண்ட மாசு களை வெளியிடும் ஒரு கோடியே 10 லட்சம் கார்களை வெளியிட்டுள்ளதாக ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. அந்த கார்கள் வெளியிடும் கூடுதல் மாசுப்புகை ஒவ்வொரு ஆண்டும் இங்கி லாந்தில் மட்டும் 23 ஆயிரம் பேரைக் கொல்லக் கூடியது என்கிறார் ‘தி கார்டியன்’ நாளிதழின் பத்திரிகையாளர் ஜான் விடல். இதைப் படிக்கும்போது எங்கள் ஆய்வின் முக்கியத்துவம் எனக்கு மேலும் அதிகமாகப் புரிகிறது.

இந்தியாவில் மாசுக்கட்டுப்பாடு எவ்வாறு உள்ளது?

ஒவ்வொருமுறை இந்தியா வரும்போதும் வாகனங்கள் பெருகிக்கொண்டே போவதையும் மாசடைந்த சூழலையும் காண்கிறேன். வாகனங்கள் வெளியிடும் நச்சுப்பொருட்களை ஏறக்குறைய பூஜ்ஜியம் அளவுக்குக் குறைப்பதற்காகப் பல்வேறு வழிமுறைகளை வளர்ந்த நாடுகளில் ஆய்வுசெய்கிறோம். இத்தகைய பணிகளை நாம் இந்தியாவில் செய்ய முடியுமா என்று நான் நினைப்பேன். அதற்கான காலமே இன்னமும் வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். நமது மக்கள்தொகை அடர்த்தியின் காரணமாக, வாகனங்கள் வெளியிடும் நச்சுப்பொருட்களின் அளவு அமெரிக்காவில் இருப்பதைவிட, கண்டிப்பாக இந்தியாவில் மிகமிக அதிகமாக இருக்கும். மக்களின் ஆரோக்கியத்தின் மீதான அதன் தாக்கமும் அதிகமாக இருக்கும்.

வாகனங்கள் வெளியிடும் நைட்ரஜன் ஆக்ஸைடு வாயு மற்றும் நச்சுத்துகள்கள் மனிதர்களுக்கு சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்துகின்றன. இதுபற்றிய ஆழமான புரிதல் வெளிநாடுகளில் காணப்படுகிறது. இந்தியாவில் இதுதொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை.

தூய்மையான முறையில் வாகனங்கள் இயங்கக்கூடிய முறையில் அதிநவீன கருவிகளைப் பயன்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கறாரான கட்டுப்பாடுகளை இந்தியா நிர்ணயிக்க வேண்டும். உலக அளவில் தற்போது வெடித்துள்ள இந்த ஊழல், இந்தியாவுக்கு ஒரு பாடம்.

இந்தப் பிரச்சினையை இந்தியா எப்படி எதிர்கொள்ளலாம்?

நாடு எதிர்கொள்ளும் பிரச்சினையின் தன்மைக் கேற்ப இந்தியா தனக்கான கட்டுப்பாட்டு விதிகளை உருவாக்க வேண்டும். கறாரான தரக்கட்டுப் பாடுகள்தான் மாசு வெளியிடாத வாகனங்களை உற்பத்தி செய்யக்கூடிய நவீன தொழில்நுட்பத்தை உருவாக்கும். அதில் சமரசம் செய்வது என்பது, மக்களின் உயிரோடு விளையாடும் ஆபத்தான விளையாட்டு!