காலத்துக்கு ஏற்ப மாறாதவர்களை காலம் புறங்கையால் பின்னுக்குத் தள்ளிவிட்டு தன்னுடன் வருபவர்களை அணைத்துக் கொண்டு முன்னேறும் என்பதுதான் யதார்த்தம்.

தொழில்நுட்ப வளர்ச்சி முக்கியமாக ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி நமது வாழ்க்கை முறையை வெகுவாக மாற்றிவிட்டது.

அம்மா, அப்பாவை தவிர மற்ற அனைத்தையும் ஸ்மார்ட்போன் மூலம் ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம் என்ற நிலையே உள்ளது.

‘செல்போனில் மிக்ஸி இருக்கிறதா, கிரைண்டர் இருக்கிறதா என்று கூட கேட்பியா’ என்பது தமிழ் திரைப்பட காமெடி. அவையெல்லாம் செல்போனில் கிடையாது என்றாலும், இப்போதைக்கு நமது வாலட்டை (மணி பர்ஸ்) ஸ்மார்ட் போனில் வைத்துக் கொள்ள முடியும் என்பதுதான் மொபைல் வாலட்.

டிஜிட்டல் வாலட்டின் எளிமைப் படுத்தப்பட்ட மற்றொரு வடிவம்தான் மொபைல் வாலட். ஆன்லைனில் பொருட்கள், சேவைகளைப் பெற கம்ப்யூட்டர், லேப்டாப்களை பயன் படுத்திய காலம் மாறி, கையில் உள்ள ஸ்மார்ட் போன்கள் மூலம் அவற்றைப் பெறுவது அதிகரித்துவிட்டது.

பேடிஎம் மூலம் பிரபலம்

மேற்கத்திய நாடுகளில் அதிகமானோர் மொபைல் வாலட் ஆப்களை பயன்படுத்தி வருகிறார்கள் என்றாலும், இந்தியாவில் இப்போதுதான் இதன் பயன்பாடு சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. முக்கியமாக பேடிஎம் (paytm) அள்ளித் தந்த ஆஃபர்கள் இளைய தலைமுறையினரை மொபைல் வாலட் பக்கம் அதிகம் ஈர்த்தது. தொடங்கிய 15 மாதங்களில் 5 கோடி வாடிக்கையாளர்களை பெற்றது பேடிஎம். மாதத்துக்கு சராசரியாக 1.6 கோடி ரூபாய் பணப்பரிவர்த்தனை அதில் நடைபெற்றதாக கணக்கு காட்டியுள்ளது அந்நிறுவனம்.

களமிறங்கியது எஸ்பிஐ

இந்நிலையில் எஸ்பிஐ படி (SBI Buddy) என்ற செயலியை கடந்த வாரம் அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் மொபைல் வாலட் பிரிவில் அதிரடியாக களமிறங்கியுள்ளது பாரத ஸ்டேட் வங்கி. அடுத்ததாக யெஸ் வங்கி, ஆக்சிஸ் வங்கி ஆகியவையும் மொபைல் வாலட்டை அறிமுகம் செய்ய இருக்கின்றன. இதன் மூலம் இந்திய வர்த்தக சந்தையில் மொபைல் வாலட்டின் முக்கியத்துவம் உணரப்பட்டுள்ளது. “எஸ்பிஐ படி”யை களமிறக்கியதன் மூலம் பேடிஎம் (paytm), ஐசிஐசிஐ வங்கியின் பாக்கெட்( Pocket), ஹெச்டிஎப்சி வங்கியின் பேஸ்ஆப் (PayZapp) உள்ளிட்ட வாலட்களுக்கு கடும் சவால் எழுந்துள்ளது.

இந்திய வங்கித் துறையில் 20 சதவீத பங்களிப்பை வைத்துள்ள எஸ்பிஐ-யில் 28.6 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இவர்களில் 2.3 கோடி பேர் நெட் பேங்கிங் சேவையையும், 1.6 பேர் மொபைல் பேங்கிங் சேவையையும் பயன்படுத்துகின்றனர். எனவே அடுத்த கட்டமாக இளைய தலைமுறையினர் அதிகம் பயன்படுத்தும் மொபைல் வாலட் துறையிலும் தன்னை நிலை நிறுத்த முடிவு செய்துள்ளது.

மற்ற மொபைல் வாலட்களுக்கு எல்லாம் இல்லாத சிறப்பம்சம் “எஸ்பிஐ படி”க்கு உண்டு. 13 இந்திய மொழிகளில் இதனை பயன்படுத்த முடியும். இதற்கான செயலியை தரவிறக்கம் செய்து கொண்ட பிறகு பிறகு வங்கிக் கணக்கு, டெபிட், கிரெடிட் கார்டு அல்லது ரீசார்ஜ் கியாஸ்க்குகள் (recharge kiosk) மூலம் பணத்தை மொபைல் வாலட்டுக்கு அனுப்பிக் கொள்ளலாம்.

ஃபிரீசார்ஜ் (Freecharge),சிட்ரஸ் (Citrus) , இட்ஸ் கேஷ்( ItzCash) ஆக்சிஜன் (Oxigen), சாக்பே (Zaakpay),மொபிக்விக் (Mobikwik), என பல்வேறு வாலட்கள் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ளன.

ஆர்பிஐ ஆதரவு

மொபைல் வாலட் முறையில் பணமாக இல்லாமல் டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் நடைபெறுகிறது என்பதால் இந்த வகை சேவைகளுக்கு உரிமம் வழங்குவதில் மத்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தயக்கம் காட்டுவதில்லை. ஏனெனில் இதில் பரிமாறப்படும் பணம் முழுவதுமாக கணக்கில் வந்துவிடும். எனவே சட்டவிரோத பணப்பரிமாற்றத்துக்கு வாய்ப்பே இல்லை. வாடிக்கையாளர்கள் வாலட்டில் வைக்கும் பணத்துக்கான உச்சவரம்பை அதிகரிப்பது, அதிக பண பரிமாற்றத்துக்கு அனுமதிப்பது என மொபைல் வாலட்டுக்கு ஆர்பிஐ தாராளம் காட்டி வருகிறது.

எப்படி பயன்படுத்துவது

மொபைல் வாலட்டை நமக்கு பயன் தரும் வகையில் பயன்படுத்த அதனை முழுமையாகத் தெரிந்து கொள்வது அவசியம். வங்கிக் கணக்கில் பணத்தை போட்டு வைத்திருப்பதுபோல பணத்தை டிஜிட்டல் முறையில் மொபைல் வாலட்டில் வைத்திருக்க முடியும். இதற்கு ஸ்மார்ட் போனும், அதில் இணைய வசதி இருப்பது அவசியம்.

அடுத்ததாக மொபைல் வாலட் சேவை அளிக்கும் நிறுவனத்தின் செயலியை நமது செல்போனில் நிறுவி அதில் தேவையான பணத்தை வங்கிக் கணக்கு, கிரெடிட், டெபிட் கார்டுகளில் இருந்து டிரான்ஸ்பர் செய்து கொள்ள வேண்டும். எந்த மொபைல் வாலட் நிறுவனம் நாம் அடிக்கடி செலவிடும் விஷயத்துக்கு தள்ளுபடி அளிக்கிறதோ அதை தேர்வு செய்வது கூடுதல் பயன் தரும். உதாரணமாக நீங்கள் அடிக்கடி சினிமா டிக்கெட், கால் டாக்ஸி, பஸ் டிக்கெட் புக் செய்வதாக இருந்தால் அதில் அதிக ஆபர் தரும் மொபைல் வாலட்டை தேர்வு செய்து கொள்ளலாம். ஒருவர் எந்தனை மொபைல் வாலட் நிறுவனத்திலும் பணத்தை போட்டு வைக்க முடியும். பிறகு தேவைப்படும்போது அதனை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

கூடுதல் பயன்கள்

அதுவெல்லாம் சரி இதனை பயன்படுத்தும் நமக்கு என்ன கூடுதல் பயன் என்ற முக்கிய கேள்வி இப்போது எழுகிறதல்லவா?.

சினிமா டிக்கெட் எடுப்பதில் இருந்து விமான டிக்கெட் வரை கிடைக்கும் தள்ளுபடிகள், பணப் பரிவர்த்தனை விரைவாக நடைபெறுவது, பாதுகாப்பான பணப் பரிமாற்றம், தேவையற்ற சேவை கட்டணங்கள் இல்லாதது, மிக எளிமையாக பயன்படுத்தும் வசதி, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு என பலவற்றை பர்ஸுக்குள் திணித்துக் கொள்ளத் தேவையில்லை. ஆன்லைனில் கிடைக்கும் அனைத்தையும் வாங்கலாம் என்பதுதான் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் முக்கிய பயன்கள்.

உதாரணமாக எளிமையாக பயன்படுத்துவது என்று எடுத்துக் கொண்டால், சினிமா அல்லது பஸ் டிக்கெட்டை கிரெடிட் கார்டு மூலம் புக் செய்ய கிரெடிட் கார்டு எண், அது காலாவதியாகும் தேதி, சிவிவி, வங்கியின் பெயர் போன்றவற்றை ஒவ்வொரு முறையும் டைப் செய்ய வேண்டும். ஆனால் மொபைல் வாலட்டில் இந்த வேலை கிடையாது.

ஒருமுறை இவற்றை பதிவு செய்து கொண்டபிறகு நாம் தேர்வு செய்த பாஸ்வேர்டை கொடுத்தால் வேலை சுலபமாக முடிந்துவிடும். செல்போன், டிடிஎச், டேட்டா கார்டு ரீசார்ஜ்கள், இன்டர்நெட் கட்டணங்கள், போஸ்ட்பெய்டு கட்டணங்கள் போன்றவற்றுக்கு இப்போது அதிக கேஷ்பேக் ஆபர்கள் வழங்கப்படுகின்றன.

இளைஞர்களே இலக்கு

இப்போதைய சூழ்நிலையில் மொபைல் வாலட் சேவை, எதிலும் வேகத்தை விரும்பும் நவீன இளைய தலைமுறையினரை இலக்காக கொண்டுள்ளது. எனினும் இப்போது நெட்பேங்கிங் உள்ளிட்ட டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தின் வசதிகளை அறிந்து கொண்ட அனைவருமே எதிர்காலத்தில் மொபைல் வாலட்டை பயன்படுத்த தொடங்கிவிடுவார்கள்.

ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு அதிகரிக்கும் போது மொபைல் வாலட் சேவை அனைவரது வாழ்விலும் பிரிக்க முடியாத அம்சமாக மாறிவிடும். அதாவது நமது மணிபர்ஸ்கூட, ஸ்மார்ட் போனுக்குள் சுருங்கிவிடும் காலம் வெகு தொலைவில் இல்லை.