Aug 31, 2015

தஞ்சை ப்ரகாஷ் 4 - சாரு

தினமணி இதழில் வெளிவரும் பழுப்பு நிறப் பக்கங்கள்



வன் ஒரு அடியாள். பிச்சுவா, கோடரி, வீச்சருவாள், கொன்னருவாள், உளி போன்ற ஆயுதங்களோடும் ரத்த வாடையோடும் வாழ்பவன். எதிரிகள் துரத்தி வரும்போது ஒளிந்து கொள்ளும் இடம் இஸ்லாமியர் வாழும் தைக்கால் மேடு. அங்கே நூரி என்ற பெண். அவள் அடிக்கடி அந்த மனிதனைப் பார்க்கிறாள். எப்படி? அந்தக் கூடத்திலிருந்த 13 ஜன்னல்களை ஒவ்வொன்றாகத் திறந்து கொண்டே வந்து வீட்டுக்குள்ளேயே நடந்து கூடம், ஹஜான், உக்கிரானம், ஹாடிகானா பக்கம், தோட்டம் என்று நீண்டு போகும் அந்தத் தெருவின் பெரியதான அந்த வீடு ஒரு ஏக்கர் பரப்பில் அடுத்த தெருவை பின்புறமாகத் தாண்டி வீட்டுச் சுவர் நீண்டபோது, அதே சுவரில் இருந்த பல ஜன்னல்களை நூரி பதுங்கிப் பதுங்கித் தாண்டி முன் கட்டுக்கு வந்ததும், அதிலிருந்த பதினெட்டாவது ஜன்னலை மெல்லத் திறந்ததும் அவளுக்கு வியர்வையில் பயமும், பயத்தில் திடுக்கமும், திடுக்கத்தில் ஆச்சரியமுமாய் பயம்!
ஆளுகளை அவன் பந்து பந்தா சுருட்டி அடிக்கறதப் பாத்தா பயமா இருந்தது. அது என்ன கையா? இரும்பா? எல்லோருடைய குடல்களையும் மாலையாகக் கழுத்தில் மாட்டிக் கொண்டாற்போல் யாரோ ஒரு ஜின் நிற்கிற மாதிரி இருந்தது. யார் இவன்? என்ன சண்டை? என்ன ஜாதி? என்ன மதம்? வாப்பா பார்த்தால் கொன்னே போட்டு விடுவார். எல்லோரும் தூங்குகிறார்கள். இவளுக்குத் தூக்கம் வராமல் போய் நாலைந்து வருசங்கள் ஆகிறது. நிக்கா வருது வருதுன்னாங்க. ஆனா கொமராவே வெச்சிருக்காங்க. வாப்பாவுக்குப் போன மாசம் கூட ஒரு நிக்கா நடந்தது. எட்டாவது நிக்கா. சிவப்பா தமிழ் தெரியாத பதினெட்டு வயது பொண்ணான பல்கீஸ் ஜன்னத் என்கிற அந்த அரபிப் பெண்ணை உம்மா என்று அழைக்கச் சொல்லி உம்மா, நடு உம்மா எல்லாம் அவளைத் திட்டினார்கள். ஜன்னத்தை விட நூரி ஐந்து வயது மூத்தவள்.
ஏகப்பட்ட சுர்மாவை எழுதி மைலாஞ்சி பூசி அரபி ஒடம்பெத் தமிழ் ஒடம்பா மாத்தி எழுதி சித்திரமா வளத்திருந்த மைமூனா பீவிய வாப்பா அரபி மண்ல நிக்கா பண்ணிக்கிட்டு இந்தியா வந்து பத்து பசங்களப் பெத்து அப்புறமா கடைக்குட்டியா நூரியெப் பெத்தெடுத்துப் போட்டப்போ தஞ்சாவூரே முக்குல வெரல போட்டுது. அப்போ மைமூனா பீவிக்கே அறுவது வயசுன்னா வாப்பாக்கு என்ன வயது?
ஒரு கட்டத்தில் வீட்டையும் சமூகத்தையும் எதிர்த்து வீட்டை விட்டு வெளியேறி ரவுடி ரெங்கராஜனை மணந்து கொள்கிறாள் நூரி. ரெங்கராஜனின் பெயர் முத்தலீஃபாக ஆகி விடுகிறது. ரெங்கராஜனை மடியில் போட்டுக் கொண்டு அவன் முஸ்லீமாக ஆக வேண்டிய அவசியத்தைச் சொல்கிறாள் நூரி. நபிகள் குரைஷிக் கூட்டத்திடம் பட்ட அவதிகளைக் கதைகதையாக சொல்கிறாள். இஸ்லாம் என்றால் அமைதி என்றும் சமாதானம் என்றும் கற்பிக்கிறாள். ஆனால் அவனுக்கு ரத்தம்தான் பிடித்திருந்தது. ரத்தம் தண்ணீர் மாதிரி ருசித்தது அவனுக்கு. வீட்டை விட்டு ஓடியாந்தது இதுக்குத்தானா அல்லாஹூ ரப்பே!
ராத்திரி அகால வேளையில் அக்பர் லாலா சந்து கல்லுக் கம்பத்தின் அருகில் இருட்டுக்குள் எப்போது வருவான் என்று காத்துக் காத்து பல வேளைகள். விடிந்தும் அவள் நிற்பதை தெருப் பெண்கள் கலக்கத்தோடு பார்ப்பார்கள். முத்தலீஃபு நிறையத்தான் சம்பாதித்தான். திடீரென்று பதினைந்து நாள் காணாமலே போய் விடுவான். அப்போதெல்லாம் நூரி ஒற்றை விளக்கேற்றி குர் ஆன் ஓதிக் கொண்டேயிருப்பாள். நூரிக்குக் கனவுகள் ஏதும் கிடையாது. ரெங்கராஜன் தான் கனவு!
யாரையாவது யாருக்காவது வெட்டித் தள்ளி விட்டு வந்திருப்பான். முத்தலீஃபின் உலகம் அவளுக்கு நன்றாகவே தெரியும். அங்கே எந்த தர்மத்துக்கும் ஒரே பதில். அடிக்கு அடி. கண்ணுக்குக் கண். பல்லுக்குப் பல். உயிருக்கு உயிர். குலை நடுக்கமும் பயமும் இல்லாத நாளே கிடையாது. ஆனால் முத்தலீஃப் இரவுகளில் அரசன். ராணியிடம் வந்து விட்டால் அவன் பூந்தி நெய் லட்டுதான். அத்தனை இனிப்பு, மயக்கம், புதையல்.
இடைச்செருகலாக ஒரு விஷயம். தஞ்சாவூர் மாவட்டத்து இஸ்லாமிய வாழ்க்கை தமிழ் இலக்கியத்தில் அவ்வளவாகப் பதிவு செய்யப்படவில்லை என்ற ஆதங்கம் எனக்கு உண்டு. உணவையும் தேகத்தையும் இசையையும் அந்த அளவுக்குக் கொண்டாடும் ஒரு இனம் இந்தியாவில் வேறேதும் இருக்க முடியும் என்று சொல்ல முடியவில்லை. பஞ்சாப், குஜராத் இரண்டையும் கூட அதற்கு அடுத்தாற்போல் தான் வைக்க முடியும். (ஆம், குஜராத்தியர்களைப் பற்றி இந்தியர்களின் பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் படிமம் தவறானது. கொண்டாட்டத்தையே வாழ்க்கையாகக் கொண்டவர்கள் குஜராத்திகள்.) தஞ்சை மண்ணில் இஸ்லாமியர் மட்டுமல்லாமல் மற்ற சமூகத்திலும் 75 வயது ஆள் 16 வயது பெண்ணை மணப்பதும், 60 வயதுக்கு மேற்பட்ட பெண் கர்ப்பமடைவதும் குழந்தை பெற்றுக் கொள்வதும் அந்தக் காலத்தில் சர்வசாதாரணமாகக் காணக் கூடியதாக இருந்தது.
தஞ்சை ப்ரகாஷ் தஞ்சாவூர் மாவட்டத்தின் இஸ்லாமிய வாழ்க்கையை அச்சு அசலாகப் பதிவு செய்திருக்கிறார்.
மீண்டும் நாம் கதைக்குள் செல்வோம். 
ஒருநாள் இரவு மூன்று மணி. தெருச் சந்தில் முத்தலீஃபுக்காகக் காத்துக் கொண்டு நிற்கிறாள் நூரி. பத்து நாளாக ஆள் அரவமே இல்லை. வீடு பூராவும் தூசி மண்டிக் கிடக்கிறது. பெருக்கவில்லை. சமைக்கவில்லை. வாசல் தெளிக்கவில்லை. எவ எவ தாலியறுத்து எவ எவ பொழப்புல மண்ணள்ளிப் போட்டு… அல்லாஹூ! என்னா பொறவி இது!
கடைசியில் வந்து சேர்கிறான் முத்தலீஃப். வழக்கம் போல் தன் உடம்பால் அவளை வசப்படுத்துகிறான். அதில்தான் நாசமே. வந்ததும் வீழ்த்தி விடும் வசம். இன்னும் அவளை ஆழத்தில் புதைக்கும் சதி. இவனை மீற இவள் – இவளையே மீறியாக வேண்டும். பசிக்கப் பரிதவிக்க அடித்து – சாகவிருக்கும் கணத்திலேயே அமிர்தவர்ஷத்தால் மூழ்கடித்து மூச்சு விடக் கூட நேரம் தராதவன்!
அந்தத் தருணத்தில் அவளுக்குத் தோன்றுகிறது தன்னில் கரு உருவாகி விட்டதென்று. பெண்களால் அந்த சூக்ஷ்ம உணர்வைப் புரிந்து கொள்ள முடியும். ஆ, இன்னொரு ரெங்கராஜனா? சின்ன முத்தலீஃபா? யா அல்லா…! அப்பனைப் போல் தெருவில் அலையும் அடியாளாக – அதற்கும் திமிரும் ஆண்மையும் அழுத்தும் பாரமும் இனிக்கும் உடம்பும் இருக்குமா? வேண்டாம் மாமூ! நெருப்பாய் எரியிது, போதும்!
என்னடீ போதும், வா சைத்தான்…
மூச்சைப் பிடித்துக் கொண்டு உயிர்நிலையில் உதைக்கிறாள் நூரி. மீண்டும் எழுந்து அவளிடம் வரப் போகிறான் முத்தலீஃப். எழுந்திரு உம்மா எழுந்திரு… வயிற்றிலிருந்த குழந்தையின் குரல் அவளுக்குக் கேட்கிறது. எழுந்து மின்னல் போல் இருட்டில் பாய்ந்த அவள் நூரியா? அல்ல. விலங்கில் பூட்டப்பட்ட அடியுண்ட மிருகம்!
கயாமத் எனும் இறுதித் தீர்ப்பு நாள் என்ற சிறுகதையைப் படித்து முடித்தபோது நூரி முத்தலீஃபை ஏன் கொலை செய்தாள் என்பதற்கான காரணத்தை என்னால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. கர்ப்பம் கலைந்து விடும் என்பதனால் செய்தாளோ என சம்சயம். நல்ல இலக்கியப் பரிச்சயமுள்ள என் தோழி வெரோனிகாவிடம் வாசிக்கக் கொடுத்தேன். ‘நூரிக்கு முத்தலீஃப் மேல் அதீதமாக இருப்பது பாலியல் ரீதியான பிணைப்பு மட்டுமே. திருமணத்துக்குப் பிறகாவது அவனை நல்ல மனிதனாக மாற்ற நினைக்கிறாள். ஆனால் அவனிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இப்போது கருத்தரித்த பிறகு இன்னொரு ரெங்கராஜனா என திகைக்கிறாள். தன் கணவனையாவது ரௌடியாக ஒரு பெண் ஏற்றுக் கொள்ளுவாளே தவிர தன் மகனை அப்படி ஏற்றுக் கொள்ள எந்தப் பெண்ணுக்கும் மனம் வராது. மேலும் நூரி ரெங்கராஜனின் அடிமையாகவே ஆகி விட்டாள். இப்போது அவனை அழிக்காவிட்டால் தன் மகனும் இன்னொரு ரெங்கராஜனாகத்தான் வருவான் என்று அவளுக்கு அந்தத் தருணத்தில் தெரிந்து போகிறது. ‘தன் உணர்வுகளை அடக்க முடியாமல் ஒருவனிடம் திரும்பத் திரும்ப அடிமையாகவே ஆகிறோமே; அந்தக் குறிப்பிட்ட ஒரு தருணத்தை உன்னால் அவனில்லாமல் தாண்ட முடியவில்லையா?’ என்பது ஒரு பெண்ணுக்குப் பெரும் கோபத்தையும் ஆக்ரோஷத்தையும் ஏற்படுத்தக் கூடிய விஷயம். அதனால்தான் நூரி ரெங்கராஜனை உயிர்நிலையில் தாக்கிக் கொல்லுகிறாள்’ என்றார் வெரோனிகா.
***
தஞ்சை ப்ரகாஷின் கதைகளில் பிரதானமாகக் காண்பது பெண்கள், பெண்களின் வாழ்க்கை, பெண்கள் மீதான அடக்குமுறை மற்றும் பெண்களின் அடக்கப்பட்ட காமம். காமம் கொண்டாடிய பொறா ஷோக்கு, கயாமத் போன்ற கதைகளுக்கு நேர் எதிராக ஒரு கதை ஜானுப் பாட்டி அழுது கொண்டிருக்கிறாள். காமம் அடக்கப்பட்ட பிராமணப் பெண்கள். அந்த வீட்டில் இரண்டு பெண்கள். ஒருத்தி சீதா. அவள் இப்படி அறிமுகமாகிறாள்: கண்ணாடியில் சீதா தன்னைப் பார்த்துக் கிளுகிளுத்தாள். சிவப்பு முகத்தில் அந்த சிவப்புச் சாந்து ரத்தம் துளிர்த்து விட்டது போல் அடர்ந்தது. குளித்ததால் நனைந்த ஈரம் பூரணமாகத் துடைக்காததாலேயே அந்தக் கண்ணாடியில் அவளைப் பூரணமாக்கித்தான் இருந்தது. காதுகள் பளபளத்தன. காதோரம் சுருள்கள் நனைவில் ஈரம் பூத்து சுருண்டு அடங்கியிருந்தன. கழுத்தும் ஈரத்தில் மினுங்கியது. குவடுகளில், புஜத்தின் சரிவில், நடுமுதுகுப் பாம்பு மடிப்பில் ஈரம். கண் இமைகளில் புருவங்களில் நெற்றி வளைவில்… குளித்த அவசரமா? அப்படியே பிழிந்த பாவாடையும் துண்டும் திண்ணையில் கட்டியிருந்த கொடியில் ரஸமாகக் காற்று ஊடே இழைந்து ஜன்னலருகில் கண்ணாடியில் குலவிக் கொண்டிருந்த சீதாவைப் புல்லரிக்க வைத்தது. கைகளைப் பார்த்துக் கொண்டாள். சிலிர்த்து விட்டதால் முன்மயிர் நிரம்பிய அந்தக் கைகள் முழுதும் ஒவ்வொரு மயிர்க்காலும் சிலிர்த்து எழுந்திருந்தது. கையும் காலும்! உடல் முழுதும்! என்ன கை! என்ன கால்! என்ன புஜம்! என்ன உடம்பு!
இன்னொருத்தி கண் பார்வை மங்கிய, எண்பது வயது ஜானுப் பாட்டி. பாட்டிக்கும் பேத்திக்கும் இடையே நடக்கும் மௌன யுத்தம்தான் கதை. எதைப் பற்றியது யுத்தம்? சீதாவின் உடம்பு. அதன் மீதான ஜானுப் பாட்டியின் கண்காணிப்பு. அதையும் தாண்டிய சீதாவின் தந்திரம். ‘ஸ்வாமிக்கு வெளக்கப் போட்டியோ?’ ‘ஆச்சுன்னேனே?’ ‘என்னது, வாசல் கேட்டேன்னா ஆரோ தெறக்றாப்ல இருக்கே?’ ‘யாருமில்ல பாட்டி. காத்து. அவ்வளவுதான்.’
கிணற்றோரம் நின்ற வாழைப் பட்டையில் உட்கார்ந்திருக்கும் வலியனைப் பாட்டி பார்த்துக் கொண்டிருந்தாள். தென்னை காற்றில் சிலுசிலுத்துச் சிரித்தது. கோவில் பிரகாரத்தைப் பார்த்தபடியே அசையாது உட்கார்ந்திருந்தாள் பாட்டி. இந்த ஆடி கடந்தால் பாட்டிக்கு எண்பது வயது. காலையில் ஜபம். நீராகாரம். மழைக் காலமானாலும் தலையைச் சிரைப்பதோ பட்டினி கிடப்பதோ அவலைப் போட்டுக் கொண்டு வேளையை ஓட்டுவதோ ஈரத்தோடே ஸ்தோத்திரத்தைச் சொல்லிக் கொண்டு செடிகளுடன் முனகுவதோ தண்ணீர் விடுவதோ எதுவுமே சிக்கலாகாது ஜானுப் பாட்டிக்கு. பிரகாரத்தில் யாரோ நடப்பது போல் தோன்றுகிறது. கண்ணைக் கசக்கியபடியே பார்க்கிறாள். பால் குடித்துக் கொண்டிருக்கும்போது தலைதூக்கிப் பார்க்கும் பூனை போல் வினோத சப்தம். கண்ணாடிப் பாத்திரம் சுவரில் உரசுவது போல வேறு ஒரு சப்த அனுபவம். என்ன இது? அமைதி. இருள். சுவர்க்கோழிகளின் இசை. பாட்டி மெதுவாக பிரகாரத்தில் நுழைந்து அகல் இருக்கும் மாடத்தில் எச்சரிக்கையோடு கை நீட்டுகிறாள். விளக்கு எரிகிறதா? வெப்பம் இல்லையே? பாட்டி அகலில் கை வைக்கிறாள். அகல் ஜில்லென்று இருக்கிறது. எப்படி இருக்கிறது? ஜில்லென்று… பாட்டி மூச்சு விடுவதை நிறுத்தி நின்று பார்க்கிறாள். மூச்சுக்கள் மோதும் ஓசை. கண்தான் குருடு. காதுமா குருடு?
இப்போது மீண்டும் வாசல் கேட்டு நாதாங்கி தைரியமாகவே ஓசையிடுகிறது. ராஜாராமன். ‘வாடா ராஜாராமா! கொஞ்ச நாழிக்கி மிந்தி இப்படித்தான் லொட்ன்னு நாதாங்கி சத்தம் கேட்டுது. நீ தானோன்னு நெனச்சிண்டேன்.’ ‘நான் இப்போதானே வர்றேன்.’ கூடத்தில் பட்டுப் பாவாடையின் சரசரப்பு கேட்கிறது. ‘ஏண்டாப்பா, ஊர்லேர்ந்து ஒம் பொண்டாட்டி இன்னம் வரல்லியே, லட்டர் கிட்டர் எழுதிப் போடப்படாதோ?’ பிறகு நேரடியாகவே தாக்குகிறாள் பாட்டி. ‘என் அவிஞ்ச கண்ணுல மண்ணெத் தூவிட்டு அவளெ இழுத்துண்டு அங்கே போயிட்டே… குட்டி கொஞ்சம் நிகுநிகுன்னு வளர ஆரமிச்சா போதும்டா ஒங்களுக்கு அன்னிலேர்ந்து… அயோக்கிய ராஸ்கல்… பதினாறு வயசாகல்லே… லோகந் தெரிஞ்சுடுத்து… தரிப்பாளோ? இனிமே இங்க வந்தே ஒம் பொண்டாட்டி கிட்ட நேராப் போய்டும் விஷயம், ஆமா?’ ராஜாராமன் அரண்டு போய் ஓடி விடுகிறான்.
பிறகு சீதாவை அழைத்து ‘கோவுல்ல மறந்துட்டு வெளக்கேத்தாமலே வந்துட்டே… இப்போவானும் எண்ணெய எடுத்துண்டு போயி குளுர எண்ணெ விட்டு திரியப் போட்டு நன்னா ஏத்தி வெச்சுப்ட்டு சாமி நல்ல புத்தியெக் குடூன்னு நன்னா வேண்டிண்டு வாடீ!’ என்கிறாள் பாட்டி.
விளக்கு ஏற்றி விட்டு வந்ததும் பாட்டி அமைதியாக சீதாவின் தலையைக் கோதுகிறாள். இருவருமாக திண்ணையில் வந்து உட்கார்ந்த பின் நீண்ட மௌனம். ஜானுப்பாட்டி அவளை அருகே இழுத்துப் போட்டுக் கொண்டாள். பாட்டியின் மடியில் தலை வைத்தபடி கிடந்தாள் சீதா. பாட்டியின் கை அவள் தலையைக் கோதியபடியே இருந்தது.
இருட்டு. சீதாவின் கழுத்தில் ஏதோ சொட்டுச் சொட்டாக சொட்டுவது போல ஒரு பிரமை. விரல்களால் தொட்டுப் பார்க்கிறாள் சீதா பயத்தோடு. ஆமாம் – ஜானுப்பாட்டி அழுது கொண்டிருக்கிறாள்.
எப்பேர்ப்பட்ட கதை! ஜானுப்பாட்டியின் கண்ணீர் பெண்களின் எத்தனை யுகயுகாந்திரமான தாபத்தையும் ஏக்கத்தையும் வேதனையையும் தனிமையையும் சொல்லுகிறது!
(தொடரும்)

No comments:

Post a Comment