Aug 25, 2015

தஞ்சை ப்ரகாஷ் 2 - சாரு

தினமணி இதழில் வெளிவரும் பழுப்பு நிறப் பக்கங்கள்


தஞ்சாவூர் மாவட்டத்துல அஞ்சினின்னு ஒரு சின்னோண்டு கிராமம். அதோட தலைவரு சந்திரஹாச கரமுண்டார். அவரோட பூர்வீக வூடுதான் கரமுண்டார் வூடு. எட்டுக்கட்டு வூடு. ஊரெ வளச்சுகிட்டு காவிரி ஓடுது. கரமுண்டார் வூடு ஆத்துக்குள்ற பாதி ஊடு நிக்கும். ஆமா, ஆத்துக்குள்ள வூட்டுப் பின்கட்டு முழுசும் நிக்குது. முப்பது நாப்பது வருஷத்துக்கு மிந்தி பெரிய வெள்ளம் காவேரியையே கரைச்சுக்கிட்டு மேடேறி கடலாப் பாஞ்சிது. (முப்பது நாப்பது வருஷத்துக்கு மிந்தின்னா? சுதந்திரத்துக்கு முன்னாடி.)  பின்னால தொழுவத்துல நூறு மாடு கட்டிக் கிடந்த இடம். அதுக்கும் பின்னால காவேரி இப்பமும் நுங்கும் நுரையுமா வீட்டெ இன்னும் நனைக்கிது. மோதிப் பாஞ்சு ஓடுது. வெறும் காரைக் கட்டுதான். நூறு வருஷ வூடு. முட்டையும் கடுக்காவும் கருப்பட்டியும் அறைச்சுக் கட்டுன வூடு. வூட்டுக் கொல்லையில நின்னு பாத்தா ஆறுதான் எந்தப் பக்கமும். அது கொல்லை இல்லெ. ஆறு. வூட்டுச் செவுரு எல்லாம் ஆத்துக்குள்ள எப்பமும் முங்கி முங்கிப் பாசி ஏறி கறுப்படிச்சு மறுபடி பாசி ஏறி கரமுண்டார் வூட்டு செவுரு மேல வீசுற தண்ணிச் சத்தம் வூட்டுக்குள்ற சளப்பு சளப்புன்னு கேக்கும். ராத்திரில கூட எப்பமும் தண்ணிச் சத்தம். தவளைக் கூக்குரல். 
சந்திராஸக் கரமுண்டார் ஆறடி ஒசரம். நல்ல தாட்டிகை. மேல சட்டை போட மாட்டாரு. தோள்ள ஒரு துண்டு கிடக்கும் ஆசையா. உடம்பு அப்டியே கருங்காலிக் கட்டையில மழமழன்னு தேச்சு மெருகு போட்ட மாதிரி பளபளன்னு இருக்கும்.  இப்பக்கூட அறுபத்தஞ்சு வயசுக்கு மேலன்னு யாரும் நம்ப மாட்டாங்க. இன்னும் திருக்காட்டுப்பள்ளிக்கு நடந்தே போயி திலும்பியும் நடந்தே வந்துடுவாரு! தோளும் மாரும் பாறைபாறையா படைபடையா பயமுறுத்தும். அவங்க தாத்தா ரகுனாத கரமுண்டாரு வாகு அது. சந்திராஸக் கரமுண்டாருக்கு நாலு பொஞ்சாதிங்க. திண்ணையிலதான் தாம்பத்தியம்.  மூத்ததைத் தவிர்த்து மத்த மூணையும் திண்ணையிலயே விடிஞ்ச பொறவும் கூடப் பார்க்கலாம். ஆமா, மூணும் ஒன்னாத்தான். தஞ்சாவூர் மண்ணுல அது சகஜம். வேணும்னா தி. ஜானகிராமன், கு.ப.ரா., எம்.வி.வி., அப்புறம் இப்போ எழுதுறானே இந்த சாரு நிவேதிதா… எல்லாரையும் படிச்சுப் பாருங்க. யாரு தப்பும் இல்ல; அது அந்த மண்ணோட விசேஷம். மண்ணுன்னா? வெறும் மண்ணா? தண்ணி, காத்து, சாப்பாடு எல்லாந்தான். சரி, 65 வயசு சந்திராஸ கரமுண்டார் மன்மத லேகியம்னு ஒன்னு சாப்ட்டார். அது என்னா தெரியுமா?
பிஸ்தா, பாதாம், முந்திரி, சாலமிசிரி, அக்குரோட், க்ரோசானி, வெள்ளரி விதை, பரங்கி வித்து, இன்னும் பிள்ளை பிறக்க என்னென்ன விதைகள் வேண்டுமோ அத்தனை விதைகளையும் கிலோ கணக்கில் முத்தத்தில் கொட்டி ஜமுக்காளத்தில் நாள் முழுதுமாக உலர்ந்தவைகளைப் பிரித்தெடுத்து அவைகளைப் போலவே இன்னும் பல கடைச்சரக்குகளைச் சேர்த்து இடித்து அரைத்து திரித்து வஸ்த்ரகாயம் செய்து தேனில் ஊற வைத்துக் காய்ந்த பழங்களுடன் கலந்து தினமும் இரவிலும் காலையிலும், ஒரு மரத்துக் கள்ளுடனும் ஒரு பசுவின் பாலுடனும் கலந்து அளவுடன் பெரிய கரமுண்டாரை ‘தாக்கத்’ செய்கிற வேலையை பூராவாக மாஞ்சி என்ற பெண் ஏற்றுக் கொண்டிருக்கிறாள்.
கட்டிலின் மேல் பரப்பிய கருங்காலிப் பெட்டியைத் திறந்து அதில் பதித்திருந்த பெல்ஜியம் கண்ணாடியை இழுத்து சாய்மானப் படுக்கையில் வைத்து அந்தப் பெட்டியில் இருந்த சிறிய சிறிய டப்பிகளில் இருந்து ஜவ்வாது, அரகஜா, பொன் அம்பர், காக்கைப் பொன், சந்தனத் தூள் போன்ற பல வாசனாதி திரவியங்கள், போதாததற்கு நவீன காலத்து வெளிநாட்டு செண்ட் வகைகள் ஆகியவைகளை அடுக்கடுக்காய் ஒவ்வொன்றாய் எடுத்துத் தனது வெற்றுடம்பில் அங்குமிங்குமாக மிக மிக மெலிதாகப் பூசிக் கொள்வார் சந்திராஸக் கரமுண்டார். ஒவ்வொரு நாளும் இப்படியே மணக்கும் இரவுகளாகத்தான் அவருக்கு விடியும்.
***
ஆண் வாரிசே இல்லாமல் பெண் குழந்தைகளாகவே பிறந்து கொண்டிருந்த கரமுண்டார் வூட்டில் பெரிய கரமுண்டாருக்குப் பிறந்த காத்தாயம்பாள் தான் இந்த நாவலின் பிரதான பாத்திரம். நாவலை விவரிப்பதும் அவள்தான். அதுவும் நேரடியாக அல்ல. நாமேதான் புரிந்து கொள்ள வேண்டும். கிட்டத்தட்ட ப்ரகாஷே காத்தாயம்பாளாக மாறித்தான் கதை சொல்கிறார். நான்கில் மூன்று மனைவிகளை மாற்றி மாற்றிப் பெரிய கரமுண்டார் புரட்டி எடுப்பதை காத்தாயம்பாவும் அவ்வப்போது திண்ணையில் பார்க்க நேரிடுகிறது.


மாணிக்கவல்லி சந்திராசக் கரமுண்டாரின் மனைவிகளில் ஒருத்தி. நாப்பது வருஷத்துக்கு மிந்தி கட்டிக் கொண்டாந்து அஞ்சினியில பூட்டினதில இருந்து ஒரு வருஷம்தான் சந்திராச கரமுண்டாரோட திண்ணையில படுத்துக் கிடந்தா! அப்புறம் முக்கி தக்கி மூணு வருஷம், அவ்வளவுதான். இப்பமும் சந்ராச கரமுண்டார் கெஞ்சிக்கிட்டுத்தான் இருக்கிறார். காத்தாயம்பா ஒருநாள் கொல்லையில ரொம்ப நேரம் வெண்டப் பிஞ்சு பறிச்சு கூடையில அள்ளிக்கிட்டு இருந்தாளா பாத்துட்டா! பாவம்! கெனத்தடி இஞ்சின் அறையிலருந்து என்னமோ கெஞ்சுற சத்தம்… குரல் கூட பழக்கம்தான். அப்பாரு!
தொட்டி சொவத்து மேல ஏறி ஜன்னல் வழியா உள்ற பாத்தா… மாணிக்கவல்லியும் சந்ராச கரமுண்டாரும். ‘ஆ!’
‘தூத்தேறி! உங்களுக்கு என்ன கெப்புறு? இஞ்ச வந்து முந்தியெப் புடிச்சு இளுத்து அவுக்குறிங்களே! வயசென்ன ஆச்சு? இன்னும் என்ன கவுச்சி எளவு?!’
‘அடிபோடி, அறுபத்தஞ்சு வயசு ஒரு வயசா? நீ ஆரு? எம் பொண்டாட்டி தானே?’
‘ஆமா, இப்பத்தான் கண்டு பிடிச்சிருக்கிங்களாக்கும் பொண்டாட்டின்னு?’
‘ஏய் எத்தினி வருஷமாச்சு தொட்டேனா?’
‘எனக்கு முடியல்லய்யா, சாமி, உட்ரு! அசிங்கமாயிருக்கு! சாவலாம்ன்னு வருது.’
‘எனக்கு… எனக்கு…’
படீரென்ற சத்தம் கேட்டது. கதவை ரோசத்தோடு அடித்துத் திறந்து வெளியே வந்தார் சந்திராச கரமுண்டார். ஒண்ணுமேயில்லாத மாதிரி பத்தினியும் வெளிய வந்து மாடுகளுக்கு புல்கட்டைப் பிரித்து உதறினாள். காத்தாயம்பாளுக்கு எல்லாம் தெரியும். பசுக்கள் புல்லை முகர்ந்தன.
சின்ன சித்தப்பா கேக்கும். ‘என்ன அண்ணி, அண்ணன் என்ன சொல்றாரு?’
‘போ தம்பி, இதெ வந்து எட்டிப் பாக்கிறியாக்கும்?’
சொல்லப் போனால் அதிகாலை நேரத்திலும் திண்ணையில் நடக்கும் மன்மத நாடகங்களைப் பார்த்து ஊர் சிரிக்காமல் இருப்பதற்காகவே காலை நான்கு மணிக்கு எழுந்து கோலம் போடும் வேலையைத் தவறாமல் செய்து வருகிறாள் காத்தாயம்பா. வயது இருபதுக்கு மேல். பதின்மூன்று வயதிலேயே பெண்களுக்குத் திருமணம் முடிந்து விடும் வீடு அது. அந்த வயதிலேயே பெண்கள் திமுதிமுவென்று இருபது வயதைப் போல் மதர்த்து நிற்பார்கள். பெண்களின் உடல்வாகு பற்றியே பலப்பல பக்கங்கள் எழுதித் தள்ளியிருக்கிறார் ப்ரகாஷ். வயது இருபது ஆகியும் காத்தாயம்பாளுக்கு ஏன் கல்யாணம் ஆகவில்லை? ஏனென்றால், காத்தாயம்பா தான் வீட்டின் குலதெய்வம். அவள்தான் வீட்டு நிர்வாகம் அனைத்தும். அவள் இல்லாவிட்டால் வீட்டில் அணுவும் அசையாது.
அப்பேர்ப்பட்ட காத்தாயம்பாளின் தேகம்? காத்தாயம்பாளுக்கு உமா மஹேஸ்வரியோட ஒடம்பு ஞாபகம் வந்தது. இந்த ஒடம்பு எத்தனை சுகம்ன்னு அவளுக்கு சொல்லிக் கொடுத்ததே உமா மஹேஸ்வரிதானே? உமா மஹேஸ்வரி மொத மொதல்ல காத்தாயம்பாளுக்கு இந்த ஒடம்பச் சொல்லிக் கொடுக்கலன்னா… இந்த ஒடம்பு இப்ப சொன்னத கேட்குமா?
‘என்ன சின்னி, அப்டி பாக்குற? எதுக்கு பாக்குறியாம்?’
‘இல்ல, இப்டி இருக்குதேனுட்டுதான்.’
‘எப்படி இருக்குதேனுட்டுதானாம்?’ன்னு சொல்லிக்கிட்டே காத்தாயம்பாள உமா மஹேஸ்வரி தன்னோட நீளமான சாட்டை மாதிரியான கைகளாலே வாரிக் கட்டி அணைத்துக் கொண்டாள். அப்புறம் அது ஒரு மாயம்… பாம்பு வாயில் இருந்த விஷம் தலைக்கு ஏறினது போல் ஆயிற்று. தலையில் ஏறிய விஷம் பொடிப்பொடியாய் காத்தாயம்பாள் ஒடம்பெல்லாம் நீளமாய்ப் பரவி அவளோட கை விரல் நுனி வரையிலும் பரவி சொட்டு சொட்டாய் மறுபடியும் உமா மஹேஸ்வரியோட உடம்புக்குள் தீயாய் நுழைந்தது. ஆரம்பத்துல இது ரொம்ப ருசியான வெளயாட்டு! அப்புறம் பசியான தேவை. ரெண்டு பெண்கள் ஒண்ண ஒண்ணு சுத்தி இறுகி முறுக்கி ரெண்டு பாம்பாய் ஆணும் பெண்ணுமாய் பாம்பும் பாம்புமாய் அல்லாமல் பாம்பும் சாரையுமாய் மாறிப் போனார்கள். சுப்பாக் கரமுண்டார் வேணாம்ன்னு ஆயிடுச்சி. நிறைய குடிச்சு தள்ளாடிக்கிட்டே வந்து படுக்கையில விழற சுப்பாக் கரமுண்டாருக்கு எப்பவாவது கூட உமா மஹேஸ்வரி வேண்டாம்ன்னு ஆயிடுச்சு. பாவம், ஒண்ணும் சொல்லக் கூடாது… சின்னம்மாவாச்சேன்னு பயந்துகிட்டே மூச்சடக்கிட்டு தண்ணியில குதிச்சா தரையிலேயே கால் பாவ மாட்டேங்குது காத்தாயம்பாளுக்கு. காலால துளாவி துளாவி அடியில போறாப்புல உமா மஹேஸ்வரி சாஞ்சிகிட்டு பூமிக்குள்ள போறது மாதிரி… காத்தாயம்பாளுக்கு ஆரம்பத்துல ஒண்ணும் பேச முடியலேன்னாலும் உமா மஹேஸ்வரியோட கண்ணு கலங்கி முத்து முத்தா தரையில கொட்டும் போது நெஞ்சுக்குள்ள பகீரு பகீருங்குது. ஒடம்ப அவுத்துப் போட்டா அசிங்கம்முன்னுதான் காத்தாயம்பா நெனைச்சிருந்தாள். ஆம்பளைவ உத்து உத்து மாரெப் பாக்குறப்பல்லாம் ச்சீச்சீன்னு தோன்றாப்ல சின்னம்மா, வேண்டாம்… சின்னம்மா… வேண்டாம்… சின்னம்மா வேண்டான்னு கெஞ்சினாலும் தனக்கும் சின்னம்மாவுக்கும் ஒரு வயசு வித்தியாசம்தான்னு ஞாபகம் வர்ரெப்ப ஐயோன்னு ஏங்கும். அவளெ தேடிக்கிட்டு ராத்திரியில உமா மஹேஸ்வரி வரும் போதெல்லாம் திக்குதிக்குன்னு நெஞ்சுக்குள்ற பயமா இருக்கும். அப்றம் உமா மஹேஸ்வரி ஒரு ஆம்பளையப் போல அவ கையெப் புடுச்சு இளுத்து கட்டிக்கும் போது தப்பிச்சு ஓடவே தோணாது. கொஞ்சம் கொஞ்சமா உரமேறிப் போய் மகமாயி தாயே மகமாயி தாயேன்னு உமா மஹேஸ்வரி காத்தாயம்பாள தூக்கி முத்தம் கொஞ்சும் போதெல்லாம் மேலேயிருந்து பத்தாயக்கட்டு ஜன்னல் வழியே ஆயிரம் கோட்டை நெல்லும் அவள் மேலே நூறு நூத்தம்பது வருஷத்து வேதனையெல்லாம் கலந்து ஜோன்னு கொட்ற மாதிரி அப்படியே அவளை ரொப்பிக்கும். சீ என்னாடி இது இந்த அசிங்கம் அப்படீன்னு பளிச்சு பளிச்சுன்னு தாம் மூஞ்சியில தானே அறைஞ்சுக்கும் உமா மஹேஸ்வரி. இப்டி கூட இருப்பாங்களா? இப்டி கூட ஆசை இருக்குமா? நான்தான் பொசக்கெட்ட மூதேவி? உன் துணிய புடிச்சு இளுத்தா நீ ஏண்டி ஒரு ஒலக்கையெ எடுத்து ரெண்டு சாத்து சாத்தாம வுட்டெ தேவிடியாங்கும் உமா மஹேஸ்வரி. காலமெல்லாம் நீதான் இந்த ஆட்டம் ஆடுறியேடி என்று சொல்லிக்கிட்டு எந்திரிச்சு ஒக்காந்தா பத்தாயக்கட்டு மேல் ஜன்னல்ல இருந்து விசிப்பலகையை மிதிச்சா கதவு தெறந்து கிட்டு மேல வானத்துல இருக்குற நட்சத்திரமும் மங்குன நிலா வெளிச்சமும் தெரியிற ராத்திரி வரைக்கும் பத்தாயக்கட்டு வழியே ரெண்டு பொண்ணுவளோட அந்தரங்கம் கிழிபடுற மாதிரி எங்கியோ தூரத்துல இருந்து ஆந்தை ஒன்னோட அலறல் கேட்கும்.
சுமார் 300 பக்க நாவலில் இப்படி காத்தாயம்பாவும் உமா மஹேஸ்வரியும், காத்தாயம்பாவும் செல்லியும் இணைகின்ற - அந்தப் பெண்களின் தேகங்கள் சங்கமித்துப் பிரளயம் புரள்கின்ற பக்கங்கள் ஏராளம், ஏராளம். இந்தப் பூமியில் பிறந்த அத்தனை பெண்ணும் படிக்க வேண்டிய ஒரு நாவல் கரமுண்டார் வூடு. பெண்ணின் தேகமும் அதன் தாபமும் மொழி வழியே இத்தனை உக்கிரமாக வெளிப்படுவதை பெண்களின் எழுத்தில் கூட இதுவரை நான் வாசித்ததில்லை. இங்கே ஒரு முக்கியமான விஷயம். இந்த நாவலை ப்ரகாஷ் என்ற ஒரு ஆண் தான் எழுதியிருந்தாலும் அவனிடம் இதையெல்லாம் சொன்னது மூன்று பெண்கள். பெரிய கரமுண்டாரின் மூன்று மனைவிகள். அவர்கள்தான் ப்ரகாஷின் அப்பாயிகள். ப்ரகாஷே சொல்கிறார்: ‘கரமுண்டார் வூடு நாவலை நான் எழுதியபோது என் அருகே இருந்து ஒவ்வொரு அத்தியாயமாக நான் எழுத எழுத வியப்புடனும், பயத்துடனும் அவைகளையும் என்னையும் படித்துக் கண்ணீர் விட்டுக் கலைத்து என்னுடன் கூடவே எழுத்தில் பங்கு காட்டிய என் தாயார் இன்று இல்லை. நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் கரமுண்டார் கோட்டை என்ற எனது பூர்வீக கிராமத்தை விட்டு ஓடி வந்த எனது தந்தையாரின் தந்தை பற்றி என் பாட்டியும், பூட்டியும் சொல்லி அழுத ஓலங்கள் இன்றும் எனக்குள் இருந்தாலும் இவைகளுக்கு சாட்சியாய் இருந்து கதை காவியமாய் சொன்ன எனது அப்பாயிகள் சமாதானத்தம்மாள், துரச்சியம்மாள், மங்களத்தம்மாள் ஆகிய கிடைத்தற்கரிய மனுஷிகள் இன்று இல்லை. இவைகளின் கனவுத் தன்மைகளை முறித்து எறியக் கற்றுத் தந்து எனது கனவுகளை நிஜமாக்க இவைகளை மறுக்கவும், துறக்கவும், ஏற்கவும் (!) கற்றுத் தந்த என் தந்தை எட்வர்ட் கார்டன் கரமுண்டார் என்கிற முரட்டுக் கள்ள ஜாதி மனுஷனும் இன்று இல்லை.’ ஆக, இதை எழுதியது ஒரு ஆணாக இருந்தாலும் அந்த ஆணிடம் இந்தக் கதைகளைச் சொன்னது எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மூன்று கிழவிகள்தான். அதனால்தான் சொல்கிறேன், இதை ஒவ்வொரு பெண்ணும் படித்தே ஆக வேண்டும் என்று.
‘தரை ஜில்லுன்னு ஏறுது. பெரிய பெரிய மாரு ரெண்டும் வாட்டமா தரையில பதிஞ்சு அவ உள்ளுக்குள்ள ரத்தத்தெ குளுர அடிக்கப் பாக்குது. ஆனா தரையிலயிருந்து அவ ஒடம்புக்குள்ற ஜில்லுன்னு தொடை ரெண்டும் பின்னிக்கிட்டு யாரோ அவளெ அழுத்தி உருட்டி சுருட்டிக்கிறது தெரியிது. ஆண்! அவளுக்கு ஜில்லுன்னு புரியிற அவன் தெலகராஜுதான். குப்புறப் படுத்துப் புரண்டு எட்டாங்கட்டுல தலையெத் தூக்கிப் பாக்குறா காத்தாயம்பா. இப்ப அவளுக்குக் கீழ தெலகராஜு குளுகுளுன்னு கெடக்குறது யாருக்குப் புரியப் போவுது. தெலகராஜு ஜில்லுன்னு தரையா செவப்பு சிமிட்டிப் பாலோட கலந்து கெடக்கானே! அடப்பாவிப் பயலே! இப்பக் கூட வந்து இருக்குள்ள கொண்டு போயேண்டா பாவி! இருபது வருஷமா வேற நெனப்பு ஏதுடா? ஏது? காத்தாயம்பா வாண்டாம் உனக்கு? நேர பள்ளக்குட்டிவ கிட்டப் போனியடா பாவி! இவ வாண்டாமா? இவ எதுக்குடா பின்ன? தரைக்குள்ளேயிருந்து சிமிட்டி ஜில்லிப்புல இருந்து இப்ப ஜில்லிப்பு கொறஞ்சு போச்சு! காத்தாயம்பா ஒடம்பு கொதிக்கிது. தரையும் ஜில்லிப்பு உட்டுப் போயி அவ படுத்துக் கெடக்குற எடம் முழுசும் கொதிக்க ஆரம்பிக்கிது. எட்டாங்கட்டுல தொரச்சியப்பாயியும் அவனும் பேசிக்கிட்டு இருக்கிறது மொணமொணன்னு இஞ்ச கேக்குது… இப்ப வந்து என்னெத் தூக்கப்படாதா… காத்தாயம்பா பொலம்புறா… ஒடம்பு முறுக்கிக்கிது… மாரு ரெண்டையும் தரையோட தரையா அழுத்தித் தொடை ரெண்டையும் பூமியில அழுத்து… மாமா… மாமா… என்னெ… என்னெ… வாண்டாமா? அம்பாள் முலை ரெண்டும் பிளந்து தீக்குழம்பு பூமியெங்கும் பரவ குப்புறக் கிடக்கும் அம்பாளை எடுத்து ஓத யாரிங்கே… அம்பாளை எடுத்துப் புரட்ட யாரிங்கே… அம்பாலை எடுத்து முக்கி எடுக்க யாரிங்கே…’
***
உலக இலக்கியத்தில் பெண்ணுடலின் தாபத்தை முதலில் எழுதியவராகக் கருதப்படுபவர் Sappho என்ற கிரேக்கத்து லெஸ்பியன் கவி. 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். அப்போது தொடங்கி இன்று வரை எழுதப்படும் பெண் எழுத்தின் உச்சங்களில் ஒன்று பியானோ டீச்சர் என்ற நாவல். எழுதியவர் ஆஸ்த்ரியாவைச் சேர்ந்த எல்ஃப்ரீட் ஜெலினெக் (Elfriede Jelinek). சுமார் 35 வயதான எரிகா என்ற பெண் ஆணின் ஸ்பரிசமே படாதவளாக வாழ நேர்வதுதான் கதை. தன் மகளை உலகம் போற்றும் இசைக் கலைஞராக ஆக்க வேண்டும் என்று கனவு காணும் எரிகாவின் தாயார் ஒரு சர்வாதிகாரியாக மாறி அவளைச் சிறுவயதிலிருந்தே ஆண்களின் பார்வை படாமல் வளர்க்கிறாள். எரிகாவின் தகப்பன் ஒரு மனநோய் விடுதியில் அடைக்கப்பட்டுக் கிடக்கிறான். இப்படிப்பட்ட ராணுவக் கட்டுப்பாட்டில் கலை வளருமா என்ன? கடைசியில் எரிகாவினால் ஒரு பியானோ டீச்சராக மட்டுமே ஆக முடிகிறது. இதற்கிடையில் அவளுடைய தேகத்தின் கேவல்களை அவளால் எதிர்கொள்ள முடியாமல் போகிறது. நாவல் முழுவதுமே அந்த வேதனைதான் பல்வேறு சம்பவங்களாலும் நினைவுக் குறிப்புகளாலும் சொல்லப்படுகிறது.  இறுதியில் தன் கிழட்டுத் தாயையே வன்கலவி செய்யவும் முயற்சிக்கிறாள் எரிகா. உலக இலக்கியத்தில் நான் வாசித்த மிக மூர்க்கமான ஒரு இடம் இது. இந்த நாவல் ஓரளவு தன்னுடைய சொந்த வாழ்க்கை என்றும் சொல்லியிருக்கிறார் எல்ஃப்ரீட் ஜெலினெக். நாவலை PDF-ல் படிப்பதற்கான இணைப்பு: 
பியானோ டீச்சர் திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது. ஆனால், நாவல் அளவுக்குத் திரைப்படம் செறிவாக இல்லை. எல்ஃப்ரீட் ஜெலினெக்குக்கு 2004-ல் நோபல் பரிசு கிடைத்தது. பியானோ டீச்சரை இங்கே நான் குறிப்பிடுவதற்குக் காரணம், எல்லா வகையிலும் கரமுண்டார் வூடு பியானோ டீச்சரை விட சிறப்பான ஒரு கலைப் படைப்பு என்பதால்தான். மேலே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் நீங்களே இதை முடிவு செய்து கொள்ளலாம். எரிகா தன் தேகத்தின் சீற்றத்தை அடக்க உடம்பு முழுவதும் ஊசிகளைக் குத்திக் கொள்கிறாள். இந்திய சமூகத்தில் அது சாத்தியமில்லை. காத்தாயம்பாளுக்கு சாமி வருகிறது. அப்போது பூசாரி வந்து அவளைப் பிரம்பால் அடிக்கிறான்.
‘தரைக் குளுமை அவளுக்கு வேணும். பத்து வருஷமா இந்தத் தரைக் குளுமைதான் அவளுக்குத் தெலகராஜு. இல்லேன்னா இந்த ஒடம்பு போடுற ஆட்டம் யாருக்கும் தெரியாது. அதையும் மீறி நாலு மாசத்துக்கு ஒரு தடவை அவ மேல மஹமாயி வரும். அவளாவே ஆடி அடங்குவா! அப்பக்கூட மஞ்சத் துணி கட்டி இறுக்கி வேப்பிலையோட ஆட ஆரமிச்சா எல்லாருக்கும் ஒரு ரெண்டு மணி நேரம் கிலியடிக்கும். பூசாரி அரவான் வர்றதுக்கு மிந்தி ஆத்தா கீள எறங்கீடுவா. நெஜமா ஆத்தா அவ மேல வரலேன்னாக் கூட காத்தாயம்பாளுக்கு எப்ப வேண்டுமானாலும் ஆத்தாவெ மேல கொண்டு வந்துக்க முடியும்ன்னு தோணுது! ஆத்தா மேல வந்தா அவ இன்னதுதான் பண்ணிக்குவான்னு யாராலியும் சொல்ல முடியாது. தீக்கவும் முடியாது. மஞ்சத் துணி கட்டியிருக்க ஒடம்பு அக்கினியா மாறிப் போவும். பூசாரி அரவான் சங்கிலியும் பெரம்புமா வருவான். யாரும் பக்கத்துல இருக்க முடியாது. ஹோன்னு சத்தம் போடுவா காத்தாயம்பா! பெரம்பால அடிச்சு அடிச்சு ஒடம்பு செவந்து ரத்தம் கட்டிக்கும். வரிவரியா நெருப்பு வரியும். ஒவ்வொரு தடவையும் ஏகப்பட்ட பூஜை எல்லாம் நடத்துவாங்க. ஏகப்பட்ட வேண்டுதல் ஹோமம் எல்லாம் பண்ணுவாங்க. அடுத்த நாலாவது மாசம் திரும்பியும் மஹமாயி ஆய்டுவா காத்தாயம்பா! டாக்டர் கிட்ட வைத்தியர் கிட்ட ஹக்கீம் சாயபு கிட்ட எல்லாம் கொண்டு போய் காட்டியாச்சு. ம்ஹும்!’
பெண்ணின் தேகம் தவிர நூறு ஆண்டுகளுக்கு முன்பு தலித் பெண்கள் எத்தகைய ஒடுக்குமுறைக்கு ஆளானார்கள் என்பதையும் மிகத் துல்லியமாகப் பதிவு செய்கிறது கரமுண்டார் வூடு. ஒரு சமூகத்தில் பெண்களின் அடக்கப்பட்ட காமத்தின் உக்கிரமான வெளிப்பாடு; இன்னொரு சமூகத்தில் உயர்சாதி ஆண்கள் தங்கள் காமத்தைத் தீர்த்துக் கொள்வதற்காக விலங்குகளைப் போல் நடத்தப்படும் பெண்களின் அவலம். இந்த இரண்டையுமே மிக விரிவாக ஆவணப்படுத்தியிருக்கிறார் ப்ரகாஷ். 
கரமுண்டார் வூடு என்ற நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, தஞ்சை ப்ரகாஷை ஒரு மாபெரும் இலக்கியக் கர்த்தாவாக நாம் கொண்டாடியிருந்தால் அவருக்கும் நோபல் கிடைத்திருக்கும். ஆனால் நமக்கோ ப்ரகாஷ் ஒரு எழுத்தாளர் என்றே தெரியவில்லை.  நல்ல மனிதர், இனிமையாகப் பழகுவார், கோபமே வராது, தாடி நல்லா இருக்கும், மீசை நல்லா இருக்கும் என்றல்லவா இரங்கல் கட்டுரை எழுதுகிறோம்? கரமுண்டார் வூடு என்ற நாவலே வாசிக்கக் கிடைக்காமல் புகைப்பட நகல் எடுத்து ஏதோ 18-ம் நூற்றாண்டு ஆவணத்தைப் போல் ஏடு ஏடாகப் படிக்க வேண்டியிருக்கிறது. வெட்கக்கேடு! இந்த நிலையில் நோபலைப் பற்றி நினைப்பது எப்பேர்ப்பட்ட அபத்தம்! ப்ரகாஷ் மட்டுமல்ல; இந்தத் தொடரில் நாம் பார்த்து வரும் அத்தனை படைப்பாளிகளுமே சர்வதேச இலக்கியப் பரப்பில் முதலிடத்தில் இருக்க வேண்டியவர்கள்.
(தொடரும்) 

No comments:

Post a Comment