Aug 25, 2015

தஞ்சை ப்ரகாஷ் (1943 – 2000) - சாரு



‘சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்.  அது சம்பந்தப்பட்ட எல்லாவற்றிலும் ஆழ்ந்த ஈடுபாடு.  அதற்கு நேரம் காலம் என்று எதுவுமில்லை.  கிரிக்கெட் பற்றி இவ்வளவுதான் பேசுவது என்று இல்லை.  எல்லாவற்றுக்கும் மேல் அவருக்கு மனித நேயம் மிக முக்கியமானதாக இருந்தது.  எந்நேரமும் சிரித்த முகமாக, சிநேக பாவம் தளும்பத்தான் தோற்றமளிப்பார்.  அநேக ஆட்டக்காரர்களின், அவர் விரும்பாத சுபாவங்களை, நடத்தைகளை, ஆட்டங்களைப் பற்றிப் பேசும் போது கூட அவர் கோபப்பட்டதில்லை.  நான் அவரை கிட்டத்தட்ட முப்பது வருடங்களாக அறிவேன்.  ஆனால் அவர் (கிரிக்கெட்) ஆடுவார், ஆடிக் கொண்டும் இருந்தார் என்பது அவர் ரிடையர் ஆவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பே எனக்குத் தெரியவந்தது…’
ஏதேனும் பிழையான இடத்துக்கு வந்து விட்டோமோ என்று எண்ணி விடாதீர்கள்.  சாரு நிவேதிதாவாகிய நான் எழுதும் பழுப்பு நிறப் பக்கங்களைத்தான் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்.  மேலே உள்ள பத்தியைப் படிக்கும்போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது?  உங்களுக்கு எப்படியோ, எனக்கு அதைப் படித்த போது நெஞ்செல்லாம் பற்றி எரிந்தது.  ஏனென்றால், இலக்கியத்தில் உலக சாதனை செய்திருக்கும் தஞ்சை ப்ரகாஷ் பற்றி வெங்கட் சாமிநாதன் எழுதியிருந்ததைத்தான் மேலே மேற்கோள் காட்டியிருக்கிறேன்.  சச்சின் என்ற பெயருக்குப் பதிலாக ப்ரகாஷ் என்றும் கிரிக்கெட் என்ற இடத்தில் இலக்கியம் என்றும் போட்டுக் கொள்ளுங்கள்.  இவ்வளவுக்கும் ப்ரகாஷுடன் முப்பது ஆண்டுகள் நெருங்கிப் பழகியிருப்பதாகச் சொல்கிறார் வெங்கட் சாமிநாதன்.  அதற்கும் மேல் ‘நாங்கள் ஒருவரில் மற்றவர் ஐக்கியப்படுத்திக் கொண்டவர்கள்’ என்றும் சொல்கிறார் வெ.சா.  ப்ரகாஷ் பற்றி வெ.சா. எழுதிய மேற்படி கட்டுரை நவம்பர் 2000-ல் ‘சுந்தர சுகன்’ என்ற இலக்கியச் சிற்றிதழ் வெளியிட்ட ப்ரகாஷ் நினைவு மலரில் வெளிவந்தது.  இவ்வாறு குறிப்பிடும் வெங்கட் சாமிநாதனுக்கு ப்ரகாஷ் உயிரோடு இருந்தபோது என்ன செய்தார் தெரியுமா?  வெங்கட் சாமிநாதனுக்கு என்றே ஒரு பத்திரிகை நடத்தினார்.  பெயர் வெ.சா.எ.  முழுசாகச் சொன்னால் ‘வெங்கட் சாமிநாதன் எழுதுகிறார்.’  பத்திரிகையின் பெயரே ‘வெ.சா.எ.’ தான்.  அதில் வெ.சா. மட்டுமே எழுதினார்.  ‘ஒரே ஆளுக்காக ஒரு பத்திரிகையா?  என்னய்யா இது கூத்தாயிருக்கு?’ என்று கூச்சலிட்டார்கள்’ என்று வெ.சா.வே குறிப்பிடுகிறார்.  25 ஆண்டுகளுக்கு முன்னால் வந்த அந்த இதழுக்கு நானும் சந்தாதாரராக இருந்திருக்கிறேன்.  என்னுடைய புத்தக குடோனில் எங்கோ கிடக்கும் சிறுபத்திரிகைகளில் அதுவும் ஒன்று.  ஆக, ப்ரகாஷ் தன் வாழ்நாள் பூராவும் வியந்தோதிய வெங்கட் சாமிநாதனுக்குக் கூட ப்ரகாஷ் இறக்கும் தறுவாயில்தான் அவர் எழுத்தாளர் என்றே தெரிய வருகிறது.  ‘அவரும் (ப்ரகாஷ்) எழுதுவார், எழுதிக் கொண்டும் இருக்கிறார் என்பது எனக்கு சமீப சில வருஷங்களாகத்தான் தெரியும்’ என்று 2000-ல் ப்ரகாஷின் நினைவஞ்சலி மலரில் எழுதுகிறார் வெ.சா.









இதோடு போகவில்லை.  ப்ரகாஷ் ஒரு எழுத்தாளரே இல்லை; ஆனால் அற்புதமான மனிதர்; தில்லியையே பார்த்து இராதவர், ஆனால் விலாசம் கூட இல்லாமல் என் வீட்டைத் தேடிக் கண்டு பிடித்து வந்து விட்டார் என்ற ரீதியில்தான் அந்த அஞ்சலிக் கட்டுரையை எழுதியிருக்கிறார் வெ.சா.  என் வாழ்நாளில் ஒரு எழுத்தாளனைப் பற்றி வாசித்த அஞ்சலிக் கட்டுரையில் ‘அவன் எழுத்தாளன் என்றே எனக்குத் தெரியாது; ஆனால் அவன் கோமணம் கட்டிய நாளிலிருந்து எனக்கு டிகிரி தோஸ்த்’ என்று எழுதப்பட்ட அஞ்சலிக் கட்டுரை இது ஒன்றாகத்தான் இருக்கும்.   ‘ப்ரகாஷ் எழுத முடியாமல் போய் வருடங்கள் பல ஆயின என்பது ஒரு பக்கம்’ என்று 2000-ல் மேற்படி கட்டுரையில் குறிப்பிடுகிறார் வெ.சா.  ஆனால் உண்மை என்னவென்றால், தொண்ணூறுகளில்தான் ப்ரகாஷ் அதிகம் எழுதியிருக்கிறார்.  அவருடைய சிகர சாதனையான கரமுண்டார் வூடு என்ற நாவலும் 1998-ல்தான் வெளிவந்தது. (இங்கே இன்னொரு சோகம் என்னவென்றால், ப்ரகாஷ் ஒவ்வொரு நாவலையும் எழுதி முடித்து விட்டு பத்துப் பதினைந்து பிரசுர நிலையங்களில் கொடுத்து அது மறுக்கப்பட்டுத் திரும்பி வருவதைத் தன் வாழ்நாள் முழுவதும் அனுபவித்திருக்கிறார்.  கரமுண்டார் வூடு நாவலையும் அவர் 1987-ல் எழுதிவிட்டார்.  ஆனால் பதினோரு ஆண்டுகள் கழித்து 1998-ல்தான் அது புத்தகமாக வெளிவந்தது.  அதிலும் நாகப்பட்டினம் சிவசக்தி நேஷனல் புக் பப்ளிகேஷன் என்ற யாருக்கும் தெரியாத பிரசுர நிலையம் மூலம்.)    
வெங்கட் சாமிநாதனை மட்டுமல்லாமல் க.நா.சு.வையும் தன் வாழ்நாள் முழுவதும் கொண்டாடியிருக்கிறார் ப்ரகாஷ்.  தமிழில் எழுதும் அத்தனை எழுத்தாளர்களின் பெயரையும் பட்டியலிடுவதைத் தன் வழக்காமாகக் கொண்டவர் க.நா.சு.  இதனாலேயே அவர் அந்நாளில் ‘பட்டியல் விமரிசகர்’ என்று கேலி செய்யப்பட்டதும் உண்டு.  அப்பேர்ப்பட்ட க.நா.சு.வும் கூட அவரது பட்டியலில் ஒருமுறை கூட ப்ரகாஷுக்கு இடம் அளிக்கவில்லை.  பொதுவாக தமிழின் சிறந்த நாவல்கள் என்று அவ்வப்போது வெளியிடப்படும் பட்டியல்களிலும் ப்ரகாஷின் நாவல்கள் இடம் பெற்றதில்லை.  ஆனால் ப்ரகாஷ் நாவல்களின் நிழலைக் கூடத் தொட முடியாத பல நாவல்கள் அந்தப் பட்டியல்களில் காலம் காலமாக இடம் பெற்று வருகின்றன. 
பெயரைக் குறிப்பிடாதது மட்டுமல்லாமல், போர்னோ எழுத்தாளர் என்றே அவரது வாழ்நாள் முழுவதும் அறியப்பட்டிருக்கிறார் ப்ரகாஷ்.  இத்தகைய சூழலில் 1991-லிருந்து 2000 வரை பத்து ஆண்டுகள் அவருடைய எழுத்து சுந்தர சுகனில் தான் அதிகம் வெளிவந்தது.  அது பற்றிக் குறிப்பிடும் போது ப்ரகாஷ்,  ‘சிறுகதை எழுதுனா செக்ஸுங்கிறான்.  கட்டுரை எழுதுனா ‘இவ்வளவா? குறைச்சிக் கொடுங்க’ங்கிறான்.  அவனைத் திட்டாதே, இவனை விமர்சிக்காதேங்கிறான்.  எனக்குப் போதிய சுதந்திரத்தையும் தாராளமாகப் பக்கங்களையும் கொடுத்தது சுந்தர சுகன் தான்’ என்று சொன்னார். 
சுந்தர சுகன் தஞ்சாவூரிலிருந்து வெளிவரும் சிறுபத்திரிகை.  ஜி.எம்.எல். ப்ரகாஷ் என்றும் தஞ்சை ப்ரகாஷ் என்றும் அறியப்பட்ட ப்ரகாஷ் தஞ்சாவூர் மானம்புச் சாவடி, ஆலமரத்துத் தெருவில் வசித்தார்.  ‘கார்டன் அம்மா’ என்று அழைக்கப்பட்ட ப்ரகாஷின் தாயார்தான் தஞ்சாவூரின் முதல் மகப்பேறு மருத்துவர். நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையிலும் பின்னர் தஞ்சாவூர் அமெரிக்கன் ஆஸ்பத்திரியிலும் பணி புரிந்தார் கார்டன் அம்மா.  ப்ரகாஷ்  பெற்றோருக்கு ஒரே பிள்ளை.  பெற்றோர் கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள்.  தாயார் திருநெல்வேலி சமஸ்தான வைத்தியர் குடும்பம்.  காருகாட்டு வெள்ளாளர்.  தந்தை தஞ்சாவூர் கள்ளர் இனம். 
ப்ரகாஷுக்கு 1975-ல் மங்கையர்க்கரசியுடன் திருமணம் நடந்தது.  அப்போது ப்ரகாஷின் வயது 33.  10.6.1943-ல் பிறந்து 2000-ல் இறந்த ப்ரகாஷுக்கு அபாரமான நினைவாற்றல் இருந்திருக்கிறது.  இரண்டு மூன்று வயதில் நடந்தவைகளைக் கூட பிசகாமல் சொல்லக் கூடியவராக இருந்திருக்கிறார்.  அது அவரது கரமுண்டார் வூடு நாவலில் நன்றாகவே தெரிகிறது.  மிகச் சிறிய வயதில் அவர் பார்த்த, கேட்ட கதைகள் எல்லாம் துல்லியமாக அந்த நாவலில் பதிவாகியிருக்கிறது.  சமஸ்கிருதம் உட்பட பல மொழிகளைக் கற்றறிந்தவர்.  தமிழில் முதுகலைப் படிப்பு. ஆனாலும் சட்டதிட்டங்களுக்கு உட்படாத சுதந்திர மனம் கொண்டவராக இருந்ததால் வேலைக்குச் செல்லவில்லை.  ரயில்வே க்ரைம் துறையில் சில காலம் இருந்து விட்டு விலகி விட்டார்.  ஆரம்பப் பள்ளிப் படிப்பு மன்னார்குடியில்.  நடுநிலைப் பள்ளிப் படிப்பு மணப்பாறையில்.  அதையடுத்து ராஜபாளையம் உயர்நிலைப்பள்ளியில் படித்தார்.  பூண்டி புஷ்பம் கல்லூரியில் பி.யூ.சி.  சென்னையில் ஆட்டோமொபைல் எஞ்ஜினியரிங் படிக்கும்போது இந்தி எதிர்ப்பில் கலந்து கொண்டதால் கல்லூரி முதல்வர் பெற்றோருக்குத் தந்தி கொடுத்து பையனை அழைத்துச் செல்லும் படிக் கூறி விட்டார்.  ரயில்வேயிலிருந்து வெளியே வந்ததும் பால் கடை, பேப்பர் ஏஜென்ஸி, வெங்காய மண்டி என்று பல தொழில்களில் ஈடுபட்டிருக்கிறார் ப்ரகாஷ்.  பின்னாளில் ஒரு மெஸ் கூட வைத்ததாகப் படித்திருக்கிறேன்.  குருபக்தி நிறைந்தவர்.  கரிச்சான் குஞ்சு இவரது குருநாதர்களில் பிரதானமானவர்.  ப்ரகாஷ் சம்ஸ்கிருதம் படிக்கும்போது வகுப்பு முடிந்ததும் அவரது ஆசிரியர் ப்ரகாஷ் அமர்ந்திருந்த இடத்தை மட்டும் தண்ணீர் விட்டுக் கழுவுவாராம்.  அது பற்றித் தன் மனைவி மங்கையர்க்கரசியிடம் மனம் வருந்திக் கூறியிருக்கிறார்.  ‘ஆசாரமான கிறிஸ்தவ பிராட்டஸ்டண்ட் குடும்பத்துப் பிள்ளை விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லுவதைக் கேட்டு கரிச்சான் குஞ்சு, ‘கோபாலா, கோபாலா, நாங்க விட்டுத் தொலைச்சதை என்ன அழகாச் சொல்றேட’ என்பார் என்று எழுதுகிறார் தஞ்சாவூரைச் சேர்ந்த நா. விச்வநாதன்.  
ப்ரகாஷுக்கு மலையாளம் இலக்கணச் சுத்தமாகத் தெரியும். மேலும் தெலுங்கு, உர்தூ, ஜெர்மன் ஆகிய மொழிகளிலும் புலமை மிக்கவர்.  அதி தீவிர புத்திக்கூர்மையும் பிரமிக்கத்தக்க ஞாபகசக்தியும் இருந்ததால் மிகக் குறுகிய காலத்திலேயே அவரால் ஒரு மொழியை இலக்கணச் சுத்தமாகக் கற்றுக் கொள்ள முடிந்திருக்கிறது.  இலக்கியமும் நண்பர்களுமே முக்கியம் என்று கருதியதால் எந்தப் பெரிய வேலையையும் ஒப்புக் கொள்ளாமலேயே வாழ்ந்திருக்கிறார். ஒரு துறவியைப் போல் வீட்டுக்குக் கூட தகவல் அனுப்பாமல் பல மாதங்கள் சுற்றித் திரிந்து விட்டு வீட்டுக்குத் திரும்புவாராம்.  குடி, சிகரெட், பெண் தொடர்புகள் இல்லாதவர்.  ஆனால் நாக்கு ருசிக்கு அடிமை. அசைவத்தைப் பற்றிப் பேசும் போது சைவ உணவுப் பழக்கம் உள்ள சுகனிடம், ‘ருசியின் ஒரு பக்கத்தை அறியாமலே போய் விட்டீர்கள்’ என்று சொல்வாராம்.  ‘ஒவ்வொரு ஊரின் இண்டு இடுக்களிலும் உள்ள நல்ல உணவகங்களைப் பற்றி உமிழ்நீர் ஊற ஊறப் பேசிக் கொண்டிருப்போம்’ என்கிறார் சுகன்.  சுகனுமே அறுபதைக் கூட எட்டாமல் சமீபத்தில் இறந்து போனார். 
தஞ்சையை ஆண்ட மன்னர்கள் பற்றி மூன்று புத்தகங்கள் எழுதி  முற்றுப் பெறுவதற்குள் இறந்து விட்டார் ப்ரகாஷ்.  9.1.99 அன்று காரைக்கால் பொது மருத்துவமனையிலிருந்து சி.சு. செல்லப்பா பற்றிய ஒரு கட்டுரையை சுந்தர சுகனுக்கு அனுப்பியிருக்கிறார் ப்ரகாஷ்.  செல்லப்பா பற்றிய முக்கியமான கட்டுரை அது.  இன்னொரு கட்டுரையும் கடிதமும் 15.2.2000 அன்று சுகனுக்குப் போகிறது.  இப்படித் தன் ஆயுட்காலம் முழுவதும் எழுதிக் கொண்டே இருந்த ப்ரகாஷின் கல்லறை அவர் வாழ்ந்த தஞ்சாவூர் மிஷன் ஆலமரத்தெருவுக்குப் பக்கத்திலேயே உள்ள கல்லறைத் தோட்டத்தில் இருக்கிறது.  அந்தக் கல்லறைத் தோட்டம் பற்றியும் ‘அங்கிள்’ என்ற சிறுகதையில் எழுதியிருக்கிறார்.  நகுலன்,  அசோகமித்திரன், கரிச்சான் குஞ்சு, இந்திரா பார்த்தசாரதி, ந. முத்துசாமி, க.நா.சு., தி. ஜானகிராமன் போன்ற ஒருசிலரைத்தான் வீடு தேடிப் போய் சந்தித்திருக்கிறேன்.  ஆனால் ப்ரகாஷை அப்படிச் சந்தித்துப் பேச எனக்குக் கொடுத்து வைக்கவில்லை.  20 ஆண்டுகளுக்கு முன்பு தற்செயலாக தி.நகர் பேருந்து நிலையம் எதிரில் அசோகமித்திரனோடு அவரைப் பார்த்தேன்.  ‘புரட்சிய்யா… பெரிய புரட்சி எழுத்தாளர்; எழுத்துல அனல் பறக்கும்’ என்று என்னைப் பற்றி அசோகமித்திரன் அவருக்கே உரிய குறும்புடன் ப்ரகாஷிடம் என்னை அறிமுகம் செய்தார்.  ப்ரகாஷ் என்னைக் கருணையோடு பார்த்தார். ஆஜானுபாகுவான உருவம்.  கருகருவென்று அடர்த்தியாக இருந்த நீண்ட தாடி மீசை. ஓஷோவுக்குப் பிறகு நான் பார்த்த பேரழகன் ப்ரகாஷ் தான்.  பிறகு ப்ரகாஷின் எழுத்துக்களைப் படித்து விட்டு அவர் வாழ்ந்த வீட்டையும் மங்கையர்க்கரசி அம்மையையும் பார்த்து விட்டு வரலாம் என்று தஞ்சாவூருக்கே போனேன்.  ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு வந்தேன்.  ப்ரகாஷ் வாழ்ந்த வீடு எனக்கு அப்போது ஒரு கோவிலைப் போல் இருந்தது.  தொட்டுத் தொட்டுப் பார்த்துக் கொண்டே இருந்தேன்.   
இந்தத் தொடரில் எந்த எழுத்தாளரைப் பற்றியும் வாழ்க்கைக் குறிப்புகள் என்று அதிகமாக எழுதியதில்லை என்பதைக் கவனித்திருப்பீர்கள்.  ஆனாலும் ப்ரகாஷின் வாழ்க்கை பற்றி இவ்வளவு விரிவாக எழுதுவதன் காரணம், மேற்கத்திய நாடுகளில் ஒவ்வொரு எழுத்தாளனைப் பற்றியும் அவனுடைய தொட்டில் பருவத்திலிருந்து சாகும் வரையிலான வாழ்க்கைக் குறிப்புகளை ஆவணப்படுத்தியிருக்கிறார்கள்.  பாரிஸ் செல்லும் போதெல்லாம் நான் செய்யும் முதல் வேலை பியர் லாஷ்ஷேஸ் கல்லறைக்குப் (Père Lachaise Cemetery) போவதுதான்.  இந்தக் கல்லறையில் துயில் கொள்ளும் கலைஞர்கள்: ஐரோப்பிய எதார்த்தவாத இலக்கியத்தின் ஆசானான பால்ஸாக்; மேற்கத்திய சாஸ்த்ரீய சங்கீத மேதை சோப்பின் – பெரும்பாலான இந்திய இசை ரசிகர்களால் மேற்கத்திய சாஸ்த்ரீய சங்கீதத்தில் பரிச்சயம் இல்லாமல் இருக்கிறது.  குறிப்பாக கர்னாடக இசையின் தீவிர ரசிகர்களில் மேற்கத்திய சாஸ்த்ரீய சங்கீதத்தையும் கேட்கக் கூடியவர்களாக ஒன்றிரண்டு பேரையே சந்தித்திருக்கிறேன்.  பலரும் அதை ரசிக்க முடியவில்லை என்றே கூறுகின்றனர்.   அவர்கள் சோப்பினை மட்டும் கேட்டால் போதும்.  மேற்கத்திய சாஸ்த்ரீய சங்கீதத்துக்கும் அடிமை ஆகி விடுவார்கள்.  கானகத்தில் பட்சிகளின் சங்கீதத்தைக் கேட்டிருக்கிறீர்களா?  அல்லது, குறைந்த பட்சம் குயில் கூவுவதைக் கேட்டு ரசித்ததுண்டா?  அப்படியானால் எந்த முன்னேற்பாடும் இல்லாமல் உங்களால் சோப்பினை ரசிக்க முடியும்.  ஒரே ஒரு நிமிடம் இசைக்கும் அவருடைய ‘வண்ணத்துப் பூச்சி’யைக் கேளுங்கள்.
இன்னும் கொஞ்சம் அதிக நேரம் கிடைத்தால் கேட்க:
சோப்பின் போலந்துக்காரர் எனினும் வாழ்ந்ததும் இறந்ததும் பாரிஸ் என்பதால் அவரது கல்லறை பாரிஸ் பியர் லாஷ்ஷேஸில் இருக்கிறது.  என்றாலும் வாரம் ஒருமுறை பாரிஸில் உள்ள போலந்துத் தூதரகத்தினர் சோப்பினின் கல்லறைக்கு வந்து பூங்கொத்து வைத்து மரியாதை செய்கின்றனர்.  மோலியேர், ஃபோந்த்தேன், மார்ஸல் ப்ரூஸ்ட், ஆஸ்கார் ஒயில்ட் போன்றவர்களின் கல்லறையும் இங்கேதான் உள்ளது.  சார்த்தரின் கல்லறை மொந்த்பர்னாஸ் கல்லறையில் உள்ளது.   இதையெல்லாம் சொல்வதற்குக் காரணம், நம் தமிழ்நாட்டில் ப்ரகாஷின் பெயர் கூடத் தெரியவில்லை.  சக எழுத்தாளர்களும் அவரது அன்பைப் பற்றியும் பாசத்தைப் பற்றியும் மட்டுமே வரிந்து வரிந்து எழுதியிருக்கிறார்கள்.  சுந்தர சுகனின் அஞ்சலிச் சிறப்பிதழின் 90 பக்கங்களிலும் ப்ரகாஷின் எழுத்து பற்றி உயர்வாகவோ விமரிசனம் செய்தோ ஒரு வாக்கியம் இல்லை; ஒரு சொல் இல்லை. மங்கையர்க்கரசியின் கட்டுரையும், ப்ரகாஷ் சி.சு. செல்லப்பா பற்றி எழுதியுள்ள கட்டுரையும் மட்டுமே அதில் வாசிக்கக் கூடியதாக இருந்தது.  மற்றதெல்லாம் அந்த எழுத்தாளனுக்கு எந்த மரியாதையும் செய்யக் கூடியதாக இல்லை. 
இந்தத் தொடரில் தஞ்சை ப்ரகாஷ் பற்றி ஆரம்பத்திலேயே எழுதுவதாக இருந்தேன்.  ஆனால் அவருடைய கரமுண்டார் வூடு என்ன தேடியும் கிடைக்கவில்லை.  என்னுடைய இணையதளத்தில் அறிவிப்புப் போட்ட பிறகு என் வாசகர் சரவணன் அந்த நாவலைப் புகைப்பட நகல் எடுத்து அனுப்பியிருந்தார்.  அதுவும் ‘பின்’ சரியாகப் போடாமல் விளிம்பில் எழுத்து தெரியாமல் போனதால் ‘பின்’னை எடுத்து விட்டு ஒவ்வொரு பக்கமாகப் படித்தேன்.  அதிலும் நாலு பக்கங்கள் ‘மிஸ்ஸிங்’.  தமிழ்நாட்டில் எழுத்தாளனின் நிலை இப்படி இருக்கிறது.  அதுவும் எப்படிப்பட்ட எழுத்தாளன்? 
Erica Jong எழுதிய Fear of Flying, குஸ்தாவ் ஃப்ளெபரின் மதாம் பொவாரி, ஸில்வியா ப்ளாத்தின் The Bell Jar, Kathy Acker-ன் Blood and Guts in High School போன்ற நாவல்கள் உலகின் குறிப்பிடத்தக்க பெண்ணிய நாவல்களாகக் கருதப்படுகின்றன.  ஆனால் இந்த நாவல்கள் அனைத்தையும் விட ப்ரகாஷின் கரமுண்டார் வூடு மிகச் சிறந்த பெண்ணிய நாவல் என்று கூறுவேன்.  ஒரு பெண்ணின் தாபத்தையும், வேட்கையையும், தேகமெங்கும் கொழுந்து விட்டெரியும் காமத்தையும் கரமுண்டார் வூடு அளவுக்கு வேறு எந்த மொழியிலும் வேறு எந்த எழுத்திலும் நான் கண்டதில்லை.  அது மட்டுமல்ல; லெஸ்பியன் எழுத்து தமிழில் அறிமுகம் ஆவதற்கு முன்பே பெண்ணின் தன்பால் உறவை மிக விரிவாகப் பேசியிருக்கிறது கரமுண்டார் வூடு.  மிக உக்கிரமானதொரு அக்கினித் தீவினுள் நுழைந்து விட்டது போன்ற ஒரு உணர்ச்சியைத் தருகிறது கரமுண்டார் வூடு.  இந்த நாவல் பற்றி நாம் கொஞ்சம் தெரிந்து கொள்வோம். 
(தொடரும்)

No comments:

Post a Comment