Aug 24, 2015

நல்ல சோறு எங்கே கிடைக்கும்?

விமலாதித்த மாமல்லன்


காசுக்கேற்ற தோசை. பழமொழிகள், பல நேரம் கால மாற்றத்தின் காரணமாய், எதுகை மோனை ஒலிநயமாக மட்டுமே தங்கிவிடக் கூடியவை. உணவு விஷயம் இதற்கு நல்ல உதாரணம் - பன்னாட்டுத் தொடர் உணவகங்கள் பற்றிய தோற்ற மயக்கங்கள் இல்லாதவர்களாய் நாம் இருந்தால்.

மாலை நேரம், கொண்டா கொண்டா எனும் குட்டிப் பிசாசுகள் வயிற்றில் உருவாவது மனிதர்களுக்கு இயல்பு. மசி ஒட்டிக்கொண்டாலும் பரவாயில்லை என்று, பஜ்ஜி போண்டா பக்கோடாவின் எண்ணெயைப் பேப்பருக்குப் பிழிந்து கொடுத்துவிட்டு, கையேந்தி பவன்களில் கையேந்தாதவர்களை மத்தியதர வர்க்கத்தில் பார்ப்பது அரிது.

`அடை' காத்த குடும்பம்


இந்த நாக்கு, விடுமுறை நாட்களில் ஏரியா விட்டு ஏரியா துரத்தவும் தயங்காது. ஆளுக்கு ஒரு அடை தின்பதற்காக, கிளைகளற்ற விருட்சமாய் ஓங்கி நின்றிருந்த அடையார் கிராண்ட் ஸ்வீட்ஸில் அரை மணி நேரம் தம் முறைக்காக அடை காத்த குடும்பத்தைக் கண்டிருக்கிறேன். அதற்குள், வந்து சேர்ந்த ஓசி தொன்னை எள் சாதத்துக்கு, பணம் பகட்டு அந்தஸ்து அனைத்தையும் மறந்து, சிறுவர் சிறுமியராய் பெரியவர்களுக்குள் எனக்கு எனக்கு என எத்தனை தள்ளுமுள்ளு.
மயிலை கபாலி கோயிலின் செருப்பு விடும் இடத்துக்கு அருகில், மவுண்ட் ரோடு மத்திய அரசு ஊழியர், தம் வீட்டு ஜன்னலையே பஜ்ஜிக் கடையாக்கிய தெருவில், இருட்டத் தொடங்கியதும் என்ன கூட்டம். குடிக்கவும் கை கழுவிக்கொள்ளவும் மக்களுக்கும் அவருக்கும் இடையில் நடக்கும் தண்ணீர் பஞ்சாயத்து தமிழக - கர்நாடகத்தை விஞ்சிவிடும். பஜ்ஜி நீண்டு பல தினங்கள் இரவுச் சாப்பாடாய் ஆகிவிடுவதும் உண்டு.

மதிய உணவு என்றாலே, தென்னிந்தியன் மனதில் தோன்றும் முதல் காட்சி இலை அல்லவா. எழும்பூரைத் தாண்டிச் செல்ல நேரும் இரு சக்கர வாகன இளைஞர்களுக்கு இப்படி இருக்க வேண்டும் என்கிற கட்டாயமில்லை. அல்சா மால் வாயிலில் இருக்கும் தகர ஷெட் கடையைச் சுற்றி மதியம், மாலை, இரவு என எப்போதும் மொய்த்தபடி இருக்கும் கூட்டத்தைக் கடந்து செல்ல நேர்ந்தால் சற்றே நின்று சாப்பிட்டுப் பாருங்கள். ஓட்டல் என்னவோ ஒரே ஒரு தகர ஷெட்தான். ஆனால், சிக்கன் சாண்ட்விச்சும் பிரெட் ஆம்லேட்டும் நான் வெஜ் செக்ஷன். கூல் ட்ரிங்க் பிரிட்ஜுக்கு அந்தப்புறம் சைவப் பிரிவு. அடுப்பு முதல் அனைத்தும் வெவ்வேறு. டெலிபோன் டைரக்டரி பேப்பர்தான் பிளேட்டு. அவரவர் கைகளே ஃபோர்க்கும் கத்தியும். அல்சா மால் படிக்கட்டே அல்ட்ரா மார்டன் யுவ - யுவதிகளின் ஓப்பன் ஏர் ரெஸ்டாரண்ட்.

இழுக்கும் என்.எஸ்.இ. போஸ் ரோடு


கொலஸ்ட்ரால் கிலி இல்லாதவர்களையும் நடுநடுங்க வைக்கும் வல்லமை வாய்ந்தது சவுகார்பேட்டையின் மிண்ட் தெரு காக்கரா ராம்தேவ் எனும் ஒரு காலத்து முக்குத் திண்ணைக் கடை. இன்று விரிவடைந்து மார்வாடிப் பெண்களின் உடைபோல நிறைய வெளுப்பு காட்டிப் பளபளப்பாகிவிட்டது. வாசலில் இருக்கும் வாணலியில் கொதிக்கும் வெண்ணெயில் வழுக்கிச் செல்லும் மசித்த உருளைக் கிழங்கு வெளியில் வந்து, அநேக அபிஷேக அலங்காரங்களை ஏற்று உங்கள் கைக்கு வருவதற்குள் உமிழ்நீர் சுரக்காவிட்டால் உடனடியாக மருத்துவரைப் பார்ப்பது நல்லது. இதை ஒரு தட்டும் பாதாம் மில்க் என்கிற பெயரில் தரப்படும் பருப்புகளின் பாயசத்தை ஒரு டம்ளரும் சாப்பிட்டுவிட்டால் போதும் நெஞ்சின் பாரத்தில் நேராகப் போய் ஜி.ஹெச்சில் அட்மிட் ஆகிவிடலாமா என்று கொஞ்ச நேரம் கலங்க நேரும். யப்பா சாமி! போதுமடா இந்த அவஸ்தை என்று தோன்றினாலும் அடுத்த முறை உங்களையும் அறியாமல் என்.எஸ்.சி. போஸ் ரோடு போவதற்கு ஏதாவது வேலையை இழுத்து வைத்துக்கொள்வீர்கள்.
பல சமயம், வரும் வட இந்தியப் பணக்காரக் கூட்டத்தைப் பார்த்தே, ரொம்ப காஸ்ட்லி இடமோ என்று மத்தியதரத் தமிழனின் முன் ஜாக்கிரதைக் கொம்புகள் உயர்ந்து பின்வாங்கச் செய்துவிடும். இவர்கள் பெரும்பான்மையாய்ப் புழங்கும் பளபளப்பான இடங்கள் அப்படியொன்றும் காஸ்ட்லியானவை அல்ல என்பதே உள் ரகசியம்.

இளைக்க வைக்கும் இனிப்பு

இனிப்பை டிபன் போலச் சாப்பிட விருப்பம் இருப்பவர்கள் ஸ்பர் டேங்க் ரோடின் விளையாட்டு மைதான டிரான்ஸ்ஃபார்மரை ஒட்டிய தெருவில் இருக்கும் ஸ்ரீ மித்தாய்க்குச் செல்லலாம். திகட்டவே திகட்டாமல் பர்ஸை இளைக்க வைத்துவிடும் இடம். பால் விநியோகத்தில் தொடங்கி அடுக்கு மாடியாய் அண்ணா நகரிலும் விரிந்திருக்கிறது. சரவண பவன் போன்ற ‘5 ஸ்டார்’ ஓட்டல் என்றில்லாமல் சாதாரண இட்லி, தோசை, பூரி கிடைக்கும் தென்னிந்திய உணவகத்தில்கூட கடைவாய்ப் பல்லுக்கு ஒன்று வீதம் இரண்டு அயிட்டம் சாப்பிட்டால் ஆகும் பில்லைவிடக் குறைவாய், வயிற்றுக்கு நிறைவாய் ஒரு வேளை உணவையே சாப்பிட வேண்டுமென்றால், கிரில்டு சாண்ட்விச் என்று கேளுங்கள். வெண்ணெய் தடவிய மூன்று பிரட் ஸ்லைஸுகளில் முதல் இரண்டின் இடையில் சீஸ் துருவல் மற்றதில் வெள்ளரி- கேரட்- தக்காளி- உருளை சீவல்கள் என கண்ணெதிரில் கண்ணாடிக்கு உள்ளே தயாரிக்கப்படுவதைக் காணலாம். பின்னர், கதவைத் தாண்டி இன்னும் உள்ளே பச்சையாய் சென்று சற்று நேரத்தில் பொன்னிற அணில்கள் போல வரிவரியாய் கோடுகளுடன் நான்காய் வெளியில் வரும். தின்று முடிப்பதற்குள் நாக்கு தள்ளிவிடும்.
சக்கரை வியாதியின் காரணமாய் சப்பாத்தி மார்க்கத்தைத் தழுவியவர்களுக்கு இருக்கவே இருக்கிறது குஜராத்தி மண்டல், பிராட்வே நுழைவின் முதல் குறுக்கில். பூடி பூடி என்று கூறியபடி இரண்டிரண்டாய் கணக்குவழக்கற்று வந்துகொண்டே இருக்கும் சப்பாத்திகள்.
இவ்வளவு சொன்னீர்… நல்ல சோறு எங்கேய்யா கிடைக்கும் என்கிறீர்களா. அதுதான் மூன்று வேளையும் தின்றாகிறதே வீட்டில், இன்னும் என்ன?!

No comments:

Post a Comment