May 29, 2016

நாவல்களின் காலம்

எஸ்.ராமகிருஷ்ணன் 

கோப்புப் படம்.
 
சமகாலத்தின் முக்கியமான நாவல்கள் எவை? இன்றைய நாவல்களின் போக்கு எப்படி இருக்கிறது? ‘உபபாண்டவம்’, ‘நெடுங்குருதி’, ‘யாமம்’, ‘சஞ்சாரம்’ உள்ளிட்ட நாவல்களை எழுதியவரும் குறிப்பிடத்தகுந்த விமர்சகருமான எஸ்.ராமகிருஷ்ணனிடம் இது குறித்துக் கேட்டோம்.

நம் காலம் நாவல் களின் காலம். உலகெங்கு ம் நாவல்கள் விற்பனையில் மிகப் பெரிய சாதனை படைத்துவருகின்றன. ஹாரிபாட்டர் நாவல் 107 மில்லியன் விற்றிருக்கிறது. லார்டு ஆஃப் தி ரிங்ஸ் நாவல் 150 மில்லியன் பிரதிகள் விற்றிருக்கின்றன. உலகில் எந்தக் கவிதைத் தொகுப்பும், கட்டுரைத் தொகுப்பும் இவ்வளவு விற்றதில்லை. தமிழிலும் நாவலுக்கெனத் தனி வாசக வட்டம் எப்போதும் இருந்துவருகிறது. நாவல் விற்பனையும் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.

தமிழ் நாவல் உலகம் இன்று பெரும் விருட்சமாக வளர்ந்தோங்கி நிற்கிறது. ஆரம்ப காலத் தமிழ் நாவல்களில் கதாசிரியரே கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துவார். அனுபவங்கள் மட்டுமே கதையாக உருமாறின. புனைவின் சாத்தியங்கள் அறியப்படவேயில்லை. நவீனத்துவத்தின் வருகையால் நாவல்களில் ஆசிரியரின் குரல் மறைந்துபோனது, அனுபவங்களை மட்டும் விவரிக்காமல் அவற்றுக்குக் காரணமாக உள்ள அரசியல் சமூக பொருளாதார உளவியல் காரணங்களை நாவல் ஆராயத் துவங்கியது.

இரண்டாயிரத்துக்குப் பிறகே தமிழ் நாவல்கள் பாலின்பம் குறித்த திறந்த உரையாடல்கள், அடையாளச் சிக்கல், நகர்மயமாதலின் பிரச்சினைகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகளின் அக உலகம் எனப் புதிய திசை நோக்கிப் பயணிக்கத் துவங்கியது. இன்றைய நாவல் என்பது ஒரு சிம்பொனிபோல பல்வேறு இசைக் கருவிகளின் ஒன்று சேர்ந்த கூட்டு வடிவம் என்பார் மிலன் குந்தேரா. அது தமிழ் நாவலுக்கும் பொருந்தக்கூடியதே.

மறைக்கப்பட்ட வரலாறு, புதிய வாசிப்புக்குள்ளான தொன்மம், இதிகாசம் பற்றிய புனைவெழுத்து, இனவரவியல் கூறுகள் கொண்ட நாவல் என இன்றைய நாவலின் இயங்குதளங்கள் விரிவுகொள்கின்றன.
 
புத்தாயிரத்துக்குப் பிறகான சிறந்த நாவல்கள்
1. சயந்தனின் ‘ஆறாவடு’ (தமிழினி பதிப்பகம்)ஈழத் தமிழர்களின் துயர்மிகு வாழ்வினைச் சித்தரிக்கும் சிறந்த நாவல்.
 
2. முருகவேளின் ‘மிளிர்கல்’ (பொன்னுலகம் பதிப்பகம்) கண்ணகியைத் தேடும் பயணத்தின் ஊடாக ரத்தினக்கல் தேடும் வணிக சூதின் கதையைச் சொல்லும் புதிய நாவல்.
 
3. நக்கீரனின் ‘காடோடி’ (அடையாளம் பதிப்பகம்) சூழலியல் அக்கறையுடன் எழுதப்பட்ட புதுவகை நாவல்.
 
4. லட்சுமி சரவணக்குமாரின் ‘உப்பு நாய்கள்’ (உயிர்எழுத்து பதிப்பகம்) விளம்புநிலை மக்களின் வாழ்க்கையை நுட்பமாகப் பதிவுசெய்த நாவல்.
 
5. ஜாகிர்ராஜாவின் ‘மீன்காரத் தெரு’ (மருதா பதிப்பகம்) இஸ்லாமியர்களின் வாழ்வியல் நெருக்கடிகளைப் பேசும் நாவல்.
 
6. சுகுமாரனின் ‘வெலிங்டன்’ (காலச்சுவடு பதிப்பகம்) ஊட்டியின் வரலாற்றுடன் பால்ய நினைவுகளை ஒன்று கலந்து விவரிக்கும் சிறந்த நாவல்.
 
7. இரா.முருகனின் ‘அரசூர் வம்சம்’ (கிழக்கு பதிப்பகம்) தலைமுறைகளின் கதையைக் கூறும் மாய யதார்த்தவாத நாவல்
 
8. தமிழ்மகனின் ‘வெட்டுப்புலி’ (உயிர்மை பதிப்பகம்) திராவிட இயக்க அரசியலை மையமாகக் கொண்ட நாவல்.
 
9. யூமாவாசுகியின் ‘ரத்த உறவு’ (தமிழினி பதிப்பகம்) குடியால் அழிந்த குடும்பத்தின் கதையைச் சொல்லும் நாவல்.
 
10. பிரான்சிஸ் கிருபாவின் ‘கன்னி’ (தமிழினி பதிப்பகம்) காதலின் துயரைக் கவித்துவமாகப் பதிவுசெய்த நாவல்.

No comments:

Post a Comment